கனகதுர்கா - புன்னகை சுரக்கும் கேணி


புத்தகம்: கனகதுர்கா (சிறுகதைகள்)
ஆசிரியர்: பாஸ்கர் சக்தி
பக்கங்கள்: 400 சொச்சம்
வாசிக்க எடுத்துக் கொண்ட நாட்கள்: ஒரு வாரம்
ஒரு வரியில்: வெகு இயல்பான நடையிலும் மொழியிலும் ரசித்து எழுதப்பட்டுள்ள கதைகள். ரசனையின் மிகுதியில் வரும் புன்னகை உங்கள் இதழ்களில் விரிந்திருப்பதை உணராமலே நீங்கள் கதைகளில் மூழ்கியிருப்பீர்கள்.

'அழகர்சாமியின் குதிரை' என்று தமிழில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு அற்புதமான ஒரு திரைப்படம் வந்திருந்தது. பார்த்திருந்தீர்களானால் மிகவும் ரசித்திருப்பீர்கள். அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் அந்தப் படம் ஒரு சிறுகதையின் மூலத்தைக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தக் கதையை எழுதியவர் பாஸ்கர் சக்தி என்றும் அறிந்தேன். எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! ஒரு தமிழ்ச் சிறுகதையைத் திரைப்படமாக எடுக்கும் அளவுக்குச் சினிமாவில் இங்கே நல்லவர்கள் இருக்கிறார்களா என்று ஒரு ஆச்சரியம். பாஸ்கர் சக்தி என்பது மற்றொரு ஆச்சரியம். அதற்கு முன் அவரின் பெயரை அடிக்கடி வீட்டுத் தொலைக்காட்சியில் சீரியல் 'கதை-வசனம்' என்று பெயர் போடுகையில் பார்த்திருக்கிறேன். சீரியல்களுக்கும் எனக்கும் ஒரு ஜென்ம விரோதம் இருப்பதால் அந்த உலகத்தோடு தொடர்புடைய எவரின் மேலும் எனக்குப் பொதுவாக ஒரு நல்லபிப்பிராயமே இருந்ததில்லை. அப்படியாப்பட்ட சீரியல் வசனகர்த்தா ஒருத்தரா இவ்வளவு யதார்த்தமான அழகியலோடு இந்தக் கதையை எழுதினார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. சரி, அவருக்கும் பிழைப்பு ஓட வேண்டுமே!

அதற்குப் பிறகுச் சில மாதங்கள் கழித்துச் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு முறை அவரின் 'கனகதுர்கா' என்ற சிறுகதைத் தொகுப்பில் 'அழகர்சாமியின் குதிரை' சிறுகதையைக் கண்டுபிடித்தேன். பாஸ்கர் சக்தியின் அதுவரையிலான மொத்தக் கதைகளின் தொகுப்பு அது. அன்று நேரம் குறைவாக இருந்ததால் அந்த ஒரு கதையை மட்டும் வாசித்து விட்டுப் புத்தகத்தை வைத்து விட்டு வந்து விட்டேன். நல்ல கதை. சினிமாவில் அதன் மூல அழகு கெடாமல் எடுத்திருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தைப் பிறகு வாசிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டிருந்தேன். அதன்படியே ஒரு புத்தகக் கண்காட்சியில் கண்ணில் படவும், என் அலமாரிக்கு வந்தது கனகதுர்காவின் ஒரு பிரதி. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அலமாரியில் எனக்காகக் காத்திருந்து இப்போதுதான் எனக்கு வாசிக்க வாய்த்திருக்கிறது இந்தப் புத்தகம். நல்ல காரியங்கள் நடக்க வேண்டுமானால் காலம் கூடி வர வேண்டுமே.சமீபத்தில் ஒரு வாரம் வெளியூருக்கு அலுவல் தொட்டுத் தனியாகப் பயணிக்க வேண்டி வந்தது. முழுப் பயணத்துக்கும் தாங்கும் என்ற கணிப்பில் கொஞ்சம் குண்டான இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேன். கடந்த ஒரு வாரத்தில் எனக்குள் பல புன்னகைகளையும் சுரக்கச் செய்து புத்துணர்ச்சி அளித்தது இந்தத் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் அவரின் கிராமத்து மனிதர்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. மனிதர் ரசித்து வேடிக்கை பார்த்திருக்கிறார். இயல்பான ஒரு கிராமப் பயணம் போல ஆரவாரமில்லாமல், அதிகப் படியான இலக்கியக் கோட்பாட்டுச் சிக்கல்கள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள கதைகள். சுவாரசியமான ஊர்ப் பெரிய ஆம்பிளை ஒருத்தரோடு சாவடியில் அமர்ந்து கொண்டே அவர் சொல்லக் கதைகள் கேட்ட அனுபவம் வாய்க்கிறது.மொத்தம் 31 கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. புத்தகத்தின் முன்னுரையில் கதைகள் நன்றாக இருப்பினும் வாசிக்க வாசிக்க ஒரு monotony பீடித்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாக வாசித்தேன். இருந்தாலும் நான் அப்படி ஒரு சலிப்பையும் காணவில்லை. அதற்கு ஒரு காரணம் நான் தொடர்ந்தாற்போல இரண்டு கதைகளுக்கு மேல் ஒரு நேரத்தில் வாசிக்கவில்லை என்பதுமாக இருக்கலாம். கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் ரெண்டு இனிப்பு மிட்டாய்களைத் தின்று கொள்வது போலத்தான் இந்தப் புத்தகத்தை அணுகினேன். இன்னமும் இனிப்பு மனதெல்லாம் தித்திக்கிறது.

