5 - மனைவி அமைவதெல்லாம்... - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்


கடந்த சில பதிவுகளில் என் இருபத்தாறு வயது பிம்பத்துடன் பணம், தொழில், பயணம், இலக்கியம், காதல் என்றெல்லாம் உரையாடிவிட்டு எப்படி இல்லறத்துக்குள் நுழைந்தேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று நிறுத்தி இருந்தேன். காதல் பழத்திற்கு வீசிய கல்லெல்லாம் காற்றை மட்டும் கவர்ந்து வந்து கபாலத்திலேயே விழுந்த நிலையில், கல்யாணத்திற்குப் பெண் பார்க்க வீட்டில் சம்மதம் சொல்லி இருந்தேன். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எதிர்கொள்ளப் போகும் இளைய தலைமுறைக்கு இருக்கும் அத்தனை பயங்களும் எனக்கும் இருந்தன. வாழ்வின் பெரும்பகுதியின் நிம்மதியை நிர்ணயிக்கக் கூடிய முடிவு. முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணோடு முழு வாழ்வையும் வாழ முடியுமா என்று கணிக்க வேண்டிய கட்டாயம். சிக்கல்தான்! என் காதலை மறுத்த முன்னாள் காதலிகளின் புண்ணியத்தில் எப்படியோ அந்தச் சிக்கலைப் பத்திரமாகத் தாண்டி வந்துவிட்டதாக உணர்கிறேன். இந்த முக்கியமான கட்டத்தைக் கடந்து வந்த கதையை இப்போது பகிர்கிறேன். நீங்களும் இதே சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கலாம் அல்லது எதிர்கொள்ளப் போகலாம். 

இருபதுகளின் பின் பாதி ஆரம்பிக்கத் துவங்கியதுமே வீட்டில் பெண் பார்க்கலாமா என்று அரசல் புரசலாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள். நாம்தான் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். நாம் தலையை அசைத்தால் போதும், மற்ற எல்லாவற்றையும் அவர்களே நடத்தி விடும் தயார் நிலையில் இருப்பது போன்ற ஒரு பிரமையை எப்படியோ வீட்டார் உருவாக்கி விடுகிறார்கள். தலையை அசைத்ததும் தான் எனக்கும் புரிந்தது, அவர்களுக்கும் எங்கே தொடங்குவது என்று பெரும்பாலும் தெரிவதில்லை என்று. பெண் பார்க்கச் சம்மதம் சொன்ன சில நாட்களிலேயே உறவுகளுக்கு எல்லாம் விஷயம் சொல்லப்பட்டு, ஆளாளுக்கு அவர்கள் வட்டத்தில் எனக்குப் பொருத்தமான ஏதாவது பெண் இருக்கிறாளா என்று பார்க்க ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கட்டத்தில் தான் நம் வாழ்வை வைத்து எல்லாரும் டென்னிஸ் விளையாடத் தொடங்குகிறார்கள். 

என் மகனுக்கு ஒரு பெண் பார்த்துக் கொடுங்கள் என்று நம் வீட்டார் யாரிடமெல்லாம் முதலில் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அது ஒரு கௌரவம். மற்ற சொந்தங்களை விட, அவர்களை நாம் முதலில் நம்பி அணுகுகிறோம் என்று. அந்த கௌரவத்திற்கு எதிர் மரியாதை செய்யும் பொருட்டு அவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒரு வரனைச் சொல்ல வேண்டும். அப்போதுதானே அவர்கள் மேல் வைத்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றியதாக ஆகிறது. அப்படி நமக்கு யார் முதலில் வரன் சொல்கிறார்களோ, அந்த வரனை நாம் ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது இப்போது அவர்களுக்குக் கௌரவப் பிரச்சனையாக ஆகிவிடுகிறது. இரண்டு மூன்று பேர் வரன் சொல்லி விட்டால், எந்த வரன் முடிவாகிறது என்பது உறவுகளுக்குள் ஒரு போட்டியாகி விடுகிறது. அவர்கள் சொன்ன வரன் கனிந்து நம் கல்யாண விருந்தைச் சாப்பிடுவது வரை இனி அவர்களின் கௌரவத்தைக் காப்பாற்ற அவர்கள் மெனக்கெட்டாக வேண்டும். அதற்காக, பையனிடம் பெண்ணைப் பற்றிப் புகழ்ந்து சொல்வதும், பெண்ணிடம் பையனைப் பற்றிப் புகழ்ந்து சொல்வதும், இரு குடும்பங்களுக்கும் நடுவே நட்புறவைப் பலப்படுத்தத் தூது போவதும் என்று அவர்கள் மும்முரமாகி விடுகிறார்கள். இவ்வளவு தீவிரமாக ஒரு சொந்தம் நமக்காக இறங்கி வேலை செய்கிறதே, அந்த முயற்சிக்கு மரியாதை கொடுத்து அந்த வரனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாயம் நம் குடும்பத்துக்கு வந்து விடுகிறது. இப்படியாக தனக்கென்று ஒரு பெண்ணைச் சுயமாகத் தேடிக் கொள்ளச் சாமர்த்தியம் போதாத ஒரு அப்பாவி வாலிபனின் வாழ்க்கைப் பிரச்சனை பல குடும்பங்களின் கௌரவப் பிரச்சனையாகி விடுகிறது. 

