4 - யார் அவள்? - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்பணம், தொழில், பயணம், இலக்கியம் போன்றவற்றில் கொஞ்சம் வித்தியாசமான பார்வையோடு இருந்த என் இருபத்தாறு வயதிடம் பல பேரும் ஒருமனதாகச் சொன்ன ஒரே வாக்கியம் 'நீ நிறைய யோசிக்கிறாய். வருங்காலத்தில் சந்தோஷமோ துக்கமோ, உனக்கு வரப் போகும் பெண்ணால்தான் முடிவாகப் போகிறது' என்பதுதான். ஒரு வகையில் அந்த வயதில் எனக்கும் அந்தப் புரிதல் இருந்தது. அதனாலேயே வருங்காலத்தைப் பற்றிய ஒரு சின்ன பயமும் இருந்தது. அப்போதே கொஞ்சம் அடிபட்டிருந்ததால் கொஞ்சம் பக்குவமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக யார்தான் அவள் என்று தெரிந்து கொள்ள ஒரு பேரார்வம் இருந்து கொண்டே இருந்தது. காதலையும் திருமணத்தையும் பற்றி இன்று பேசுகிறேன்.

இருபதுகளின் தொடக்கத்தில் தோல்விகளை அதிகம் அறிந்திராத ஒரு விடலையான தைரியத்தில் என் முதல் காதல் பூத்தது. 2007 ஜனவரி 25ஆம் தேதி முதல் முதலாக ஒரு பெண்ணிடம் என் காதலைச் சொன்னேன். அன்றிலிருந்து காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆள் தான் மாறிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சிலபல பேர் பரிசோதித்து விட்டும், பெரும்பாலும் சோதித்து விட்டும் போன அந்த இடத்தில் ஆயுள் குத்தகைக்கு இப்போது வந்து கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறாள் என் மனைவி. இவளைக் கண்டடைவதற்குள் ரொம்பவே விளையாடிவிட்டது வாழ்க்கை! தனிமை வலித்த போதெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்வேன், 'கொடுப்பதற்கு உன்னிடம் நிறைய அன்பு இருக்கிறது. எடுப்பதற்கு ஒருத்தி வருவாள்' என்று. 

ஒரு முறை சில புதிய நண்பர்களிடம் என் முழுக் காதல் வரலாற்றையும் ஒரு திரைப்படம் போலச் சொல்லி இருக்கிறேன். இரண்டு மணி நேரம் நீண்ட கதை. எட்டு பெண்கள் அந்தக் கதையில் வந்து போன கதாபாத்திரங்கள். எட்டாவதாக வந்தவள் தான் கதாநாயகி, என் மனைவி. சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னொரு நாளில் இந்தக் கதையை நீள்கதையாக எழுதவும் திட்டம் இருக்கிறது. சந்தோஷம், சோகம், ஏக்கம், வேடிக்கை, நகைச்சுவை என்று பல திருப்பங்களைக் கொண்டு இறுதியில் மகிழ்ச்சியாக சுபம் போடக் கூடிய சுவாரசியமான திரைக்கதை. தீபிகா படுகோனைக் கதாநாயகியாக வைத்து யாராவது திரைப்படமாக எடுக்க முன்வந்தால் அவர்களிடம் தனியாக மீண்டும் முழுக் கதையையும் சொல்லி முழு உரிமையையும் வழங்கத் தயாராக இருக்கிறேன். தீபிகா படுகோனேதான் வேண்டுமா? ஆமாங்க, என் பொண்டாட்டிக்கு தீபிகா படுகோன் தான் ரொம்பப் பிடிக்கும் :-)

எனவே, எதிர்காலத்தில் திரைப்படமாக வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் இப்போது நாம் அந்தக் கதைக்குள் போக வேண்டாம். இந்த அனுபவத்தில் நான் கற்றதையும் பெற்றதையும் மட்டும் பேசலாம். 

எட்டு பேர் என்று சொன்னதும் ஏதோ பெரிய மன்மதன் என்று நினைத்துவிட வேண்டாம். திருமணத்திற்கு முன் வரை காதலிக்க முயற்சித்துத் தோற்றதுதான் மிச்சம். ஒரு முறை கூட இருமனதான ஒரு காதலில் இருந்ததில்லை. Friendzone செய்யப்பட்டவர்களெல்லாம் சேர்ந்து தனி நாடு ஒன்றை அமைத்திருந்தால் அந்த நாட்டிற்கு அப்போது நான் பிரதமராகி இருந்திருப்பேன். அவ்வளவு சாமர்த்தியம்! நான் ஒருதலையாகக் காதலித்தவர்களும், என்னை ஒருதலையாகக் காதலித்தவர்களும் தான் அந்த ஏழு பேர். 

