எழுத்தறிவிப்பவன் அல்ல இறைவன்
எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் குறிப்பிடச் சொல்லப்படும் வாக்கியம் அது. அதே போலவே குழந்தையும் தெய்வமும் ஒன்று எனவும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மழலையின் தூய்மையையும் உன்னதத்தையும் குறிப்பிடச் சொல்லப்படும் வாக்கியம். இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால் எந்தப் பக்கம் இறைவன் இருப்பதாய் உணர்கிறீர்கள்? எனக்கு இறைவன், இந்த வாக்கியங்களை எழுத்துக்கூட்டி வாசித்துப் புரிந்து கொண்டதும், அந்தச் சிறு வெற்றியில் திளைத்துப் புன்சிரிக்கும் சிறுவனாகத் தான் தெரிகிறான். ஒரு குழந்தைக்கு எது மொழி? ஒரு குழந்தைக்கு எதற்கு மொழி தேவைப்படுகிறது? ஒரு குழந்தை எப்படி மொழியைக் கற்றுக் கொள்கிறது? ஒரு குழந்தைக்கு எப்படி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான என் தேடலும் சில நல்ல மனிதர்களின் அறிமுகங்களும்தான் இந்தப் பதிவு. ஒரு வினாடி கண்ணை மூடி உங்கள் வீட்டில் வளரும் குழந்தையையோ, உங்கள் அரை டவுசர் நாட்களையோ கருத்தில் கொண்டு வந்துவிட்டுத் தொடர்ந்து வாசியுங்கள். ஒரு குழந்தைக...