கனவுப் பட்டறை - முன்னுரை

(கனவுப் பட்டறை - என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இன்னும் சில வாரங்களில் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. புத்தகத்தின் முன்னுரை இதோ. 

புத்தகத்தை வாங்கி வாசிக்க (ரூபாய் 160/-) இந்த முன்னுரை உங்களைத் தூண்டினால் மகிழ்ச்சி. இணைய வழியாக டிஸ்கவரி புக் பேலஸிலிருந்து புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள் புத்தகத்தைப் பற்றிய தொடர் விவரங்களுக்கு இந்தப் பக்கத்தைப் பின் தொடருங்கள்)வாசகரே,

இந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்த போதே நீங்கள் எனக்கு நண்பராகி விட்டீர்கள். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தபின் உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கும் சிறுவர்களோடும் சிறுமிகளோடும் நண்பராகி, அதன் விளைவாக உங்களுக்கு நீங்களே வேறொரு புதிய கோணத்தில் நண்பராவதாற்கான சாத்தியக்கூற்றைப் பற்றி இப்போதே உங்களுக்கு எச்சரித்து விடுகிறேன். இந்தப் புத்தகம் சிறுவர்களைப் பற்றியது. ஆனால் சிறுவர்களுக்கானதல்ல! இது சிறுவர்களைப் பற்றிய பெரியவர்களுக்கான புத்தகம்.

சிறுவர்களின் உலகம் மிக மிக அழகானது. மிக மிக மென்மையானது. அவர்களின் மனம் இயங்கும் விதம் வெகு சுவாரசியமானது. புறங்கையில் ஒழுகும் ஐஸ்கிரீமை ரசித்துக் கொண்டு, ஆச்சரியமாக உலகத்தைக் கற்றுக் கொண்டு, கதைகளை நம்பிக் கொண்டு, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு திரிவதே இயற்கை அவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் பணி. இதற்கிடையில் அவர்களைச் சுற்றி இருக்கும் பெரிய மனிதர்கள் அவர்களின் மேல் திணித்து அமுக்கும் கல்வி முறையும், பொருளாதாரப் பிரச்சனைகளும், வாழ்க்கைப் போராட்டங்களும் சேர்ந்து, அவர்களின் மெல்லிய மனம் புரிந்து கொள்ள விதிக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும் பல மடங்கு முதிர்ச்சியை வெகு விரைவாகவே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறது. இந்தச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்போதும் அவர்களின் மனம் தன்னால் இயன்றவரை அவர்களைப் பிள்ளைகளாகவே வைத்திருக்க முயற்சிக்கிறது. இன்றிரவும் பட்டினிதான் என்பதைக் கிரகித்துக் கொள்ளும் அதே நேரத்திலேயே, என்றோ சாப்பிட்ட வெளிநாட்டுச் சாக்லேட்டின் ருசியும் மனதில் தளும்பி வரும் மனம் அவர்களுடையது. இந்த முரண் உருவாக்கும் ஒரு இடைவெளியினால் பெரியவர்களால் அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. புரிந்து கொள்ள முடியாத இயலாமையை, 'சின்னப் பையன் ஏதோ நெனைச்சிட்டு உளறிட்டிருக்கான், அவனுக்கென்ன தெரியும்' என்று உதாசீனப் படுத்தி மழுங்கடித்து விடுகிறார்கள். இந்தப் புரிதல் இடைவெளி மறைந்து மறுபடியும் சிறுவர்களின் உலகத்துக்குள் நுழையக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இந்தப் புத்தகம் உங்களுக்கு அமையலாம்.

நாம் சிறுவர்களாக இருந்தபோது உலகமே இதுதான் என்று நமக்கு முக்கியமாய்ப் பட்ட எத்தனை உணர்ச்சிகளை எவருமே மதிக்காமல் போயிருக்கிறார்கள்! என்னைப் புரிந்து கொள்ளுங்கள் என்று நம் பிள்ளை மனம் எத்தனை முறை கிடந்து தவித்திருக்கும். வினோதமான ஏதோ ஒரு மாற்றத்தினால் ஒரு நாள் நாமும் பெரியவன் என்று அடையாளப் படுத்திக் கொண்டு அதே தவற்றை நாமும் செய்யத் துவங்கி விடுகிறோம். அனேகமாக பெரியவர்கள் ஒவ்வொருவராலும் முதன்முதலில் உதாசீனப் படுத்தப்பட்டது அவர்களின் சொந்தச் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்திருக்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையின் மையக் கருத்தும் சிறுவர்களின் உலகத்தில் பெரிய விஷயங்களே. வடசென்னையின் நில அடையாளங்களோடு இந்தக் கதைகளில் வளைய வரும் சிறுவர்கள் ஒட்டுமொத்தச் சிறுவர்களையும் பிரதிபலிக்கக் கூடியவர்களே. அவர்களின் தனிப்பட்ட வாழ்வையும் அந்தரங்கச் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டிருக்கிறேன். இருந்தாலும் இவர்கள் அனைவரும் நான் நேரில் கண்டு பேசி நட்புக் கொண்டாடிய நிஜ மனிதர்களே.

