குமார பர்வதம் - மலையும் மலை சார்ந்த நினைவுகளும்

வெற்றிக்குறி
((இந்தப் பதிவை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக்கவும்))

புஷ்பகிரி என்கிற குமார பர்வதம். கர்நாடக மாநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் 5,617 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அழகான சவால். தென்னிந்தியாவின் மிகக் கடினமான மலையேற்றங்களில் ஒன்று. ஏறி இறங்க மொத்தம் 22 கிலோ மீட்டர். இரண்டு நாட்கள். பதிமூன்று பேர். இனிதே துவங்கியது எங்கள் 2014.

இந்தப் புத்தாண்டை எங்கே கொண்டாடலாம் என்று கடந்த சில மாதங்களாகவே நண்பர்கள் அடிக்கடி யோசித்து யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தோம். பெசண்ட் நகர் கடற்கரையிலிருந்து அந்தமான் கடற்கரை வரை அலசிப் பார்த்தாயிற்று. உருப்படியாய் வித்தியாசமாய் ஏதாவது செய்யலாம் என்ற ஒரு உந்துதல் வேறு. அப்படியாகத் தேடி அகப்பட்ட ஒரு திட்டம் தான் இந்த மலையேற்றம். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவர் வேறு ஒரு குழுவோடு ஏற முயற்சித்து, அட்டைக் கடியாலும் அடைமழையாலும் சாகசம் பாதியிலேயே சொதசொதவென்று ஆகித் திரும்பி வந்திருந்தார். அவர்தான் முதலில் வெள்ளோட்டம் விட்டது. சிலருக்குப் பிடித்துப் போகவே, வெகுஜனத்திற்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்க்கத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு, இவன் வருகிறான் என்று அவனையும் அவன் வருகிறான் என்று இவனையும் வர வைத்து ஒரு வழியாக ஏற்பாடெல்லாம் பலமாகச் செய்து விட்டோம். மயிரைக் கட்டி மலையை இழுத்த கதைதான். வந்தால் மலை. போனால் கொஞ்சம் முட்டி வலி என்று தயார் ஆகி விட்டிருந்தோம்.

போதுமான அளவுக்கு இணையம் தகவல்களை அளித்திருந்தது. மலையை இரண்டு பக்கங்களில் இருந்து ஏறலாம். சோம்வார்பேட்டா என்ற ஊரும் குக்கே என்ற ஊரும் மலையின் இரு அடிவாரங்களில் இருக்கிறது. குக்கேவில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. மலையைச் சுற்றிக் கொண்டு சாலை வழியாகப் போனால் இரு ஊர்களுக்கும் தூரம் 60 கிலோமீட்டர். சும்மா அப்படியே நடுவில் இருக்கும் ஒரு மலையை ஏறி இறங்கி விட்டால் வெறும் 22 கிலோமீட்டர்தான்! இவ்வாறில்லாமல் குக்கேவில் தொடங்கி மலை உச்சி வரை ஏறிவிட்டு மீண்டும் வந்த பாதையிலேயே இறங்கி குக்கேவிலேயே பயணத்தை முடிக்குமாறும் பரவலாக ஒரு அணுகுமுறை இருக்கிறது. போறதுதான் போறோம் ரெண்டு பக்கத்தையும் பாத்துருவோமே என்று நாங்கள் முடிவெடுத்தோம். பிற்பாடு மலையின் முதுகைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா.


கடின அளவுகோல்களின் படி பார்த்தால் இது கொஞ்சம் சவாலான நிலைதான். சோம்வார்பேட்டாவில் இருந்து பீடஹள்ளி என்ற சிற்றூருக்கு அரை மணி நேரம் பேருந்தில் சென்று அங்கிருந்து 5 கிலோமீட்டர் நடந்து சென்றால் புஷ்பகிரி வனவிலங்குகள் சரணாலயத்தின் சோதனைச் சாவடி வரும். இது வரை நடந்து வருவதற்குள்ளேயே சிலருக்கு நுரையீரல் நொறுங்கிப் போய் விடலாம். இங்கிருந்துதான் இனி மலையேற்றமே ஆரம்பிக்கப் போகிறது என்று சொன்னால் பேசாமல் அங்கேயே ஒரு புளியமர நிழலில் கட்டையைச் சாய்த்துவிட்டுக் கடைசி வண்டியைப் பிடித்து ஊரைப் பார்த்துப் போய்விடலாம் என்றுதான் தோன்றும். நல்ல வேளை நாங்கள் அந்தத் தப்பைப் பண்ணவில்லை. முந்தின இரவு பெங்களூரில் இருந்து பேருந்தில் கிளம்பி அதிகாலை 4 மணிக்கு சோம்வார்பேட்டா வந்தடைந்திருந்தோம். அங்கேயே ஒரு ஜீப் காரரிடம் பேசி வனத்துறைச் சோதனைச் சாவடி வரையிலும் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்திருந்தோம். 1500 ரூபாய் கேட்டார். தாராளமாகக் கொடுக்கலாம். பதிமூன்று பேருக்கும் எங்களின் மூட்டை முடிச்சுகளுக்கும் வண்டியில் இடம் போதாமல் ஹரி படங்களில் அருவாளோடு வரும் அடியாட்களைப் போல நான் மட்டும் ஜீப்பின் பின்பக்கம் தொத்திக் கொண்டே போக வேண்டி வந்தது. மலைச் சாலைகளைத் தாண்டியதும் சோதனைச் சாவடி வரையில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டருக்குக் கடைசியில் தார்ச்சாலை என்பது ஏழை வீட்டுப் பாயாசத்தில் நெய் ஊற்றினாற்போல் கொஞ்சூண்டு ஒட்டிக் கொண்டுதானிருக்கும்.


இந்த இடத்தில் இரண்டு சுவாரசியமானவர்களை நீங்கள் பார்க்கலாம். ரோமம் அடர்ந்த இரண்டு மலை நாய்கள் உங்கள் கூடவே ஓடி வரும். இரண்டு ரொட்டித் துண்டுகளைப் போட்டீர்களானால் மலை உச்சி வரையிலும் விசுவாசமாகக் கூடவே வந்து வழி காட்டுமாம். இதற்கு முன் மலை ஏறின நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். மாயா என்று அந்த நாய்க்குப் பெயர் வேறு வைத்திருந்தார். நாங்களும் மாயாவைக் கண்டோம். ஆனால் மாயாவின் துணை இன்றித் தனியாகவே ஏற முடிவு செய்தோம். ரொட்டி கொடுக்க மனசு ஒப்பவில்லை. கைவசம் இருந்தது எங்களுக்கே போதுமா என்ற சந்தேகம்தான்.

