குற்றம் கடிதல் - நன்னயம் பாராட்டல்
நேற்றிரவு 'குற்றம் கடிதல்' திரைப்படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போதே இந்தப் படத்தில் நான் ரசித்தவற்றை எழுதிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முதலில் இது ஒரு மிக நல்ல திரைப்படம் என்பதையும் பிறகு நான் ஒரு சினிமா விமர்சகன் அல்ல என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நிறைய சினிமா பார்ப்பேன் என்பதைத் தவிர சினிமாவைப் பற்றி நுட்பமாக விமர்சிக்கப் பெரிய தகுதிகள் எவையும் எனக்கில்லை. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி நான் எழுதுவதைப் போலவே இந்தத் திரைப்படத்தைப் பற்றியும் அனுபவப்பூர்வமாக எழுதலாம் என்பதே இந்தப் பதிவு. இன்னும் திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் கூட இந்தப் பதிவை வாசிக்கலாம். மேலோட்டமாகக் கதையைச் சொல்வதைத் தாண்டி எந்த இரகசியத்தையும் நான் சொல்லப் போவதில்லை. மேலும் எல்லாம் தெரிந்து பார்த்தால் கூட இந்தப் படம் ரசிக்கத்தக்க படைப்பே.
என்னைப் பொறுத்தவரை யதார்த்தப் படைப்புகள் அனைத்தையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். மனிதத்தின் மேல் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துமாறான படைப்புகள் ஒருவகை. யதார்த்தம் என்பது சோகமும் தோல்வியும் தான் என்று அடம் பிடிப்பது மற்றொரு வகை. யதார்த்தத்தின் அழகையும் அதனுள் பொதிந்திருக்கும் நன்னம்பிக்கையையும் வெளிக்கொணருமாறான இந்தப் படைப்புகள் எப்போதுமே என்னைக் கைதட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரங்கள் அனைவருமே மிக மிக யதார்த்தமான மனிதர்கள். புதிதாகக் கல்யாணம் ஆகியிருக்கின்ற காதல் மயக்கம் கலையாத தம்பதி, அந்தத் தம்பதியரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரியும் மனைவி, அதே பள்ளியின் முதல்வரும் மற்றொரு ஆசிரியையுமான முதிர்ந்த தம்பதி, அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு நோஞ்சான் சுட்டிப் பயல், அவனுடைய ஆட்டோ ஓட்டும் தாய், அவளின் கம்யூனிஸப் போராளி அண்ணன் - ஆகிய இவர்கள் தான் முக்கியக் கதாபாத்திரங்கள். எதேச்சையாக அந்த ஆசிரியை அந்தப் பையனை ஒரு நாள் வகுப்பில் அடித்து விட, அவன் மயக்கம் போட்டு விட, அதன் பின் நிகழும் பரபரப்பே கதை.
நம் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் பயத்தோடு பார்த்த ஆசிரியர்களும் மதிப்போடு பார்த்த ஆசிரியர்களும் இருப்பார்கள். கொஞ்சம் விவரம் தெரியத் துவங்கியபின் வகுப்பறையில் பயத்திற்கென்ன வேலை என்று தான் தோன்றுகிறது. மிரட்டிப் பணிய வைத்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய ஒரு பொய்யை நம்பி எத்தனை பேரைக் காயப்படுத்தி இருப்பார்கள்! அவர்களால் அந்த வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு விட்டு நிம்மதியாக இன்றும் நடமாட முடிவது நியாயமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. வகுப்பறை வன்முறைகளில் தான் எத்தனை வித்தியாசமான கற்பனை வளம் பொருந்திய தண்டனைகள்! சில நாட்கள் முன்புதான் நானும் என் பள்ளி நண்பன் ஒருவனும் எங்கள் ஆங்கில ஆசிரியை ஒருவரின் signature shot பற்றிப் பேசிக் கண்ணில் நீர் வரச் சிரித்துக் கொண்டிருந்தோம். அது போலத் தனக்கென ஒரு தனி பாணி அமைத்து மாணவர்களை அடிக்கிற ஆசிரியர்களை நாமெல்லாரும் பார்த்திருப்போம். அடி வாங்கி இருப்போம். பள்ளியில் ஒரு முறை என்னை ஒரு ஆசிரியர் கன்னத்தில் அறைந்த அறையில் என் கண்ணாடி பறந்து கீழே விழுந்து தெறித்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த அடி வாங்கியதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெளிவாக நினைவில் இல்லை. அறைதான் மறக்காமல் பதிந்து விட்டது. அதனோடே பூச்சாண்டி போன்ற அவரின் முகமும். அன்று நான் இதே போல மயங்கி விழுந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்!
