ஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாராம். அவரு மூப்புன்னாலும் முறுக்கு கொலையாம தான் வேலையத் தானே பாத்துக்குவாராம். அத்தனை வயசாகியும் அவரு கல்யாணமே பண்ணிக்கல. பாவம் சின்னப் புள்ளையா இருந்தப்போ யாரோ ஒருத்தவுங்கள லவ்வடிச்சு ஏமாந்து போயிட்டாருன்னு பேசிக்கிறாங்க. ஆனா அவருக்கு சின்னப் புள்ளைங்கன்னா ரொம்ப உசுரு. கூட்டி வச்சுக் கதை கதையாச் சொல்லுவாரு. அவரு நெறைய கதையெல்லாம் எளுதி பெரிய பெரிய பரிசெல்லாம் வாங்கினவராம். அவரு எளுதின கதை பத்திரிகையிலெல்லாம் வரும்.
அந்தத் தாத்தாவுக்கு சாமின்னா ரொம்ப நம்பிக்கை. எப்பவும் சுத்தபத்தமா இருப்பாரு. பூஜை பண்ணுவாரு. கோவிலுக்குப் போவாரு. சாமி காரியம் எதுலயும் குறையே வக்கமாட்டாரு. அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை ....... அவரு செத்துப்போன பொறவு எங்க போவாரு என்ன ஆகுமுன்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. அதுக்காக ஏதேதோ படிப்பெல்லாம் படிச்சாரு. தெனமும் சாமி முன்னாடி நின்னு, "சாமி சாமி ! நான் செத்த பொறவு என்ன நடக்குதுன்னு சொல்லு சாமி. அத தெரிஞ்சுகிட்டு நான் அத கதையா எளுதணும் சாமி" அப்படின்னு வேண்டிப்பாராம்.
இதையெல்லாம் பாத்துகிட்டிருந்த சாமி ஒரு நாளு அவரு முன்னாடி வந்து , "இங்க பாரு சிதம்பரம் ! நீ கேட்ட மாரியே நான் ஒனக்கு ஒரு வரம் தாரேன். நீ செத்துப் போன பொறவு ஒரு மணி நேரம் ஒனக்கு நெனவிருக்கும். அதுக்குள்ள திரும்பி வந்து என்ன எளுதணுமோ எளுதிக்க. ஆனா ஒரு மண்ணேரம் முடிஞ்சவுடனே நீ மொத்தமா செத்துப் போயிருவ"னு சொன்னாராம்.
உடனே தாத்தாவுக்கு சந்தோசம் தாங்கல. சாமிகிட்ட, "அப்படின்னா நான் இப்பவே சாகுறேன். என் உசுர எடுத்துக்க"னு சொன்னாரு. அதுக்கு சாமி வந்து, "சரி உன் இஷ்டம். ஆனா சாகறது நீயாதான் சாகணும். உன் விருப்பம்போல செத்துக்கோ" அப்படின்ன்னு சொல்லிட்டாரு.
தாத்தாவுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துச்சு. "அந்த ஒரு மண்ணேரம் நீங்களும் எங்கூட வருவீங்களா"னு சாமியக் கேட்டாரு. "இல்லல்ல நீ மட்டும் போயிட்டு வா. நான் இங்கயே ஒன் ஒடம்புக்குக் காவலா இருக்கேன். என் ஆளுங்க ரெண்டு பேரு உங்கூட வருவாங்க"னு சாமி பதில் சொன்னாரு.
சரின்னு சொல்லி தாத்தாவும் எப்படி சாகறதுன்னு யோசிச்சாரு. அந்தப் பதட்டத்துல அவருக்கு ஒண்ணுமே தோணல. சுத்தி முத்திப் பாத்தாரு. சாமி அதைப் பாத்து லேசாச் சிரிச்சாரு. ஒரு வளியுமே தோணாத தாத்தா பாத்தாரு. டப்புன்னு தொண்டக்குளிக்குள்ள வெரல விட்டுக் குத்திச் செத்துப் போயிட்டாரு.