வெற்றி, தோல்வி என்றெல்லாம் கணக்கு போடாமல் பார்த்தால் காதல் ஒரு மகத்தான சந்தோஷம். அந்த உணர்வோடு ஒருவரைப் பார்க்கத் தொடங்கியதும் உலகமே மாறத்தான் செய்கிறது. முதல் காதல் கொஞ்சம் காத்திருக்க வைத்தாலும் கனிந்து விடும் என்று பெரும் நம்பிக்கையோடு இருந்தேன். வருடக்கணக்காகக் காத்திருக்க வைத்துவிட்டு தோல்வியை உணரச் செய்தது அந்த அனுபவம். ரொம்ப வலித்தது. வாழ்க்கையில் அதற்கு முன் எதிலும் பெரிதாக நான் தோற்றதில்லை. எங்கோ பறந்து கொண்டிருந்தவனை இழுத்துத் தரையில் அறைந்தது தோல்வி. எழுந்திருக்கவே ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. நல்ல வேளையாக, நட்பும் இலக்கியமும் என்னை தேவதாஸ் பாதைக்குப் போய்விடாமல் பார்த்துக் கொண்டது. நான் அவ்வளவு பெரிய ஆள் ஒன்றும் இல்லை என்றும், என்னைச் சுற்றி நிறைய பெரிய மனதுள்ள நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் நான் புரிந்து கொண்ட பருவம் அது. வலியெல்லாம் வலைப்பதிவில் இலக்கியமானது. 

அதற்குப் பின் வந்த தோல்விகள் எதுவும் அவ்வளவு வலிக்கவில்லை. வாழ்க்கைக்குண்டான ஒரு வேடிக்கையான நகைச்சுவை உணர்வுடன் அவற்றைப் பார்க்கப் பழகிக் கொண்டேன். ஒவ்வொரு முறை ஒரு பெண் என்னை மறுத்த போதும் 'நீ ரொம்ப நல்லவன். உனக்கு நிச்சயம் ஒரு நல்ல பெண் கிடைப்பாள்' என்று மறக்காமல் சொல்லிச் சென்றாள். அந்த வசனம்தான் ரொம்பவும் கடுப்பேற்றியது. இந்தக் கெட்ட பழக்கத்தைப் பெண்குலம் இன்னும் கைவிடவில்லை என்று சமீபத்தில் கேட்டறிந்த சில கதைகளின் மூலம் தெரிந்து கொள்கிறேன். இறைவா.... ஆண்களைக் காப்பாற்று! 

நான் மட்டுமே காதலித்துத் தோல்வி அடைந்து கொண்டிருக்கவில்லை. என்னைக் காதலித்த சில பெண்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. நான் காதலிக்கும் பெண்ணுக்காகக் காத்திருப்பதா என்னைக் காதலிக்கும் பெண்ணுக்குச் சம்மதம் சொல்வதா என்ற வேடிக்கையான நெருக்கடியில் இரண்டு முறையாவது இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். சத்திய சோதனை! 

இத்தனை கலவரங்களுக்கும் மத்தியில் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு உறுதியை வேறு வளர்த்துக் கொண்டிருந்தேன். வயது ஏறிக் கொண்டே போனது. வீட்டில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். யாரையாவது காதலித்தாலும் பரவாயில்லை கல்யாணம் செய்து கொள் என்றார் அப்பா. பிறகு உண்மையெல்லாம் தெரிந்ததும் 'உனக்குக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளத் துப்பில்லை போலத் தெரிகிறது. பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு காதலித்துக் கொள்ளேன்' என்றார். நானும் தலையாட்டி விட்டேன். அப்போது ஆரம்பித்தது ஒரு நிஜமான பயம்.  

ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் கண்களில் மயங்கி, அவளோடு கருத்தொருமித்து, காதலோடு துவங்க வேண்டிய ஒரு வாழ்க்கையை எப்படி முன்பின் அறியாத ஒரு பெண்ணோடு தொடங்குவது? நிச்சயிக்கப்படும் திருமணங்களில் கல்யாணத்துக்கு முன் ஒருவரைப் பற்றி ஒருவர் என்னதான் தெரிந்து கொள்ள முடியும்? என்ன நம்பிக்கையில் சரியென்று சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும், திருமண மேடையின் அலங்கார வெளிச்சங்கள் மறைந்தபின் அருகில் நிற்பவர் முற்றிலும் வேறானவராகத் தெரிந்தால்?

நான் வாசிக்கலாம் எனும்போது அவள் வா சீரியல் பார்க்கலாம் என்றால்? நான் பயணிக்கலாம் எனும்போது அவள் புடவை வாங்கித் தா என்றால்? நான் கனவுகளை விளக்கிச் சொல்லும் போது அவள் கரடி பொம்மையைக் கட்டிப் பிடித்துத் தூங்கி விட்டால்? என்னை அவள் கிறுக்கனாகப் பார்த்தால்? என்னை நானே கிறுக்கனாகப் பார்க்குமாறு ஆகிவிட்டால்? பொருந்தாத பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதிக்காமல் காலம் கடந்து தனியனாகவே போய்விட்டால்? அல்லது அந்தப் பயத்தில் என் எதிர்பார்ப்புகளைத் தளர்த்திக் கொண்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டால்? 

நினைத்துப் பார்க்கவே படுபயங்கர ஆபத்தாகத் தெரிந்த அந்த நெருப்பு வளையத்துக்குள் ஜாதகத்துடனும் பயோடேட்டாவுடனும் நுழைந்து வர நிர்பந்திக்கப்பட்டேன். ஏதோ என்னை மறுத்த என் முன்னாள் காதலிகள் எல்லாம் கொடுத்த ஆசீர்வாதங்களின் பலனாக நான் பயந்ததற்கு மாறாக, என்னைப் புரிந்து கொண்ட ஒரு பெண்ணைக் கண்டடைந்துள்ளேன். காதல் வாழ்க! 

அந்த நெருப்பு வளையத்துக்குள் நுழைந்து வந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்

- மதி

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..