என் கல்லூரி இருக்கும் கோவை



கடைசியாக எப்போது கோவைக்கு வந்தேன் என்பதே நினைவில்லை. அவ்வளவு காலமாகி விட்டது. இந்த முறை கோவைக்கு உற்ற நண்பன் ஒருவனின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்தேன். கோவையில் உள்ள ஒரு பிரபலமான அரசுக் கல்லூரியில் தான் நான் பொறியியல் படித்தேன். 2005-இல் கல்லூரியில் சேர்வதற்காக மற்றும் ஒரு மாணவனாக இந்த ஊருக்கு வந்தவன் நான். நான்கு ஆண்டுகள் படித்து முடித்து விட்டு ஊரை விட்டுச் சென்று அப்படி இப்படி வாழ்க்கையின் ஓட்டத்தோடு கூடவே ஓடிப் பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கல்யாண மாப்பிள்ளையும் நானும் மிக நெருங்கிய கல்லூரி நண்பர்கள். எங்கள் நட்புக்கும் இப்போது பத்து வயதாகிறது. நண்பன் கல்யாணம் என்பது ஒரு தனி விசேஷம் தான். கல்லூரியில் சேர்ந்த காலம் முதலே தனக்கு வரப்போகும் பெண் யார் என்ற ஆர்வத்துக்கு இணையாக இருந்த இன்னொரு ஆர்வம் நண்பர்களுக்கு வரப்போகும் பெண்களைப் பற்றியது. இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம் (அது தனிக்கதை. அப்புறம் பேசுவோம்). ஒன்றிரண்டு பேரைத் தவிர உடன் படித்த நண்பர்கள் பலரும் குடும்பஸ்தர்களாகி விட்டனர். விடுபட்டவர்களுக்கும் தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பயணம் தொடங்கும் முன் இந்த மன நிலைக்கு நான் வருவேன் என்று பெரிதாக நினைக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தின நாள் நண்பரோடு சேர்ந்து பழைய கதைகள் பேச ஆரம்பித்து முளைத்த வினை, இன்று கல்யாணம் முடிந்ததும் சொல்லிக் கொண்டு விடைபெற்றுத் தனியாக இந்த ஊரைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். காணும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞாபகத்தைக் கிளறி விடுகிறது. கல்லூரி படித்த ஊருக்குப் பல வருடங்கள் கழித்து வந்து தனியாக ஞாபகங்களை மட்டும் அசைபோட்டுச் சுற்றும் அனுபவம் வெகு பரவசமாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்களைத் தர வல்லதால்தான் கல்லூரி நம் வாழ்வில் பெரிய சிறப்படைகிறது.

இந்தக் கல்லூரிக்கு வருகையில் எனக்கென ஒரு பெரிய அடையாளம் இல்லை. ஆனால் நான்கு வருடங்களில் வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்களையும், ஒரு அடையாளத்தையும், வெகு ஆழமான நட்புகளையும் உருவாக்கித் தந்தது இந்தக் கல்லூரி. விடுதிகளில் பற்பசை கடன் கேட்டு வாங்கிப் பல் விளக்கிய போதெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை, பத்து வருடங்களுக்குப் பிறகும் இந்த நட்புகள்தான் நிலைத்திருக்கும் என்று. இதற்குப் பின் ஒரு கல்லூரியில் மேல் படிப்பெல்லாம் படித்தாலும் முதல் கல்லூரி முதல் காதலைப் போல இனிப்பாக மனதில் அப்பி இருக்கிறது.



