ஓர் எழுத்தாளனைக் கொன்ற புத்தகம்புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)
எழுத்தாளர் : பெருமாள் முருகன் (இவர் தற்போது உயிரோடு இல்லை. இதை அவரையே சொல்ல வைத்து விட்ட அளப்பரிய சாதனையை நிகழ்த்திய சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை காறித் தரையில் உமிழ்ந்து கொள்க)
பக்கங்கள் : 100 சொச்சம்
ஒரு வரியில் : குழந்தை இல்லாத ஒரு கணவன் மனைவியின் மனச்சிக்கல்களை மிக நுட்பமாகப் பகிர்ந்திருந்தும் கூட, வேகம் குறையாமல் ஒரு விறுவிறுப்பான முடிவை நோக்கிச் செல்லும் கதை.

சமீபத்தில் பல சர்ச்சைகளுக்குள்ளாகிச் செய்திகளில் பிரபலமாகி எல்லாரையும் ஏதாவது கருத்துச் சொல்ல வைத்த புத்தகம். கருத்துரைத்தவர்களில் எத்தனை பேர் புத்தகத்தை வாசித்திருப்பார்களோ தெரியாது. அரசியலுக்கு அதெல்லாம் தேவை இல்லையே. அந்தச் சலம்பலில்தான் இந்தப் புத்தகத்தினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். ஒரு எழுத்தாளனைத் தன் மரண அறிக்கையைத் தானே எழுதுமளவு செய்துவிட்ட பெருமைக்கு ஆளாகுமளவுக்கு அப்படி என்னதான் இருக்கிறதென்று இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்கும் போது இந்தச் சர்ச்சைகளை மனதிற்குக் கொண்டு வராமல் புத்தகத்தைப் பற்றி எவ்வித மதிப்பீடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் வழக்கமாக ஒரு புத்தகத்தை அணுகுவது போலவே வாசித்து ரசித்தேன். வழக்கம் போலவே கதையைப் பற்றி நான் பெரிதாய்ச் சொல்லப் போவதில்லை. என் வாசிப்பு அனுபவங்களே இந்தப் பதிவு. இதன் முதல் பாதியில் புத்தகத்தைப் பற்றியும் பின் பாதியில் இந்தச் சர்ச்சைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.ஒரு வீட்டில் குழந்தையின் பிறப்பு ஒன்று என்னென்ன சந்தோஷங்களைத் தரவல்லது என்பதை நேரில் அனுபவித்திருக்கிறேன் நான். என் அக்காள் மகள் எங்கள் குடும்பத்தைக் கொஞ்சம் காக்க வைத்துத் தான் பிறந்தாள். ஆனாலும் அவளின் வரவு ஒரு தேவதையின் வரவாக இன்னமும் என் குடும்பத்தை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது. குழந்தை பிறப்பது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே என்று உள்ளுக்குள் புழுங்கும் சில குடும்பங்களையும், குழந்தைக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் எத்தனிப்புகளையும் கவனித்திருக்கிறேன். நகரங்களில் மென்பொருள் நிறுவனங்களின் இறுக்கத்தில் பணி புரியும் இன்றைய பெண்களுக்கு அவர்களின் பணிச்சூழலே தாய்மை அடைவதற்குத் தடையாக இருப்பதாகவும் பரவலாக ஒரு கருத்து உண்டு. இந்தக் காரணத்தால் பணியை விடும் பெண்களையும் கண்டிருக்கிறேன். குழந்தை இல்லாத குடும்பங்கள் பிறரின் ஜாடைப் பேச்சுகளால் வாடுவதை நேரில் இதுவரை கண்டதில்லை. எனினும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஓரளவு உண்டு. இந்தப் புத்தகத்தைப் படித்தபின் அந்தப் பக்குவம் இன்னும் கூடியிருக்கிறது. இப்படியாக, தான் வருவதற்கு முன் சொல்லொணாத சங்கடங்களையும் வந்தபின் சொல்லொணாத ஆனந்தங்களையும் ஒரு சேரக் கொடுக்க வல்ல சக்தி ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கிறது.

