காரியாலயம்



(இந்தச் சிறுகதை சொல்வனம் இணைய இதழில் ஏற்கெனவே வெளிவந்தது)

நமக்குத் தொழில் கூவுதல். கூலி கொடுக்கிறவர்களுக்காக, அவர்களின் பெயரைச் சொல்லி அதன் கூடவே இன்ன பிற கவர்ச்சிகளைச் சேர்த்துச் செருகிக் கேட்பவர்களின் கவனத்தைத் திருப்புமாறு கூவுதல். விளம்பரப்படங்கள் எடுக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன். கூடவே நிறுவனப் படங்களும் எடுத்துக் கொடுப்பதுண்டு. இவை இரண்டுக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உண்டு. ஒன்றரை நிமிடங்களில் ஒரு பிராண்டை வாங்கச் சொல்லிக் கூவுதல் விளம்பரப் படம். கொஞ்சம் நீட்டி நிதானமாக, பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வருகிறாற்போல் ஒரு நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வருங்கால வாய்ப்புகள் என எல்லாவற்றையும் கோர்வையாக விளக்கிக் கூஉவுதல் (எழுத்துப் பிழை அல்ல, அளபெடை) நிறுவனப் படம் - கார்ப்பரேட் ஃபிலிம்! கான்ஃபரன்ஸ் அறைகளுக்காகவே உருவான ஒரு கலை வடிவம் இது. 

சமீபமாக ஒரு அரசு நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட படம் ஒன்று உயர்மட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படத்தைப் பார்த்த மந்திரி 'நல்லாயிருக்கே, ஏன் இந்தப் படத்துல நான் கூட ரெண்டு வார்த்தை பேசலாமே' என்று இந்தியில் சொல்ல, நிறுவனத்தாரும் உடனே 'மே மே' என்று சகல மொழிகளிலும் ஆமோதிக்க, படம் பந்தாக மீண்டும் என் கைகளில் வந்து விழுந்தது. மூத்த மந்திரி பேசினால் இளைய மந்திரியையும் பேச வைத்தாக வேண்டும். நிறுவனத்திலிருந்து என்னை அழைத்துப் புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டார்கள். படப்பிடிப்புச் செலவைக் கருத்தில் கொண்டு இரண்டு மந்திரிகளுக்கும் தோதுபட்ட ஒரு நாளாகப் பார்த்து இருவரையும் தனித்தனியே அவர்களின் அலுவலத்தில் ஓரிரு நல்ல வார்த்தைகள் பேச வைத்துப் படமெடுத்துக் கொண்டு, முன்பே எடுத்திருந்த படத்தோடு பொருந்தச் சேர்த்துத் தர வேண்டும். இதற்காக நான் தலைநகருக்குச் செல்லும் செலவுகளை எல்லாம் நிறுவனம் தந்து விடும். ஆனால் மந்திரிகளின் காரியதரிசிகளை எனக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் விலகிக் கொள்வார்கள். நல்ல நாள் பார்த்து இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து ஒருங்கிணைக்க வேண்டியது முழுக்க என் பொறுப்பு.

இதற்கிடையே ஒரு நாள் இளைய மந்திரி குடியரசுத் தலைவரோடு வெளி நாட்டில் பிரயாணம் மேற்கொண்ட செய்தி தொலைக்காட்சியில் வர, இவரைத் தான் நான் படமெடுக்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லித் தம்பட்டம் அடித்திருந்தேன். பிள்ளையாருக்குப் பிடித்து வைத்த கொழுக்கட்டையை எறும்பு எடுத்துத் தின்பது போல! இரண்டு மூன்று முறை நாள் தப்பித் தப்பிக் கடைசியாக ஒரு முகூர்த்தம் வந்தது. எப்படியும் இரண்டு மந்திரிகளும் அன்று தலைநகரில் ஒரே மேடையில் அமருமாறு ஒரு நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. 'கெளம்புடா கைப்புள்ள' என்று காரியதரிசிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே அறைகூவல் விடுக்க, ஆகாயமார்க்கமாகத் தலைநகரம் கிளம்பினேன். ஏதோ ஓர் உள்ளுணர்வு, திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யவில்லை. முதலில் வேலையை ஒழுங்காக முடித்து விட்டுப் பிறகு கூட ஒரு நாள் தங்கிச் சுற்றிப்பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று எண்ணம்.


ள்ளூரில் படப்பிடிப்பென்றால் எங்கள் ஆட்களே இருக்கிறார்கள். அவ்வளவு தூரம் எல்லாரையும் அழைத்துச் சென்றால் வீண் செலவு என்று முன்கூட்டியே தலைநகரவாசி ஒருவரைக் கண்டுபிடித்துப் பேசி வைத்திருந்தேன். அவருடைய குழுவை வைத்துப் படம் பிடித்தால் செலவும் குறையும், மொழிப் பிரச்சனைக்கும் ஒத்தாசையாக இருக்கும் என்பது திட்டம்.