கல்யாண மண்டபம் கல்லூரியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவுதான். விடிகாலை முகூர்த்தம் முடிந்து ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாரும் விடை பெற்றுக் கிளம்பி விட, கல்லூரிப் பக்கம் போகலாம் என்று முடிவு செய்தேன். இப்போது அங்கே எவருக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கட்டடங்களும் மரங்களும் மட்டும் தான் என்னை நினைவில் வைத்திருக்கலாம். நடந்தே போகலாம் என்று தோன்றியது. நடக்க நடக்க, எங்கெங்கோ புதைந்து போயிருந்த ஞாபகங்கள் எல்லாம் தளும்பி வந்து நினைவின் மட்டத்தில் சலசலத்துக் கொண்டிருந்தன. கல்லூரியின் பெரிய இரும்புக் கதவுகளை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத பரவசம் பற்றிக் கொண்டது. சில கதவுகள் சில நேரங்களில் நம்மை முழு மனித வடிவில் அனுமதிப்பதில்லை. ஆனால் நம் நினைவுகளை மட்டும் உள்ளே அனுமதிக்கும். அது போலத்தான் இந்த முறை எந்தக் காரணம் சொல்லி உள்ளே செல்வது என்று தெரியவில்லை எனக்கு. கல்லூரி வாசலில் நிற்கக் கூடவில்லை. நடையின் வேகத்தை முடிந்த அளவுக்குக் குறைத்து மெள்ள மெதுவாக அந்தக் கதவுகளைத் தாண்டிச் சென்றேன். தாண்டிச் சென்ற சில நொடிகளில் உள்ளே வீசின பார்வை உள்ளிருந்து எக்கச்சக்க உணர்வுகளை வெளியே கூட்டி வந்தது.

எண்ணற்ற தடவைகள் இந்தக் கதவின் உள்ளும் வெளியும் கடந்து போயிருக்கிறேன். ஆனால் இன்று அந்தக் கதவைக் கடந்து போனபோது உள்ளே போக வேண்டும் என்ற ஆவலும், உள்ளே போனால் காணும் கல்லூரி எனக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத அன்னிய தேசமாகி இருக்கக் கூடும் என்ற தயக்கமும் கலந்து அலைக்கழித்த நிலை, வேடிக்கையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் போல, ஃபுல்லா சரக்கடிச்சிட்டு ஒரு கொத்து வுட்டா வாந்தி வர மாதிரி இருக்கும் ஆனா வராதுல்ல, அந்த மாதிரி இருந்தது.

கல்லூரியின் எதிர் வரிசையில் மாணவர்களை நம்பி முளைக்கும் கடைகள் நீண்ட காலம் நீடிப்பதில்லை. ஒவ்வொரு தலைமுறை மாணவர்களுக்கும் அவர்கள் காலம் என்பது கல்லூரிக்கு எதிரே டீ குடித்த கடையின் அடையாளத்தோடு தான் நிறைவு பெறுகிறது. அது போல என் தலைமுறை டீக்கடைகள் இப்போதில்லை. காலம் மாறி விட்டது.

கல்லூரிக்கு அருகில் இருந்த சிக்னலில் ஒரு ட்ராஃபிக் போலீஸ் இருப்பார். அவருக்கு அவர் மகனை என் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்பது பெரிய கனவு. எங்கள் கல்லூரி மாணவர்கள் உரிய காகிதங்கள் இல்லாமல், அதிக வேகத்தில் சென்று, ஒரு பைக்கில் மூன்று பேர் சென்று - என எத்தகைய கேஸில் அவரிடம் சிக்கினாலும், எங்கள் கல்லூரியின் பேருக்காக மட்டும் எங்களை விட்டு விடுவார். அப்படி நேரும் ஒவ்வொரு முறையும் கல்லூரியைப் பற்றியும் அங்கே இடம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் எங்களிடம் விசாரிப்பார். எங்களையெல்லாம் மன்னித்தருளிய கர்மபலன் எப்படியாவது தன் மகனுக்கு அந்தக் கல்லூரியில் ஒரு இடம் பிடித்துத் தரும் என்று அவர் ஆழமாக நம்பினாரோ என்னவோ. அந்த சிக்னலில் இன்று அவரைத் தேடினேன். அவர் இல்லை. அவர் மகன் எங்கே படித்தானோ தெரியவில்லை. அவனுக்கு என் கல்லூரி கதவு திறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