பொதுவாக எனக்கு இலக்கிய உலகில் ஒரு கேள்வி உண்டு. சோகங்களும் கோபங்களும் அடிப்படையாக அமையும் இலக்கியங்களே பெரிய மதிப்புப் பெறுகின்ற இலக்கிய உலகில் ஏன் யதார்த்த சந்தோஷங்களும் சிறு முரண்களும் அவ்வளவு மதிக்கப்படுவதில்லை என்பதுதான் அது. யதார்த்தம் என்ற வார்த்தையே இலக்கியங்கள் மூலம் எவ்வளவு திரிந்து விட்டது பாருங்கள். யதார்த்த இலக்கியம் என்றால் மனதில் தோன்றும் முதல் எண்ணம் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதைதானே. அப்படி இல்லாமல் யதார்த்தத்தை யதார்த்தமாகப் பார்க்கிற பாஸ்கர் சக்தி என் மிகுந்த மரியாதைக்குரியவராகிறார். யதார்த்தம் என்பது அன்றாடச் சிக்கல்களும், நகைச்சுவையும், முரண்பாடுகளும், ரசனைகளும் சமமாகக் கலந்தது. அதை அதன் இயல்போடே நமக்குத் தருகிறார். யதார்த்தத்தின் ருசி கசப்பும் புளிப்பும்தான் என்று நம் மனம் பழக்கப்பட்டுவிட்டது. அதில்தான் தீவிரமானதொரு ஆழம் இருக்கிறாற்போன்ற ஒரு பிரமை கற்பிக்கப் படுகிறது. நாக்கில் கூட இனிப்பு நுனிவரை என்பதுதானே படைப்பு நியாயமாக இருக்கிறது.

ஆனால் பாஸ்கர் சக்தியின் கதைகள் விருந்துக்குச் செய்யும் பாயசத்தின் இனிப்பு கொண்டவை அல்ல. நாலணாவுக்கு ஐந்தாக வாங்கித் தின்ற தேன் மிட்டாய்களின் இனிப்பு கொண்டவை. நுனி நாவில் இனிப்பதோடு நில்லாமல் உள்ளிறங்கி நெஞ்சு பூராவும் இனிக்கச் செய்திட வைக்கக்கூடியவை.

ஒவ்வொரு கதையும் ஒரு சிறு முரணிலோ அல்லது ஒரு ஆச்சரியத்திலோ முளைக்கிறது. அது வளர வளர, அது முளைத்த சூழலுக்கு நம்மை முழுவதும் கொண்டு சென்று விடுகிறது. பெரிய பெரிய பஞ்சாயத்துகளைக் கூடப் புன்னகையோடு பார்க்க முடிகிறது. இந்த மனநிலை பக்குவப்பட்டு விட்டால் நிஜ வாழ்க்கையிலும் குழாயில் தண்ணீர் வராத போதும், மதிய வெயில் மண்டையைப் பிளக்கும்போதும், கொடுத்த கடன் வராமல் போகும்போதும், முன்னாள் காதலியின் கல்யாணப் புகைப்படம் ஃபேஸ்புக்கில் கண்ணில் படும்போதும் கோபப்படாமல், வருத்தப்படாமல், எவரையும் எதையும் நொந்து கொள்ளாமல் ஒரு மெல்லிய புன்னகையோடு அந்த அனுபவத்தைத் தாண்டிச் செல்வது சாத்தியமாகிவிடும்.

