முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல் - 1 - பணம்
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் கவனத்தை ஈர்த்த ஒரு கட்டுரையை என் வலைப்பதிவில் வெளியிட்டிருந்தேன். அப்போது எனக்கு 26 வயது. சுயமாக ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகி இருக்கவில்லை. நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சமுதாயம் என் மேல் ஏற்ற நினைத்த சில அபத்தச் சுமைகளை ஒதுக்கி டபாய்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரையின் முடிவில் நான் சொல்லி இருந்த ஒரு வரி இது.
//
இந்தப் பதிவை இப்போது நான் விவாதமாக எழுதிவைக்கவில்லை. வாக்குமூலமாக எழுதி வைக்கிறேன். இந்தக் கோட்பாடுகளோடே வாழ்ந்து நான் முப்பதைத் தாண்டி விட்டால் போதும். அதன் பின் அதுவே பழகிவிடும். அதுவரை என்னை நானே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க உறுதி எடுக்கும் வாக்குமூலம் இது. சிலபல ஆண்டுகள் கழித்து இதிலிருந்து நான் பிசகி விட்டிருப்பதாய் உணர்ந்தால் சவரம் செய்து கொள்ளும் போது கண்ணாடியைப் பார்த்து என்னைக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்ள வேண்டும். மாறாக இதை நிகழ்த்திக் காட்டி விட்டால், அதை அவளுடன் சேர்ந்து ஒரு மலை முகட்டில் குளிருக்கு இதமாய்த் தேனீர் பகிர்ந்து கொண்டே கொண்டாட வேண்டும்.
//
இந்த வருடம் பிறக்கும்போது நான் முப்பதைத் தாண்டி இருக்கிறேன். கொஞ்சம் நரைத்துக் கொண்டிருந்தாலும் என்னுடையதாக்கும் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மண்டையில் மயிர் இருக்கிறது. மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணம் ஆகி விட்டிருக்கிறது. குழந்தை இதுவரை இல்லை. சொந்தமாக வீடு இல்லை. கார் இல்லை. இடைப்பட்ட காலத்தில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களும், சிலபல இமாலயப் பயணங்களும், பல பயணங்களும் போய் வந்திருக்கிறேன். முன்னைப் போல் வாசிப்பதும் எழுதுவதும் இல்லை. ரொம்பவும் குறைந்து போய் இருக்கிறது. 2017-இல் ஒரு பதிவு கூட போடவில்லை. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளும் நான் எழுதி இருந்த அந்தக் கட்டுரை அடிக்கடி மனதில் வந்து போகும். பல முக்கியமான முடிவுகளை எடுக்க நேரிட்ட போது என்னை வழி நடத்த உதவிய கேள்வி 'இதை இப்போது நான் செய்தால் என் வாக்குமூலத்தைக் காப்பாற்ற முடியாமல் நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேனா?' என்பதுதான். ஏதோ விளையாட்டாக எழுதி வைத்த ஒரு வாக்குமூலம் மனதில் ஆழமாகப் பதிந்து என் வாழ்வின் போக்கை மாற்றி இருப்பதை உணர்கிறேன். அந்த வாக்குமூலம் எழுதிய 26 வயது இளைஞனுடன் மீண்டும் ஒரு உரையாடல் நிகழ்த்திப் பார்க்க வந்த ஆசையில் முளைத்ததே இந்தப் பதிவு. பணம், தொழில், பயணம், இலக்கியம், வாழ்வின் பொருள், உறவு, நம்பிக்கை என்று ஒவ்வொன்றாகப் பேசப் போகிறோம். நிறைய பேசுவோம். ஆனால் உங்கள் அவசரத்துக்கு அது பொருந்துவது சந்தேகம். அதனால் ஒரேயடியாகப் பகிர்ந்து கொள்ளாமல் கொஞ்ச கொஞ்சமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பணம்
நான் அப்போதும் பணக்காரன் இல்லை. இப்போதும் பணக்காரன் இல்லை. ஆனால் எப்போதுமே வசதியானவனாக இருந்திருக்கிறேன். வசதி என்பது நாம் வரையறுப்பதுதானே! பணம் இன்னும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. அது பல தேவைகளில் ஒரு தேவையாக மட்டுமே தன் இருப்பை என்னிடம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் முன்பை விட இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாக, நிலையாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். முன்பு வியந்தது போல, 'எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை' என்ற குரல் இப்போது இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கும் நண்பர்களிடமிருந்தும் கேட்கிறது. அசந்த சில சமயங்களில் என்னையே சொல்ல வைத்திருக்கிறது. பெரிய கடன்கள் இல்லை. பெரிய செலவுகள் இல்லை. கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது. ஆனாலும், இப்போது முன்னை விட பணத்துக்கு அதிக மரியாதை தருவதாக உணர்கிறேன். நெருங்கியவர்களின் வைத்தியச் செலவுகள், வரப்போகும் பிள்ளைகளைப் படிக்க வைப்பது, மேலும் மேலும் போக வேண்டிய பயணங்கள், யாருக்கும் சொல்லாமல் இரகசியமாக மனதுக்குள் வைத்திருக்கும் வருங்காலப் பெருங்கனவுகள் என்று பணம் இப்போது தன் தேவையைக் குரலுயர்த்தியே உணர்த்துகிறது.
