உயிருக்கும் மயிருக்குமான தர்மயுத்தம்வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைத் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கக்கூடிய விஷயம் கட்டாய ஹெல்மெட் சட்டம். எனக்குத் தெரிந்து இது வரை மூன்று முறையாவது இந்தச் சட்டம் மிகக் கெடுபிடியாக அமுலுக்கு வந்து, அமோகமாக ஹெல்மெட்கள் விற்றுத் தீர்ந்து, சாலையோர வசூல்கள் செழித்தோங்கி, அதிகபட்சம் மூன்று மாதத்தில் ஆரவாரம் குறைந்து 'ஹெல்மெட் அணிவதால் பெண்கள் தலையில் பூச்சூட முடியவில்லை' என்பன போன்ற சல்லித்தனமான காரணங்களால் காணாமல் போயிருக்கிறது. மீண்டும் ஒரு முறை இந்த வாரம் மொத்தக் கூத்தும் அரங்கேறி இருக்கிறது. நீங்கள் புது ஹெல்மெட் வாங்கி விட்டீர்களா?

ஹெல்மெட் அணிவதால் பாதுகாப்பு இருக்கிறது என்பதைக் குறித்து எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஹெல்மெட்டால் பயனடைந்த யாராவது ஒருவரையாவது கட்டாயம் தெரிந்திருக்கும். பயனடைதல் என்று நான் இங்கே குறிப்பிடுவது திடீர் ஹெல்மெட் வியாபாரம் செய்து லாபம் பெறுவதை அல்ல. ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கி, அந்த நேரத்தில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சேதாரம் குறைந்த பயன். என் அக்காவுக்கும், நண்பர்களில் குறைந்தது இருவருக்குமாவது இது போன்ற கதைகள் இருக்கின்றன. மற்றொரு நண்பன் ஹெல்மெட் இல்லாமல் ஒரு நாள் பைக்கில் சில்லறை வாரி, முன் பல் தெறித்து, பொய்ப் பல்லை மாட்டிக் கொண்டபின் தீவிர ஹெல்மெட் விசுவாசி ஆகியிருக்கிறான். எப்போதாவது ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் மளிகைக் கடைக்குத் தானே என்று நான் ஹெல்மெட் போடாமல் போனால் கூட என்னை ஹெல்மெட் போடச் சொல்லி வற்புறுத்துகிறான். நல்ல மண்டைக்கு ஒரு விபத்து என்றாலும் எல்லாருமே இப்படிப் பட்டுத் திருந்தட்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

எப்பேற்பட்ட அப்பாடக்கரானாலும் ஒரு நாள் சறுக்கலாம். ஒரு நாள். (மாரி தனுஷ் போல மேற்கண்ட இந்த வாக்கியத்தை உச்சரித்துப் பார்க்கவும்). அந்த ஒரு நாள் அவன் ஹெல்மெட் அணிந்திருந்தானா இல்லையா என்பதே கடைசியில் முக்கியமான கேள்வியாக மாறலாம்.ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு மக்கள் சொல்லும் சில காரணங்கள் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடச் சின்னப் பிள்ளைகள் சொல்லும் காரணங்களை விடச் சிரிப்பூட்டுவதாய் இருக்கின்றன. பூ வைக்க முடியவில்லை என்ற ஒரு காரணத்தை முன்பே சொல்லி இருந்தேன். ஏதாவது எசகுபிசகாக நடந்து விட்டால் புகைப்படத்துக்குத் தான் பூ வைக்கிறாற்போல் ஆகிவிடும் என்று தெரிந்தும் இது ஒரு காரணம் என்று முன்வைக்கப் படுகிறது. சென்ற வாரம் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது வெகு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு காரணத்தை முன்வைத்தார். 'இவனுங்க இப்படிச் சட்டம் போட்டு எல்லாரையும் கட்டாயப் படுத்தும் போது கடனுக்குன்னு ஹெல்மெட்டை வாங்கிக் கையில் வெச்சுகிட்டே வண்டி ஓட்டுறானுங்க. அப்புறம் முச்சந்தியில போலீஸைப் பாத்ததும் அப்படியே ஹெல்மெட்டை மாட்டுறேன்னு சொல்லியே வண்டியை எங்கேயாவது விட்டுடுறானுங்க. இதுக்கு எதுக்கு சட்டம் கொண்டு வரணும்'. எனக்குச் சிரிப்பு வந்தது. அப்படி சர்க்கஸ் பண்ணுபவன் குறைந்தது ஒரு அடியாவது படட்டுமே. இதெல்லாம் பிருஷ்டக் கொழுப்புதானே!

