2 - பயணம் - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்

ஒரு வாரத்துக்கு முன்னால் என் இருபத்தாறு வயது பிம்பத்தோடு ஓர் உரையாடலைத் தொடங்கி இருந்தேன். எனக்குப் பரிச்சயமானவர்களிலிருந்தும், முகம் தெரியாத வாசகர்களிடமிருந்தும் அந்தப் பதிவிற்கு எதிர்வினைகள் கிடைத்தன. நான் தொடங்கி இருக்கும் இந்த உரையாடல் வயதளவிலோ மனதளவிலோ ஒத்துப் போகும் பலருக்கும், அவரவர் பிம்பங்களுடன் உரையாடல்களை நிகழ்த்திப் பார்க்க ஒரு தூண்டுதலாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன். பணத்தையும் தொழிலையும் பற்றிப் பேசிய பிறகு இன்று பயணத்தைப்  பற்றிப் பேசலாம் என்று இருக்கிறேன்.


கடந்த நான்கு ஆண்டுகளில் பல புது இடங்களையும், புது மனிதர்களையும் பார்த்து விட்டிருக்கிறேன். பார்வை மாறி இருக்கிறது. இனியும் தொடர்ந்து மாறும் என்ற புரிதல் பலப்பட்டிருக்கிறது. கேரளம், ஆரோவில், சிம்லா, மணாலி, தரம்ஷாலா, சிக்கிம், டார்ஜிலிங், தில்லி, குடகு மலை, சிங்கப்பூர், இலங்கை - இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். சென்னையில் இருந்து இப்போது பெங்களூருக்கு மாறி வந்திருக்கிறேன். என் தனிப்பட்ட பயணங்கள் போக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூடவே சுற்றிக் கொண்டிருந்த செவ்வாழைகள் பலரும் இங்கிலாந்து, இஸ்ரேல், சீனா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா என்று பரந்து விரிந்து கூடமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மொபைல் திரைகள் வழியாக அங்கும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கிறேன். மேலும் இன்ஸ்டாகிராமில் பல தேசாந்திரிகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இன்ஸ்டாகிராமிலேயே பழியாய்க் கிடக்கும் ஒரு தோழி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது நினைவுக்கு வருகிறது. இது போன்ற சில தேசாந்திரிகளின் பக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு இவர்களின் புகைப்படங்களின் மூலம் நானும் தினமும் உலகமெங்கும் மனவெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள். அவளிடமிருந்து வந்த பழக்கம் தான் இன்ஸ்டாகிராம். 

உலகின் பல சண்டைகளுக்குக் காரணம் மக்கள் பயணிக்காததுதான் என்று தோன்றுகிறது. அமீஷ் திரிபாதியின் Immortals of Meluha புத்தகத்தில் ஒரு உதாரணம் வரும். சிவபெருமான் விராத் கோலி போல முரட்டுக் காளையாகச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு புனைவுக் காலத்தில் வடமேற்கு இந்தியாவில் இருந்து கிழக்கு இந்தியாவுக்குக் கங்கை நதி வழியாகப் பயணித்து வருவார். வடமேற்கில் சூர்யவம்சி இனத்தவர்கள் அம்பி விக்ரம் போலக் கட்டுக்கோப்பாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கிழக்கில் சந்திரவம்சி இனத்தவர்கள் ரெமோ விக்ரம் போலத் தான்தோன்றியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சூர்யவம்சியினரின் பார்வையில் சந்திரவம்சியினர் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்களாகவும், பாவிகளாவும், விரோதிகளாகவுமே இருப்பார்கள். அவர்களோடு பயணப்பட்டு வரும் சிவபெருமானும் அப்படியே நினைத்துக் கொண்டு வருவார். அந்தக் கண்ணோட்டத்தோடேயே கிழக்கே வந்து சந்திரவம்சியினரைப் பார்க்கையில் அவர் மனதில் வெறுப்பும் கோபமும் தான் வியாபித்திருக்கும். அப்போது ஒரு பரதேசிச் சாமியார் ஒருவர் சிவபெருமானுடன் நடத்தும் ஓர் உரையாடல் அவர் பார்வையையே மாற்றும். அந்த உரையாடலின் சாராம்சம் 'சந்திரவம்சியினர் தீயவர்கள் அல்ல; வித்தியாசமானவர்கள். அவ்வளவுதான்' என்பதுதான். They are not bad people. They are just different people. 