ஒரு பிடியாச் செத்துப்போயிட்டுக் கண்ணைத் தொறந்து பாத்தாரா ........ பாத்தா முளுசும் இருட்டா இருக்கு. செத்துப்போனது வேற ஒரே மப்பா இருந்துச்சு. கண்ணே தெரியல. நெறைய காக்கா கத்துற சத்தம் மட்டும் கேட்டுட்டே இருந்துச்சு. திரும்பிப் பாத்தா ரெண்டு பேரு கையில ஒரு விளக்கைப் புடிச்சுட்டு அவருகிட்ட வாராங்க. அந்த வெளிச்சத்துல தான் தெரிஞ்சுது, சுத்தி ஒரு மேடு பள்ளம் மரம் செடி மயிரு மண்ணாங்கட்டி எதுவுமே இல்லையின்னு. வெறும் இருட்டுதான்.
அவங்க வந்ததும் தாத்தா அவங்ககிட்ட, "ஒரு நிமிஷம் பொறுங்க. இந்தா வந்துர்றேன்"னு சொல்லிட்டுப் பூமியில அவரு உடம்புக்குள்ள வந்தாராம். எந்திரிச்சுப் பாத்தா ஒரே ரத்தக்காடாக் கெடக்குது. எதிரே சாமி சிரிச்சுகிட்டே உக்காந்திருக்காரு. அவரைப் பாத்ததும், "பயப்படாதே. என் ஆளுங்கதான். கூடப் போ. மறந்துராதே. ஒரு மணி நேரம் தான்"னு சொல்லி அனுப்பி வெச்சாரு.
தாத்தாவும் திரும்பி வந்து அவங்க முன்னாடி நின்னாரு. அவங்க போலாமானு கேட்டாங்க. இவரும் மண்டையை மண்டையை ஆட்டிட்டே அவங்களோட நடக்க ஆரம்பிச்சாரு. மூணு பேரும் ரொம்ப தூரம் இருட்டுக்குள்ள விறுவிறுன்னு நடந்தாங்க. தாத்தாவுக்கா 'என்னடா ஒண்ணையும் காணோம்'னு அவசரம். வேகம் போட்டு நடந்தாங்க.
கடைசியா ஒரு இடத்துல நெறைய மரமா வரிசையா நின்னுச்சு. அதையும் தாண்டி ஒரு ஆறு ஓடிட்டிருந்துச்சு. முட்டிக்கால் வரைக்கும்தான் தண்ணி ஓடிச்சு. அதையும் இறங்கித் தாண்டிட்டாங்க. இப்ப கொஞ்சம் வெளிச்சம் வர ஆரம்பிச்சுது. ஆத்தைத் தாண்டுனதும் ஒரு மேட்டுல ஏற ஆரம்பிச்சாங்க. ஏற ஏற வெளிச்சம் அதிகமாயிட்டே போச்சு. மேல ஏறிட்டிருக்கும்போதே ஒரு சாரல் தூற ஆரம்பிச்சுது. தாத்தாவுக்கு எல்லாமே அதிசயமா இருந்துச்சு.
திடீர்னு அவரு கூட வந்தவங்ககிட்ட, "இது சொர்க்கமா நரகமா"னு கேட்டாரு. அதுக்கு அவங்க, "அதெல்லாம் பொய். இங்க சொர்க்கம் நரகம்னு பிரிவினையெல்லாம் கெடையாது. வர்றவங்க எல்லாருக்கும் இந்த இடம்தான்"னுட்டு மேட்டுக்கு மேலயிருந்து காட்டினாங்க. அந்தப் பக்கம் கொள்ளை அழகா இருந்துச்சு. லேசா மழை பேஞ்சிட்டே இருக்க நெறைய பறவைங்க கீச்சுகீச்சுனு சத்தம் போட்டுட்டே இருந்துச்சுங்க. அங்க நெறைய குழந்தைங்க வெளையாடிட்டிருந்தாங்க. பக்கத்துலயே பெரியவங்க எல்லாம் அந்தக் குழந்தைகளை ரசிச்சுட்டே அவங்கவங்க வேலையைப் பாத்துட்டிருந்தாங்க. எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. கண்ட திசையெல்லாம் இயற்கையும், அன்பும், அமைதியுமாத்தான் இருந்துச்சு.
தாத்தா ஒரே பரவசமாப் போயி நின்னாரு. "எங்க ஊர்ல கெட்டவங்க எல்லாம் நரகத்துக்குப் போவாங்கன்னு சொல்வாங்களே. அப்படின்னா பாவிங்களுக்கெல்லாம் தண்டனையே இல்லையா"ன்னு கேட்டாரு.