இந்தச் சுழலில் நானும் சிக்கி, கிட்டத்தட்ட ஒரு வரன் நிச்சயமாகி நாள் குறிக்கும் வரை போய்விட்டது. பெண்ணின் புகைப்படமும் பெண்ணைப் பற்றிய பல புகழுரைகளும் கிடைத்தனவேயன்றி, பெண்ணோடு பேசி அறிமுகமாவதற்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண்ணோடு பேச வேண்டும் என்று வரன் சொன்ன சொந்தக்காரரிடம் தற்செயலாகக் கேட்டேன். 'என்னடா என் மேல நம்பிக்கை இல்லையா? உனக்கு நான் சாதாரண பொண்ணா பார்ப்பேன்?' என்று மழுப்பி விட்டார். மீண்டும் மீண்டும் பெண்ணைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றேன். அவளுடைய விருப்பு, வெறுப்புகள், கனவுகள் எல்லாம் என்ன என்று தெரிந்து கொள்ளக் கேள்விகள் கேட்டால், 'சுருக்கமா சொல்றேன். நீ எப்படியோ அவ அதே மாதிரி.. போதுமா' என்று ஆணித்தரமான ஒரு பதில் வந்தது. அங்கே தான் நான் உஷாராகிக் கொண்டேன். நான் எப்படி என்று அவருக்குத் தெரியுமா என்றே என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதில் என்னைப் பற்றி அவர் கொண்ட புரிதலை அடிப்படையாகக் கொண்டு, அதே போலவேயான பெண் என்று அவர் ஊகித்திருக்கும் ஒரு பெண்ணை எனக்குக் காட்டுகிறார் என்றால் ஏதோ இடிக்கிற மாதிரி பட்டது. வீட்டில் ஏதோ சரியில்லாதது போல் தெரிகிறதே என்று சொல்ல ஆரம்பித்தால், அவர்கள் இந்தக் கௌரவப் பிரச்சனை விளையாட்டில் மும்முரமாக இறங்கி விட்டிருந்தார்கள். நான் சொல்வதை எவரும் கண்டுகொள்ளக் கூடவில்லை. சரி, இந்த விளையாட்டு இப்படித்தான் போல என்று நானும் கிட்டத்தட்ட தயாராகி விட்டேன். 

அப்போதுதான் பெண் வீட்டார் ஏதோ காரணம் சொல்லி வரனைத் தட்டிக் கழித்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் அவர்களுக்கு என் தொழில் மேல் நம்பிக்கை இல்லை என்பது புரிந்தது. இஞ்சினியர் படித்த பையன் என்றதுமே ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் தட்டும் கௌரவமான உத்தியோகம் என்று நினைத்திருந்திருப்பார்கள். நான் entrepreneur என்றதும் பயந்திருப்பார்கள். என் தொழில் என்ன என்று என் பெற்றோரிடம் கேட்டாலே அப்போது அவர்களால் சரியாகச் சொல்ல முடியாது. ஏதோ சொந்தமா ஃப்ரெண்ட்ஸோட பிஸினஸ் பண்றான் என்பார்கள். Creatives agency, Marketing communications, digital media marketing என்றெல்லாம் நான் விளக்க முற்பட்டால் ஊரில் சொந்தபந்தங்கள் புரிந்து கொள்வது அதிகபட்சம் மார்க்கெட்டிங் ரெப் என்றோ குறைந்தபட்சம் மளிகைக் கடை என்றோ தான். முதல் முயற்சியே தோல்வியில் முடிந்ததில் என் குடும்பமும் குழம்பித்தான் போனது. வரன் சொன்ன சொந்தக்காரருக்கும் தர்மசங்கடம். அந்தக் குழப்பத்தில் எப்படியோ நான் நழுவிவிட்டேன் என்று திருப்திப்பட்டுக் கொண்டதை யாருக்கும் சொல்லவில்லை. அடிக்க வந்திருப்பார்கள்!