இலக்கே இல்லாமல் கல்லூரியைத் தாண்டித் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். கிடைத்த பேருந்தில் ஏறி காந்திபுரம் வந்தேன். புதிதாக மேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடையாளமே தெரியவில்லை. கல்லூரியில் சேர்ந்த புதிதில் இதே காந்திபுரத்தில் தெருவோரக் கடைகளில் அவ்வப்போது வந்து இருபது ரூபாய்க்கும் முப்பது ரூபாய்க்கும் ஸ்டீல் செயின் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். வாலிபப் பிராயத்தில் அந்த மாதிரி செயின், கையில் காப்பெல்லாம் மாட்டிக் கொண்டால்தானே ஒரு இது. திடீரென்று ஒரு செயின் வாங்கத் தோன்றியது. இப்போது ஐம்பது ரூபாய் அந்த செயின். வாங்கிக் கழுத்தில் மாட்டிக் கொண்டபோது ஒரு மெல்லிய கூச்சம் வந்தது. சிரித்துக் கொண்டு சட்டைக்குள் இழுத்து விட்டுக் கொண்டேன். கல்யாணத்துக்கு மாமனார் வீட்டில் தங்கச் சங்கிலி வாங்கித் தந்த போது சங்கிலியெல்லாம் போடமாட்டேன் என்று அடம் பிடித்தேன். இன்று தெருவோரத்தில் ஒரு ஐம்பது ரூபாய்ச் சங்கிலியை ஆசைப்பட்டு வாங்கிக் கூச்சப்பட்டு மாட்டிச் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நாளைக்குப் பிழைப்பைப் பார்க்க ஊருக்குப் போனால் கழட்டி வைத்து விடுவேனா இன்னும் சில நாட்கள் சட்டைக்குள் போட்டுக் கொள்வேனா என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு மாதிரி நன்றாக இருக்கிறது.

காந்திபுரத்தில் ஒரு பழைய புத்தகக் கடை உண்டு. கல்லூரி நாட்களில் ஒரு முறை நண்பர்களுடன் பந்தயம் கட்டி அந்தக் கடையில் இருந்து ஒரு புத்தகத்தைத் திருடி இருக்கிறேன். சட்டைக்குள் வைத்துக் கடத்திக் கொண்டு வரும் அளவில் ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து, அதை யாரும் பார்க்காத ஒரு நொடியில் சட்டைக்குள் வைத்து வெளியே எடுத்து வந்ததும், அந்தத் திருட்டை மறைக்க மற்றொரு புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கியதும், மாட்டிக் கொண்டு விடக்கூடாதென்ற பதட்டத்தில் மீதிச் சில்லறை வாங்காமலேயே அவசர அவசரமாகக் கல்லாவிலிருந்து நடையைக் கட்டியதும், கடைக்காரர் சில்லறை வாங்கச் சத்தமாக அழைத்தபோது எதற்கென்று புரியாமல் ஒரு கணம் மாட்டிக் கொண்டோம் என்று கூனிக் குறுகித் திரும்பியதும் நினைவில் வந்து கிச்சு கிச்சு மூட்டியது.

அங்கிங்கெனாது கோவையில் பல இடங்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் நடக்கவே செய்கிறேன். என் நினைவு வரைபடத்தில் என் கல்லூரிதான் கோவையின் மையமாக இருக்கிறது. நண்பனின் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்த்தபோது பரீட்சை எழுதாமல் விடுப்பெடுத்து வந்து அவனுக்குத் துணையாக இருந்த மருத்துவமனை, இரவுக்காட்சிகள் பார்த்த திரையரங்குகள், புத்தகங்கள் வாங்கத் தேடி அலைந்த கடைகள், அழகான கல்லூரிப் பெண்களை சைட் அடிப்பதற்காகச் சுற்றித் திரிந்த பேருந்து நிறுத்தங்கள், பிறந்த நாள் விருந்துகளாய்த் தின்று தீர்த்த உணவகங்கள், முன்பு சொன்ன ட்ராஃபிக் போலீஸ் அல்லாது பிறரிடம் மாட்டித் தண்டம் கட்டின சிக்னல்கள் - என ஊரில் எங்கே சுற்றினாலும் இன்று ஞாபகங்கள் தான் சுழற்றிச் சுழற்றி அடிக்கின்றன.