படம் தந்து உதவியமைக்கு நன்றி : Trey Ratcliff

அப்படி குழந்தை பிறக்காமல் ஊரின் கேலிகளைச் சந்தித்துப் புழுங்கும் ஒரு அன்னியோன்யமான காதல் தம்பதியின் கதைதான் இந்தப் புதினம். கதைக்களம் விடுதலைக்கு முந்தைய கொங்கு நாடு. கதைக் களத்தை மாத்திரம் மாற்றியமைத்துக் கொண்டு இதே கதையை வைத்தே கிட்டத்தட்ட இன்னும் பத்து புதினங்களை எழுதலாம். நல்ல எழுத்தாளர்கள் எழுதினால் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தான் இருக்கும். பொதுவாக மிக நுட்பமான மன ஓட்டங்களைப் பேசும் கதைகளில் வேகம் குறைவாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் இந்தக் கதையின் வேகம். இதுவா அதுவா என்ற முடிவைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் பக்கங்களை வேகமாகத் திருப்ப வைத்திருக்கும் அதே சமயத்தில், கடந்து போகும் பக்கங்களையும் நின்று நிதானித்து ரசிக்க வைக்குமாறு எழுதுவது சிறப்பான திறமை. ஒன்று பயணம் சுகமானதாக இருக்கும். இல்லாவிடில் போய்ச் சேருமிடம் சிறப்பானதாக இருக்கும். இரண்டும் அமைவது அரிதுதான். அடுத்தவன் வீட்டுப் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் குறுகுறுப்பு கலந்த விறுவிறுப்புதான் என்றாலும் இழுத்துப் பிடித்து நம்மை நகர்த்தி விடுகிறது புத்தகம்.

குழந்தைக்காக இந்தக் கதையின் நாயகி ஊரில் உள்ள எல்லாச் சாமிகளுக்கும் நேர்ந்து கொள்கிறாள்; எதைக் கொடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கி விடுகிறாள்; உயிரைப் பணயம் வைத்து நேர்த்திக் கடன் செய்கிறாள்; எல்லாவற்றிற்கும் மேலாக சாமி என்று நம்பி மனதைத் தேற்றிக் கொண்டு இன்னொரு ஆணுடன் கூடிப் பார்க்கவும் இசைகிறாள். அவளை அவளின் குடும்பமே - கணவனைத் தவிர - அனுப்பி வைக்கவும் செய்கிறது. அந்த மாதிரியான ஒரு வழக்கம் அந்தக் காலத்தில் அந்தக் கொங்கு நாட்டுத் திருவிழாவில் பூடகமாக நடந்திருக்கிறது என்று சொல்கிறது எழுத்தாளரின் ஆய்வு. இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். கதை சொல்லும் உணர்வு அதுவல்ல. காதலும் விரக்தியும் தவிப்புமே கதையில் முக்கியமான உணர்ச்சிகள். கற்பு எல்லாம் கிளைக்கதைதான். ஒருபோதும் அந்த நாயகி தன் ஒழுக்க நிலையில் இருந்து தவறுவதாகக் கதையில் உரைப்பதே இல்லை. நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒருவனுக்கு ஒரே ஒரு நிமிடம் சுவாசிக்க வாய்ப்பு கிடைத்தால் நச்சுக் காற்றாய் இருந்தாலும் ஒத்துக் கொள்வானே அதுபோலத்தான் அவளின் செயலும்.