வந்திறங்கிய முதல் நாள் வாட்டமாக ஒரு அறை தேடி அடைந்து கொள்ளவே சரியாகப் போய்விட்டது. மறுநாள் மதியமே முகூர்த்தம். மெட்ரோ வரைபடம் ஒன்றை வைத்துக் கொண்டு சுலபமாகக் காரியாலயத்தை அடைந்து விட்டேன். சரியாக என் உள்ளூர் நண்பரும் அவரின் குழுவோடு வந்து விட்டார். காரியாலய வாசலில் அகழி முதலைகளாகத் துப்பாக்கிகளோடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளிப் பக்கத்திலேயே கோவில் வாசலில் தேங்காய் பொறுக்கும் கூட்டம் போல ஒவ்வொரு செய்திச் சேனலும் ஆண்டெனா வைத்த வண்டி ஒன்றோடு வரிசையாக நின்று கொண்டிருந்தது. பல முக்கிய இலாகாக்கள் இயங்கும் காரியாலயம் என்றாலும் வெளியில் இருந்து பார்க்க ரொம்பவே சாதுவாக இருந்தது. என் நண்பர் ஒரு துப்பாக்கி ஏந்திய முதலையிடம் இந்தியில் விவரம் சொல்ல வரவேற்பறை வரை அனுமதி கிடைத்தது. உள்ளே நுழைந்து இன்ன இலாகாவில் இன்ன காரியதரிசியைப் பார்க்க வந்திருப்பதாய்ச் சொல்லவும் ஒரு மூன்றிலக்க எண்ணைச் சொல்லித் தொலைபேசியை எங்கள் பக்கம் நீட்டினார் ஒருவர். அங்கே அழைத்து விசாரித்தால் எங்களை யாரென்றே தெரியாதென்று விட்டார் முகம் தெரியாத அந்த மூன்றிலக்கக் கடவுள்.

ன்னடா இது வம்பென்று என்னோடு தொடர்பில் இருந்த காரியதரிசியை அழைத்தேன். மனிதர் எடுக்கவே இல்லை. நாலைந்து முறை இங்கீதமே இல்லாமல் திரும்பத் திரும்ப அழைத்துத் தொல்லை பண்ணிய பிறகுதான் அழைப்பில் வந்தார். என்னைப் பேசவே விடாமல் அவசர அவசரமாக அவரே சொல்லி முடித்து விட்டார். மந்திரியோடு மற்றொரு முக்கிய நிகழ்வில் இருக்கிறாராம். அந்த மூன்றிலக்க நபரிடம் எல்லாம் சொல்லிவிட்டாராம். அழைப்பு இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுமாம். அவரும் மந்திரியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வந்து விடுவார்களாம். ஆக வேண்டியதைப் பார்க்கலாமாம். அதுவரை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டாமாம். அப்புறம் பீப் பீப் பீப்பாம்.

சொன்னபடியே ஐந்து நிமிடங்களில் மூன்றிலக்கக் கடவுள் வரம் தந்தார். ஆனால் பாதி வரம்தான் வந்திருந்தது. நான்கு ஆட்கள் வருவதாகத் தான் அவருக்குத் தகவலாம். மற்றபடி கேமராவைப் பற்றியெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாதாம். கேமரா இல்லாமல் நாங்கள் மட்டும் உள்ளே போய் ஓடவிட்டுத் துரத்தியா படத்தைப் பிடிப்பது? மறுபடியும் காரியதரிசியை அழைக்கவும் இங்கீதம் ஒப்பவில்லை. முடிந்த வரை பேசிப் பார்த்தோம். கடைசியாக இரண்டு பேரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகவும் உள்ளே போய் விவரத்தைச் சொல்லிப் புரிய வைத்துக் கேமராவுக்கு அனுமதி வாங்கிக் கொண்டபின் மற்ற இருவரும் கேமராவோடு உள்ளே வரலாம் என்றும் அனுமதி கிடைத்தது. இந்தப் பஞ்சாயத்தெல்லாம் பேசுவதற்கு நல்ல வேளையாக சரளமாக மொழி தெரிந்த நண்பர் இருந்தார். இல்லாவிட்டால் படுதிண்டாட்டமாய்ப் போயிருக்கும்.

தமிழென்றால் முணுக்கென்பதற்குள் கவிதையே சொல்லி விடுவேன். எனக்குத் தெரிந்த இந்தியில் இந்தப் பருப்பெல்லாம் ஆயுசுக்கும் வெந்திருக்காது, அனுமதியும் வந்திருக்காது!