வாசித்த போதே என்னைச் சில நிமிடங்கள் உலுக்கி எடுத்த ஒரு புரிதல் அது. என் அனுபவத்தில் கூட நான் தீயவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாவும் வெறுத்த பலரும் வெறுமனே வித்தியாசமானவர்கள் தான் என்று புரிந்த தருணம் அது. தமிழனுக்கும் கன்னடனுக்கும், தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கொரியாவுக்கும், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் என்று பல நிலைகளில் இன்று பரவி இருக்கும் வெறுப்பு கூட இந்தப் புரிதல் இல்லாமல் போனதால் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த விரோதமும் இல்லை. ஆனால் இனங்களும், மதங்களும், மொழிகளும், நாடுகளும் அவர்களை விட வித்தியாசமானவர்கள் எல்லாம் விரோதிகளே என்ற பொதுப் பார்வையை எப்படியோ வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எங்கே மனிதனை மனிதன் நேசிப்பதெல்லாம்!

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமானால் ஒரு வசதியான தன்னார்வத் தொண்டு நிறுவனம் மக்களைத் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்கும் பயணிக்க வைத்தாலே போதுமென்று தோன்றுகிறது. 

பயணத்திற்கு மொழி தேவை. நாம் போகுமிடங்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்ள முயற்சியாவது எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஆங்கிலமும் தமிழும் மட்டுமே தெரியும். இப்போது கூடவே கொஞ்சம் இந்தி கற்றுக்கொண்டிருக்கிறேன். மலையாளத்தோடு இருந்த பால்ய நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். கன்னடமும் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறேன். இதில் எந்த மொழியையும் மெனக்கெட்டுக் கற்றுக் கொண்டதில்லை. அந்தந்தப் பிரதேசங்களில் சுற்றிக் கொண்டிருந்த போது காதில் விழும் உரையாடல்களைக் கவனித்து, தத்தக்கா புத்தக்கா என்று பதிலுக்குப் பேச முயற்சித்து, அதைப் பார்த்துப் புன்னகையோடு உள்ளூர்க்காரர்கள் கற்றுக் கொடுத்தது. எல்லா மக்களுக்குமே அவர்களின் மொழியில் ஒருவர் பேசுவது பிடித்திருக்கிறது. அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது பிடித்திருக்கிறது. சட்டுபுட்டென்று அனைவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். 

பயணத்திற்குத் தேவையான மற்றொன்று பணம். எனக்குத் தெரிந்த பலரும் பயணிக்காததற்குச் சொல்லும் சுலபமான சாக்கு 'செலவாகும்' என்பதுதான். ஆனால் கொஞ்சம் அனுபவமும் உறுதியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பணம் சேர்த்துப் பயணிக்கலாம். டீக்கடை வைத்துப் பிழைக்கும் ஒரு கேரளத் தம்பதி பதினாறு நாடுகளைச் சுற்றிப் பார்த்த கதையைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இரண்டு மூன்று முறை பயணித்து விட்டால் எங்கெங்கே எப்படி எப்படி செலவைக் கட்டுப்படுத்தலாம் என்பது நமக்கே புரிகிறது. இணையம் முழுக்க இதற்கு உதவியாக எக்கச்சக்க விஷயம் கொட்டிக் கிடக்கிறது. மாதா மாதம் தவணைகளுக்கும், செலவுகளுக்கும் நடுவே கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துச் சேமித்தால் பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு நல்ல பயணமாவது போய் வர முடிகிறது. ஆசை இருந்தால் போதும். உலகத்தையே சுற்றி வந்து விடலாம்!