சோம்வார்பேட்டாவில் அதிகாலை முதலில் கடை திறக்கும் சாரதா மெஸ்ஸில் இனிப்பு சாம்பாரோடு இட்லி தின்று விட்டுக் கிளம்பினால் மறு நாள் மதியம் குக்கேவுக்கு இறங்கும் வழியில் பாதி மலையில் பட்டா என்றொருவரின் வீட்டில்தான் சமைத்த உணவு கிடைக்கும். இடையில் தேவையானதை எல்லாம் முதுகில் சுமந்துதான் செல்ல வேண்டும். பதிமூன்று பேரை மூன்று சிறு குழுக்களாகப் பிரித்து அவரவரின் உணவுச் சுமையைப் பகிர்ந்து கொடுத்து விட்டோம். ஆளுக்கு இரண்டு ஆப்பிள்கள், மூன்று snickers பார்கள், ஒரு வெள்ளரிக்காய், ஒரு பிஸ்கட் பாக்கெட் - அப்புறம் ஒரு குழுவுக்கு இரண்டு ரொட்டி பாக்கெட்டுகள், ஒரு பாக்கெட் சுவையூட்டப்பட்ட சோயா பால், இரண்டு குளூகோஸ் பாக்கெட்கள் - அப்புறம் எல்லாருக்கும் பொதுவாக மொத்தம் பதினைந்து உறைந்த சப்பாத்திகள் - இதுதான் எங்கள் உணவுப் பெட்டகம். இது போக ஆளுக்கு இரண்டு பாட்டில் தண்ணீர். மலையில் மொத்தம் ஆறு இடங்களில்தான் தண்ணீர் கிடைக்கும்.

இது போக மலை உச்சியில் இரவு குளிரைத் தாங்கும் அளவுக்குத் துணிகள், அட்டைக் கடியைச் சமாளிக்க உப்புப் பொட்டலம், ஒரு ஜோடி மாற்றுத் துணி, ஓர் ஆள் புகுந்து கொண்டு ஜிப்பை மூடிக் கொள்ள வசதியான படுக்கைப் பை, ஒரு குழுவுக்கு ஒரு மடிப்புக் கூடாரம் என்று ஒவ்வொரு முதுகிலும் குறைந்தது பத்து கிலோ எடை இருந்திருக்கும். இந்தக் காட்டுக்குள் எப்போதாவது சில சமயம் சிலர் வழி மாறித் தொலைந்து போகலாம். அல்லது வனவிலங்குகளைச் சந்திக்க நேரலாம். மர்ஃபியின் விதியை மனதில் கொண்டு ஒருவேளை மலைக் காட்டுக்குள் வழி மாறித் தொலைந்து போனால் சமாளிக்க ஆளுக்கு ஒரு டார்ச் லைட், சிகரெட் லைட்டர், பேனாக் கத்தி, ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு விசில் என்று ஏகபோக முஸ்தீபுகளுடன் தான் இருந்தோம். இவை எல்லாமே இருக்க வேண்டிய பொருட்கள் தான். இதில் எவ்வளவு எடை குறைவாக எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச் செல்லல் சாமர்த்தியம்.

சோதனைச் சாவடியில், என்னவென்றே தெரியாத கன்னடத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விலாசம், செல் எண் ஆகியவற்றையும் ஆளுக்கு 200 ரூபாய் கட்டணத்தையும் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்கள். அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிட்டால் உற்றாருக்குத் தகவல் சொல்லி அனுப்பத் தேவையான விவரங்கள்! வனத்துறை அலுவலர்கள் இருவர் மது புட்டிகள் இருக்கிறதா என்று சோதனை செய்துவிட்டு, தங்கள் செல் எண்ணையும் கொடுத்துத் தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அந்த இடத்தில் நின்றவாறு அண்ணாந்து பார்த்தால் மலை உச்சி தெரியும். ஏறித் தொடத்தான் ஒரு பகல் ஆகிவிடும்!

அடிவாரத்தில் ஒரு நீரோடை இருக்கும். காலைக் கடன்களை எல்லாம் அங்குதான் முடிக்க வேண்டும். கூச்சப்படாமல் மறைவாக இடம் தேடி ஒதுங்கிச் சட்டுபுட்டுன்னு வேலையை முடித்துவிட்டு வரவேண்டும். நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்து, வேடிக்கையாகப் பச்சைப் பாம்புகளைப் பார்த்துக் கொண்டே வயிற்றைக் காலி செய்யலாம். வருமா என்பது வேறு விஷயம்! ஏற்றத்தின் முதல் இரண்டு கிலோமீட்டர் அடர்ந்த காடுதான். இங்கே அட்டைகள் தொல்லைப்படுத்தலாம். எச்சரிக்கையாய் இல்லாவிடில் மிருகினஜம்போ தான்! காலுறைகளுக்குள்ளும் ஆடை மூடாத கை/கால் பகுதிகளிலும் உப்பைத் தேய்த்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கலாம். இது கொஞ்சம் தடுப்பைக் கொடுக்கும். அதையும் மீறி அட்டை கடித்தால் அட்டையைப் பிய்த்துப் போட்டு விட்டுக் கொஞ்சம் புகையிலைத் தூளை வைத்து அழுத்தினால் இரத்தம் கொட்டுவது நிற்கும். மழை இல்லாத நேரங்களில் அட்டைக் கடி அரிதாகத் தான் இருக்கும். நாங்கள் போன நேரம் அட்டைகள் விடுமுறையில் இருந்தன போலும். அதிகப் பாதிப்புகள் இல்லாமல் அட்டைக்காட்டைத் தாண்டி விட்டோம். எதற்கும் எச்சரிக்கையாய் அடிக்கடி அட்டை ஏறி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டுதான் வந்தோம்.

அட்டைக்காடு

காடுகளின் அடர்த்தி குறைந்து ஒரு கட்டத்தில் அடுத்த நிலைக்குச் செல்வது தெளிவாகத் தெரியும். அதற்கு மேல் அட்டைகள் இருக்காது. அந்த இடத்தில் மீண்டும் ஓடை வரும். தண்ணீர் நிரப்பிக் கொள்ளலாம். ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதிகம் தாமதிக்காமல் தொடர்ந்து நடந்தால் சற்று தூரத்திலேயே கொஞ்சம் விசாலமான நீரோடை ஒன்று வரும். இதற்குப் பின் தண்ணீர் கிடைக்க ரொம்ப தூரம் ஏற வேண்டும். அங்கேயே ரொட்டிகளை உண்டு தண்ணீர் குடித்து மீண்டும் நிரப்பிக் கொள்வது உசிதம். ஒரு பாட்டில் தண்ணீரில் குளூகோஸையும் கலக்கி வைத்துக் கொள்ளலாம்.