நான் சொல்லலை? இதைத்தான் கம்பன் மகனுக்குக் கண்ட நேரத்தில் கவிதைக்குக் குறைச்சலில்லை என்பர்!

உள்ளே நுழைந்தோம். காரியாலயம் ஒரு பிரம்மாண்டமான புதிர் போலிருந்தது. ஒவ்வொரு மாடியிலும் நீள நீளமான வழிகள். அவற்றிற்கு இரு பக்கங்களிலும் கணக்கே இல்லாத கதவுகள். ஒரு கதவுக்கும் மற்றொன்றிற்கும் வெளியே வித்தியாசமே இல்லை. ஆனால் கதவில் பொறித்திருந்த பெயர்ப்பலகையைப் பொறுத்து உள்ளே சகலமும் வித்தியாசமான அறைகள். ஒவ்வொரு கதவுக்குப் பின்னும் என்ன உலகம் இருக்கும் என்ற கற்பனை வெகு சுவாரசியமானதாயிருந்தது. பாதி கிழிந்த பழுப்பேறிய வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு புதையல் வேட்டைக்குப் போவது போல எங்கள் அனுமதிச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு அந்த மூன்றிலக்கக் கடவுளைத் தேடிப் போனோம். இரண்டு மூன்று முறை தொலைந்து போய், நாலைந்து முறை ஒரே இடத்தையே வட்டமடித்து, ஐந்தாறு பேரை விசாரித்துக் கடைசியாகக் கர்ப்பக்கிரகத்தை அடைந்தால்....

மூன்றிலக்கக் கடவுள் ஒரு கதவுக்குப் பின்னால் சமர்த்தாக இரண்டு கைகளாலும் பிய்த்துப் பிய்த்துச் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மதிய உணவுக்கான நேரம் ஆகிவிட்டிருந்தது. தங்க நிறத்தில் விரிப்பு போர்த்தப்பட்டிருந்த ஒரு சோபாவில் எங்களை அமரச் சொன்னார். சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். நாங்கள் இல்லை என்றதும் நல்லது என்று சப்பாத்தி பிய்ப்பதைத் தொடர்ந்தார். ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துக் கைகளைத் துடைத்துக் கொண்டு எங்களை விசாரித்தார். கேமரா சங்கதியைச் சொன்னோம். தான் வெறும் டெலிபோன் ஆப்பரேட்டர்தான் என்றும் கேமராவைக் கொண்டு வரும் அதிகாரம் தனக்கில்லையென்றும் சொல்லி விட்டுக் காத்திருக்கச் சொன்னார். கடைசியில் கடவுள் காவல் தெய்வம் கருப்பண்ண சாமிதான் போல!

சுருக்கமாக ஒரு குறுஞ்சேதியில் கேமரா விவரத்தைக் காரியதரிசிக்கு அனுப்பி விட்டுக் கருப்பண்ண சாமியிடம் பேச்சு கொடுத்தோம். கொடுத்தோம் என்பதை விடக் கொடுத்தார் என்பதே சரியாக இருக்கும். நண்பர் சரளமாக அவரோடு நாட்டு நடப்பை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அவரும் தன் கணிணியில் சில செய்தித் தளங்களை மேய்ந்தபடியே இரண்டு நிமிடங்களுக்கு ஒரு புது தலைப்பில் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே வேறு சில கதவுகளின் பின்னாலிருந்த உலகங்களில் இருந்து அவரின் நண்பர்கள் வந்தும் போயும் இருந்தார்கள். அவ்வப்போது சிரித்துக் கொண்டார்கள். புரிந்தது போல நானும் சிரித்துக் கொண்டேன். பேச வேண்டிய தேவை இல்லாததால் நிதானமாகச் சூழலை எடைபோட்டுக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்தது இளைய மந்திரியின் காரியதரிசி அறை. முகூர்த்தம் குறித்தபின் மூத்த மந்திரியின் காரியதரிசியைப் பிடிக்கவே முடியவில்லை. அவரின் பெயர் அவர் தமிழரோ என்ற எண்ணத்தையும் அதன் விளைவாக ஒரு ஆதரவான நம்பிக்கையையும் எனக்குக் கொடுத்திருந்தது. பாத்துக்கலாம் என்றுதான் கிளம்பியே வந்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அதை நினைவூட்டிக் கொண்டேன்.