ஒரே இடத்திலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தால் வாழ்க்கை நமக்கே தெரியாமல் நம்மைச் சுற்றிக் குழி பறித்து, நமக்குக் கடிவாளம் கட்டி விட்டு, நம்மைக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விட்டு விடுகிறது. அட, ஓட்டினாலும் பரவாயில்லை. பல சமயம் நம்மைக் குதிரைகளாக்கி, சாட்டையை வேறு எவனோ ஒருவனிடம் கொடுத்து விடுகிறது. அப்புறம் மூச்சிரைக்க ஓடினாலும் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருப்பது போல இரவெல்லாம் கனவுகள் வரத் துவங்கி விடுகிறது. ஆனால் பயணங்கள் நம்மை விடுவித்துப் புதுப்பிக்கின்றன. பயணங்கள் உணர்த்தக் கூடிய உண்மைகள் அற்புதமானவை. கேரளத்தில் ஊருக்கு ஊர் பஸ்ஸில் போவது போல, அரசுப் படகில் டிக்கெட் வாங்கிப் பயணிக்க முடிகிறது. அந்தப் படகில் போனால் வழியில் இருக்கும் சிறு கிராமங்களில் மக்கள் மீன் பிடித்துக் கொண்டும், விவசாயம் செய்து கொண்டும் இயல்பாக வாழ்கிறார்கள். வடக்கே பஸ்ஸே இல்லை! அதனால் தான் வடக்கத்தியவர்கள் இரயில்களில் முன்பதிவுப் பெட்டி என்றும் பாராமல் கிடைக்கும் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூரில் சொந்தமாக கார் ஓட்டாதீர்கள் என்று அரசாங்கம் கூவிக் கூவி மெட்ரோவிற்கு மக்களைப் பழக்குகிறது. இமாலயத்தில் பத்து பதினைந்து கிலோ எடையைச் சுமந்து கொண்டு மக்கள் கால் நடையாகவே மலையேறிப் போகிறார்கள்.

சென்னையில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தள்ளிப் போனால் ஆரோவில் ஒரு புது வாழ்க்கை முறையையே செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. இமய மலை என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் தூரமாக இருக்கும் சிம்லாவுக்கும் டார்ஜிலிங்குக்கும் இருக்கும் ஒற்றுமை, பக்கத்திலேயே இருக்கும் சிம்லாவுக்கும் தரம்ஷாலாவுக்கும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எல்லாம் கொழும்புக்குத் தெற்கே இருக்கும் சிங்களத்தவர்களுக்குப் பெரும்பாலும் தெரியவே இல்லை. சிங்கப்பூரில் அரசுப் பள்ளியில் படிப்பது தான் பெருமை. அங்கே இடம் கிடைக்காதவர்கள் தான் தனியார் பள்ளிகளுக்குப் போகிறார்கள். 

இலங்கையில் சந்தித்தவர்கள் அனைவரிடமும் இனப் போரினாலோ சுனாமியினாலோ ஒரு சோகக் கதை இருக்கிறது. சிங்கப்பூரில் சிறுவர்கள் பலர் உருளைக் கிழங்குகள் போல கையில் மொபைலும், கண்ணில் தடிக் கண்ணாடியுமாகத் தொலைந்து தோற்றமளிக்கிறார்கள். இமாலயத்தில் மின்சாரமே இல்லாத கிராமங்கள் பல இருக்கின்றன. சென்னையில் தண்ணீர் கஷ்டம் என்பது தெரியும். தெரிந்த இடமெல்லாம் தண்ணீராகத் தோன்றும் கேரளத்திலும் நல்ல குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. தில்லியில் வெயில் அடித்தாலும் கஷ்டம். குளிர் அடித்தாலும் கஷ்டம். தீவிரவாதி அடித்தாலும் கஷ்டம். போலீஸ் அடித்தாலும் கஷ்டம். 

பயணங்கள் பார்வையை விசாலமாக்கி, வித்தியாசமும் விரோதமும் வேறு வேறு என்று புரியவைத்து, வாழ்விற்கு எது அத்தியாவசியம் எது ஆடம்பரம் என்று காட்டி விடுகின்றன. இனியும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஐந்து கண்டங்களிலும் கால் வைத்து விட வேண்டும். மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை இமய மலை முழுவதும் பார்த்து விட வேண்டும். இருபது நாடுகளிலாவது உள்ளூர்க்காரர்களை நண்பர்களாகப் பெற வேண்டும். போகுமிடமெல்லாம் நம் ஊரைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டும். நிறைய ஆசை இருக்கிறது. பயணம் தொடரும். 


-மதி

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..