துளசியும் நிலாவும்


துளசி ஒரு அழகான குட்டிப் பெண். இந்த வருடம் தான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருக்கிறாள். அவளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவளுடைய வீட்டிலேயே பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லாம் அவளுடைய நண்பர்கள். அப்புறம் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜோசஃப் அண்ணாவும் அவனுடைய குட்டித் தம்பி ஜாண் பாப்பாவும் அவளுடைய நண்பர்கள். அவள் வகுப்பில் அவளுக்கு ரேணுகா தான் மிக நெருக்கமான தோழி. தன் கூடப் படிக்கும் நிறைய குட்டிப் பெண்களெல்லாம் அவளுடைய தோழிகள்.

இவர்கள் இல்லாமல் துளசி தினமும் காலையில் பள்ளிக்குத் தாத்தாவோடு செல்லும்போது ஒரு பசுமாட்டிற்குப் பழம் கொடுப்பாள். அந்த மாடு அவளுக்குத் தோழி. அப்புறம் மூன்றாவது வீட்டில் வளர்க்கும் கிளிகள் துளசி அந்த வீட்டைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் அவள் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடும். அழகான கிளிகள்! ஆட்டுக்குட்டி, பூனை, நாய்க்குட்டி என்று தன் வீட்டைச் சுற்றி நிறைய நன்பர்கள் உண்டு அவளுக்கு.


ஒரு நாள் ஊரில் இருந்து அவளுடைய மாமா வந்திருந்தபோதுதான் நிலாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்து நட்பாக்கி வைத்தார். கதிர் மாமா துளசியின் அம்மாவுக்குத் தம்பி. அன்றைக்குக் கதிர் மாமா துளசியை மொட்டை மாடிக்குக் கூட்டிச் சென்றார். வழக்கம்போல இரண்டு பேரும் கதை பேசி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கதிர் மாமா வானத்தில் அழகான முழு நிலாவைக் கண்டார். உடனே துளசியிடம் 'துளசி, உனக்கு நிலாவைத் தெரியுமா?' என்றார். அதற்கு அவள் 'தெரியாதே' என்றாள்.

'அதோ மேல பாத்தியா... அழகா, வெள்ளையா, வட்டமா இருக்குல்ல, அதுதான் நிலா. அது உன் கூட நட்பா  இருக்கலாமான்னு உன்னைக் கேக்குது.. என்ன சொல்லலாம்?'

'ஓ இருக்கலாமே.. எனக்கு நிலாவை ரொம்பப் பிடிச்சிருக்கு'

'சரி, அப்போ மாமா நிலாகிட்ட சொல்றேன். நாளைலேர்ந்து அது தினமும் ராத்திரி உன்னைப் பாக்க வரும். சரியா?'

இப்படியாக நிலாவும் துளசியும் அறிமுகமாக, அன்றைக்கே நெருக்கமான தோழிகளாகி விட்டார்கள். துளசி தன் நண்பர்களைப் பற்றி நிலாவுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தாள். நிலாவும் எல்லாவற்றையும் ரசித்துக் கேட்டுக் கொண்டே இருந்தது. நிலாவும் துளசியிடம் தன்னைப் பற்றிச் சொல்லியது. ஆனால் அது துளசிக்குப் புரியாத வேறு ஏதோ மொழியில் இருந்தது. மாமாதான் நிலா என்ன சொல்கிறது என்று துளசிக்குக் கேட்டுச் சொன்னார். துளசி வளர்ந்ததும் அவளும் நிலாவின் மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்று மாமா சொல்லி இருந்ததால் அவள் சந்தோஷமாக இருந்தாள்.

அதன் பின் மாமா விடுமுறையில் இருந்த மூன்று நாட்களும் தினமும் இருவரும் மொட்டை மாடிக்குப் போய் நிலாவைப் பார்த்துப் பேசி வந்தனர். பிறகு மாமா ஊருக்குப் போனதால் சில நாட்கள் துளசி நிலாவைப் பார்க்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து அவளுக்கு நிலாவைப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று அவள் தாத்தாவிடம் சொன்னாள். சரியென்று நிலாவைப் பார்க்கத் துளசியும் தாத்தாவும் மாடிக்குப் போனார்கள். அங்கே போய்ப் பார்த்தால் துளசிக்கு ரொம்ப ஆச்சரியம்! நிலா துரும்பாக இளைத்துப் போய் இருந்தது. போன வாரம் அவள் பார்த்த மாதிரி அழகாக வட்டமாக இல்லவே இல்லை. துளசிக்கு ரொம்ப வருத்தமாகப் போய் விட்டது. அவளுக்கு நிலாவின் மொழியும் தெரியாததால் அவளால் நிலா பேசியதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. மாமாவிடம் அன்றிரவு செல்லில் பேசியபோது அவள் இதைச் சொன்னாள்.

உடனே மாமா அவளுக்குச் சமாதானம் சொல்லி, 'அது ஒண்ணும் இல்லை துளசி.. நிலா ஒரு வாரம் உன்னைத் தேடித் தேடிச் சரியாவே சாப்பிடாம இளைச்சுப் போயிருச்சு. நீ அதுகிட்ட நல்லாச் சாப்பிடச் சொல்லு. சரியாகிடும். அப்புறம் ஒரு வாரம் கழிச்சு நீ தாத்தா கூட மாடிக்குப் போய்ப் பாத்தேன்னா அது முன்ன மாதிரியே மொழுக் மொழுக்னு வட்டமா ஆகிடும் சரியா?' என்றார்.

'சரி.. நான் தான் ஒரு வாரமா நிலாவைப் பாக்கவே இல்லை. நான் அதுகிட்ட சாரி சொல்லணும்' என்றாள் துளசி. மாமா அவளைச் சமாதானப்படுத்தி 'மாமா நிலாகிட்ட சொல்றேன். துளசி உன்னை ஒரு வாரம் கழிச்சு வந்து பாப்பா.. அப்போ நீ ஒழுங்காச் சாப்பிட்டு வட்டமா இருந்தாதான் அவளுக்குச் சந்தோஷமா இருக்கும்னு..' என்றார். அப்போதுதான் துளசிக்கு நிம்மதியாக இருந்தது. 'ஒரு வாரம் கழிச்சு உன்ன வந்து பாக்குறேன். நீ கவலைப்படாம நல்லாச் சாப்பிடணும்' என்று மனதிற்குள்ளேயே நிலாவிடம் சொல்லி விட்டு அன்றிரவு அவள் நிம்மதியாக உறங்கினாள்.

கதைக்குப் படம் தந்து உதவியவர்: Rachel Kramer மாமா



கருத்துகள்

  1. அழைப்புக்கு மிக்க நன்றி தனபாலன் அண்ணா.. புதுக்கோட்டைக்கு வருவது சந்தேகம்தான் என்றாலும் உங்கள் முயற்சிக்கு என் வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..