புறத்திணை புதிது


மத்தியானப் பாடவேளை
பிரபஞ்சத்தின் தோற்றம்
வகுப்பில் நகர்ந்து கொண்டிருக்கும்
கருத்தாகக் கவனிக்க வேண்டும் என்று
ஈரத்துணியால்
கண்ணைத் துடைத்துவிட்டு நிமிர்வது
வெட்சி 


பிரபஞ்சம் 
தோன்றினால் என்ன
தொலைந்து போனால் என்ன
பாழாய்ப் போன உறக்கம் அறியுமா
படைப்பின் ரகசியம் ?
சற்று முன்னர்தான்
பிரித்து மேய்ந்திட்ட
பல வீட்டு சமையலும்
கரத்தோடு கரம் கோத்து
கண்ணைச் சுருட்டும் அது
கரந்தை


வகுப்பு போனால் போகட்டும்
வீடு இல்லையா
சொந்தமாக மூளை இல்லையா
அந்தக் கல்விப் புயல்
அன்றிரவே கரையைக் கடக்கும் என
அந்த அப்பாவிப் பயல்
வைராக்கியமாக முடிவெடுப்பான்
வஞ்சி


சிந்தனை வா வா என்னும்
புத்தகம் போ போ என்னும்
சென்னையை நோக்கி வரும் புயல்
கடைசி நேரத்தில்
ஆந்திராவைத் தாக்கிச் செல்வது போல
புயலெல்லாம் வெறும்
புஸ்வாணமாய்ப் போகும்
அது காஞ்சி


தேர்வுக்கு முதல் நாள்
தேறும் அளவாவது
தேற்ற வேண்டுமே 
புத்தகம்
பூட்டிய அறை
புத்துணர்ச்சிக்குத் தேனீர்
படை திரட்டிப் போய்
பாடத்தை முற்றுகை இடுவது
உழிஞை


ஒன்றுமே தெரியாதே என்று
பயம் பயமாய் வரும்
புத்தகத்தைத் திறந்தால் எல்லாமே
புதுசு புதுசாய்த் தெரியும்
வெறுத்துப் போய்
புத்தகத்தை மூடிவிட்டால்
பயமெல்லாம் பறந்து போய் விடும்
நொந்து போய்த் தூங்கப் போவது
நொச்சி ஆகும்


தேர்வறை
அபாயச்சங்கு
போர்முரசு
ச்சே
அது பரீட்சை மணி
போர் துவங்கும்
ஒரு காகிதத்துக்கு எதிராக
ஒரு தரப்பு மட்டும்
பலத்த சேதங்கள் அடையும்
அங்கே
அதிர்ந்து போய்ப் பொருவது
தும்பை


வசவு வந்து சேருமோ
வடக்கிருக்க நேருமோ
இல்லை 
வெற்றி விகிதம் தேறுமோ
கடித்து கடித்து
நகமெல்லாம் 
காணாமல் போனபின்
கணிணி சொல்லும்
வாகை சூடிவிட்டதாய்


தவப்புதல்வன் தன்
அருமை பெருமைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய் அடுக்கி
அலசி ஆராய்ந்து
அந்த வீரத்தாய்
அங்கலாய்ப்பாள் அது
பாடாண்


இவை எதிலும் சேராத
பொதுவான செய்திகள்
பிரார்த்தனை பயம்
அரட்டை ஆட்டம்
ஏச்சு பேச்சு
இதர இதர
எல்லாம் 
பொதுவியல் கீழ் பொருந்துவனவாம்


கைக்கிளை பெருந்திணை எல்லாம்
பதினெட்டு தாண்டியதும்
தானாகச் சேர்ந்து கொள்ளும்


தோண்டித் துருவிப் பார்த்தால்
ஒரு வித்தியாசம் பிடிபடும்
இங்கே 
திணைக்கு ஒரு பூ இல்லை
மொத்தமாக ஒன்றே ஒன்றுதான்
காதில் !

கருத்துகள்

  1. nice comparision between war flowers and subjects...
    thervarai abayachangu pormurasu....
    really true..

    பதிலளிநீக்கு
  2. i already read dis in ur notebook...
    such a nice comparision.....
    ithai padikkum pothu ezhuthi muditha sem ellam gnabagam varuthu....:-)

    பதிலளிநீக்கு
  3. samma timing. u posting this after we had done with our engineering. purathinaigal nejamave romba pudusadan irukku. last line is ultimate. mothama paper la full uh reel dane suthitu varom. so kaadhil poo...for the examiner dan :P

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜனவரி 06, 2011

    வகுப்பு போனால் போகட்டும்
    வீடு இல்லையா
    சொந்தமாக மூளை இல்லையா
    அந்தக் கல்விப் புயல்
    அன்றிரவே கரையைக் கடக்கும் என
    அந்த அப்பாவிப் பயல்
    வைராக்கியமாக முடிவெடுப்பான்
    வஞ்சி

    Intha varigal yaavum unmaipolum!
    புறத்திணை புதிது varaverkathakkathu.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..