அரை மணி நேரம் கழித்து இளைய மந்திரியின் காரியதரிசி கருப்பண்ண சாமியை அழைத்துப் பேசினார். மந்திரி வரத் தாமதமாகும் என்றும் அதற்குள் அந்தக் கேமரா அனுமதி தொடர்பாக எங்களை மற்றொரு அலுவலரைப் பார்க்க அனுப்பவும் சொன்னார். சரியென்று அந்தக் கதவுக்கு வழி கேட்டுக் கொண்டு கிளம்பினோம். ஒவ்வொரு கதவாகப் பார்த்துக் கொண்டே சென்றபோது இந்தக் காரியாலயம் பல அண்டங்களை உள்ளடக்கிய ஒரு பேரண்டமாகத் தோன்றியது. இதனுள் நுழைய ஒரு பெயர் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் கடவுச் சொல். அதன் பின் அவரவர் சூட்டிப்பிற்கேற்பக் காணும் திக்கெலாம் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை வேடிக்கை பார்க்கலாம். ஆனால் சூட்டிப்பு இல்லாவிட்டால் ஒரு பெரிய இருண்ட பிரதேசத்தில் தொலைந்து போனது போலத் தான் திண்டாட வேண்டும்.

இந்த முறை தொலைந்து போகாமல் எவரையும் கேட்காமல் நாங்களாகவே சரியான கதவைக் கண்டுபிடித்து விட்டோம். கதவைத் தட்டினோம். பின் மெதுவாகத் தள்ளினோம். கதவிடுக்கில் எவரும் கண்ணில் படாததால் திறந்து உள்ளே சென்றோம். உள்ளே ஒருவருமே இல்லை. அந்த அலுவலரின் பெயர் கதவில் பொறித்திருந்ததை உறுதி செய்து கொண்டு மீண்டும் உள்ளே வந்து கொஞ்ச நேரம் நின்றோம். வெள்ளை நிற சோபா ஒன்று இருந்தது. அதில் அமர நாங்களே எங்களை அனுமதித்துக் கொண்டோம். அறையின் ஒரு மூலையில் குறிப்பிட்ட அந்த இலாகாவின் கடந்த ஓராண்டுச் சாதனைகளை விளக்கும் புத்தகங்கள் கட்டுக்கட்டாகக் குவித்து வைக்கப் பட்டிருந்தன. அச்சு வாசம் மறையாத புத்தகங்கள் அறை எங்கும் அந்த வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன.

நண்பரும் நானும் மட்டும் தனியாக அந்த அறையில் ஒரு ஒன்றரை மணி நேரம் இருந்திருப்போம். மெல்லப் பேசத் தொடங்கி நன்றாகப் பழகி அடுத்த முறை மோட்டார் பைக்கில் இமயமலை செல்லத் திட்டம் போட்டால் சேர்ந்து போவோம் என்று பேசி வைத்துக் கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். வெளியே அனாதையாக இரண்டு பேர் கேமராவுக்குக் காவல் காத்துக் கொண்டு நிற்கிறார்களே என்று அவர்களை அழைத்து ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளச் சொன்னோம். உள்ளே எங்கள் நிலைமையும் ஒன்றும் பெரிய விசேஷமில்லை. யாரோ ஒருவரின் குளிரூட்டப்பட்ட அறையில் அனாதையாகச் சோபாவில் உட்கார்ந்திருக்கிறோம், அவ்வளவுதான். இடையிடையே ஐந்தாறு முறை கதவைத் திறந்து யார் யாரோ உள்ளே வந்து போய்க் கொண்டுதானிருந்தார்கள். ஒவ்வொருவரும் வரும் போது நாங்கள் ஆர்வமாக அவர் முகத்தைப் பார்ப்போம். வந்தவர் எங்களைச் சட்டை பண்ணாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு வெளியே போய் விடுவார். இடையில் ஒருவர் வந்து தேனீர் கூடக் கொடுத்து விட்டுப் போனார். மற்றபடி ஒருவரும் எங்களை ஒரு வார்த்தை கூட விசாரிக்க வில்லை.

நீண்ட நேரம் கழித்து ஒரு மனிதர் அறைக்குள்ளே வந்து ஒரு மேசைக்குப் பின்னால் அமர்ந்தார். உள்ளே ஒரே மாதிரியாக இரண்டு மூன்று மேசைகள் இருந்ததால் யார் முக்கியமானவர் என்று கணிக்க முடியவில்லை. எப்படியும் நாங்கள் தேடி வந்தவர் வந்தால் அவரே எங்களை அடையாளம் கண்டு கொள்வார் என்று பொறுத்திருந்தோம். பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. அந்தப் புது மனிதரிடம் எதற்கும் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என்று எழுந்து அவரிடம் சென்று விவரம் சொன்னோம். 'அட நீங்கதானா அந்தக் கேமரா ஆளுங்க. சொன்னாரு சொன்னாரு.. முதல்லயே சொல்லியிருக்கலாமே நீங்க' என்று இந்தியில் பரிவாக விசாரித்தார். அடப் பாவி மனுசா என்று இருந்தது எனக்கு! கேமராவில் ஆரம்பித்து நிதானமாக எங்கள் பூர்வீகம் வரை விசாரித்துத் தெரிந்து கொண்டவர், மந்திரிகள் வர மாலை ஆறு மணிக்கு மேலாகலாம் என்றும் இப்படி வாயில்லாப் பூச்சியாக இல்லாமல் மூத்த மந்திரியின் காரியதரிசியைப் போய்ப் பார்க்குமாறும் எங்களை அறிவுறுத்தினார். கூடவே ஓரிரு முறை யாரையோ அழைத்து அந்தக் கேமராவுக்கும் காரியாலயத்துக்குள் நுழையும் பாக்கியத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டார். இவருக்கான மூன்று இலக்கங்கள் என்னவென்று தெரியவில்லை, ஆனால் சத்தியமாக இவர் எனக்குக் கடவுளாகத் தெரிந்தார்!

