எழுத்தறிவிப்பவன் அல்ல இறைவன்


எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் குறிப்பிடச் சொல்லப்படும் வாக்கியம் அது. அதே போலவே குழந்தையும் தெய்வமும் ஒன்று எனவும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மழலையின் தூய்மையையும் உன்னதத்தையும் குறிப்பிடச் சொல்லப்படும் வாக்கியம். இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தால் எந்தப் பக்கம் இறைவன் இருப்பதாய் உணர்கிறீர்கள்? எனக்கு இறைவன், இந்த வாக்கியங்களை எழுத்துக்கூட்டி வாசித்துப் புரிந்து கொண்டதும், அந்தச் சிறு வெற்றியில் திளைத்துப் புன்சிரிக்கும் சிறுவனாகத் தான் தெரிகிறான். 

ஒரு குழந்தைக்கு எது மொழி? ஒரு குழந்தைக்கு எதற்கு மொழி தேவைப்படுகிறது? ஒரு குழந்தை எப்படி மொழியைக் கற்றுக் கொள்கிறது? ஒரு குழந்தைக்கு எப்படி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான என் தேடலும் சில நல்ல மனிதர்களின் அறிமுகங்களும்தான் இந்தப் பதிவு. ஒரு வினாடி கண்ணை மூடி உங்கள் வீட்டில் வளரும் குழந்தையையோ, உங்கள் அரை டவுசர் நாட்களையோ கருத்தில் கொண்டு வந்துவிட்டுத் தொடர்ந்து வாசியுங்கள். 

ஒரு குழந்தைக்கு எது மொழி

பிறந்த குழந்தை தன் தேவைகளை உணர்த்த உதவும் சத்தங்களும், உடல் மொழியும் தான் குழந்தைக்கு முதல் மொழி. பசி, உறக்கம், பாதுகாப்பு, மகிழ்ச்சி, அசௌகரியம் என்று அந்த மொழிக்குத் தேவையான சொற்கள் மிகச் சொற்பம் தான். அந்த மொழியை எந்தக் குழந்தையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை. தன் போக்கில் சிறு சிறு பரிசோதனைகளைச் செய்து ஒவ்வொரு குழந்தையும் தனக்கான மொழியை உருவாக்கிக் கொள்கிறது. எந்தச் சத்தத்துக்கு என்ன எதிர்வினை நடக்கிறது என்று தன் மனதில் பதிந்து கொண்டு அதே சூழல் மீண்டும் வரும்போது மீண்டும் அதே சத்தத்தை எழுப்புகிறது. காலப்போக்கில் அந்தக் குழந்தையும் அதன் குடும்பமும் இந்த மொழியை உருவாக்கி, வளர்த்து, கற்றுத் தேர்ந்து கைவிட வேண்டிய பருவத்துக்கு வந்து விடுகிறார்கள். அதன் பின் குழந்தை தாயின் மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. 

அதன் மொழியையே தொடர்வதில் என்ன சிக்கல்? முன்பே சொன்னது போல் அந்த மொழியில் சொல்வளம் போதாது. மேலும், அந்தக் குடும்பத்தைத் தாண்டி வெளியே செல்லும்போது ஒவ்வொருவருக்கும் அந்த மொழியைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பது நடைமுறையில் உதவாது. இதை எப்படியோ அந்தக் குழந்தையே புரிந்து கொண்டு பலருக்கும் புரியக்கூடிய ஒரு மொழியைத் தாயிடமிருந்து ஆர்வமாகக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. இந்தக் கற்றல் பயணம் துவங்கிய நாளில் இருந்து அது கற்றுக்கொண்டு பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு வெற்றிகளை அடையும் குழந்தை அந்த வெற்றியின் களிப்பில் அடுத்த முறை மேலும் உற்சாகமாக முயல்கிறது. 

(இன்று நாம் இயந்திரங்களுக்கு மொழியைக் கற்றுக்கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் Machine learning முறைகளும் இதே போலவே தான் என்பதை உணர்கிறீர்களா?)

ஒரு குழந்தைக்கு எதற்கு மொழி தேவைப்படுகிறது

குழந்தைக்கு மட்டுமல்ல, நம் எல்லாருக்குமே கூட கருத்துப் பரிமாற்றத்துக்காகத் தான் மொழி முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு அரசியல் லாபங்களுக்காக மொழி தேவைப்படலாம். அதை இங்கே பேச வேண்டாம். 