அழகர்சாமியின் குதிரை, சாதனம், தீர்த்த யாத்திரை, விரியன் பாம்புக் குட்டிகள், கண்ணாடியைக் கண்டடைதல், நாகம் - ஆகியன இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள். இந்தக் கதைகளில் சிறப்பான இன்னொரு அம்சம் கதைக் கரு. ஒவ்வொரு கதையும் ஒரு வித்தியாசமானதொரு கதைக்கருவைக் கொண்டுள்ளது. அந்த வித்தியாசம் தரும் ஒரு புதுமை கூடுதலான ஒரு ஈர்ப்பைத் தருகிறது. நகரங்களுக்குத் தொலைவாக உங்கள் பால்யம் அமைந்திருந்தால் இந்தக் கதைகளோடு நீங்களும் ரொம்ப நெருங்கிப் பழகி விடுவீர்கள். உங்கள் பால்யத்தின் நினைவுப் பெட்டகம் திறக்கப்பட்டு அதில் பொதிந்திருக்கும் தேன் மிட்டாய் நினைவுகள் மீண்டும் ருசிக்கும்.

கதைகளில் உலாவும் மனிதர்களெல்லாம் அங்காளி பங்காளிகள் போல ஆகிவிட்டார்கள். அப்படியே சாவகாசமாகத் தேனிப் பக்கம் பயணம் கிளம்பி எந்த ஒரு சுத்துப்பட்டு கிராமத்துக்குள் நுழைந்தாலும் இனி அங்குள்ள மனிதர்கள் மிகவும் பரிச்சயமானவர்கள் போலத்தான் தெரிவார்கள்.

குறிப்பாக 'விரியன் பாம்புக் குட்டிகள்' என்ற கதையும் 'கண்ணாடியைக் கண்டடைதல்' என்ற கதையும் அவற்றின் தலைப்பால் பலமடங்கு அழகாகின்றன. ஏனென்றால் முதல் கதையில் எந்த ஒரு விரியன் பாம்புக் குட்டியும் வருவதில்லை. இரண்டாவது கதைக்கும் கண்ணாடிக்கும் சம்பந்தமே இல்லை. கதைகளை வாசித்ததும் பெயர்க்காரணம் விளங்கும் ஒரு வினாடியில் 'அட' என்பீர்கள்.

மன இறுக்கங்களாலும், வலிய இழுத்துப் போட்டுக் கொண்ட வலிகளாலும் செலுத்தப்படும் தினசரி வாழ்க்கையில் இருந்து நம்மை மீட்டெடுக்க இவை போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. நம்மை மறந்து புன்னகைப்பதற்கு ஒரு காரணமும், சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்க இது போன்ற கதைகள் நமக்குத் தேவைப்படுகின்றன. புன்னகைக்க ஆரம்பித்து விட்டாலே வாழ்க்கை அழகானதாக ஆகிவிடுகிறது. பிழைப்புப் பாட்டின் சூட்டில் வறண்டு கிடக்கும் உள்ளங்களுக்குள் ஆழத்திலிருந்து மீண்டும் ரசனையும் புன்னகையும் சுரக்க இது போன்ற புத்தகங்கள் தேவைப்படுகின்றன.

அவரின் கதைகளில் வரும் அழகான சிறு முரண்கள் போலவே இத்தனை முறை 'புன்னகை' என்ற வார்த்தையை என்னைப் பிரயோகிக்க வைத்த பாஸ்கர் சக்தி, இன்னமும் சீரியல்களுக்குக் கதை எழுதிக் கொண்டு எம் தாய்க்குலங்களுக்குக் கசப்புக் கசாயம் படைத்துக் கொண்டே இருக்கிறார். அழகர்சாமியின் குதிரை எல்லாம் சன் டீவிக்குச் சரி வருமா? சிரித்துக் கொள்கிறேன்.-மதி

படம் : நன்றி : McKay Savage | Google Images


கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..