தமிழர் போன்ற பெயர் கொண்ட அந்தக் காரியதரிசியைச் சந்திக்கக் கதவு விசாரித்துக் கொண்டு விடை பெற்றுக் கிளம்பினோம். போகும் போது யோசித்தேன். ஒரு மந்திரி தானாகவே விரும்பிக் கேட்டுக் கொண்ட ஒரு காரிய நிமித்தமாக வந்திருக்கும் நானே இவ்வளவு சுற்றுகிறேன் என்றால் தனக்கான காரியத்துக்காக இந்தப் பேரண்டத்துக்குள் சிக்கிச் சுற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை எப்படி இருக்கும்? அப்படிச் சுற்றிய அனுபவசாலிகள் தான் பல கதவுகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். எந்தக் கதவின் பின்னால் எந்தக் கடவுள் இருக்கும் என்பது பரிச்சயமாகி இருக்கும். அதே போல எந்தக் கடவுளைக் காணச் சென்றாலும் நடை திறக்கட்டும் என்று காத்திருந்தால் காரியம் ஆகாது என்றும் புரிந்திருக்கும். பள்ளிக்கூட இயற்பியலில் inertia என்ற தன்மையை விளக்கும் நியூட்டன் விதி சமயம் பார்த்து நினைவுக்கு வந்தது. எந்தப் பொருளும் தன்னை அசைக்கும் விசையின்றித் தன்னால் அசையாது. சரிதான்!

மூத்த மந்திரியின் அறை வாசலில் ஏகக் கூட்டம் இருந்தது. சிகப்பு உறை போட்ட மூன்று சோபாக்களையும் மனிதர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். நிற்கவே இடமில்லை. காரியதரிசியின் பெயரைக் கேட்டு விசாரித்து நேரே போய் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இளைய மந்திரியின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் மற்றொருவர் அவரிடம் கன்னடத்தில் ஏதோ கேட்க, கன்னடத்திலேயே பதில் சொன்னார். எனக்கு அவர் பேசியது கன்னடம் என்று மட்டும் புரிந்தது. அவரின் மேசையில் கட்டுக்கட்டாகக் கோப்புகள். கணினியில் எதையோ தட்டிக் கொண்டே இருந்தார். மேசை மேல் அவரின் செல்போன் சிணுங்கிக் கொண்டே இருந்தது. அதை எடுத்து இந்தியில் ஒருவரிடம் பணிவாகப் பேசினார். பேசி முடித்ததுமே மேசையிலிருந்த இண்டர்காம் போனில் யாரையோ அழைத்து இந்தியில் அதிகாரமாகப் பேசிவிட்டு வைத்தார். அவர் பக்கத்திலிருந்த இன்னொரு மேசையில் இருந்த பிரிண்டர் ஒரு காகிதத்தைக் கக்கியது. அதை எடுத்து ஒரு முறை மேலோட்டமாகச் சரிபார்த்து விட்டு, ஒரு கோப்பைத் திறந்து அதில் இருந்த ஒரு காகிதத்தைத் தேடி எடுத்துக் கசக்கிக் குப்பையில் போட்டுவிட்டு அதனிடத்தில் இந்தக் காகிதத்தை வைத்து விட்டு, எனக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை ஒரு கணம் பார்த்து விட்டு அப்படியே என்னைப் பார்த்து 'என்ன சொன்னீங்க?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். 'சார் நீங்க தமிழா?' என்று நான் தமிழில் கேட்டேன். மிக மிக அவசரமாக ஒரு சின்னச் சிரிப்பு சிரித்தார்.
'ஆச்சா இல்லியா?' தமிழிலேயே கேட்டார். 'இல்ல சார். மந்திரி வர ஆறு மணிக்கு மேல ஆகும்னு சொல்றாங்க' தமிழிலேயே சொன்னேன். என்னிடமிருந்து பார்வையை அகற்றி வெறும் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே அந்தக் கோப்பை மூடி அதன் இடத்தில் வைத்து விட்டு நிமிர்ந்து ஆங்கிலத்தில் 'எங்கள் மந்திரி இன்று பல வேலையாக இருக்கிறார். இப்போது கூட உள்ளே ஒரு முக்கியமான சந்திப்பில் இருக்கிறார். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இளைய மந்திரியின் காரியதரிசி அறையிலேயே காத்திருங்கள். அவர் வந்ததும் அவரின் படப்பிடிப்பை முடித்து விட்டு இங்கே வாருங்கள். நான் எப்படியாவது ஒரு பத்து நிமிடம் உங்களுக்கு ஒதுக்குகிறேன்' என்றார். ஒரு வாக்கியம் தமிழில் உரையாடியிருந்த பரிச்சயத்திற்காகக் கூடுதலாக இரண்டு நொடிகள் என்னிடம் இருந்து பார்வையை அகற்றாமல் இருந்தார். அதற்கு நன்றி உணர்ந்து கொண்டு நகர்ந்தேன்.

