Disabled-ஆ Differently abled-ஆ Specially abled-ஆ ?



முழுக்க முழுக்கச் சந்தர்ப்பவசமாகக் கிடைத்த இரு வாய்ப்புகளால் கடந்த ஒரு மாதத்தில் நான் சில வெகு சுவாரசியமான மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தேன். இந்த இரு சந்திப்புகளும் என்னில் ஏற்படுத்தின தாக்கங்களை ஒரு பதிவாக எழுத வேண்டும் என்ற உந்துதல்தான் இது.

நிகழ்வு 1 - கை இல்லை, கால் இல்லை; ஆனால் ஆடுகளத்தில் பேதமில்லை

தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியினருடன் சென்னையில் உள்ள பட்டயக் கணக்காளர்கள் (chartered accountants - இந்த வார்த்தையை நானும் இன்றுதான் கண்டுபிடிக்கிறேன்) சங்கம் இணைந்து அஸ்தா என்ற அமைப்பின் மூலமாக ஒரு மும்முனைக் கிரிக்கெட் போட்டியை நிகழ்த்தியது. ஆவடியில் உள்ள முருகப்பா கல்லூரி மைதானத்தில் ஒரே நாளில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு 12-ஓவர் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியிலும் மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேரும் உடல் குறைபாடுகள் இல்லாதோர் ஆறு பேரும் கலந்து விளையாடியதால் இதற்கு ஜுகல்பந்தி கிரிக்கெட் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். எனக்குத் தெரிந்த ஒரு CA நண்பர் மூலமாக எனக்கும் ஒரு அழைப்பு வரவே, நானும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.

மே மாதத்தின் ஈவு இரக்கமற்ற வெயிலில் ஒரு நாள் முழுக்க மைதானத்தில் ஓடியாடி விளையாண்டு களைத்த போதும், என்னோடு விளையாடிய மாற்றுத் திறனாளிகளின் உடல் வலிமையையும் மன வலிமையையும் விளையாட்டுணர்வையும் கண்டு என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. நாங்கள் எவரும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இல்லை. அவர்கள் இந்த விளையாட்டையே தொழிலாகக் கொண்டவர்கள். இருந்தாலும் அவர்களின் உடல் குறைபாடுகளின் காரணமாக அவர்களால் எங்களைப் போலச் சில விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் அவர்களோடு அனுசரித்து விளையாட வேண்டும் என்றும் விளையாட்டு தொடங்கும் முன் எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் ஆட்டத்திற்கு முன்னால் மைதானத்தைச் சுற்றி ஒரு சுற்று அவர்களோடு ஓடி, அவர்களின் பயிற்சிகளைக் கண்ட உடனேயே அந்த எண்ணம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. பல வகைகளில் normal மக்களை விட அவர்கள் திறமைக்காரர்களாக இருந்தார்கள். Normal என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தியது பற்றிப் பிறகு பேசுகிறேன்.




அன்று முழுக்க விளையாடியும் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஒரு sixer அடிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே பந்தைத் தூக்கி அடித்த வீரருக்கு இடது கை கிடையாது! அன்றைக்கு மைதானத்தில் அசத்திய பந்து வீச்சாளர்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள்தான். ஒருவர் இடது கை மித வேகப் பந்து வீச்சாளர். அவருக்கு வலது கை பாதிதான் இருந்தது. மற்றொருவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர். அவருக்கு வலது கையைத் தூக்க முடியாத மாதிரி ஒரு குறை இருந்தது. அன்றைக்கு அந்தக் கொளுத்தும் வெயிலில் அங்குமிங்கும் தாவிப் பந்தைத் தடுத்து எல்லோரையும் உற்சாகப் படுத்திக் கொண்டு இருந்தவருக்கு ஒரு கால் குட்டை. தாவத் தயாராக இருப்பது போலவே தான் அவரின் நடையே இருக்கிறது!

விளையாட்டெல்லாம் முடிந்து பரிசளிப்பின் போது ஒரு நண்பர் பேசியபோது 'இன்றைக்கு நடந்ததை எல்லாம் வைத்துப் பார்த்தால் நிஜமாகவே disabled நீங்களா நாங்களா என்று தெரியவில்லை. அவ்வளவுக்கு உங்களுக்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்கிறது' என்று பாராட்டினார். உண்மைதான்!