இனி உச்சி வரை கதறக் கதற நடக்க வேண்டியதுதான். ஒரு நல்ல விஷயம். இந்தப் பக்கமாக மலை ஏறும்போது வெயில் தெரியாது. வழி நெடுகிலும் நிழல் தர மரங்கள் இருக்கும். ஏற்றம் கரடுமுரடாகவும் செங்குத்தாகவும் இருக்கும். முன்பின் பழக்கமில்லாதவர்களைப் பதம் பார்த்து விடக் கூடிய பயணம் இது. எங்கள் குழுவில் மூன்று நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவர்க்கும் இது முதல் மலையேற்றம். அதிலும் சிலர் செய்யக்கூடிய அதிகபட்ச உடற்பயிற்சியே வீட்டு மாடிப்படி ஏறுவதுதான். புகைப்பழக்கம் இருந்தால் இன்னும் கடினம். சபரிமலைக்கு மாலை போட்டதாக நினைத்துக் கொண்டு மலை ஏறுவதற்கு ஒரு சில வாரங்கள் முன்பிலிருந்தே கமுக்கமாக சிகரெட் பிடிக்காமல் இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பிலும் ஆட்கள் எங்கள் குழுவில் இருந்தார்கள். ஒரு குழுவின் வேகம் எப்போதும் குழுவிலேயே மெதுவாக இருப்பவரின் வேகம்தான். நாம் பின்தங்கிக் குழுவைக் கைவிட்டு விடக் கூடாது. குழுவுக்குள் அதிக இடைவெளி வந்துவிடக் கூடாது. பாதுகாப்புக் காரணங்களும் உண்டு. மற்றபடி அதிக இடைவெளி விட்டுத் தனித்தனியாக மலை ஏறுவதற்கு ஒருவர் ஜனவரியிலும் மற்றவர் மார்ச்சிலும் கூட ஏறலாம். பெரிய வித்தியாசம் இல்லை. மேலே ஏற ஏற முதுகுச் சுமையின் தீவிரம் உறைக்கத் தொடங்கும். கொஞ்ச நேரம் முன்னால் செல்பவர்கள் சென்று இளைப்பாறி, கடைசி ஆளும் வந்து சேர்ந்ததும் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். இப்படிச் செய்வது கடைசியில் வருபவனைக் கடுப்பேற்றிவிடும். மூச்சு வாங்க நாக்கு தள்ள அவன் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்ததும் 'வாங்க போகலாம்' என்று சொன்னால் கடுப்பாகாதா பின்னே? ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நண்பரை முன்னால் செல்பவர்களோடு சேர்ந்து நடக்க அனுப்பி வைத்தோம். தேங்கித் தேங்கி எப்போது அவர் கடைசியில் வருகிறவரோடு சேர்கிறாரோ அப்போது எல்லோடும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். எப்போதும் முன்னால் செல்பவர் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்றும் அப்படித் தவறிவிட்டால் விசிலடிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்திருந்தோம். விசில் சத்தம் கேட்டால் முன்னால் செல்பவர்கள் நிற்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நட்பையும், மன உறுதியையும், உதவி மனப்பான்மையையும் சோதனை செய்யும் தருணங்கள் அடிக்கடி இந்தப் பயணத்தில் நிகழும். மேலே ஏறத் துவங்குமுன் விளையாட்டாக "மேல வந்து எவனாவது snickers-ல பங்கு கேட்டீங்கன்னா நட்பே முறிஞ்சுரும்டா" என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சென்றவர்கள், மலையில் மேலே ஏற ஏற நட்பிலும் அவரவர் பங்குக்கு உயர்ந்து கொண்டிருந்தோம். ஒருவர் அடிக்கடி தேங்கினால் அவரின் முதுகுச் சுமையைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து சிரமப்படுபவரிடம் பேச்சுக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஏற வைப்பது வரை அத்தனையுமே கூட்டு முயற்சிதான். ஆண்கள் குழுவில் பெரும்பாலும் இந்த ஆசுவாசக் கதைகள் பெண்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். இந்தக் கதைகளுக்கு அப்படி ஒரு சக்தி உண்டு. மாமலையும் ஓர் கடுகுதானே! சும்மாவா? பேச்சு இல்லாவிடில் கற்பனை கூடப் போதும். பாலைவனத்தில் நடக்கும் மரியானுக்குப் பனிமலர் தெரிந்தது போல் அவரவர்க்கும் சிறு வயதில் இருந்து காதலித்த ஒவ்வொரு பெண்ணும் மன உருவில் கவர்ச்சியான கண்களோடு முன்னால் இருந்து இழுத்துக் கொண்டே செல்வது போலெல்லாம் தோன்றுவார்கள்.

மலை மேல் நாங்கள் தெரிந்து கொண்ட இன்னொரு அற்புதமான ஊக்க சக்தி - வசைகள்! எங்கள் குழுவில் எல்லோருமே முன்பின் அறிமுகம் ஆகி இராதவர்கள்தான். சில பேர் சந்தித்தே சில மணி நேரங்கள் தான் ஆகி இருக்கும். இருந்தாலும் அவரவர் வாயிலிருந்தும் சரமாரியாக
வசைகள் தெறித்துக் கொண்டு இருந்தன. வலி, ஆச்சரியம், சந்தோஷம், கோபம், ஏக்கம், அழகு, ரசனை, சோர்வு, எழுச்சி என எல்லாவற்றிற்குமே 'ஓத்தா'தான். 'ஓத்தா' என்னும் ஒற்றைச் சொல்லுக்குத் தான் எத்தனை அர்த்தம்! வசைகளுக்கு மனதை இலகுவாக்கும் ஒரு விசேஷ சக்தி இருக்கிறது. முதுகில் எடையைக் குறைக்க வழி இல்லாத வேளைகளில் சூழ்நிலையையும் சுற்றி இருப்போரையும் நாலு வசை சொல்லி விளித்தால் மனதின் எடையைக் குறைக்க முடிகிறது. எந்த எடை குறைந்தாலும் நல்லதுதானே! எங்கள் பயணத்திலேயே இரட்டை மேற்கோள்களிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு அதிமுக்கியமான வசனத்தை இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்தான் நண்பர் ஒருவர் அடிமனதிலிருந்து உதிர்த்தார். எப்போதும் தேங்கித் தேங்கி வருகிறார் என்று ஒரு தாட்டியானவரை முன்னால் அனுப்பி வைத்திருந்தோம். வரிசையில் இரண்டாவதாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் திடீரென்று அவருக்கு முன்னால் சென்றவரைக் காணவில்லை. விசிலடித்துப் பார்த்தாலும் பிரயோசனம் இல்லை. இவரால் நடக்க முடியவில்லை. இவர் தேங்கும் இரண்டு நிமிடங்களில் அவர் இன்னும் முன்னால் சென்று விட்டால் இன்னும் சிக்கல். சுற்றிமுற்றிப் பார்க்கிறார். மூச்சு இரைக்கிறது. இரண்டு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டு அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி முன்னால் சென்றவரின் பெயரைச் சொல்லி, "போகாதடா புண்டை" என்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் ஒரு கணம் சிரிப்பு முகத்தைப் பிய்த்துக் கொண்டு வெளிவந்து விடுமளவுக்கு வந்தது. அந்த வசையில் அவ்வளவு நேர்மையான உணர்ச்சிகள் இருந்தன! குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வைதவர் வாங்கியவரை விட வயது குறைந்தவர்; பயணத்துக்கு முன்னால் 'டா' போட்டுப் பேசும் அளவில் கூட நெருக்கமாகாதவர். சூழ்நிலை அப்படி!