ஆனால் அவளின் கணவன் இதற்குக் காட்டும் தயக்கங்கள் அதே அளவில் இன்னொரு மனத்தின் போராட்டங்களைக் காட்டிவிடுகிறது. ஒரு வேளை இன்னொருவனின் விந்து விளைந்து விட்டால் தான் வறடன் என்று முத்திரை குத்தப்பட்டு விடுமே என்ற தயக்கம். ஊருக்குத் தெரியாவிட்டாலும் தனக்குத் தெரியுமே என்ற ஆற்றாமை. காதல் மனைவியை ஒரு ராத்திரிக்கு மட்டும் சாமிக் காரியம் என்று கூட்டிக் கொடுப்பதா என்ற கோபம். இதற்கு எல்லாரும் உடந்தையாய் வேறு இருக்கிறார்களே என்ற வெறுப்பு. எல்லாமே அவனின் செயல்களில் பிரதிபலிக்கிறது. 'நீயும் நானும் தானே அந்தத் திருவிழாவிற்குப் போனோம். நாம சாமியாடா? கண்ணுக்கழகா எவளாவது கிடைச்சா போட்டு விடலாமுன்னுதானே போனோம்' என்று தன் மச்சானிடம் கேட்கும் போது அவன் மேல் ஒரு பரிதாபம் வருகிறது.

நம் காலத்தில் செயற்கை முறையில் கருத்தரித்துக் குழந்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. ஓர் ஆணின் விந்தணுவை உடலுறவின் வழியன்றி வேறு விதமாகப் பெண்ணுக்குள் செலுத்தும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இவ்வாறு வாடகை விந்தணுவின் உதவியால் பிள்ளை பெற்றுக் கொள்ளும் கணவர்களுக்குத் தம் மனைவிமாரைக் கூட்டிக் கொடுத்த பாவம் வராதல்லவா! கதையின் நாயகன் காளி பாவம், அவன் காலத்தில் இந்த வசதிகள் இல்லை.

இந்தப் பின்புலத்தின் கதையோடு பின்னிக் கொண்டு வரும் அத்தம்பதியின் ஆழமான காதலை மிகவும் ரசிக்க முடிகிறது. கணவனுக்காக எதையும் செய்யும் மனைவியும் மனைவிக்காகத் தன்னையே மாற்றிக் கொண்ட கணவனும் அவர்கள் பரிமாறிக் கொள்ளும் காதல் கண்ணசைவுகளும் அவ்வளவு அழகு. விரக்தி கூடுகையில் ஒருவரையொருவர் அணைத்து ஆறுதல் கூறித் தேற்றுவதும் அவர்கள் இருவரையும் நமக்கு நெருக்கமான மனிதர்களாக்கி விடுகின்றது. கொங்கு நாட்டு உரையாடல்களும் கிராமத்துக் குறும்புப் பேச்சுகளும் மிக நேர்த்தியாகவும் உண்மையாகவும் அமைந்து ஒரு உலகத்தை அப்படியே நம் முன் பிரதி எடுத்துக் கொடுத்து விடுகிறது. என் வாசிப்பின் அளவில் ஒரு புத்தகம் என்னை ஒரு முழுமையான புது உலகத்திற்குக் கொண்டு செல்லுமென்றால் அதைச் சிறந்த புத்தகம் என்பேன். அந்த அளவுகோலின் படி இந்தப் புத்தகம் ஆகச்சிறந்த ஒரு படைப்பாகவே எனக்குத் தோன்றுகிறது.