மறுபடியும் கருப்பண்ணசாமியிடம் போனோம். பல் குத்தும் குச்சியை வைத்துப் பப்பாளித் துண்டுகளைக் குத்திக் குத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிடுகிறீர்களா என்றார். வேண்டாம் என்றோம். பப்பாளியைத் தொடர்ந்தார். தங்க நிற விரிப்பு போர்த்திய சோபா சாந்தமே உருவாகக் காத்திருந்தது. கேமரா வைத்திருந்த குழுவுக்கும் வழி சொல்லி அவர்களையும் அங்கே வர வைத்து விட்டுக் காத்திருந்தோம்.

இளைய மந்திரியின் காரியதரிசி கொஞ்ச நேரத்தில் வந்தார். அறைக்குள் செல்லும் முன் எங்களைக் கவனித்து விட்டதாய்க் குறிப்பால் உணர்த்தி விட்டு 'ஐந்து நிமிடம்' என்று ஐந்து விரல்களையும் மூடித் திறந்து காட்டிச் சென்றார். நல்லவர். நாலாவது நிமிடத்திலேயே எங்களை உள்ளே அழைத்தார். நிலவரம் கேட்டுத் தெரிந்து கொண்டு முதலில் மூத்த மந்திரியின் படப்பிடிப்பை முடித்து விடலாமே என்று ஆலோசனை சொன்னார்.

என்னை ஒரு டென்னிஸ் பந்தாக என் கற்பனை காட்டியது. இரண்டு காரியதரிசிகளும் இரண்டு டென்னிஸ் வீரர்களாகத் தெரிந்தனர். ஒருவர் நீளமாக முடி வளர்த்துக் குதிரை வால் கொண்டை எல்லாம் போட்டிருந்தார். மற்றவர் தொப்பி போட்டிருந்தார். காரியாலயக் கூட்டமெல்லாம் ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றபடி தலையை இப்படியும் அப்படியும் திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. சிறப்புப் பார்வையாளர் பகுதியில் இரண்டு மந்திரிகளும் முந்திரிப் பருப்பு சாப்பிட்டுக் கொண்டே ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்ன நடக்கிறதென்று நான் சுதாரிக்கும் முன் என் உடன் வந்திருந்த நண்பர் சூட்டிப்பாக இந்தியிலேயே ஏதேதோ பேசிக் காரியதரிசியைக் கரைய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். நினைவு திரும்பியதும் நானும் சேர்ந்து கொண்டு கிடைத்த இடைவெளியிலெல்லாம் உம் கொட்டினேன். பதினைந்து நிமிடப் போராட்டத்திற்குப் பின் காரியதரிசி மனமிளகி, அரை மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கிட்டத்தட்ட கற்பூரத்தை அடித்துச் சத்தியம் ாங்கிக் கொண்டு
மந்திரியின் அறையில் கேமராவையும் படப்பிடிப்பு விளக்குகளையும் தயார் செய்து வைக்கச் சொன்னார். பதினைந்து நிமிடங்களில் நாங்கள் தயாராகி விட்டோம். கொஞ்ச நேரத்திலேயே மந்திரி மற்றொரு கதவு வழியாக அந்த அறைக்குள் வந்தார். எங்களைப் பார்த்தபோது கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னேன். அவரும் கை கூப்பிப் பதில் வணக்கம் சொன்னார். ஒரு சின்னப் பரபரப்பு அறைக்குள் நுழைந்தது. கருப்பண்ணசாமி கூட சாப்பிடுவதை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க வந்து விட்டார்.