இப்படி நாங்கள் பொதிமாடு மாதிரி மூச்சு வாங்க மேலே ஏறிக் கொண்டிருக்கும்போது ஒரு சில மலை பழகின மனிதர்கள் எங்களை எக்கச்சக்கமாய்க் கடுப்பேற்றும் விதத்திலேயே குதித்துக் குதித்து எங்களைத் தாண்டி முன்னால் சென்று கொண்டிருப்பார்கள். கஷ்டப்பட்டு ஏற்றி வைத்திருக்கும் தன்னம்பிக்கையை எல்லாம் இப்படி வருபவர்கள் குலைத்துச் சென்று விடக்கூடிய அபாயம் உண்டு. 'அவர்கள் எல்லாம் professional trekkers; நாம் கத்துக்குட்டிதானே' என்று அடிக்கடி சுயசமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் போதவில்லையென்றால் ஆண்டவனாய்ப் பார்த்து ஏதாவது ஒரு வயதான பார்ட்டியை அனுப்பி வைத்தால்தான் உண்டு. அவர் நம்மை விட அதிகமாகத் திணறும்போது 'நாம் பரவாயில்லை' என்று முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம். எங்கள் அதிர்ஷ்டம்! இறங்கும்போது அப்படி அதிக பேரைக் காண முடிந்தது. ஏறும் அன்று professional trekkers மட்டும்தான்.

பொதிமாடுகளுக்கு ஜே ! 

கடுப்பிலும் வலியிலும் நண்பர்கள் அப்போதே 'எவண்டா இந்தப் பிளானை ஆரம்பிச்சது' என்று விசாரிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் நிஜத்தில் இந்த மலையேற்றம் முதலில் எவன் கொடுத்த யோசனை என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை. எங்களில் ஒரு மூன்று நான்கு பேருக்குள் தான் விதை முளைத்து வினையாகி இருந்தது. இருந்தாலும் 'நான் தான் மச்சி' என்று மலையில் ஒத்துக் கொண்டால் உருட்டி விட்டு விடுவார்கள். உயிர் முக்கியம்! ஒரு மாதிரி சமாளித்து 'நீ தானேடா ஆசையா வரேன்னு சொன்னே' என்று எதிர்க்கேள்வி கேட்டால், "நான் சொன்னா உனக்கெங்கேடா போச்சு புத்தி. மயிராண்டி.. ஒழுங்கா என்னை வர வேண்டாம்னு செருப்பால அடிச்சு அங்கேயே கழட்டி விட்டிருக்கணும் நீ" என்று பந்து நம் பக்கம் திரும்பி விடும். இந்த மாதிரிப் பேச்சு முற்றிவிடும்போது 'ரொம்ப கனமா இருந்தா நான் வேணும்னா உன் கைக்குட்டையைத் தூக்கிட்டு வரேன் மச்சி' என்று பேச்சை மாற்றி விடுவது நல்லது.

ஏறுவழியில் பெரும்பாலும் ஒற்றையடிப்பாதை போல வழி இருந்தாலும் மூன்று சவாலான மொட்டைப் பாறைகளைத் தாண்டிப் போக வேண்டும். ஒவ்வொன்றும் கொஞ்சம் அபாயமாகச் செங்குத்தாகத் தான் இருக்கும். முதல் பாறையில் ஏறும்போது கட்டட வேலைக்காரர்கள் செங்கல் கடத்துவது போல் ஒருவர் ஒருவராக இடைவெளி விட்டு மேலே ஏறி, பின் சுமைகளைக் கடத்தி வைத்து ஏறினோம். இரண்டாவது பாறையில் இந்தப் பாச்சா பலிக்காது என்று புரிந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 அடி உயரம் இருக்கும் இந்தப் பாறை. சுமையோடுதான் ஏற வேண்டும். வேறு வழியே இல்லை. அதிர்ஷ்டவசமாக அங்கங்கே பாறையில் பிடிமானத்திற்குக் கொஞ்சம் பிளவுகள் இருந்தன. காலணிகளின் பிடியை நம்பி சிலபல எலும்புகளைப் பணயம் வைத்து ஏற வேண்டியதுதான். மிஞ்சிப் போனால் ஒரு உருளு உருளுவோம். என்ன கொஞ்சம் ஆழமாக உருள வேண்டியிருக்கும், அவ்வளவுதான்! இந்தப் பாறையை ஏறிவிட்டால் முதல் பாறை குழந்தை மேட்டர் போல் தெரியும். அதற்கெதக்கடா லூசுப்பயல்களைப் போல் சுமையைக் கடத்தி எல்லாம் கஷ்டப்பட்டோம் என்று தோன்றுவது இயற்கை! இதன் பின் வரும் மூன்றாவது பாறை உயரமும் கடினமும் கம்மிதான். இதுவரையிலும் மனமும் தொடைகளும் தளர்ந்து போகாவிடில் அநாயசமாக ஊதித் தள்ளி விடலாம். மூன்று பாறைகளையும் கடந்தபின் கொஞ்ச நேரத்தில் உச்சிக்கு அருகில் வந்துவிடுவோம். உச்சி கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருந்தாலே புது உற்சாகம் கிடைத்து விடும். உச்சிக்குச் செல்லும் பாறையின் அடியில்தான் குக்கேவிலிருந்து வருவோர் வந்து சேரும் வழி வந்து இணையும்.

அந்த இரண்டாம் பாறை

உச்சி கண்ணுக்குத் தெரிந்ததும் ஒரு நீளமான ஓய்வு நிறுத்தத்தை ஒரு நிழலில் போட்டு இளைப்பாறிவிட்டு, அதன் பின் ஒரே மூச்சாக மேலே ஏறி உச்சியில் இருக்கும் கொடியை அடைந்ததும், 'ஓத்தா இப்போ வாங்கடா' என்று வியர்வையைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தால் 'வாங்க வாங்க' என்று வரவேற்கும்விதமாக அவ்வளவு ஜனக்கூட்டம் அங்கே இருக்கிறது. எல்லாம் நம்மைப் போல ஏறி வந்தவர்கள்தான். குக்கேவிலிருந்து வந்தவர்களும் ஏற்கெனவே எங்களைக் கடந்து போன professional trekkers-உம் அவரவர் கூடாரத்திற்கு இடம் பிடிக்க மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஆறாயிரம் அடி உயரத்தில் ஒரு மலை உச்சிக்கு வந்தாலும் கூட மாம்பலம் ரயில் நிலையத்தில் இருப்பது போலவே கூட்டம் இருந்தது! வாழ்க பாரதம்! நாங்களும் கொண்டு வந்த கூடாரங்களுக்கு வாகாக ஒரு ஓரத்தைப் பிடித்துக் கடையை விரித்தோம். மேலே வந்தபோது மாலை நாலு மணி இருக்கலாம். சற்று நேரத்தில் சூரிய அஸ்தமனம். அதன் பின் குளிர் காற்று. குளிரைச் சமாளிக்க நெருப்பு வேண்டும். நெருப்புக்கு விறகு வேண்டும். கைவசம் மூன்று பட்டாக்கத்திகள் இருந்தன. 'பாக்கெட் கத்தி கிடைக்கலை மச்சி.. எதுக்கும் ஆகுமேன்னு இதை வாங்கிட்டு வந்துட்டேன்' என்று நண்பன் ஒருவன் வாங்கி வந்திருந்த கத்திகள்! ஒரு கூட்டம் கூடாரம் அமைக்கும் வேலையில் இறங்கியது. ஒரு கூட்டம் விறகு வெட்டக் கிளம்பியது. மற்றொரு கூட்டம் DSLR கேமராவைத் தூக்கிக் கொண்டு கடமையில் கருத்தாக மிக்சர் தின்னக் கிளம்பிவிட்டது.