இவர்கள் எல்லாரையும் சந்தித்து என் பிள்ளைத்தனத்தை மீட்டெடுத்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்புதான் 'கனவுப் பட்டறை'. சென்னையில் இயங்கும் நலந்தாவே என்ற தன்னார்வ நிறுவனம் (Nalandaway Foundation) சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வடிவமைத்து நடத்தும் ஒரு திட்டம் தான் கனவுப்பட்டறை என்ற 4-நாள் முகாம். ஒவ்வொரு முகாமிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவியர் கலந்து கொண்டு 4 நாட்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே ஒரு புது இடத்துக்கு வந்து தங்கி இருந்து பலவகையான கலை சார்ந்த பயிற்சிகளில் ஈடுபட்டு, விளையாடி, ஒருவருக்கொருவர் நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு, வெளி உலகம் தெரிந்து கொண்டு, தங்களைத் தாங்களே புரிந்து கொண்டு, ஒரு புதிய உத்வேகத்துடன் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குள் செல்வதே இந்த முகாம்களின் நோக்கம். பெரும்பாலும் இந்த முகாம்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் 'தக்ஷிண சித்ரா' (DakshinaChithra) என்ற பாரம்பரிய மையத்தின் வளாகத்திலேயே நடைபெறும். நலந்தாவே சார்பாக ஒவ்வொரு முகாமிலும் 2 பயிற்சியாளர்கள் இருப்போம். அப்படி ஒரு பயிற்சியாளராகச் சில முகாம்களை வழிநடத்த எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்புதான் இந்தப் புத்தகம் உருவானதன் ஆதிமூலம்.

நான் பங்கேற்றுக்கொண்ட முதல் முகாமிலேயே 'மிட்டா கானா' என்ற பட்டப் பெயரால் மிகவும் கேலி செய்யப்பட்டுப் புழுங்கிக் கொண்டிருந்த மெகமூத் என்ற சிறுவனைச் சந்திக்க நேர்ந்தது. என்னோடு சேர்ந்து இன்னும் இரண்டு பயிற்சியாளர்களும் அந்த முகாமில் இருந்தோம். இது போல முகாம்களில் இத்தனை மாணவர்களைக் கட்டி மேய்ப்பதற்கான முறையான உளவியல் பயிற்சிகள் எவருக்குமே கிடையாது. ஆனால் உண்மையான ஈடுபாடும், ஆர்வமும் இருந்தது. எல்லோராலும் கேலி செய்யப்பட்டுத் துரத்தப் பட்டுக் கொண்டிருந்த மெகமூத் விரக்தியடைந்து முகாமில் இருந்து இரவில் யாருக்கும் தெரியாமல் ஓடிப் போகப் போவதாக ஒரு சமயம் வந்து என்னிடம் சொன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 25 மாணவர்களுக்குப் பொறுப்பேற்று முகாமை நடத்திக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்தான். ஏதாவது சம்பவமாகி விட்டால் எக்கச்சக்கச் சிக்கலாகி விடும். 'செய்யாதே' என்றால் 'செய்' என்று தோன்றும் வயது அவனுக்கு. ஓடிப் போக நினைத்த ஒருவனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கெல்லாம் அங்கே காவல் ஏற்பாடுகள் கிடையாது. போதாத குறைக்கு அவனை அவனின் நண்பர்கள் வேறு தொடர்ந்து வெறுப்பேற்றி உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணி வெடிகுண்டின் மேல் காலை வைத்துக் கொண்டிருப்பது போல அன்று நான் மெகமூதிடம் பேசினேன்.

'இதெல்லாம் ஒரு பிரச்சனையா மெகமூது.. இதுக்குப் போயி ஓடிப் போறேன்றியே' என்று எப்படியாவது அவன் மனதை மாற்றி விடலாம் என்று நைஸாகப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் கொஞ்ச நேரத்தில் அவன் மேல் எனக்கே ஒரு மெல்லிய பரிதாபம் வந்து விட்டது. அவனுக்குள் அத்தனை குமுறல்கள் இருந்தன. அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் அவனை யாரும் ஒரு பொருட்டாக மதித்துக் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதுதான். ஓடி ஓடி ஒளிந்து இனி ஒளிந்து கொள்ளவும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது அவனின் பிள்ளை மனம். அவனுக்கு அன்று என்னிடம் பேசிக் கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது. 'உங்களுக்காக நான் ஓடிப்போக மாட்டேன்' என்று அவன் எனக்கு வாக்கு கொடுத்தான். நானும் என்னால் இயன்ற அளவுக்கு அவனைப் புரிந்து கொண்டு அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை ஊட்ட முயற்சித்தேன்.