கருத்துப் பரிமாற்றம் ஒரு அடிப்படையான கொடுத்துப் பெறும் செயல். தன் மனதில் உள்ள கருத்தைக் கொடுக்கவும், பிறர் கொடுக்கும் கருத்துகளைப் பெறவும் குழந்தைக்கு மொழி தேவைப்படுகிறது. வயது கூடக்கூட கொடுத்துப் பெறும் கருத்துகளின் தேவை, சூழல், உள்ளர்த்தங்கள் ஆகியவை நுட்பமாகி விடுகின்றன. இவ்வளவையும் ஒரு குழந்தை புரிந்து கொள்ளத் தேவையில்லை. அதற்காக, எந்தத் தேவையும் இல்லை என்றோ ஏதோ ஒரு தேவை இருக்கும் என்றோ கூட புரிந்து கொள்ள வேண்டாம். மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கும் குழந்தைக்குத் தன்னளவில் அதற்கான ஒரு தேவை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அந்தத் தேவைதான் கற்றுக்கொள்ளும் ஆர்வமாக மாறுகிறது. தாய்மொழியில் இந்தத் தேவை புரிதல் இயல்பாகவே நடந்து விட்டாலும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து இரண்டாவது முறை ஒரு மொழியை முதலில் இருந்து கற்றுக்கொள்ள முயலும்போது இது நடப்பதில்லை. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதால் நான் கற்கிறேன் என்று நினைக்கும் குழந்தை மொழியைக் கற்றுக்கொள்வதில்லை, நினைவில் வைத்துக் கொள்கிறது. அவ்வளவுதான். 

ஒரு குழந்தை எப்படி மொழியைக் கற்றுக்கொள்கிறது

பசியோ, பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தை காதைத் திருகியதோ, எப்படியோ கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு சூழல் முதலில் உருவாகிறது. அப்போது எதைச் சொல்லித் தன் கருத்தை வெளிப்படுத்துவது என்ற சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கல் மொழிக்கான தேவையை உருவாக்குகிறது. உண்மையான தேவை மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உருவாக்குகிறது. அந்த ஆர்வம் ஒரு தேடலை உருவாக்குகிறது. எங்கே மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்று ஆர்வத்தோடு தேடும் குழந்தை குடும்பத்தையோ, பள்ளிக்கூடத்தையோ, ஊடகங்களையோ கருவிகளாகப் பயன்படுத்தி மொழியைக் கற்றுக்கொள்கிறது. கற்றுக்கொண்ட மொழியைப் பயன்படுத்தி, அது தக்க பலனைத் தந்தால் அதை மனதில் பதித்துக் கொள்கிறது.

சூழல். சிக்கல். தேவை. ஆர்வம். தேடல். கருவியைக் கண்டறிதல். பயன்படுத்துதல். பதிந்து கொள்தல். 

நாம் பள்ளிக்கூடங்களில் மொழியைக் கற்றுக்கொடுக்க முயற்சிக்கும் போது நேராக கருவிகளையே அறிமுகப்படுத்துகிறோம். அதற்கு முன் அதற்கான சூழலோ, தேவையோ, ஆர்வமோ இருக்கிறதா என்று உணர்ந்து அறியாமல் கற்றுக்கொடுக்கும் இந்த முறை, கொஞ்ச காலத்தில் கற்றுக்கொள்ள அங்கே ஒரு குழந்தை இருக்கிறதா என்று கூட பார்க்காது. தன் கடமையைச் செய்யும் கண்மூடித்தனமான முனைப்பில் வெறும் சுவர்களுக்குப் பாடமெடுத்துப் பரீட்சை வைத்து, மதிப்பெண் குறைவு என்று தண்டனைகளையும் கூட கொடுக்கும். 

ஒரு குழந்தைக்கு எப்படி மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்

நம் பள்ளிக்கூடங்கள் கற்றுக்கொடுக்கும் முறையைத் தவறென்று விமர்சித்தாயிற்று. அப்படியானால், சரியான முறை எது? இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு சரியான பதில்தான் இருக்க முடியும் என்று நினைப்பவர்கள் நம் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தவர்களே என்ற காரணத்தால் அவர்களைப் பெருந்தன்மையாக மன்னித்து விடுவோம். நிஜத்தில், இந்தக் கேள்விக்குப் பல பதில்களை ஆதாரத்துடன் உறுதிசெய்து கூற பல நல்ல மனிதர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஆசிரியர், ஒரு கல்வி ஆர்வலர், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனர் மற்றும் ஒரு வியாபாரி ஆகியோர் குடிகொண்டிருக்கிறார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் என்று நான் பெருமையோடு சொல்லிக் கொள்ளும் மூன்று பேரைப் பற்றிச் சொல்கிறேன். இவர்கள் ஒவ்வொருவரோடும் நானும் ஏதோ ஒரு அளவில் அந்தக் கேள்விக்கான விடையைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 