அடுத்த கட்ட முயற்சியாக வீட்டில் சில திருமணத் தகவல் நிலையங்களை அணுகி வரன்களின் பயோடேட்டாக்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு பக்கம் இந்த விளையாட்டைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தேன். சொந்தமாகத் தொழில் நடத்தி வந்த போது, ஒரு வேலைக்குப் பொருத்தமான ஆளைக் கண்டுபிடிக்க முயன்றதில் நிறைய அனுபவங்கள் இருந்தன. கல்யாணத்திற்கு வரன் பார்ப்பதும் வேலைக்கு ஆள் தேடுவதும் ஒரு வகையில் ஒன்றென்றும் ஒரு வகையில் முற்றிலும் வேறென்றும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்தப் புரிதல் தான் என்னிடம் அப்போது காட்டப்பட்ட அத்தனை பயோடேட்டாக்களையும் நான் ஒதுக்கியதற்குக் காரணமாக இருந்தது.

பிறகு என்ன? ஒரு A4 தாளில் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித் தகுதி, உத்தியோகம், சம்பளம், உயரம், (சில சமயங்களில்) எடை, அப்பா பெயர், அப்பாவின் உத்தியோகம், அம்மா பெயர், அம்மாவின் உத்தியோகம், உடன்பிறப்புகளின் பெயர்கள், உடன்பிறப்புகளின் உத்தியோகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு, கீழே எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு அல்காரிதத்தின் அடிப்படையில் கட்டம் கட்டமாகச் சில தகவல்களையும் கொடுத்தால், இதை வைத்து நான் வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்? பெரும்பாலான திருமணத் தகவல் நிலையங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் பயோடேட்டாக்கள் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான வடிவில் தான் இருக்கின்றன. 

இது ஆவறதில்லை என்று நானே களத்தில் குதிக்க ஆரம்பித்தேன். என் பெற்றோரிடம் உட்கார்ந்து என்னைப் பற்றியும், என் எதிர்காலத் திட்டங்களையும் பற்றிப் பேசினேன். இதற்கெல்லாம் என்னோடு வாழப் போகும் பெண் எப்படி துணையாக இருக்க முடியும் என்று விளக்கினேன். இதே போல அவள் மனதில் வைத்திருக்கும் சில கனவுகளுக்கு நான் துணையாக இருக்க நேரும் வாய்ப்புகளை எல்லாம் பற்றிப் பேசினேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு 'எல்லாம் நல்லாதாண்டா இருக்கு. ஆனா நீ இப்படி எல்லாம் பேசிட்டிருந்தா உனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்களேடா' என்று நேர்மையாக உச்சுக் கொட்டினார் அம்மா. மனம் தளராத விக்கிரமாதித்தனாக நானே இணையதளத்தில் பதிவு செய்து பெண் பார்க்கவும் ஆரம்பித்தேன். அவர்கள் கொடுக்கும் தகவல்களும் முழுவதும் உதவவில்லை என்றாலும், முன் கிடைத்த A4 தாள் பயோடேட்டாக்களை விடப் பரவாயில்லையாக இருந்தன. இப்படி அப்பா அம்மா ஆசியோடு அதிகாரப்பூர்வமாக அவர்களோடே உட்கார்ந்து சைட் அடித்து, அடடே என்று நினைக்க வைத்த சில பெண்களைப் பற்றிய தகவல்களை அவர்களிடம் காட்டிப் பேசச் சொன்னேன். தேங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் தென்னை மரம் ஏறித்தான் ஆக வேண்டும் என்று உணர்ந்த காலம் அது. 