நானே இரண்டு மூன்று நாட்களாக இது மாதிரிச் சிலரைப் பார்க்கிறேன். ஹெல்மெட்டைப் பத்திரமாகக் கையிலோ, ஹாண்டில்பாரிலோ, பெட்ரோல் டேங்க்கின் மேலோ வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுகிறார்கள். பாதுகாப்பாய் இருக்கிறார்களாமாம்! இவர்களெல்லாம் ஆணுறை வாங்கி அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பாய் உடலுறவு கொள்பவர்கள் போலும்.

அனைத்திற்கும் மேலாக ஹெல்மெட் அணிய மறுப்பதற்கு மூலக் காரணமே தலை போனாலும் பரவாயில்லை தலைமுடியைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது. விஞ்ஞான முறையில் சாத்தியக் கூறுகளின் வழியாக ஆராய்ந்தாலும் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கித் தலை சிதறி உயிர் போவதை விட, தினசரி ஹெல்மெட் அணிந்து வெயிலில் வண்டி ஓட்டி, முடியெல்லாம் கொட்டிப் போய்ச் சீக்கிரமே சொட்டையாகி, காதலும் கனியாமல், கல்யாணத்திற்கும் ஒருவரும் பெண் கொடுக்காமல் போய், தனிமரமாக நிற்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக இருக்கிறபடியால் கல்யாணம் ஆகாத இளைய மற்றும் முதிய வாலிபர்கள் ஹெல்மெட்டைத் தவிர்ப்பதில் கூட ஒரு சின்ன நியாயம் இருக்கிறது. ஆனால் இந்தக் கல்யாணம் ஆன மாமாக்களுக்கெல்லாம் ஹெல்மெட் அணிய என்ன கேடு வருகிறது? சொல்லப் போனால் இதே காரணத்திற்காகவே அவாளின் மாமிகளெல்லாம் அவர்களை ஹெல்மெட் அணியச் சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டும்.

இதை இன்னும் ஆழமாக ஒரு தத்துவார்த்த ரீதியில் ஆராய்ந்தால் தலைமுடி உதிர்வதற்கும், 'எனக்கென்ன' என்று இருக்கும் மனப்பான்மைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்துக் கொண்டு, என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருக்கிறவர்களின் நடத்தைக்கு வழக்க மொழியில் 'மயிராப் போச்சு' மனப்பான்மை என்ற பெயர் இருக்கிறதல்லவா? இந்த வழக்கம் எப்படி வந்திருக்கும். கொஞ்சமாகச் சீப்பில் முடி உதிரத் தொடங்கியதும் மயிர் போகிறதே என்று தொடங்கும் வருத்தம், அது தொடர்ந்து பரவி வழுக்கை வளர வளர 'மயிர் போகுது', 'மயிர் போச்சு', 'மயிரே போச்சு' என்று மருவி மருவிக் கடைசியில் 'மயிராப் போச்சு' என்று ஆகி வந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இந்த முற்றிய நிலையை அடையும் போது என்னதான் ஆனாலும் 'எனக்கென்ன' என்று இருக்கிற மனநிலை தினமும் தலை வாரித் தலை வாரியே பக்குவப்பட்டு வந்திருக்க வேண்டும். இந்தப் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப நிலையைத் தாண்டி விட்டாலே வழுக்கை விழுமோ என்ற பயத்தை விட இந்த 'மயிராப் போச்சு' மனப்பான்மையே பிரதானமாக ஹெல்மெட் அணிய விடாமல் தடுத்து விடுகிறது. இதுதான் மாமாக்கள் ஹெல்மெட்டைத் தவிர்ப்பதன் காரணமாக இருக்க வேண்டும்.

