நீரின்றி அமையாது உலகு



இன்று (ஜனவரி 25, 2018) கர்நாடகாவில் நதிநீர்ப் பங்கீட்டு விவகாரம் ஒன்றிற்காக மாநிலம் தழுவிய பந்த் நடைபெறுகிறது. அலுவலகத்தில் வேலைக்கெல்லாம் வர வேண்டாம், வீட்டை விட்டு வெளியே வராமல் திங்கட்கிழமை வரை எந்தச் சேதாரமும் இல்லாமல் கடத்தி விட்டு வந்து விட்டதைப் பிடித்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். கூட வேலை பார்க்கும் உள்ளூர் நண்பர்கள் சிலரும் வெளியே எங்கும் போகாமல் பத்திரமாக இருந்து கொள்ள எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் தேர்தல் வரக்கூடிய சூழலில் இந்த பந்த் வெடிக்கத் தாமதமாகும் தீபாவளிப் பட்டாசு மாதிரி எப்படி வேண்டுமானாலும் போகலாமாம். நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்து வந்து சில மாதங்களே ஆகும் நிலையில் பந்த், நதிநீர் என்றெல்லாம் கேள்விப்பட்டதுமே கொஞ்சம் பரபரப்பாகி விட்டேன். காவிரிப் பிரச்சனைக் கலவரக் காட்சிகளெல்லாம் கண் முன்னே வந்து போயின. சமீபத்தில் தான் கர்நாடக முதல்வர் தமிழகத்துக்குத் தண்ணீர் தரமுடியாது என்று சொல்லி இருந்தார். போச்சா என்று என்ன ஏதென்று விசாரிக்கத் தொடங்கினேன்.

காவிரி இல்லையாம். இது வேறு ஒரு நதி. வட கர்நாடகத்தில் உதயமாகி கோவாவில் ஓடி அரேபியக் கடலில் கலக்கும் மஹாதயி (கோவாவில் இதை மாண்டோவி நதி என்று சொல்கிறார்கள்) நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் விவகாரமாம். கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்கள் பெரும் பஞ்சத்தில் இருக்கும் சூழலில் இந்த நதியின் குறுக்கே கலசா, பண்டூரி நலா பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி நீரைத் திசை திருப்பி அந்த மாவட்டங்களுக்குத் தண்ணீர் தர கர்நாடகம் முயல்கிறது. இப்படி ஒர் அணை கட்டப்பட்டால் கோவாவிற்கு வர வேண்டிய தண்ணீர் பிணைக்கைதியாக்கப் பட்டுவிடலாம் என்று கோவா மறுக்கிறது. இந்தப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனைக்குச் சமமாகச் சுமார் 30 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரிக்கும் இதற்கும் ஒரே ஒரு சிறு வித்தியாசம் - இந்தப் பிரச்சனையில் கர்நாடகா தண்ணீர் வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் தரமாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறது. அவ்வளவுதான்.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் ஒரு குரூரமான புன்னகை தான் வந்தது. பச்சையாக ஒத்துக் கொள்கிறேன். ஏண்டா எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா என்று மனதிற்குள் தமிழ்க்குரல் எழும்பியது. ஆனால் அந்த முதல் ஐந்து நிமிடங்களைத் தாண்டி யோசித்த பிறகு முற்றிலும் பார்வையே வேறாகிவிட்டது. முன்வாசலில் தண்ணீர் தரமாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணுகிறவனே பின்வாசலில் தண்ணீர் வேண்டி இன்னொருவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எந்த வாசலிலும் தண்ணீர் இல்லாத தமிழகம் விரைவில் என்ன ஆகப் போகிறது! ஆனானப்பட்ட கேரளத்திலேயே சென்ற வருடம் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு வந்தது. இப்படியாக தண்ணீருக்காக நடக்கிற போராட்டங்கள் பெருகிக் கொண்டே போனால் நாளை நாடு என்ன ஆகப் போகிறது! உலகம் என்ன ஆகப் போகிறது! ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் தண்ணீர் தராதது தான் பிரச்சனை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, சந்தடியில்லாமல் ஊருக்கே தண்ணீர் இல்லாமல் போனால் பஞ்சத்திலும் பகையிலும் எவன் எவனை வெட்டிக் கொண்டு சாவான் என்று கணக்கு வைத்துக் கொள்வது!