மந்திரி பேச வேண்டியதன் சாராம்சத்தை அச்சிட்டிருந்த இரண்டு காகிதங்களை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார் காரியதரிசி.
சில நிமிடங்கள் அதை வாசித்து விட்டுச் சில வரிகளை அடிக்கோடிட்டார். மேலங்கி போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா என்று எங்களிடம் கேட்டார். போட்டுக் கொள்ளச் சொன்னோம். இரண்டு நிமிடங்களில் மேலங்கி வந்தது. ஒப்பனை அறைக்குச் சென்று ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார். சட்டையில் மைக் வைத்து விட்டோம். கையாலேயே தலை கோதிக் கொண்டார். மூன்று ஷாட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒவ்வொரு ஷாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதாகவும் சொல்லி ஆரம்பிக்கச் சொன்னார். கேமராவைப் பார்க்காமல் பேசும்படி கேட்டுக் கொண்டோம். 'தெரியும் தெரியும்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அடுத்தடுத்து வரிசையாக மூன்று ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் முடித்து விட்டு எங்களுக்குத் தேனீர் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு, அவரின் காரைக் கொண்டு வரச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். அவ்வளவுதான்.

வந்த வேலை பாதி முடிந்தது. இதற்குப் போயா இத்தனை நேரம் காத்துக் கிடந்தோம் என்று மனம் ஒரு கணம் குழம்பியது. தலையை உதறி அதைத் தெளிய வைத்துக் கொண்டு, கேமராவையும் விளக்குகளையும் மூத்த மந்திரி அறைக்கு மாற்றத் தயார் செய்யுமாறு குழுவுக்குச் சொல்லி விட்டு, அந்தப் பல வேலைக்காரரைப் பார்க்கக் கிளம்பினேன்.

ஒரு சின்ன நம்பிக்கை பிறந்திருந்தது. எப்படியும் அந்தக் காரியதரிசி சொன்னபடி ஒரு பத்து நிமிடங்களைக் களவாடிக் கொடுத்து விட்டால் இன்றைக்கே வேலையை முடித்துக் கொண்டு நாளை ஒரு நாள் இருந்து தலைநகரம் சுற்றிப் பார்த்து விட்டு மறுநாள் ஊரைப் பார்த்துக் கிளம்பி விடலாம். மூத்த மந்திரி அறையில் அதே கூட்டம். ஆனால் வேறு மனிதர்கள். காரியதரிசியின் மேசைக்குச் சென்றேன். தசாவதானியாகச் சுழன்று கொண்டிருந்தார். பதினோராவது காரியமாக என்னைப் பார்த்து 'ஆச்சா?' என்று தமிழில் கேட்டார், புன்னகையோடு. என் நம்பிக்கை கூடியது. 'ஆச்சு சார். இனி உங்க கைலதான் இருக்கு' என்றேன்.

என்னைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். உள்ளே இன்னொரு அறையில் ஒரு பச்சை விரிப்பு போர்த்தியிருந்த சோபா காலியாக இருந்தது. ஒருவர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தார். என்னை அவரோடு இருக்குமாறு சொன்னார். சரியென்று உட்கார்ந்தேன். நண்பரை அழைத்து நான் சொல்லும்வரை பழைய இடத்திலேயே இருக்கச் சொல்லி விட்டேன். படப்பிடிப்புச் சாமானெல்லாம் வைத்துக் கொண்டு காத்திருப்பது இங்கே இடைஞ்சலாக இருக்கும். அனுமதி கிடைத்ததும் போனதும் தெரியாமல் வந்ததும் தெரியாமல் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அரை மணி நேரம் காத்திருப்பிலேயே போனது.

அருகில் அமர்ந்திருந்தவரைக் கவனித்தேன். வெள்ளை ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்து பெரியதாக மீசை வைத்திருந்தார். இந்த ஊர் ஆள்தான். காலையிலிருந்தே காத்திருக்கிறார் போல. சுற்றியிருப்பவர்களிடம் வெகு பரிச்சயமாகப் பேசிக் கொண்டிருப்பதை வைத்துத் தெரிந்து கொண்டேன். கையில் இலாகா முத்திரையிடப்பட்டிருந்த ஒரு கடிதத்தைப் பத்திரமாக ஒரு பாலித்தீன் பைக்குள் வைத்திருந்தார். அதில் அச்சாகி இருந்த வார்த்தைகள் தற்செயலாகக் கண்ணில் பட்டன.

மேற்படி மேற்படி முதல்வருக்கு,

இந்தக் கடிதம் கொண்டு வரும் மேற்படி மேற்படி நபரின் மகனை உங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருக்கிறார். அந்த மேற்படி விண்ணப்ப விஷயமாக மேற்படி ஆக வேண்டியதைச் செய்க.