இந்த DSLRகாரர்களோடு ஒரு பெரிய பிரச்சனை. கூடவே வரும்போது வளைத்து வளைத்துக் கிளிக்கித் தள்ளுவார்கள். ஆனால் பயணம் முடிந்து அந்தப் புகைப்படங்களை அவர்களிடம் இருந்து வாங்குவதற்குள் மற்றொரு முறை மலையையே ஏறிவிடலாம். இல்லாவிட்டால் ஆறேழு மாதம் கழித்து இந்த நினைவே மறந்து போய் இருக்கும் ஒரு சனிக்கிழமையில் ஒவ்வொன்றாக இந்தப் புகைப்படங்களை facebook-இல் வெளிவிடுவார்கள். கலை கண்ணை மறைக்கும் இவர்களிடம் கூச்சமே படாமல் நச்சரித்து நச்சரித்துத்தான் புகைப்படங்களை வாங்க வேண்டும். இந்தப் பயணத்தில் கூட DSLR நண்பர் இன்னும் புகைப்படங்களைத் தரவில்லை! கைக்கு அடக்கமாய் எளிய digicam கொண்டு வருபவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடிச் செய்வதில்லை. என்ன காரணம்? யார் செய்த குற்றம்? DSLR சமூகம் விளக்கம் சொல்லலாம். எம் போல் சாமானியர்கள் பயனடைவார்கள்!

சேஷபர்வதத்தில் சரியும் சூரியன்

அப்படி இப்படி ஆறு மணிக்கு அஸ்தமனக் காட்சியைக் கூட்டத்தோடு கண்டு விட்டு நெருப்பு மூட்டும் வேலையில் இறங்கினோம். மெதுமெதுவாகச் சூரியன் பொழுதைச் சாய்த்து வானத்தில் வண்ணங்களை வைத்து விளையாடி விடைபெறுவது ஒரு கவித்துவமான காட்சி. எதிரே சம உயரத்தில் இருக்கும் சேஷபர்வதத்தின் விளிம்புகளைப் பொன்னாக ஜொலிக்க வைத்துவிட்டுச் சூரியன் கீழிறங்கி விடும். அந்த உயரத்தில் அதைக் காண்பது கூடுதல் பாக்கியம்! அஸ்தமனம் ஆன கொஞ்ச நேரத்திலேயே குளிர் காற்று ஆரம்பித்து விடும். கையோடு ஒரு சின்ன வெப்பமானியையும் கொண்டு சென்றிருந்தோம். குறைந்தபட்ச வெப்ப நிலை 5 டிகிரி வரை கீழே செல்லும் என்றெல்லாம் சொல்லி வைத்திருந்தார்கள். நாங்கள் சென்றபோது 14 டிகிரி வரை குளிர் அடித்தது. குளிருக்கு இதமாய் நெருப்பில் காய்ந்து, கொண்டு வந்த உறைந்த ரொட்டிகளைச் சுட்டுத் தின்றுவிட்டுச் சீக்கிரமே முடங்கி விட்டோம். வலியையும் மீறி அன்றைய உறக்கத்தில் ஒரு திருப்தி இருந்தது. மறுநாள் சீக்கிரம் எழுந்து சூரிய உதயத்தைக் கண்டுவிட்டுக் கீழே இறங்கி இருட்டுவதற்குள் குக்கே சென்றடைய வேண்டும். அதுதான் திட்டம்! இறங்கு வழி இரட்டிப்பு தூரம். 14 கிலோமீட்டர்!

விடியல் என்னும் ஒரு சாசுவதத் தருணம்

விடியற்காலை தானாகவே சீக்கிரம் முழிப்பு தட்டிவிட்டது. சூரியனுக்கு முன்னால் கண் விழித்த அதிசொற்ப நாட்களுள் ஒன்று! அந்த ஞாயிறு காலையில் ஞாயிறோனைக் காணக் காத்திருந்தால், அவன் ஆயாசமாக எழுந்து அங்குல அங்குலமாக இரவைத் துடைத்துவிட்டு, செடிகளுக்குப் பச்சை ஊட்டிவிட்டு, மலர்களை எழுப்பி விட்டு விட்டு, நிதானமாக மேகங்களின் மேல் ஏறி எங்களை வந்தடைந்து இன்னும் உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தான். சூர்யோதயம் ஓர் அற்புத நிகழ்வு! என்ன ஆனாலும் அடுத்த நாள் விடியும் என்பது உலகின் ஒரு சில சாசுவத உண்மைகளுள் ஒன்றல்லவா! அந்த உண்மையைத் திவ்யமாகக் கண்டு களித்துப் புத்துணர்வோடு கூடாரத்தைக் கலைத்து மீண்டும் இறங்க ஆரம்பித்தோம்.

காலையிலும் குளிர் காயலாம். தப்பில்லை !

இறங்கு வழி வித்தியாசமான சவால்களை முன்வைத்தது. இறங்க ஆரம்பித்ததுமே ஒரு ஆழமான பாறையைக் கவனமாக இறங்க வேண்டும். அதன் பின் பாறைகளே இல்லை. பாறைகளின் குட்டித் தம்பிகளான கற்கள்தான் வழி நெடுகிலும். இரு பக்கமும் மலை சரிய நடுவே ஒரு கரடுமுரடான ஒற்றையடிப் பாதையிலேயே கீழ்வரை செல்ல வேண்டும். குப்புறப் படுத்திருக்கும் மலையின் முதுகெலும்பின் மேலேயே நடந்து செல்லும் ஒரு தோற்றம் கிடைக்கலாம். நிழலுக்கும் வழியில்லை. நீருக்கும் பஞ்சம். முன்னாடி நிமிர்ந்து பார்த்தால் குறைந்தது மூன்று கிலோமீட்டர் தூரமாவது இறக்கம் கண்ணுக்குத் தெரிந்து கொண்டே இருக்கும். மண்ணில் சறுக்கிவிடாமல் கல்லாய்ப் பார்த்துப் பார்த்துக் காலை வைத்து வைத்து இறங்கி நடப்பதில் பின்னங்கால் தசைகள் பின்னிப் பின்னி இழுக்கும். முக்கி முக்கி நடந்தாலும் ஏதோ treadmill-இல் ஓடினாற்போல் ஒரே இடத்திலேயே இருக்கிறோமோ என்ற பிரமை ஏற்படலாம். இறங்க வேண்டிய தூரம் குறைந்த மாதிரியே தோன்றாது. ஆறுதலான விஷயம் இரண்டு பக்கத்திலும் கொட்டிக் கிடக்கும் அழகுதான்! ரசனை கொண்டு வலியை மறக்கடித்து விட முடியும் என்ற உண்மை புரியத் துவங்கும் பயணம் இது. காணுமிடமெல்லாம் கோரைப் புல்லாய் வளர்ந்து மலை முதுகில் மயிர் முளைத்தாற்போல் இருக்கும். அதன் நடுவே ஈறும் பேனுமாய் நாம் ஓடிக் கொண்டிருப்போம். இயற்கையின் பிரம்மாண்டமும் நமது அற்ப அளவுகளும் முழுக்கப் புலனாவது இந்த வழியில்தான். ஏனோ மரங்கள் அடர்ந்த ஏறும் வழியில் இந்தப் பிரம்மாண்டம் முழுதாக உரைக்கவில்லை.