ராம் பிரகாஷ்

என் கல்லூரி நண்பன். பிறருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்போது பெருமையாக 'நண்பர்' ஆகிவிடுகிறார். ஆசிம் ப்ரேம்ஜி கல்விப் பல்கலைக்கழகத்தில் கற்றலைப் பற்றிக் கற்றுக்கொண்டு 'வித்யா விதை' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பள்ளிச் சூழலைக் கற்றலுக்கு உகந்ததாக மாற்றும் பள்ளிச் சீரமைப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எட்டாவது வகுப்பில் இருந்தாலும் இன்னமும் ஒரு வாக்கியத்தைக் கூட வாசிக்கக் கஷ்டப்படும் மாணவர்கள் இருக்கும் ஒரு பள்ளியில் எப்படி மொழியைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பிரச்சனையைச் சமீபத்தில் கையில் எடுத்துக் கொண்ட போது ராமும் நானும் இதைப் பற்றி நிறைய பேசினோம். இந்தப் பிரச்சனையின் வேர் வரை சென்று பார்க்க இருவருக்கும் ஆர்வமும் முனைப்பும் இருந்தது. அந்த உரையாடலில் முளைத்து வளர்ந்த ஒரு மாற்று முறையில் இப்போது அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மொழியைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார் ராம். 


ஸ்ரீராம்

என் முன்னாள் முதலாளி. பல கலைகளிலும் நல்ல ரசனையுள்ள நண்பரும் கூட. 'நலந்தாவே நிறுவனம்' என்ற அமைப்பை நிறுவி, பத்து வருடங்களுக்கும் மேலாக, வசதி வாய்ப்புகள் குறைந்த சூழ்நிலைகளில் வளரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கனவுகள் காண வைத்துக் கொண்டிருப்பவர். தன் பால்ய பிராயத்தில் வகுப்பறை என்பது ஒரு பிரம்பின் மேலான பயத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்ததை வெறுத்து, வகுப்பறைகளைப் பயம் இல்லாத, சுதந்திரமான கற்றல் வெளிகளாக மாற்றிக் கொண்டிருப்பவர். இதற்காக இவர் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் ஆயுதம் கலை. ஓவியம், பாடல், நடனம், நாடகம் என்று மாணவர்களுக்குப் பிடித்த கலை வடிவங்களைக் கொண்டு முதலில் மாணவர்களுக்கு வகுப்பறையின் மேல் உள்ள பயத்தைப் போக்கி, பிறகு கற்றலின் மேல் ஒரு ஆர்வத்தை உருவாக்க இவர் தொடங்கிய 'கலைகள் மூலம் கல்வி' பாடத்திட்டத்தை வடிவமைத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் பங்குபெற்றதை என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கிறேன். 


ராஜேந்திரன்

என் மூத்த நண்பர். ஒரு வருடம் முன்பு கற்றல் பற்றிய ஒரு பட்டறையில் அறிமுகமாகி மரியாதைக்குரிய நண்பராக மாறி இருப்பவர். முன்னாள் தமிழ் ஆசிரியர். தமிழ் பாடத்திட்டங்களை வடிவமைத்து, பாடப்புத்தகங்களை எழுதிய அனுபவம் மிக்கவர். வழக்கமான பாதையில் நெடுந்தூரம் பயணித்த பிறகும் கூட அதன் குறைகளை உணர்ந்து களைந்து, புது அணுகுமுறைகளோடு இப்போது மொழி கற்பித்தலில் மீண்டும் இறங்கியிருப்பவர். Qrius Learning Initiatives Pvt. Ltd. என்ற நிறுவனத்தைத் தொடங்கி 'நீள்கதைப் பாடத்திட்டம்' என்ற முறையின் மூலம் இப்போது பல மாணவர்களுக்கு மொழியைச் சுவாரசியமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 'கற்றுக்கொடுக்கிறார்' என்று சொல்லி இருப்பேன். அந்த வெங்காயத்தை எல்லாம் நாம் செய்யத் தேவை இல்லை. நல்ல சூழலை அமைத்து அறிமுகப்படுத்தினால் போதும், அவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று அவரே மறுத்துவிடுவார். கதை கேட்கப் பிடிக்காத குழந்தை உண்டா? அந்தக் கதைகளின் மூலம் மொழி கற்றலையே ஒரு சாகசப் பயணமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். 


இந்த மூவரும் வெவ்வேறு வழிகளில் ஒரே எதிரியை எதிர்த்து ஒரே நோக்கத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறவர்களே. இவர்களில் எவருடைய அணுகுமுறையும் மற்றதை விட உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை. இவர்களைப் பற்றி இங்கே எழுதி உள்ளதால் இவர்கள் தான் இந்தப் போர்க்களத்தில் இருக்கும் ஒரே வீரர்கள் என்றும் இல்லை. இவர்கள் மூவருடனும் எனக்கு இருக்கும் தனிப்பட்ட பரிச்சயத்தின் பொருட்டு என் கருத்துக்கு இவர்களை உதாரணங்களாக்கிக் கொண்டேன். அவ்வளவே. 

பொதுவாக, இவர்கள் எல்லாரும் செய்வது குழந்தை வடிவில் இருக்கும் இறைவனுக்கு எழுத்தறிவிக்கும் பணி. இறைத் தொண்டு! 

- மதி 

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..