சென்ற வருடம் கோடை காலத்தில் சென்னையில் வசித்து வந்தவன் நான். சுமார் நாலைந்து மாதங்களாக, ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் தண்ணீர் கிடைத்தது. அப்படி இருந்தவன் பெங்களூருக்கு வந்ததும் அதிகமாகச் சந்தோஷப்பட்ட முதல் விஷயம் குழாயைத் திறந்தால் எந்நேரமும் தண்ணீர் வருகிறது என்பதற்காகத் தான். தண்ணீர் தட்டுப்பாட்டை நேரடியாக அனுபவித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. அதிகாலை 7 மணிக்குக் குழாயில் தண்ணீர் வரும். அதிகபட்சம் 7 30 வரை வரும். அதற்குள் பிடித்துக் கொள்ள வேண்டும். விட்டால் மறு நாள் தான். இரவு தூங்கும்போதே குழாயைத் திறந்து விட்டு ஒரு வாளியை வைத்து விட்டுத் தூங்குவோம். வாளியில் தண்ணீர் கொட்டும் சத்தம் தான் ஐந்து மாதங்களுக்கு அலாரமாக இருந்தது. Snooze செய்ய முடியாத அலாரம்!

சமையலுக்கு ஒரு பாத்திரத்தை அதிகமாக எடுப்பதற்குள் இதைக் கழுவத் தண்ணீர் இருக்குமா என்று யோசிக்க வேண்டும். உடுத்திய துணிகளைத் துவைக்கப் போடும்முன் இன்னும் இரண்டு தடவை போட்டு ஓட்டலாமா என்று முகர்ந்து பார்க்க வேண்டும். குடிதண்ணீர் கேன் விலை மாதாமாதம் ஏறும். கேள்வி கேட்கக் கூடாது. கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். சொந்தமென்று யாரும் வீட்டுக்கு வந்துவிட்டால் மனதுக்குள் நீர்க்கணக்கு போட்டபடியே தான் கதவைத் திறக்க வேண்டும். நானாவது பரவாயில்லை. மேற்கு மாம்பலத்தில் கொஞ்சம் வசதியான ஒரு பகுதியில் இருந்தேன். அன்றாடம் தண்ணீர் லாரிக்கும் மாநகராட்சிக் குழாய்களுக்கும் குடமும் கையுமாக மக்கள் காத்திருந்து அல்லல் படுவதெல்லாம் தினமும் மனதைப் பிசையும். வீட்டுக்குச் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிசை வீடுகள் படும் பாடு ரொம்ப உறுத்தும். தள்ளுவண்டிகளிலும் சைக்கிள்களிலும் தினமும் காலையில் குடம் குடமாகத் தண்ணீர் போய்க் கொண்டிருக்கும். எவ்வளவு தொலைவில் இருந்து எடுத்து வருகிறார்களோ என்று மனம் யோசிக்கும். ரொம்பக் கஷ்டம்!

இத்தனை கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தமிழகத்தில் இருந்தபோது ஏதோ கர்நாடகாவை வில்லனாகத் தான் பார்த்திருக்கிறேன். இப்போது இங்கே வந்து பார்த்தால் குழப்பமாக இருந்தது. கொஞ்சம் இணையத்தில் தேடினால் கர்நாடகம் தமிழகத்தோடு மட்டுமல்லாமல் கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, புதுவை என்று ஆறு மாநிலங்களோடு பலகாலமாக வாய்க்கால் தகராறில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பகுதி கேரளத்திலும் கர்நாடகத்திலும் இருக்கிறது. இங்கே பல ஆறுகள் உருவாகிக் கிழக்கே ஓடி அண்டை மாநிலங்களை எல்லாம் தாண்டி வங்கக் கடலுக்குப் போகின்றன. சில ஆறுகள் கமுக்கமாக மேற்கே ஓடி விரைவாக அரேபியக் கடலில் தஞ்சம் புகுந்து கொள்கின்றன. காவிரி, இந்த மஹாதயி, கிருஷ்ணா என்று மூன்று நதிகள் கர்நாடகத்தில் உருவானாலும் பெரும்பகுதி பிற மாநிலங்களில் ஓடுகின்றன. பிறந்த வீட்டுக்குத் தான் உரிமை அதிகம் என்று இவர்கள் வாதாட, புகுந்த வீட்டுக்குத் தான் உரிமை அதிகம் என்று அவர்கள் வாதாட, இப்படித் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த எல்லா ஆறுகளும் செழிப்பாக ஓடி, மழை நன்றாகப் பெய்து, எல்லாம் நல்லபடியாகப் போனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பஞ்சம் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு நதியும் மாநிலங்களுக்கு மத்தியில் அரசியலாகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி. பலருக்கும் பக்கத்து மாநிலத்தின் வாழ்க்கையே புரியவில்லை. உள்ளூர் அரசியல் கொளுத்திப் போடும் வெறுப்பெல்லாம் உண்மையாக நம்பப்பட்டு, ஒரு பெரும் நெருப்பு ஒன்று ஒவ்வொரு நதியும் வறண்டு கிடக்கும் பாளங்களில் பற்றி எரிகிறது. ஒவ்வொருவரும் அடுத்தவரை முழு வில்லனாகப் பார்த்து, தன்னைப் பாதிக்கப் பட்டவராகப் பார்த்துப் பார்த்து எங்கே பிரச்சனை என்று எவருக்கும் தெரியாமல் குருடர்கள் ஒன்று கூடி யானையைத் தடவியது போல் ஆகிறது.