அப்படிப் பார்த்ததில் இரண்டு சுவாரசியமானவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஒருவர் ஒரு பெண்ணின் அப்பா. அவர்தான் என்னை முதலில் ஒரு காபி ஷாப்பில் வந்து சந்தித்தார். அவரும் ஒரு சுயதொழில் நிறுவனர் என்பதால் நன்றாகவே பேச முடிந்தது. என்னைப் பற்றிப் பலவும் கேட்டுத் தெரிந்து கொண்டு ஒரு திருப்தி வந்ததும் தன் பெண்ணின் நம்பரைக் கொடுத்துப் பேசச் சொன்னார். அவரைப் பொறுத்தவரையில் என்னைப் பிடித்துவிட்டது என்று தெளிவாகத் தெரிந்தது. அவரே என் அப்பாவிடம் பேசி அவர்களும் ஒரே அலைவரிசைக்கு வந்துவிட்டார்கள். எல்லாம் சரி. அந்தப் பெண்ணோடு பேச முயற்சித்தால் ஏதோ சரியில்லாதது போலவே தோன்றியது. பட்டும் படாமலுமே பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு நாள் தெளிவாகக் கேட்டு விட்டேன், 'உனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதமா?' என்று. 'நல்ல வேளை கேட்டீர்கள். எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். வீட்டில் வற்புறுத்துகிறார்கள்' என்று அவள் சொல்லிவிட்டாள். மாமனாருக்குப் பிடித்துப் போவது முக்கியமல்ல, மனைவியாகப் போகிறவளுக்குப் பிடிக்க வேண்டுமல்லவா? மகராசி நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தி விட்டு, அந்தக் கதையைச் சட்டென்று முடித்துக் கொண்டேன். 

அடுத்ததாக ஒரு பெண் தானே என்னோடு ஒரு காபி ஷாப்பில் பேசினாள். அவளும் பல இடங்களில் பட்டுத் தெரிந்து தெளிந்து, யாருக்கும் முன் தானே என்னோடு பேச வேண்டும் என்று சொல்லி ஏற்பாடு செய்திருந்தாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவள் கையில் ஒரு வினாத்தாள் இருந்தது! தனக்கு வரப்போகிறவனிடம் என்னென்ன விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவ்வளவு தயாராக இருந்தாள். அவளுடைய professionalism எனக்குப் பிடித்திருந்தது. அவள் கேட்ட கேள்விகளை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். பிற்பாடு உதவும் என்று எங்கோ மணியடித்தது. முதல் கட்டத் தேர்வைத் தாண்டி, அவளுடைய பெற்றோர் வரை சென்ற அந்த வரன் ஜாதகப் பொருத்தம் என்ற எனக்கு நம்பிக்கை இல்லாத அல்காரிதம் தோல்வியடைந்து நின்று போனது.  

இதுவரையான அனுபவங்கள் சில விஷயங்களை நன்றாக உணர்த்தின. 