அவர்களின் திறமைகளை விட என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அவர்களின் sportsmanship - விளையாட்டுணர்வு என்று தமிழில் சொல்லலாமா இதை? ஒரு நல்ல விளையாட்டு வீரன் எந்த நெருக்கடியிலும் தோல்வியை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விடுவதில்லை. கடைசி வரை முயன்று பார்ப்பான். ஒரு நல்ல விளையாட்டு வீரன் தன் சக வீரர்களிடம் வெகு இணக்கமான நட்பை வளர்த்துக் கொள்வதோடு தன் எதிரணியினரையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறான். ஒரு நல்ல விளையாட்டு வீரன் தன்னிடம் உள்ள நிறை குறைகளை அறிந்து கொண்டு அதற்கேற்பத் தன் அணுகுமுறையை அமைத்துக் கொள்கிறான். இதை எல்லாமே நான் அன்று மைதானத்தில் கண்டேன்.

Normal என்று சொன்னேன் அல்லவா? சாதாரணமாக உரையாடும் போது சபை நாகரீகம் எல்லாம் சரி வராது. அவர்களே அவர்களுக்குள்ளாகவே தங்களை disabled என்றும் எங்களை normal என்றும்தான் அழைத்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் 'டேய் ஒத்தைக் கையா.. கொன்னுட்டேடா.. செம ஷாட் போ' என்பது மாதிரியான சகஜமான கேலி கிண்டல்கள் அவர்களுக்குள் இருந்தது. ஒரு உடல் குறைபாடு அவர்களுக்கு இருப்பது இயல்பான ஓர் உண்மை. அதை மறைத்துப் பேசுவதும் பூசிப் பேசுவதும் அதை மாற்றி விடப் போவதில்லை. மாறாக disabled என்ற சொல் அவர்களைக் காயப்படுத்தும் என்பதும் நிச்சயமில்லை. அவர்களைக் காயப்படுத்துவது பிறர் அவர்களிடம் காட்டும் அணுகுமுறைதான். மிக நாகரீகமான வார்த்தைகளால் அழைப்போர் கூட அவர்களை ஒதுக்கிப் பார்க்க முடியும். டேய் ஒத்தைக் கையா என்று அவர்களின் நண்பர்கள் அவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழக முடியும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு ஒரு தோழி இருக்கிறாள். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள். சாதாரணமாக நான் பேசும்போது disabled, visually impaired போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் என்னிடம் சண்டைக்கு வருபவள். அவளைப் பொறுத்தவரை அவர்களைக் குறிக்கும் வார்த்தைகள் மிக முக்கியம். சபை நாகரீகம் கருதி இந்த வார்த்தைகளைச் சமுதாயம் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஒரு சமயம் disabled என்பார்கள். பிறகு differently abled என்பார்கள். திடீரென்று specially abled என்பார்கள். இப்போது என்ன வார்த்தை புழக்கத்தில் இருக்கிறதோ அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் அவளைப் பொறுத்த வரை. எனக்கு இதில் உடன்பாடில்லை. நாம் களைய வேண்டியதோ திருத்த வேண்டியதோ வார்த்தைகளை அல்ல; அவ்வார்த்தைகளோடு ஒட்டிக் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை - stigma -  மட்டுமே என்பதே என் எண்ணம். உண்டான உண்மையை ஏற்றுக் கொள்ளும் மன வலிமை அவர்களுக்கு நிறையவே இருக்கிறது.

நிகழ்வு 2 - 2014 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்ட மசோதா பற்றிய கருத்தரங்கு

LC Project Nagappattinam என்ற மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அமைப்பு சென்னை எழும்பூரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கு இது. இன்று காலையில்தான் நடந்தது. United Nations Convention for the Rights of Persons with Disabilities (UNCRPD)-இன் பரிந்துரையின்படி இந்திய அரசு சமீபத்தில் வரைந்திருக்கும் 2014 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்ட மசோதாவை ஆராய்ந்து அதில் உள்ள அம்சங்களைப் புரிந்து கொண்டு ஏற்கெனவே நடப்பில் உள்ள 1995 சட்டத்தை விட இந்தப் புதிய சட்டம் எந்த அளவில் சிறந்தது அல்லது சிக்கலானது என்றும், இந்தப் புதிய சட்ட வரைவில் என்னென்ன ஓட்டைகள் இருக்கின்றன என்றும் அவற்றை அடைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் பல்வேறு மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளைச் சார்ந்தோர் ஒன்று கூடி விவாதித்த ஒரு நிகழ்வு இது. முன்பு சொன்ன அதே தோழிக்குக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஒரு பார்வையற்ற நல்ல மனிதர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அவருக்கு உதவியாக உடன் வந்து, நிகழ்வைப் பற்றிக் குறிப்புகள் எடுத்து அவற்றைத் தொகுத்து அவருக்கு எழுதிக் கொடுப்பதற்காக அவர் அந்தத் தோழியிடம் உதவி கேட்டிருக்கிறார். தோழியால் செல்ல முடியாத சூழலாகையால் அழைப்பு எனக்கு வந்தது. ஏற்றுக் கொண்டு அந்தப் பேராசிரியருக்குத் (Dr. Ram Babu - Tata Institute of Social Sciences, Mumbai) துணையாக இன்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இதுவும் முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவத்தையும் புரிதலையும் எனக்குக் கொடுத்தது.