மலையின் முதுகெலும்பு

இறங்கும் வழியில் முதலில் சேஷபர்வத முகட்டை அடைந்து இளைப்பாறலாம். அதன் பின் கல் மண்டபம் ஒன்று இருக்கும். அதையும் தாண்டி இறங்கினால் பாதி மலையில் ஒரே ஒரு புண்ணியவான் சமையற்காரர் வீடு கட்டி வைத்திருப்பார். அந்த மலையில் ஏறி இறங்கும் பாதசாரிகளுக்குப் பொங்கிப் போடுவதுதான் அவரது பிரதான தொழில். அவர் வீட்டுக் கூரை மலையில் இறங்கத் துவங்கிய சில மணி நேரத்திலேயே தெரிய ஆரம்பித்து விடும். வந்து சேர மதியம் இரண்டு மணி ஆகிவிடும். அவர் வீட்டை 'பட்டே மனே' என்று அழைக்கிறார்கள். முன் கூட்டியே அவரை செல்லில் விளித்து (094 48 647947) இன்ன தேதியில் இத்தனை பேர் வருகிறோம் என்றால் சமைத்து வைத்து விடுவார். சாப்பிட்டுக் கொஞ்சம் அசந்துவிட்டு மீதி மலையை இறங்கினால் பொழுது சாய்வதற்குள் குக்கேவின் தார்ச்சாலைகளைத் தொட்டு விடலாம். இதுதான் அன்றைய திட்டம்.

சேஷபர்வதத்தில் தான் இந்தப் பயணத்திலேயே அதிபிரம்மாண்டமான ஒரு பள்ளத்தாக்கின் பார்வை கிடைக்கும். குமாரபர்வதம் செங்குத்தாக 6000 அடி கீழே வீழ்வதையும் அதற்கு நிகராக அதே செங்குத்தில் சேஷ பர்வதம் நிமிர்ந்து நிற்பதையும் பார்க்க வசதியாக ஒரு பாறை முகடு இருக்கும். இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கை எட்டிப் பார்த்தால் தானாகவே வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டைகளை உருட்டி விளையாடலாம். அந்தத் திகிலான பாறையில் ஓரம் வரை சென்று புகைப்படத்திற்குக் காட்சி தரச் சொன்னார் DSLRகாரர். துணிந்து சென்றுவிட்டேன். ஆனால் ஓரத்திற்கு முன்னால் அந்தப் பாறையில் ஒரு சின்ன பிளவு இருந்து அங்கேயே கிலி ஏற்படுத்தியது. பிளவுக்கு அந்தப் பக்கம் ஒரு காலைத் தூக்கி வைத்தால் - நேர்மையாகச் சொல்கிறேன் - தொடை கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்தே விட்டது. அந்த நேரம் பார்த்துப் பேய்க்காற்று ஒன்று வேகமாய் வந்து மோத, சுதாரித்து ஒரு அடி பின்னகர வேண்டி இருந்தது. முகத்தில் அடித்த காற்று முதுகில் அடித்திருந்தால் முன்னால் போய் மேலே போய் இருப்போமே என்ற எண்ணம் வந்ததுமே சாகசத்திற்கு அணை போட்டு விட்டேன். எப்படியம் பயல் புகைப்படத்தைத் தரப் போவதில்லை என்று வேறு உள்ளுணர்வு நச்சரித்துக் கொண்டே இருந்தது. பத்து 'லைக்' வாங்க ஆசைப்பட்டுப் பாதாளத்தில் பாய்ந்தான் கோமதி சங்கர் என்று நாளைய சந்ததி நம்மைப் பழித்துப் பேசிவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் பிளவுக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்தே புகைப்படம் எடுத்துக் கொண்டு விட முடிவு செய்து விட்டேன். இருந்தாலும் புகைப்படம் அருமையாக வந்திருக்கிறது. எடுத்த ரிஸ்க்கை மனதில் கொண்டோ என்னவோ நண்பர் இந்தப் படத்தை மட்டும் முதலிலேயே தந்துவிட்டார்.

இதுதானே வாழ்க்கை !

புகைப்பட இடைவேளைகள் முடிந்து முழு மூச்சாகக் கீழிறங்கத் துவங்கிய சில மணிகளில் கல் மண்டபத்தை அடைந்தோம். அதனருகே ஓடைத்தண்ணீர் கிடைக்கும். மரங்கள் அற்ற வெட்டவெளியில் நடப்பதால் வெயிலும் இந்நேரம் தலையைப் பிளக்க ஆரம்பித்திருக்கும். அதற்கு இதமாய் அங்கே ஓடும் தண்ணீரின் குளிர்ச்சியில் கால் பாதங்களை வைத்து நின்றால் சொர்க்கமாய் இருக்கும். மீண்டும் வேண்டுமட்டும் தண்ணீர் குடித்துவிட்டு நிரப்பிக் கொள்ளலாம். அடுத்து பட்டா வீட்டில்தான் சோறும் தண்ணீரும்!

வெயிலின் உக்கிரத்தில் சீக்கிரமே நாக்கு வறண்டு போய்விடும். பிடித்த தண்ணீரையும் முழுதாய்க் குடிக்க மனம் வராது. அவ்வப்போது தொண்டையை நனைத்துக் கொள்ளலாம். இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது என்று மொத்தக் கவனமும் பட்டா வீட்டுக் கூரையிலேயே இருக்க, வேகமாகக் கீழே இறங்கினோம். இறக்கத்தில் புவிஈர்ப்பு விசைக்கு ஒத்திசைந்தால் அதுவே கூட்டி வந்து விடும். உருண்டு விடாமல் இருப்பதில் மட்டும் அதிகவனம் தேவை. வழியில் கிடைக்கும் சிறு நிழல்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும். இந்த நேரத்தில் அழகுணர்ச்சி எல்லாம் கரைந்து போய், அடுத்து எந்தக் கல்லில் காலை வைக்கலாம் என்ற கணிப்பும், எப்போது சோறு கிடைக்கும் என்ற தவிப்பும் மட்டுமே மிஞ்சும். நிமிர்ந்த பார்க்கக் கூட அடிக்கடி தோன்றாது. சோறு சோறு என்ற ஊக்கத்திலேயே விரைவில் பட்டே மனேவை அடைந்து விடலாம்.