  • என்னவாக இருந்தாலும் எதுவும் முடிவாவதற்கு முன் எந்த இறுக்கங்களும் இன்றி இயல்பாக ஒரு காபி ஷாப்பில் சந்தித்துப் பேசுவது நன்மை பயக்கும். 
  • அப்படிப் பேசப் போகும்போது பெப்பெப்பே என்று இல்லாமல் என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருப்பது சாலச் சிறந்தது. அதற்காக வினாத்தாளெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அது எதிரில் இருப்பவரைப் பயமுறுத்தி விடக்கூடும். 
  • அந்த ஒரு சந்திப்பில் பேசுவதை வைத்து ஒரு பெண் நமக்குப் பொருத்தமானவளா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பொருத்தமில்லை என்றால் அது பெரும்பாலும் தெரிந்து விடும். அடுத்து அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடலாம்.  
  • பொருத்தமாக இருப்பது போல் தோன்றினால், மேலும் பேச்சைத் தொடரவும். கவனிக்கவும்: கடலை போட வேண்டாம். உருப்படியாக, பேச்சை மட்டும் தொடரவும். தொடர்ந்து இருவரும் பேச முடிந்தாலே அது நல்ல அறிகுறி. 
  • அதன்பின் அவரவர் வழக்கப்படி இரு வீட்டுப் பெற்றோரையும் பேச விட்டு விடலாம். மறுபடி அவர்கள் கௌரவப் பிரச்சனை டென்னிஸ் விளையாட்டுகளில் மும்முரமானால் மட்டும் கவனித்து அவர்களைத் திசைதிருப்பி விடுதல் சுபம். 
  • இந்த மொத்த காலத்திலும் ஒருவர் தனக்குப் பொருத்தமான மற்றொருவரை வாழ்க்கைத் துணையாகத் தேடுகிறார் என்ற அடிப்படைத் தேவையில் இருந்து தானோ பிறரோ வழிமாறிப் போவதைக் கவனித்துத் தவிர்த்து வந்தால் இல்லறம் நல்லறமாகும்.
  • நீங்கள் கடந்து வரும் ஒவ்வொரு கூடாத காதலும், சேராத வரனும் ஒரு பொருந்தாத உதாரணம். நிறைய பொருந்தாத உதாரணங்களைக் கடந்து வந்திருந்தால் தான் ஒரு உதாரணம் பொருந்தும்போது அதைச் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். 
  • சும்மா சொல்லக் கூடாது. இந்த பெண் பார்க்கும் process ரொம்பவே பொறுமையைச் சோதிக்கும். நிறைய நம்பிக்கையையும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வையும் வளர்த்துக் கொள்தல் நலம். 
இப்படிப் பல புரிதல்களைப் பெற்றுக் கொண்டபின் இதற்காகவே காக்க வைத்திருந்தது போல ஒருத்தியைக் கண்டேன். அவள் வீட்டில், இயல்பாக, அவள் அப்பா அம்மா பக்கத்திலேயே உட்கார்ந்திருக்க, அவளோடு பேசினேன். அரை மணி நேரம் நீண்ட அந்த உரையாடலில் என் மனதில் வைத்திருந்த பல கட்டங்களில் அவள் டிக் அடித்துக் கொண்டே வந்தாள். அவள் மனதில் இருந்த கட்டங்களுக்கு நானும் டிக் அடித்துக் கொண்டிருக்க வேண்டும். போகப் போக, கூச்சம் குறைந்து புன்னகை கூடியதில் தெரிந்தது. நான் கடந்து வந்ததைப் போலவே அவளும் பல பொருந்தாத உதாரணங்களைக் கடந்து வந்திருந்ததால், அவளுக்கும் பொருத்தத்தின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியதும் அது தெளிவாகப் புரிந்திருந்தது. எல்லாம் சரியென்று மனதில் தோன்றிய நிலையில், கடைசியாக இருக்கும் ஒரு கண்ணிவெடியின் மேலும் காலை வைத்து விடலாம் என்று சொன்னேன். "கடைசியா ஒரு விஷயம். நம்ம குடும்பங்கள்ல அசைவம் சாப்பிடுற பழக்கம் இல்லை. ஆனா நான் கறி மீன் எல்லாம் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுவேன். இது உங்களுக்கு ஒரு பிரச்சனையா இல்லைன்னா.....". இதைச் சொன்ன மறுகணம், முன் எப்போதையும் விட அதிகமாகப் பூரித்துச் சிரித்த அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் அப்பா சொன்னார், "சரியாப் போச்சு.. நாங்களே எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு யோசிச்சிட்டிருந்தோம். என் பொண்ணும் ரொம்ப விரும்பி அசைவம் சாப்பிடுவா....". 

அவ்வாறே, அது பொருந்தவில்லை இது பொருந்தவில்லை என்று அலைக்கழித்த என் திருமணம் சிக்கன் பிரியாணி என்ற உன்னதமான புள்ளியில் கச்சிதமாகப் பொருந்தி என் இல்லறம் தொடங்கியது. நீங்களும் இந்தப் படலத்தைத் தாண்டி வந்திருந்தால், உங்கள் சுவாரசியமான அனுவங்களைக் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். கல்யாணம் இப்போது உங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தால் பொறுமையாக ஒரு புன்னகையோடு தொடர்ந்து தேடுங்கள். உங்களுக்கான #பிரியாணிmoment விரைவில் வர வாழ்த்துகள். 

- மதி


கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..