எங்கே ஈவது ?



ரயிலில் பிச்சை கேட்கிறவர்களுக்கு
இல்லை என்று சொல்வது
சங்கடமாகி விடுகிறது
பிற பிச்சைக்காரர்களைக்
கடந்து போய் விடுகிறோம்.
நம் மறுப்பின் பிம்பங்களாக
இவர்கள் நம்மோடே
பயணிக்க வேறு செய்கிறார்கள்.

உன் ஆயா மாதிரி நெனைச்சுக்கப்பா
என்று சொல்லிக் காசு கேட்கும் கிழவி
என் ஆயாவாக இருந்திருந்தால்
வழங்குதலையும் மறுத்தலையும்
தீர்மானிக்கும் பொறுப்பை
அந்த நொடியிடம் விட்டிருக்க மாட்டேன்
என் ஆயாவாக
நினைக்கக் கூட முடியவில்லை கிழவி
மன்னித்துக் கொள்
அப்படிச் சொல்லாதே
காசு வேண்டும் என்று மட்டும் கேளேன்

கூட்டமில்லாத வேளையில்
கூன் விழுந்த மூதாட்டி
ரயிலில் கையேந்துகிறாள்
இல்லை இல்லை இல்லை
என்று தலையாட்டிக் கொண்டே
நூற்றுக்கணக்கான கைப்பிடிகள்
பிடி தர மறுக்கின்றன.

தன்மை. முன்னிலை. படர்க்கை. தாம்பரம்.

இரங்கும் இடம் வருமுன்
இறங்கும் இடம் வந்துவிடுகிறது.
இதில் எங்கே ஈவது?

-மதி

(படம் ஈந்த நல்லுள்ளம்: superstarksa)

கருத்துகள்

  1. //இரங்கும் இடம் வருமுன்
    இறங்கும் இடம் வந்துவிடுகிறது.
    இதில் எங்கே ஈவது?// ரசித்தேன். தொடர்க!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..