எப்படித் திடீரென்று இப்படி ஒரு நினைவுச் சுழலில் சிக்கினேன் என்று தெரியவில்லை. கல்லூரி முடித்ததும் அடுத்தடுத்த வருடங்கள் இந்த ஊருக்கு வந்தபோது கூட இப்படி இல்லை. இடைப்பட்ட இடைவெளியும், நண்பன் திருமணம் என்று ஒரு முக்கிய வாழ்வு நிகழ்வும் தான் இந்த நிலைக்குக் காரணம் என்று நினைக்கிறேன். இல்லை நீண்ட நாள் கழித்துப் பார்க்க வந்திருக்கும் ஒரு நண்பனிடம் என் கல்லூரி இருக்கும் கோவை இப்படியாக உரையாடுகிறதோ! சந்தோஷம்!

-மதி

கருத்துகள்

  1. மிக அருமை ஜிஎஸ்.. கால எந்திரத்தில் பின்னோக்கிப்போன உணர்வு..

    பதிலளிநீக்கு
  2. சரியான சமயத்தில் அருமையான பதிவு! இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊரான கோவை செல்லப் போகிறேன்! கல்லூரியில் ஒரு முறை கால் பதிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. அருமை.. யாம் பெற்ற இன்பம் உங்களுக்கும் உரித்தாகுக

    பதிலளிநீக்கு
  4. நான் 1972-77 ல்
    (அப்போதெல்லாம் ஐந்தாண்டுகள் பொறியியல் படிப்பு)
    இதே G C T யில் படித்து முடித்தவன்
    இந்தக் கல்லூரியின் நினைவுகள் என்றும் அகலாத வண்ணம் வாழ்வில் ஒன்றிப்போனது !

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொரு முறையும் கல்லூரியை கடந்து செல்லும்பொழுது ஒரு இனம்புரியாத உணர்வு வந்து செல்லும். சில நேரங்களில் அப்படியே இருந்து இருக்கலாமோ என்று தோணும். நினைவலைகளில் மூழ்கடித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி வீரராகவன் அண்ணா..

    பதிலளிநீக்கு
  7. நன்றி ப்ரேம்.. அப்படியே இருந்திருக்கலாமோ என்று தோன்றத்தான் செய்கிறது :-)

    பதிலளிநீக்கு
  8. I too did the same on last month.came from mumbai via train.got down on 6am in cbe junction. Took an auto and went to college with wife,kid and maid.we were there on 6.45 am at college. Precious moment in my life roaming with daughter who is just two years age.especially planned our journey from mumbai to erode through konkan route just have to come to college. GCT!!!

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி எம் மக்கோள்.. இந்தப் பதிவு இந்தக் கல்லூரியின் கதவுகளைத் தாண்டிச் சென்ற ஒவ்வொருவருள்ளும் ஒவ்வொரு விதமான சலனங்களை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  10. Fantastic! I am also a GCTIAN (78-83). Your writing made me to recollect those days while reading.
    Well done.
    N.Ganesan

    பதிலளிநீக்கு
  11. one correction boss, Vasanthi bakery and aaradhana (lawley corner) are still there...since 1984 when I joined GCT...

    பதிலளிநீக்கு
  12. கருத்துரைத்த அனைவர்க்கும் நன்றி.. @சரவணக்குமார்... ஆம் வசந்தியும் ஆராதனாவும் அசைக்க முடியாமல் இன்னும் நின்று கொண்டிருப்பது உண்மை.. ஆனால் கவனித்துப் பார்த்தால் இந்த இரண்டு கடைகளும் பெரும்பாலும் மாணவர்களை நம்பி இருப்பதில்லை.. அங்கு வரும் கூட்டம் கோவையின் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டமாகவே என் கண்ணில் பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  13. 1972 - 77 களில் அந்த லாலீ கார்னரில் இருந்த கடை அரோமா என்ற பெயரில் இருந்தது. தற்போது ஆராதனா என மாறியுள்ளது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..