ஒரு பருக்கைச் சோறு, ஒரு குவளை தண்ணீர் - இவை இரண்டும் வாழ்விலேயே இவ்வளவு சுவையாக இதற்கு முன் தோன்றியிருக்குமா என்று தெரியாது. அங்கே உணரலாம். அள்ள அள்ளக் குறையாமல் நீர்மோர். பரு அரிசிச் சோறு. வெள்ளரிக்காயும் உருளைக் கிழங்கும் தாராளமாய்ப் போட்ட சாம்பார். தொட்டுக் கொள்ள ஊறுகாய். இதுதான் பட்டாவின் சாசுவத உணவுப் பட்டியல். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று தின்றதும் ஒரு குட்டித் தூக்கம் போட வசதியாய் வீட்டு முன்னாலேயே ஒரு சிறு மரத்தோட்டம். ஒரு சாப்பாட்டுக்கு 90 ரூபாய் கேட்கிறார். தாராளமாய்த் தரலாம். படியளக்கும் பெருமான்! உண்டபின் மீண்டும் நடை தொடர வேண்டும். இங்கேதான் என் போன்றோர் ஒரு சிறு தவறைச் செய்து விடலாம். காய்ந்த மாடு கம்பில் மேய்ந்தாற்போல் அங்கே சோற்றைத் தின்று விட்டால் அதற்கு மேல் நடக்க ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதற்கு அரைவயிறே மேல்! பட்டபின்தான் உரைத்தது.

படியளந்த பெருமானின் வீட்டு முற்றத்தில்

இறங்கும் போது நாங்கள் தானாக இரு குழுக்களாகப் பிரிந்து விட்டோம். முதல் குழு கொஞ்சம் வேகமாக இறங்கக் கூடியவர்கள். முதல் குழுவில் நானும் சில நண்பர்களும் எங்காவது முன்னால் போய் ஒரு நிழலாய்ப் பார்த்துக் கட்டையைச் சாய்த்து விட வேண்டியது. பின்னால் வருவோர் ஆற அமர வந்து சேர்ந்ததும் நாங்கள் தொடர்வது. இப்படியே விளையாடிக் கொண்டிருந்தோம். அதுமட்டுமல்லாமல் 'இன்னும் கொஞ்சம் வேகமா வாங்கடா.. நாங்க அப்பவே வந்து உங்களுக்காகக் காத்துகிட்டிருந்தோம்' என்று கொஞ்சம் சொறிந்துவிட்டுப் போக வேண்டியது. எத்தனை நேரம் தான் பொறுமை இருக்கும். மூன்றாம் முறை இந்த வசனத்தைச் சொன்னதும் அந்தக் குழுவின் நண்பர் ஒருவர், "ங்கோத்தா உங்களுக்கு மட்டும் வலிக்கவே இல்லையாடா. நாங்க வலி தாங்காம உக்காந்தோம்னு சொல்லுங்கடா. என்ன பெரிய புடுங்கி மாதிரி வெயிட் பண்ணோம் வெயிட் பண்ணோம்னு கதை விடுறீங்க. இனி நீங்க எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம். நேரே குக்கேல போய் ஒரு டீ குடிச்சிட்டு எங்களுக்கும் சொல்லி வையுங்க. நாங்க வரும்போது வந்துக்கறோம்' என்று பொறிந்து விட்டார். வேடிக்கையாக இருந்தது. 'உண்மைதான் ஜி.. இருந்தாலும் உங்களை உற்சாகப்படுத்தத்தானே..' என்று இழுத்து அசடு வழிந்துவிட்டு 'சீக்கிரம் வந்துருங்கடா போய் வெயிட் பண்றோம்'  என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பி விட்டோம்.

கொஞ்ச நேரம் நடந்ததும் மீண்டும் வெயில் தெரியாமல் மரங்கள் சூழத் துவங்கின. இதுதான் அடிவாரத்தை நெருங்குவதன் முதல் அறிகுறி. சந்தோஷமாகத் தொடர்ந்து நடந்தோம். அந்த இடத்தில் விசித்திரமான ஒரு பிரச்சனை வரும். அடிக்கடி பாதை இரண்டாகப் பிரியும். அநேகமாக எப்போதுமே ஒரு பாதை கொஞ்சம் சுலபமாகச் சுற்றிப் போகிறாற்போலவும் மற்றொன்று ஆழமாகவும் கடினமாகவும் தூரம் குறைவாகவும் தெரியும். அத்தனை பாதைகளுமே கடைசியில் ஒன்றாய்த்தான் முடியும். ஆனால் சீக்கிரம் இறங்கி விடலாம் என்று ஆழமான பாதையைத் தேர்ந்தெடுத்தால் மண் சறுக்கி விழுந்து அடி பட்டுக் கொள்ளும் அபாயங்கள் அதிகம். இது மழைக்காலங்களில் நீர் ஓடும் பாதையாக இருந்திருக்க வேண்டும். இருக்கும் வலியைப் பொருட்படுத்தாமல் சுற்றிச் சுற்றிப் பாதுகாப்பாகவும் வரலாம். கொஞ்சம் நிதானமாக வந்தாலும் ஆபத்தில்லாமல் வரலாம். கொஞ்சம் நின்று யோசித்தால் இது ஏதோ வாழ்க்கைப் பாடம் போலவே தோன்றிடலாம்.

கடைசி சில கிலோமீட்டர்கள்தான் இருக்கின்றன என்று மனதுக்குத் தெரிந்ததும் அது இதுவரை அடக்கி வைத்திருந்த வலியைக் கொஞ்ச கொஞ்சமாக வெளியே எடுத்து விடும். முடிவுக்கு முன்னால் வரும் சில மணித்துளிகள்தான் அதீத சோதனையைத் தருபவையாக மாறும். இந்தச் சிறு தொலைவுதான் என் மன உறுதியையும் உடல் பலத்தையும் அதிகம் சோதித்தது. இரண்டு நிமிடங்கள் ஓய்வைக் காட்டிவிட்டால் மீண்டும் எழுந்திருக்கக் கால்கள் அத்தனை கூப்பாடு போட்டன. எவ்வளவு மெதுவாய்ப் போனாலும் எங்கும் ஓய்வெடுக்காமல் நடந்து கொண்டே இருக்க முடிவு செய்தேன். குழுவோடு பிரிந்து தனியாக, எனக்கு நானே பேசிக் கொண்டு, என்னை நானே உந்தித்தள்ளிக் கொண்டு கடந்த சில கிலோமீட்டர்கள் இவை. நானும் என் மனக்குரலும் என் கால்வலியும் மட்டுமே! பிரக்ஞையில் வேறு எதற்கு இடம் இல்லை. பிரபஞ்சத்தில் மற்றெல்லாமே வெறுமையாய்ப் போன ஓர் உணர்வு. தனியாக நடந்து வரும் என்னிடம் வேறு சில குழுக்களில் நடப்போர் சிலர் அவ்வப்போது பேச்சுக் கொடுத்தாலும் எனக்கு எதுவுமே உணர்வில் இல்லை. அடுத்த அடி, அடுத்த கல், அடுத்த மரம், அடுத்த வளைவு- இது மட்டுமே மனம் பூராவும் வியாபித்திருந்தது. என்னை எனக்கே உணர்த்திய ஒரு சிறு கிளைப் பயணமாக இந்தக் கொஞ்ச தூரம் இருந்தது.