"உயிர் இருக்குற வரைக்கும்தான் நல்லவன் கெட்டவனெல்லாம். செத்துப்போய் இங்க வந்து இந்த மழையில நனைஞ்சாலே எல்லா அழுக்கும் கரைஞ்சு போயிரும். அது போக சாமி என்னிக்குமே யாரையுமே தண்டிக்கணும்னே நெனைச்சதில்லை. நம்ம சாமி. நல்ல சாமி. அவருக்கு எல்லாரையும் அன்பா அரவணைக்க மட்டும்தான் பிடிக்கும்"னு பதில் வந்துச்சாம்.
தானே சின்னப் புள்ளைங்கள 'சாமி கண்ணைக் குத்திரும்'னு பயங்காட்டினதெல்லாம் ஞாபகம் வந்து தாத்தா சிரிச்சுகிட்டாரு. அவருக்கு இன்னும் பரவசமே அடங்கல. அவரு கூட வந்த ஒருத்தரு தூரத்துல மலையடிவாரத்துல கை காட்டி, "அதோ அதான் சாமி வீடு"ன்னு சொன்னாரு. அங்க ஆத்தோரமா ஒரு மச்சு வீடு இருந்துச்சு. நெறைய பேரு நடமாடிட்டிருந்தாங்க. எல்லாரும் சிரிச்ச முகமா இருந்தாங்க.
பாத்துட்டே இருக்கும்போது ஒருத்தரு, "ஐயா இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. சாமி உங்களுக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாரு"னு சொல்ல, தாத்தா "ஐயையோ நான் இன்னும் முளுசாப் பாக்கவே இல்லையே"ன்னாரு. அதுக்கு அவரு சிரிச்சுகிட்டே, "ஐயா பல வருஷமா இருக்குற நானே இன்னும் முழுசாத் தெரிஞ்சுக்கலை. அதுக்குள்ள நீங்க எப்படி பாத்துற முடியும். சீக்கிரம் திரும்பிப் போங்க. சாமி சொல்லச் சொன்னாரு"ன்னு தாத்தாவைக் கெளம்பச் சொன்னாரு.
சரின்னு தாத்தாவும் அவசரமாத் திரும்பி உடம்புக்குள்ள வந்தா , சாமி சிரிச்சுகிட்டே உக்காந்திருக்காரு. "எளுது. சீக்கிரம்." சாமி தாத்தாவுக்கு சைகை காட்டினாரு. உடனே பனாவை எடுத்துட்டுத் தாத்தா எளுத உக்காந்தாரு. என்னென்னமோ யோசிச்சாரு. ஆனா எளுத மட்டும் வரவே இல்லையாம். திரும்பி சாமியப் பாத்தாரு. அவரு அதே சிரிப்பு மாறாம உக்காந்திருக்காரு.
உடனே தாத்தாவுக்குப் பொறி தட்டிச்சு. எளுதுனாரு. "மரணத்துக்கு அப்புறம் என்னன்னு தயவு செஞ்சு யாரும் உயிரோட இருக்கும்போதே தெரிஞ்சுக்காதீங்க. அப்புறம் எல்லாருமே தொண்டக்குழியக் கிழிச்சுகிட்டுதான் அலையணும் !"
பேனாவை மூடி வைச்சுட்டு நிமிந்து சாமியைப் பாத்தாரு. அவரு சிரிச்சுகிட்டே எளுந்து வந்தாராம். "என்ன எப்படி இருந்துச்சு"னு கேட்டாரு. "என்னன்னு சொல்ல.. எல்லாமே அதிசயமா இருக்கு. அழகா இருக்கு. சொர்க்கபுரியால்லா இருக்கு. ஆனா ஒரு மண்ணேரம் பத்தவே இல்லையே"ன்னாராம் தாத்தா. தாத்தாவோட தோள் மேல கையைப் போட்டுகிட்டு சாமி அவரை அப்படியே கூட்டிட்டுப் போயி நடந்துகிட்டே "சிதம்பரம் .. ஒனக்கு நான் ஒரு கதை சொல்லவா"ன்னு கேட்டாராம். "ஆஹா சாமி தாராளமாச் சொல்லுங்க"னு சொன்னாரு தாத்தா. "பல ஆயிரம் வருஷம் முன்னாடி பூமியும் அப்படித்தான் இருந்துச்சு........" அப்டின்னு சாமி கதையை ஆரம்பிக்க அவங்க அப்படியே நடந்துட்டே இருந்தாங்களாம்.
- மதி
(படம் அளித்து உதவிய மைக்குக்கு நன்றி)