இன்னும் தீவிரமாக ஆராய்ந்தீர்களானால் ஒரு அரசியல் சூட்சுமம் புரியும். ஒவ்வொரு முறை இந்த ஹெல்மெட் சட்டம் தமிழகத்தில் கட்டாயமாக்கப் படும் போதும் ஆளுங்கட்சி யாராக இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எதிர்க்கட்சியின் முன்னாள் முதல்வர் மேற்சொன்ன பரிணாம வளர்ச்சியின் முற்றிய நிலையை அடைந்தவர். அதனாலேயே அவர் காலத்தில் அவருக்கு இதெல்லாம் ஒரு அவசியச் சட்டமாகத் தோன்றி இருக்காமல் போயிருக்கலாம்.

இப்படியாக உயிருக்கும் மயிருக்குமான இந்தத் தர்மயுத்தம் பல நிலைகளில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. காலத்தின் போக்குக்கேற்ப இரு தரப்பின் கையும் ஓங்கியும் தாழ்ந்தும் வருகிறது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கும் இந்த யுத்தத்தில் யார் பக்கம் வெற்றி என்று இரண்டு மாதம் பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரையிலும் உங்கள் சவுகரியம் போல விபத்துக்குப் பயந்தோ வசூலுக்குப் பயந்தோ ஹெல்மெட் போட்டுப் பழகிக் கொள்ளுங்கள். கீதையில் சொல்லி இருப்பது போல 'முடிவில் தர்மம் வெல்லும்' என்று நம்புவோமாக!

-மதி

படங்கள் அளித்தமைக்கு நன்றி: Aurlmas

கருத்துகள்

 1. நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறது...! மெயின் ரோடு வந்தவுடன் தலைக்கு போகிறது...!

  பதிலளிநீக்கு
 2. ஹெல்மெட் போடுவதையும் போடாததையும், கட்டாயப் படுத்தாமல், அவரவர் விருப்பதிற்கு விடுவதுதான் நல்லது. நானும் ஹெல்மெட் போட்டுத்தான் ஓட்டினேன். இப்போது அவ்வாறு ஹெல்மெட் போடுவதால் எனக்கு (உடல்ரீதியாக) ஏகப்பட்ட தொல்லைகள். ஹெல்மெட்தான் போட வேண்டும் என்றால் நான் இருசக்கர வண்டியை எடுக்கக் கூடாது; தினமும் (எங்கள் ஏரியாவிலிருந்து) ஆட்டோவில்தான் சென்று வர வேண்டும். மேலும் இந்த சட்டத்தை வைத்து காசு பறிக்கத்தான் செய்கிறார்கள்.

  நீங்கள் சொல்லும் அரசியல் சூட்சுமம் புரிகிறது; ஆனால் அம்மா, அய்யா இருவர் காலத்திலுமே மாற்றி மாற்றி இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் கட்டாயமாக்கப் படுகிறது. அவர்களது அரசியல் சூட்சுமம், எவ்வளவு படுத்தினாலும் மக்கள் தாங்குவார்கள்; ஓட்டு போடாமல் இருக்க மாட்டார்கள் என்பதுதான்.

  பதிலளிநீக்கு
 3. உண்மை @தனபாலன் சார்

  @இளங்கோ சார் சரியான ஹெல்மெட் அணிவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் வருவதில்லை. நீங்கள் ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுத்ததில் இன்னும் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..