இந்த ஒரு கதையைச் சொல்லிக் கொண்டே போகும்போது கூடவே வேறு பல நுண்ணுணர்வுகளையும் திரைப்படம் அருமையாக எடுத்தாள்கிறது. ஒரு நல்ல ஆசிரியைக்கு உதாரணமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் உயிரியல் ஆசிரியை ஆசிரியர்கள் அறையில் பாலியல் கல்வியின் அவசியத்தைக் குறித்து விவாதிக்கிறார். மாணவர்களுக்கு அவர் பெண் உடலின் இனப்பெருக்க மண்டலத்தைப் (female reproductive system) பற்றி நடத்தும் பாட வகுப்பைப் படம் காட்டுகிறது. அந்த வயதின் குறுகுறுப்புடன் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே மாணவர்கள் காத்திருக்க, அந்த விடலைக் குழப்பங்களைக் களைந்து, அறிவின் பார்வையில் அவர் அந்தப் பாடத்தை நடத்தும் விதம் மரியாதைக்குரியது. நாம் ஒவ்வொருவரும் இதே பாடத்தைத் தாண்டி வந்திருப்போம். அந்த வகுப்பை ஆசிரியர் கையாண்ட விதம்தான் நம்மில் பலருக்கும் பாலுறுப்புகளைப் பற்றியும், எதிர்ப்பாலினரைப் பற்றியும், உடலுறவைப் பற்றியுமான அடிப்படைக் கண்ணோட்டங்களை விதைத்திருக்கும். எத்தனை பேருக்கு வகுப்பில் ஆசிரியர் இந்தப் பாடத்தை நீங்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று தட்டிக் கழித்திருப்பார். என் ஆசிரியை அப்படிச் செய்யவில்லை. கிட்டத்தட்ட இந்தத் திரைப்படத்தில் காட்டின வகுப்பைப் போலவேதான் என் வகுப்பில் இனப்பெருக்கத்தின் உயிரியல் கற்பிக்கப்பட்டது. மரியாதைக்குரிய அந்த ஆசிரியை இந்தத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நேற்று என் நினைவில் வந்தார்.
எதிர்பாராமல் நடந்து விட்ட ஒரு சம்பவத்தை அசாத்தியமான நிதானத்துடன் எதிர்கொள்ளும் பள்ளி முதல்வரும் அவருக்கு மனத்துணையாக நிற்கும் அவரின் மனைவியான மூத்த ஆசிரியையும் வெகு நேர்த்தியான கதாபாத்திரங்கள். யார் மேலும் தப்பில்லாத குற்றங்கள் நிகழ்ந்து விடுவது வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் வேடிக்கைதான். அவற்றிற்குப் பொறுப்பேற்கும் நிலையில் இருக்கும் துரதிர்ஷ்டசாலிகளால் எந்தப் பக்கமும் சாயவும் முடியாது. எதுவும் செய்யாமலும் இருக்க முடியாது. அப்படியான ஒரு குற்றத்தின் பின்னணியில் இரு தரப்புகளுக்கும் ஆதரவாகவும் நியாயத்துக்கு உட்பட்டும் செயல்படுவது எப்படி என்பதான நிதானம் இந்தப் பாத்திரங்களில் வெளிப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிக்கையில் அவர்கள் ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக இருந்து தந்து கொள்ளும் ஒரு உணர்வுப் பூர்வமான பிடிமானம் முதுமையின் மேல் மரியாதையைக் கொண்டு வருகிறது.
அவர்களைப் போலவே இந்தச் சிக்கலின் நடுப்புள்ளியில் சிக்கிச் சுழலும் இளம் தம்பதியின் பாத்திரங்கள் மிக யதார்த்தம். ஒருவர் மேல் ஒருவர் தீராத காதல் கொண்டிருந்தாலும், ஒரு பிரச்சனையைச் சேர்ந்து சந்தித்த அனுபவம் இல்லாதது அந்தச் சூழலில் அவர்களை மற்றவரிடம் இருந்து தனிமைப் படுத்துவது ஆழமான உணர்வு. இருந்தும் அவர்களின் காதல் அந்த அனுபவமின்மையை முடிந்த அளவு வெல்லப் போராடுகிறது.
போராட்டங்களுக்கு அஞ்சாத தீர்க்கம் உடைய கதாபாத்திரம் ஒன்று பாதிக்கப்பட்ட தரப்பில் கோபத்தைக் கண்களில் தாங்கி வருகிறது. கொட்டித் தீர்க்கும் கோபத்தை விடக் குவித்துச் செலுத்தப்படும் கோபத்திற்குத் தான் பலம் அதிகம். அப்படிக் கோபப்படுவதற்கு முதலில் ஒரு நிதானம் வேண்டும். அந்த நிதானமும் கோபமும் ஒன்றாகக் கலந்து செய்திருக்கும் அந்தக் கதாபாத்திரம் எதிரியெனத் தோன்றும் மக்களின் நிஜ மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு கடைசியில் வெளிப்படுத்தும் மன்னிப்பும் தோழமையும் அந்தப் பாத்திரத்தின் மேல் மதிப்பை ஏற்படுத்துகிறது.
முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி அங்கங்கே வரக்கூடிய சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் ரசனையோடும் மெனக்கெடலோடும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அவர்களில் குறிப்பிடத் தக்க பாத்திரம் ஒரு லாரி ஓட்டுனர். முகம் தெரியாத மனிதர்களை இரவிலும் இருட்டிலும் நல்லவர்களாகக் காட்டும் படைப்புகள் வெகு குறைவே. சமூகம் சினிமாவைப் பிரதிபலிக்கிறதா சினிமா சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் எங்கோ வழி தொலைந்து சுற்றிக் கொண்டிருக்கும் இளம் தம்பதி ஒன்றிற்கு இரவில் அடைக்கலம் தந்து கண்ணியமாக நடந்து கொள்ளும் லாரி ஓட்டுனர்கள் ஆச்சரியத்துக்குரிய மனிதர்களாகவே பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிகிறார்கள்.
அனைத்திற்கும் மேலாக அந்தச் சிறுவனை அடித்து விட்ட குற்ற உணர்ச்சியில் துடிக்கும் அந்த ஆசிரியை மிகவும் மதிப்பிற்குரியவராகி விட்டார். அந்தச் சிறுவனின் தாயை முகம் நோக்கிப் பார்த்து அழுது தன் மீட்பைத் தேடிக் கொள்ளும் நிமிடங்களில் திரைப்படம் உன்னதமாகிறது. இந்தச் சந்திப்பின் ஆழம் புரியாமல் இதை வைத்து வியாபாரம் பண்ணச் சுற்றி வளைக்கும் ஊடகங்களும், நிலவரத்தின் சூடு உணர்ந்து யதார்த்தமாகப் பட்டும் படாமலும் கையாளும் காவல் துறையும் உண்மையான சித்தரிப்புகள்.
இவை தவிர நுட்பமான பல படைப்புக் கணங்களும் படத்தில் வருகின்றன. ஏதோ ஒரு மறைபொருளைக் குறிப்பால் உணர்த்துவது போலான கவித்துவமான காட்சிகள் படம் நெடுகிலும் வருகின்றன. இவை படைப்பாளிக்கான பதக்கங்கள்.
அடிக்கடி நாம் பார்க்கும் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தில் எந்த ஒரு ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை - அதுதானே யதார்த்தம். இந்தப் படத்தில் ஹீரோ என்றால் நான் அந்த உயிரியல் ஆசிரியையைத்தான் சொல்வேன். அவர் அதிகபட்சம் அரை மணி நேரம் படத்தில் வருகிறார். யதார்த்தத்தில் நாம் எல்லாரும் மனிதர்கள். தனித்தனியாக நிறைகளும் குறைகளும் உடைய மனிதர்கள். ஆழமாக ஏதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து - அது கடவுளோ, காதலோ, கடமையோ ஏதோ ஒன்று - அதன் உந்துதலில் வாழ்வை எதிர்கொண்டிருக்கும் மனிதர்கள். சமயங்களில் குற்றங்கள் செய்து பிறகு மீட்பைத் தேடித் தவிக்கிறவர்கள். கோபப்படக் கூடியவர்கள். மன்னிக்கக் கூடியவர்கள். இப்படி மனிதர்களை மனிதர்களாகவே வைத்துச் செய்யப்படும் படைப்புகளில் உள்ள உண்மை முன்பு சொன்னது போல மனிதத்தின் மேல் ஒரு நம்பிக்கையை விதைக்க வல்லது. அந்த நம்பிக்கை நமக்கு நிறைய தேவைப்படுகிறது. சக மனிதனும் மனிதன் தான் என்ற நம்பிக்கை உணர்வு இருந்தால்தால் நம்மால் குடும்பங்களை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குச் செல்ல முடிகிறது; பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடிகிறது; பயணம் போக முடிகிறது.
இந்தத் திரைப்படத்தை உருவாக்கியவர்களுக்கும் ஆதரித்தவர்களுக்கும் இந்த நம்பிக்கையைப் பரப்புவதன் புண்ணியம் சமமாகப் பங்கிட்டுச் சென்று சேரும் என்பது நிச்சயம். என் வீட்டுக்கருகில் எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் ஓடாமல் கொஞ்சம் தொலைவு சென்று பரங்கிமலை ஜோதியில் இந்தப் படம் பார்த்தேன். உங்களுக்கும் இந்தப் படத்தைப் பார்க்கக் கொஞ்சம் மெனக்கெட வேண்டி வரலாம். நிறைய அரங்கங்களில் வெளியாகவில்லை. இருந்தாலும் மெனக்கெட்டாவது பாருங்கள். மனிதம் தழைக்கும்.
-மதி
கருத்துகள்
கருத்துரையிடுக