தேவதைகளின் குரல் போலக் கொஞ்ச நேரத்தில் மலையடிவாரத்தில் இருந்து மனித நடமாட்டத்தின் குரல்கள் கேட்கத் தொடங்கின. தார்ச்சாலையில் வாகனங்கள் ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. குக்கே சுப்பிரமணியர் ஆலயத்தில் ஒலிபெருக்கி வைத்து பக்திப் பாடல்களை ஓட விட்டிருந்தார்கள். கடவுளே கிட்ட வந்துவிட்டது போல் இருந்தது. முடிவை நெருங்கிவிட்டோம் என்று தெரிந்ததும் மனம் கொஞ்சம் நிலைமையைப் புரிந்து கொண்டு, 'மவனே இன்னும் கொஞ்ச தூரம் நீ சொல்ற பேச்சைக் கேட்பேன். ஒழுங்காக் கீழே போனதும் எனக்குப் பிரியாணி வாங்கித்தரணும்' என்று பேரம் பேசிப் படிந்தது. இந்தச் சமயத்தில் விசில் சத்தம் கேட்க, என் குழுவினர் நிற்கச் சொல்கிறார்கள் போல என்று கொஞ்சம் நின்றேன். நீண்ட நேரத்திற்குப் பின் எடுக்கும் முதல் ஓய்வு!

பக்கத்தில் என்னை விடவும் அதிகமாக மூச்சு வாங்க இறங்கிக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம், "ஏன் சார் விசில் சத்தம் உங்க சிக்னலா" என்றார். "ஆமா சார்.. முன்னாலே போறவன் நிக்கணும்னா பின்னால வர்றவன் விசில அடிக்கணும்" என்றேன். அவர் புரிந்தாற்போல் தலையாட்டிவிட்டு அவரோடு வந்த இன்னொருவரிடம் "பாத்தியா.. இவங்கள்ளாம் professional trekkers" என்று கூறி நடையைத் தொடர்ந்தார்! அந்த ஒரு சொல் அப்படியே காதில் தேன் வந்து பாய்ந்தது மாதிரி இருந்தது. இரண்டாயிர ரூபாய் ஷூ சாதிக்காததை, கொண்டு வந்த படுக்கைப் பைகளும் மடிப்புக் கூடாரங்களும் சாதிக்காததை, பெரிசாய் நாங்களே சாதிக்காததை, எங்கள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பத்து ரூபாய் விசில் சாதித்துவிட்டது. 'ங்கோத்தா.. Professional trekkersடா' என்று மாரில் அறைந்து கொண்டு உரக்கக் கூவ வேண்டும் போல் இருந்தது. வலிக்கும் என்பதால் தொடையை மட்டும் தட்டத் தோன்றவில்லை!

அந்த இடத்தில் பிரிந்த எங்கள் குழு ஒன்று சேர்ந்து முடிவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இரண்டு மூன்று வளைவுகளைக் கடந்தால் சட்டென்று கட்டட வீடுகளும் தார்ச்சாலையும் தெரிய ஆரம்பித்து விட்டன. கம்பி வேலி போட்டுப் பிரிக்கப் பட்ட வனத்திற்கு ஒரே ஒரு சின்ன இரும்புக் கதவு. கதவுக்கு அந்தப்பக்கம் சாமானிய வாழ்க்கை. 'இவ்வளவுதானா' என்று இருந்தது. லொங்கு லொங்கென்று ஏறி இறங்கி வந்தால் பயணம் முடியும் புள்ளி அதன் பிரம்மாண்டத்தின் சுவடுகள் கொஞ்சம் கூடத் தெரியாமல் தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ராட்சஸனைப் போல் சாதுவாக இருந்தது. போய்ச் சேரும் இடத்தை விடப் பயணம்தான் சுவாரசியமானது. மற்றொரு வாழ்க்கைப்பாடம்!

செய்து வந்த சாகசத்தின் தீவிரமும், அதன் முடிவும் மெதுமெதுவாக மனதிற்குள் பதிந்து கொண்டு வர, கடைசி ஒரு கிலோமீட்டர் தூரத்தைத் தார்ச்சாலையில் நடந்து ஊருக்குள் வந்தோம். தார்ச்சாலை பஞ்சு மெத்தை போல் இருந்தது. வரும் வழியெல்லாம் வியப்பும், பாராட்டுகளும், வசைகளும், வலியின் முனகல்களையும் வாய்வழியே தன்னிச்சையாக ஒழுகவிட்டபடியே வந்தோம். பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு குழுவும் அரை மணி நேரத்தில் எங்களோடு வந்து இணைய, குக்கேவிலேயே ஒரு தங்கும் விடுதியில் குளித்து இளைப்பாறி அதிகாரப்பூர்வமாக மலையேற்றத்தை முடித்து வைத்தோம். 'இதுக்கு மேல ஒரு கிலோமீட்டர் நடந்திருந்தாக்கூட சேகர் செத்திருப்பான்' என்று பல நண்பர்கள் மெத்தையில் சாய்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். 'இன்னும் பத்து கிலோமீட்டராய் இருந்திருந்தால் கூட இந்த விசித்திர மனம் கடைசி வரைக்கும் கால்களை ஏமாற்றிக் கூட்டி வந்திருக்கும். அப்போதும் முடிவில் இதே போல்தான் தோன்றியிருக்கும்' என்று தோன்றியது. எல்லாம் மனவலிமைதானே !

- மதி

(புகைப்படங்கள் : சரத், பாரி, ரகு)
((இந்தப் பதிவை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக்கவும்))

கருத்துகள்

 1. இனிய பயணம்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. Oru nalla travelogue padicha thrupthi... Romba nalla ezhudhirukeenga...

  Enna, மலையின் முதுகெலும்பு nu oru photo va pottu, namba Prabhu va மலை nu ivlo appattama sollirukka venaam.. :)

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சார்.. நன்றி ஆனந்த். பிரபு இனிமேல் ரஜினி மாதிரி 'மலைடா....' அப்படின்னு பஞ்ச் சொல்லிக்கலாம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..