நலம் விரும்பும்,
(கையொப்பத்திற்கு இடம் விட்டு)
மேற்படி மந்திரி

திக்கென்றிருந்தது! இவன் கூடவா என்னைச் சேர்த்துக் காத்திருக்க வைத்திருக்கிறார்கள்?! முன் அறையில் காத்திருந்தவர்கள் அவசர கதியில் மந்திரி அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அல்லது உள்ளே போகிற ஊழியரிடம் ஏதாவது துண்டுச் சீட்டையோ கோப்பையோ கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடத்தில் எல்லாம் விளங்கியது. முக்கியத்துவத்தின் அடிப்படையில் காத்திருப்பதற்காகத் தான் இரண்டு அறைகளா? சிகப்பு சோபாவுக்குத் தான் மரியாதையா? பச்சை சோபா போனால் போகட்டும் என்று வரம் கொடுப்பவர்களுக்குத் தானா? படக்கென்று எழுந்து கொண்டேன்.

போய் அந்தக் காரியதரிசியின் கண்ணில் படுமாறு நின்று கொண்டேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் கண்களும் என் கண்களும் சந்தித்துக் கொள்கிறாற்போல வாகாக நின்றிருந்தேன். Inertia என்ற வார்த்தை மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. நாலைந்து முறை என் கண்களைப் பார்க்க நேரிட்ட பிறகு காரியதரிசி இண்டர்காமில் ஒருவரை அழைத்துப் பணிவாகப் பேசினார். பேசி முடித்தபிறகு வெறுமையான ஒரு புன்னகையோடு என்னைப் பார்த்துத் தமிழிலேயே சொன்னார், 'மந்திரி ரொம்ப சோர்ந்து போயிட்டாராம். இப்ப ஷூட்டிங் வேணாம்னுட்டாரு'

'இப்போ என்ன சார் பண்றது?' நான் தமிழில் கேட்டேன்.

'பார்ப்போம். கொஞ்சம் காத்திருங்கள். இன்னும் சிலரை அவர் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் மனது மாறக் கூட வாய்ப்பிருக்கிறது. இதைக் கருத்தில் வைத்துத்தான் உங்களை இளைய மந்திரியிடம் முதலில் போகச் சொன்னேன். நீங்கள் வந்ததற்கு ஒரு பாதி வேலையாவது முடிந்த திருப்தி இருக்கும் இல்லையா?' - ஆங்கிலத்திற்கு மாறிவிட்டார்.

ஆங்கிலத்தில் நன்றி சொல்லி விட்டுக் காத்திருந்தேன். தமிழில் இந்தப் பதிலைச் சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக நம்பிக்கை இருந்திருக்கும் என்று தோன்றியது. பச்சை சோபாவில் உட்கார மனம் ஒப்பவில்லை. நின்று கொண்டே இருந்தேன். பதினைந்து நிமிடங்கள் அவசரகதியில் கழிந்தன. திடீரென்று கதவு திறந்து மூத்த மந்திரி வெளியே வந்து ஒரு நிமிடம் நின்று எல்லாரையும் பார்த்தார். எல்லாரும் சுதாரித்து எழும் முன்னேயே 'நாளை' என்ற ஒரே ஒரு வார்த்தையை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு விடுவிடுவென வெளியே நடக்க ஆரம்பித்து விட்டார். காரியதரிசி அடித்துப் பிடித்து அவர் பின்னாலேயே ஓடினார். கூடவே காத்திருந்தவர்களும் பின்னாலேயே போனார்கள்.

சுற்றிப் பார்ப்பதாவது சுண்ணாம்பாவது? நாளையாவது முடிந்தால் தேவலை என்று தோன்ற ஆரம்பித்த அதே கணம் நாளையும் இப்படியே போனால் வீணாகப் பிழைப்பு கெடுமே என்று சின்ன பயம் எட்டிப் பார்த்தது. திரும்பிப் பார்த்தேன். மீசை வைத்த ஜிப்பாக்காரர் என்னைப் பார்த்துச் சிரித்தார். மீண்டும் ஒரு முழு நாளை ஒரே ஒரு கையெழுத்துக்காகக் காத்திருந்து கழிக்கின்ற அளவுக்குத் தான் வெட்டியாக இருக்கும் இறுமாப்பு அவர் சிரிப்பில் தெரிந்தது.


-மதி

(படம் : நன்றி : Xava du

வெளியிட்டமைக்கு நன்றி : சொல்வனம்)

கருத்துகள்

  1. அருமை..நன்றி http://sakthiinnisai.blogspot.in/ உங்களைத் தொடர்கிறேன்...உங்களை ஒரு இணைப்பில் இணைத்துள்ளேன்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..