பணத்தைக் கடவுளாகவே பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சமுதாயத்தில் நாத்திகனாக இருந்தவன், இப்போது அதன் இருப்பையும் சக்தியையும் கொஞ்சம் உணர்ந்து மதிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் என்றும் அதற்கு மணியாட்டிப் பூசை செய்யக் கூடாது என்று ஒரு எண்ணத்தில் உறுதியாக இருக்கிறேன்.
என் கட்டுப்பாட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டியாக பணம் இருக்க வேண்டும். சின்ன நாய்க்குட்டியாக இருந்தாலும் போதும்.
தொழில்
22 வயது முதல் 27 வயது வரை எந்தப் பின்னணியும் இல்லாமல், சொந்தமாக ஒரு தொழிலை நடத்தி வந்ததில் நிறைய பெருமை இருக்கிறது. எக்கச்சக்கமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னோடு தொழிலில் இருந்தவர்களும் என்னிடம் வேலை பார்த்தவர்களும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போது தொழிலை விட்டு விட்டு சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன். தொழிலில் நட்டம் இல்லை. ஆனாலும் ஒரு சிறு உயரத்தை எட்டிப்பிடித்த பின் தொழிலை இன்னும் அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்ல அது கேட்ட விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் அங்கிருந்தே பெற்ற பாடங்களைப் பொதிந்து கட்டிச் சுமந்து கொண்டு அவரவர் வழிகளை அமைத்துக் கொண்டோம்.
நடுவில் ஒன்றரை வருடம் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சமூகப் பணியில் இருந்தேன். சமூக சேவை அல்ல. பணி! நிலையான சம்பளத்துடன் நிறைய நிம்மதியுடன் செய்த நல்ல பணி. கிட்டத்தட்ட 30 ஆயிரம் மாணவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரு கலை சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறேன். நாடு முழுவதும் கல்வியின் நிலை குறித்து நிறைய கள அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். நிறைய மாற்றங்களைச் செய்யக் கூடியவர்களின் நட்பையும் அறிமுகத்தையும் பெற்றிருக்கிறேன். மகிழ்ச்சி! இப்போது செய்யும் பணி - ஒரு பன்னாட்டு நிறுவனத்தில். நானெல்லாம் கனவிலும் நினைத்திராத வகையில் இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறேன். ஆனாலும் இது ஒரு தனித்துவமான பணி என்பதிலும், என் கோட்பாடுகளுடன் இணங்கும் பணி என்பதிலும் திருப்தி இருக்கிறது. சிறு வயது முதல் தமிழ் மொழியைக் காதலித்து வந்ததற்கு அங்கீகாரமாக உலகம் முழுவதும் பரவி நிற்கும் ஒரு இணைய நிறுவனத்தின் தயாரிப்புகளைத் தமிழாக்கித் தரும் அணியில் இப்போது இருக்கிறேன். சுவாரசியமான பணி. இங்கே சந்தி வருமா வராதா என்று பல நாட்கள் மிகத் தீவிரமாக அலுவலகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வேலையை நான் நன்றாகச் செய்தால் நிறைய சாமானியர்கள் தமிழில் தகவல் தொழில்நுட்பத்தின் அற்புதங்களைப் பயன்படுத்த முடியும்.
இந்தப் பணி தான் இனி நிரந்தரமா? தெரியாது. ஆனால் எந்தப் பணியில் இருந்தாலும் எனக்குப் பிடித்த பணியில், எனக்குத் தெரிந்த பணியில், எனக்குத் தகுந்த வருவாய் தரும் பணியில், என்னால் உலகத்துக்கு ஏதாவது உருப்படியாகப் பிரயோசனப்படும் பணியில் இருக்க வேண்டும் என்ற தெளிவு வந்திருக்கிறது. இந்த அத்தனை தெளிவிற்கும் இருபதுகளின் ஆரம்பத்தில் செய்த சுயதொழில் அனுபவம் தான் காரணம்.
- மதி
அன்புத் தோழன் மதிக்கு,
பதிலளிநீக்குஉன்னுடைய "போங்கடா டேய்" பதிவை கொஞ்சம் காலம் கடந்து படித்ததால் அன்று அதற்கு கருத்து சொல்ல இயலவில்லை... நல்லவேளை நீயே மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டாய்...
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அனுபவத்தில் பாடம் படிப்பவன் வாழ்க்கையை தன் வசமாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் நீ ஒரு மிகச் சிறந்த அனுபவசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட.
பிடித்த வேலை என்பது அனைவருக்கும் அமைவதில்லை தோழா. அந்த வகையில் நீ அதிர்ஷ்டசாலிதான். உலகம் சுற்றும் ஆசையும் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை. அந்த வகையிலும் நீ அதிர்ஷ்டசாலிதான்.
உன்னுடைய அடுத்த பதிவில் இன்னும் நிறைய பேசுவோம்.
வாழ்த்துக்கள்.
நட்புடன்,
பாரதிராஜா