அந்த முகாம் முடிந்து விடைபெறும் நாளில் அவன் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான். நீண்ட நேரம் என்னை விடவே இல்லை. மூன்றே மூன்று நாள் பரிச்சயம்தான் எங்களிருவருக்கும்! ஆனால் அவனை நான் ஒரு ஆளாக மதித்தேன். அவனுக்கு என் நேரத்தைக் கொடுத்தேன். அவனை மனம் விட்டுப் பாராட்டினேன். அவனோடு சேர்ந்து அவன் உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தேன். அவ்வளவுதான்! அதன் பின் நானும் அவனும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

அந்த மெகமூத் தான் மேலும் மேலும் இந்த முகாம்களில் என்னைப் பங்கேற்க வைத்தான். சிறுவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள என் ஆர்வத்தைத் தூண்டினான். அவர்களைப் புரிந்து கொள்ளத் தேவையான பொறுமையையும் முயற்சியையும் கற்றுக் கொடுத்தான். ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு வகையான புதுப் புரிதலுடன் நானும், என்னோடு தொடர்ந்து முகாம்களை நடத்திய மற்றொரு பயிற்சியாளரான தோழி பாக்யாவும் மெருகேறிக் கொண்டிருந்தோம். எங்களால் அடங்காத பிள்ளைகளை அமைதிப்படுத்த முடிந்தது; வாயே திறக்காத பிள்ளைகளை மேடையில் பேச வைக்க முடிந்தது; சொல்ல முடியாத வலிகளைச் சுமந்து கொண்டிருந்தவர்களைச் சிரிக்க வைக்க முடிந்தது; தன்னம்பிக்கையே இல்லாதவர்களைக் கனவு காண வைக்க முடிந்தது. எங்களால் நான்கு நாட்களில் நிறைய சிறுவர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கக் கூடிய விதைகளை அவர்களின் மனதில் விதைக்க முடிந்தது.

நாங்கள் தேவதூதர்கள் எல்லாம் இல்லை. முறையான பயிற்சிகள் இல்லாவிடிலும், செய்யும் காரியத்தில் ஈடுபாடும், ஆர்வமும் கொண்ட இரண்டு இளைஞர்கள். சிறுவர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களோடு இணக்கமாகவும், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் அனுபவப்பாடங்களின் மூலம் நாங்களே பல உத்திகளைக் கண்டுபிடித்தோம். அந்த அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சுவாரசியமாகச் சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். என்றாவது ஒரு நாள் நீங்கள் ஒரு மெகமூதைப் பார்ப்பீர்கள். அன்றைக்கு இந்தக் கதைகள் உங்களுக்கு நினைவுக்கு வரக்கூடுமானால் இந்த முன்னுரையின் துவக்கத்தில் நான் எச்சரித்தது நடக்கும்.

என்னைக் கேட்டால் இந்தப் பன்னிரெண்டு கதைகளையும் ஒரே மூச்சாகப் படிக்காதீர்கள் என்று சொல்வேன். ஏதாவது ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை வாசித்து விட்டுக் கொஞ்ச நேரம் அந்தக் கதையை அசை போடுங்கள். அந்தக் கதை உங்களுக்கு யாரை நினைவூட்டுகிறது என்று யோசித்துப் பாருங்கள். அந்தக் கதையில் நீங்கள் வாசித்த கதாபாத்திரங்கள் இன்று எங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நிதானமாக அந்தக் கதையின் சாறு உள்ளே இறங்கியதும் உறங்கப் போய் விடுங்கள். அடுத்த கதையை மற்றொரு நாளில் இதே போல நிதானமாக வாசித்துப் பாருங்கள். இது நான் உங்களிடம் வைக்கப் போகும் இரண்டு அன்பான வேண்டுகோள்களில் முதலாவது.

இரண்டாவது வேண்டுகோள் இன்னும் முக்கியமானது. சிறுவர்களின் உலகத்தில் நிறைய ஆசிரியர்களும், பெற்றவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் உலகில் நண்பர்களுக்குத் தான் நிறையப் பஞ்சம். நீங்கள் எத்தனை வயதுடையவராக இருந்தாலும், யாராக இருந்தாலும், சிறுவர்களுக்கு எப்போதுமே நண்பராக இருக்க முயற்சி செய்யுங்கள். பெற்றவராக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும் கூட முதலில் நண்பராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மீண்டும், இந்தப் புத்தகத்தை வாசிக்க முடிவெடுத்தமைக்கு நன்றி. வாசிப்பு அனுபவம் உங்களுக்குச் சுவாரசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வாசிப்பு அனுபவம் குறித்து நீங்கள் என்னிடம் மேலும் பேச விரும்பினால் gomskgs@gmail.com என்ற என் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

- மதி
gomskgs@gmail.com
+91 98940 14412
கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..