முதலில் நிகழ்வைத் துவக்கி வைத்துப் பேசின ஒரு பார்வையற்றவர் ஆரம்பத்திலேயே என் மனதைக் கவர்வது போல் ஒன்றைச் சொன்னார். 'மாற்றுத்திறனாளி என்ற வார்த்தை நான் மாதச் சம்பளம் வாங்கப் பயன்படும் வார்த்தை. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. அதனால் நான் இன்றைக்கு இனிமேல் ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தையையே பயன்படுத்தப் போகிறேன். உண்மையில் நாம் ஊனமுற்றவர்கள்தானே. அதில் மறைக்க என்ன இருக்கிறது? ஆனால் நாம் ஊனமுற்றவர்கள் என்று சொல்லக் கூச்சப்பட்டு இப்படிப் புதுப்புது வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதுதான் எனக்கு அவமானமாக இருக்கிறது. I am what I am. And I have no regrets about accepting it' என்றார். அனைவரும் கைதட்டினார்கள். இதைத் தான் நானும் நம்புகிறேன்.

இந்தப் பெயர் பிரச்சனை எப்பேற்பட்ட அரசியலைப் பின்னால் கொண்டுள்ளது என்பதையும் புரிந்துதான் பேசுகிறேன். இதே அடிப்படையில் கருப்பனைக் கருப்பன் என்றும், வண்ணானை வண்ணான் என்றும், சக்கிலியனைச் சக்கிலியன் என்றும் சொல்லலாமா என்ற கேள்விகள் எழும். என் கருத்து என்னவென்றால் வார்த்தைகளின் அளவில் ஒடுக்கப்பட்டோருக்கு ஒரு நாகரீகமான அடையாளத்தைக் கொடுத்து விட்டு, மனதளவில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை மறக்காமல் இருப்பது ஒன்றுக்கும் உதவாது என்பதுதான். இன்றைய நிகழ்வில் பிறகு பேசின தோழர் தீபக் என்பவரும் இந்தப் பெயர் சூட்டும் அரசியலைப் பற்றிப் பேசினார். ஏற்கெனவே சட்ட மசோதா அமுலுக்கு வராமல் நிலுவைக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. தள்ளிப் போட ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் People with disability-யா அல்லது people who are differently abled-ஆ என்று சட்டத்துக்குப் பெயர் வைப்பதில் குழப்பம் இருக்கிறது என்று ஒரு புதுக் காரணத்தை இப்போது சொல்கிறார்கள் என்று சுட்டிக் காட்டினார். சாதீய அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் கொண்டுள்ள நியாயங்கள் ஊனமுற்றோரைக் குறிப்பிடும் இடத்தில் தேவையில்லை என்பது எனக்கு நியாயமாகப் படுகிறது. உள்ளதை உள்ளபடிச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம். அவர்களுக்கு அது நடந்தாலே போதும் என்ற உணர்வுதான் இருக்கிறது.

பல நுணுக்கமான அரசியல், சட்டம் சார்ந்த விவாதங்களை இன்று முதல் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்கே மிகப் புரிய புரிதல்கள் என்பதால் அவற்றைப் பற்றி விரிவாக இங்கு சொல்வதைத் தவிர்க்கிறேன். ஆனால் இன்றைய நிகழ்வில் இயல்பான வாழ்க்கையில் ஊனமுற்றோர் எப்படி ஈடுபடுகிறார்கள், அவர்களின் குறைபாடுகளை எப்படி ஏற்றுக் கொண்டு அதைத் தாண்டிச் செல்லும் மனவலிமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டு பிரமித்துப் போனேன். Cerebral Palsy நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர் இன்றைய நிகழ்வில் புதிய சட்டத்தைப் பற்றி அவரின் கருத்தை வெகு கோர்வையாகப் பேசினார். ஆனால் நோயின் காரணமாக அவரின் பேச்சும் உச்சரிப்பும் வெகு வித்தியாசமாக இருந்தது. அவர் பேசுவதை மூன்று நிமிடம் உற்றுக் கேட்டால்தான் அவர் பேசுவது தமிழ் என்றே புரிந்தது. ஆனால் சீக்கிரேமே பழகிவிட்டது. அவ்வளவுதான். அந்த மூன்று நிமிடங்கள் அவரைப் பார்த்து முகம் சுளிக்காமல் அவரைப் பேச விட வேண்டும். கொஞ்சம் பொறுமையாகத் தான் அவரால் வார்த்தைகளைச் சேர்த்துப் பேச முடியும். நிதானமாகக் கேட்க வேண்டும். அதுவே நாகரீகம்.

இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனின் தாய் இன்றைய நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் சொன்ன அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரின் மகனின் IQ அளவு சராசரியாக இருப்பதால் அவனைச் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல் பொதுவான பள்ளிகளிலேயே சேர்க்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் பல பள்ளிகள் மறுத்திருக்கின்றன. இந்தப் பிரச்சனைக்காகச் சட்டத்தைத் துழாவிக் கண்டுபிடித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு இருப்பதைக் காரணம் காட்டி ஒரு பிரபல பள்ளியில் அவர் கேட்டிருக்கிறார். சரியென்று அந்தப் பள்ளி முதல்வர் மாணவனை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார். நோயின் காரணமாக அந்தச் சிறுவன் கொஞ்சம் நிலையில்லாமல்தான் நடப்பான். அன்றைக்கு அவரின் அறையில் நுழையும்போது தரை விரிப்பு தடுக்கி விழுந்து விட்டிருக்கிறான். அந்தப் பள்ளி முதல்வர் இந்த அம்மாவிடம் 'நீங்கள் சொல்வது சட்டப்படி நியாயம்தான். நான் இந்த நோயைக் காரணம் காட்டி இவனுக்கு இங்கே இடம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இங்கே இவனின் பாதுகாப்புக்கு எங்களால் உத்தரவாதம் தர இயலாது. நீங்களே பார்த்தீர்கள். அவனால் தடுக்காமல் நடக்கக் கூட முடியவில்லை. சின்னப் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும்போது என்ன வேண்டுமானாலும் நிகழலாம்' என்று பேசியிருக்கிறார். அதற்கு அந்த அம்மா அப்படியென்றால் தானும் தினமும் தன் மகனோடு பள்ளிக்கு வருவதாகவும் பாதுகாப்புக்குக் குறை வராமல் தான் பார்த்துக் கொள்வதாகவும் கேட்க, அதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்று பள்ளி மறுத்து விட்டிருக்கிறது. வேறு வழியின்றி அந்தச் சிறுவன் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் இப்போது சேர்ந்திருக்கிறான். இதுதான் நடைமுறைச் சிக்கல்.

இது போலப் பல நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, ஊனமுற்றோரின் வாழ்க்கை பற்றின புரிதல் பரவி, அவர்களின் உரிமைகளை அவர்களுக்குச் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான அக்கறையோடு ஒரு சட்டம் வருவது அவர்களைப் பொறுத்தவரை இன்னும் வெகு தொலைவில் உள்ளது. அதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நகர்த்த கண் தெரியாதவர்களும், உடல் ஊனமானவர்களும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களும் சேர்ந்து ஊர் கூடித் தேர் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சராசரி மனிதனாக நம்மால் என்ன செய்ய முடியும்?

நம்மில் பலரால் சட்டங்கள் வடிக்க முடியாது. அரசியல் தெரியாது. ஆனால் நம்மைச் சுற்றி நம் சமூக வட்டத்தில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களையும் அவர்களின் ஊனத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். அவர்களுடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்வோம். அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

- மதி

படங்கள் அளித்தமைக்கு நன்றி - Bindaas Madhavi | Abhijit Bhaduri 

கருத்துகள்

  1. மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினையை கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் பொதுவான மனித குணம் இந்தப் பிரச்சினையை நேரடியாக அணுகாமல் சுற்றி வளைத்தே அணுகப் பழகி விட்டது. "யாருக்கோ" - நமக்கில்லையல்லவா? விதிப்படி நடக்கட்டும் என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய. இந்தப் பிரச்சினையைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் மக்களே குறைவுதான்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கந்தசாமி ஐயா... இந்த 'யாருக்கோ' மனப்பான்மை மாற வேண்டுமானால் இயல்பான நட்புறவுகள் வளர வேண்டும்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..