உண்மை கொஞ்சம் தெரிந்து பார்த்தால் கர்நாடகம் நான் நினைத்த அளவுக்கு மோசமான மாநிலம் இல்லை என்று தோன்றுகிறது. இதை எழுதுவதால் நான் கர்நாடகத்துக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்றோ, தமிழகத்துக்குத் துரோகம் செய்கிறேனென்றோ நினைக்க வேண்டாம். இந்தியனாகப் பேசுகிறேன் என்றும் கூட நினைக்க வேண்டாம். மனிதனாக யோசிக்கிறேன். 

இது தமிழனுக்கும் கன்னடனுக்குமான பிரச்சனை என்பதைத் தாண்டி, மனிதனுக்கும் வறட்சிக்குமான போராட்டமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற புரிதல் பலமாகிறது என்பதுதான் அடிப்படை. அந்தப் புரிதல் வந்து விட்டால் உள்ளூர் அரசியல்களை எல்லாம் தாண்டிய ஒரு பார்வை கிடைக்கிறது. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் எல்லோருமே தவித்துச் சாகப் போகும் ஒரு நிலையில் நான் முதலில் சாகக் கூடாது என்பதற்கான போராட்டங்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்று பஞ்சத்தில் வாடும் மாநிலம் ஒன்று உபரி நீரை அணை கட்டிச் சேமிக்கும் மாநிலத்தின் மேல் கோபப்படுகிறது. நாளை ஒரே மாநிலத்திற்குள் காய்ந்து போன ஒரு ஊர் உபரி நீர் இருக்கும் மற்றொரு ஊரின் மேல் வெறுப்பு கொள்ளும். அதற்கு அடுத்த நாள் மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு நாளைக்குத் தேவையான தண்ணீரைத் தொட்டியில் தேக்கி வைத்திருக்கும் குடும்பத்தின் மீது பக்கத்துத் தெருவில் அன்றைக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாத குடிசை வீடு கல்லெறியும். அதற்கும் அடுத்த நாள் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பிலேயே கீழ் வீட்டுக்கும் மேல் வீட்டுக்கும் பகை மூளும். கடைசியாக ஒரே வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு கோப்பைத் தண்ணீரை நீ குடிப்பதா நான் குடிப்பதா என்று சண்டை வந்து ஒருவனை ஒருவன் அடித்துக் கொள்ளப் போகிறோம். சண்டையில் அந்த ஒரு கோப்பை நீரும் தவறிக் கொட்டிச் சிந்தி, அந்த ஈரம் காய்ந்து போவதற்குள் நீயும் நானும் செத்தே போகலாம். இதில் யார் நல்லவன்? யார் கெட்டவன்? ஒவ்வொருவனும் அடுத்தவனை விட ஒரு நாளாவது அதிகமாக வாழ்ந்து விட வேண்டும் என்று தானே போராடுகிறான்!

நீரின்றி அமையாது உலகு. அவ்வளவு தான். அது புரிந்தால் போதும்.

- மதி

(பி.கு: பார்த்தாயா, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் இதைச் சொல்லி வைத்திருக்கிறார். தமிழண்டா! பழம்பெருமைடான்னு வர வேண்டாம். முடிந்தால் கொஞ்சம் குறைவாகத் தண்ணீரைச் செலவழிப்போம். பரந்த கண்ணோட்டத்தோடு பிரச்சனைகளை அணுகுவோம். உள்ளூர் அரசியல்களை (எந்த ஊராக இருந்தாலும் சரி) ஒதுக்குவோம். மறுபக்கத்தில் இருப்பவனும் மனிதனே என்று உணர்வோம்.)

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..