இப்போது பிரச்சனைக்கு வருவோம். திருச்செங்கோட்டையும் கதை குறிப்பிடும் கவுண்டர் இன மக்களின் ஒழுக்கத்தையும் இந்தப் புதினம் சிதைத்துவிட்டது என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதம். அந்த மேற்படி பதினாலாம் நாள் திருவிழா சமாச்சாரம் - உண்மையோ பொய்யோ - நம் வழமைக்குக் கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான். ஆனாலும் அந்த மாதிரி நடந்ததற்குச் சான்றுகள் இருந்திருந்தால் எழுத்தாளன் அதன் பின்னணியில் ஒரு கதையைப் பின்னியதில் தவறொன்றும் இல்லையே. சொல்லப் போனால் கொங்கு நாட்டின் வாழ்வியலில் ஒரு காலத்தின் பிரதியை அச்சுப் பிசகாமல் எடுத்துக் கொடுத்திருப்பதற்காக எழுத்தாளரைப் பாராட்டி இருக்க வேண்டும். 'இவ்வளவு பிரச்சனை ஆகுமுன்னு தெரிஞ்சு எதுக்குங்க இந்தாளு இப்பிடி எழுதணும்?' என்ற வாதம் செல்லாக்காசு. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, சமீபத்தில் பல இடங்களில் இது போல நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை தொடருமானால் எவனும் எதையும் புதிதாகப் படைக்கத் தயங்குவான். எவர் மனதையும் புண்படுத்தாமல் எல்லாரையும் அதிஉன்னதமான மனித தெய்வங்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் காட்டியே படைப்புகளை உருவாக்க வேண்டுமானால் இயக்குநர் விக்ரமன் மட்டும்தான் இனி மொத்தப் படைப்புலகத்துக்கும் குத்தகைதாரர் ஆக முடியும். இல்லாவிட்டால் கூட்டம் கூட்டமாக நாம் எல்லாரும் சேர்ந்து டாம் அண்டு ஜெர்ரி பார்த்து நம் இலக்கிய தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம், பூனை வளர்ப்போர் சங்கம் அந்தச் சித்திரம் பூனைகளைக் கொடுமைக்காரர்களாகக் காட்டுகிறது என்று கூறி அதை எதிர்க்காதவரை!

படம் தந்து உதவியமைக்கு நன்றி : duncan c

வீதிக்கு வந்து கூச்சலிடுபவனின் குரலும் மிரட்டலும் கூடினால் எதற்கு வம்பு என்று அதிகாரமும் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே. கருத்துச் சுதந்திரம் எல்லாம் கறிக்கு உதவாது என்று ஒதுக்கி வைத்து விட்டார்களே. இனி வரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள் எல்லாரும் கராத்தே, சிலம்பம், குங்க்ஃபூ போலக் குறைந்தது ஒரு தற்காப்புக் கலையையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுமானால் ஒரு சட்டம் கொண்டு வரலாம். அல்லது படைப்பாளர்கள் எல்லாரும் தம் அடையாளங்களை மறைத்துக் கொண்டு graffiti ஓவியர்களைப் போல வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் படைப்பாளியும் இனி வீதியில் இறங்கிக் கூச்சல் போட வேண்டும் என்ற நிலைக்கு என் சமுதாயம் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது.

நல்லுப்பையன் சித்தப்பா என்று கதையில் ஒரு பாத்திரம் வரும். அந்தப் பாத்திரம் உண்மையிலேயே இருந்து இந்த நேரத்தில் பெருமாள் முருகனுக்கும் ஆதரவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன செய்திருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். கடைகளில் விற்க மாட்டார்கள். இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். நானும் அப்படித்தான் படித்தேன். வெளியே சொன்னால் வெட்கக் கேடு!

பெருமாள் முருகனுக்கு நேர்ந்திருக்கும் நிலை படைப்புலகுக்கு வந்திருக்கும் சாபக்கேடு. அவரை மன்னிப்பு கேட்க வைத்தது மிருகத்தனம். எல்லாரும் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். முடிந்தால் உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பற்றியும் ஒரு பதிவெழுதுங்கள். நல்லாயிருக்கு, நல்லாயில்ல என்று எப்படி வேண்டுமானாலும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். மற்றெந்தவொரு புத்தகத்தைப் போலவும் இதை அணுக முடியும், வாசிக்க முடியும், ரசிக்க முடியும், விமர்சிக்க முடியும் என்று காட்டுங்கள். இந்தப் புத்தகம் ஒன்றும் தீண்டத்தகாததோ தீங்கு விளைவிப்பதோ அல்ல என்று உரத்துச் சொல்லுங்கள். இது பெருமாள் முருகனுக்காக எழுப்பும் ஆதரவு மட்டுமில்லை. படைப்புச் சுதந்திரத்துக்கும் வாசிக்கும் உரிமைக்குமான ஆதரவுக் குரல்.

- மதி


கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..