நான் செத்தால் யாரெல்லாம் வருவார்கள்


புத்தகம் : சுமித்ரா (புதினம்)
ஆசிரியர் : கல்பட்டா நாராயணன் (மலையாளம்) ; தமிழில் கே.வி.ஷைலஜா
பக்கங்கள் : 119
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 4 நாட்கள்
ஒரு வரியில் : தற்காலக் கவிஞனுக்கு உகந்த எழுத்து வடிவம் புதினம்தான் என்று முன்னுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருப்பது போல ஒரு கவிதையான புதினம். வாசித்து முடித்ததும் நிறைய யோசிக்க வைக்கும் புத்தகம்.

மரணம் என்னும் பெருவிந்தை எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. பழுத்த முதியவர் ஒருவரிடம் ஒரு குழந்தை கேள்விகள் கேட்பதைப் போல அதனிடம் நான் பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். அந்த முதியவர் குழந்தைக்குப் பதில் சொல்வதைப் போலவே மரணம் என் கேள்விகளுக்குப் புன்னகையை மாத்திரமே பதிலாக அளித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் புரிந்து கொள்ளும் சக்தி குழந்தைக்கு இருப்பதில்லை. ஆனாலும் 'அட! இந்தக் குழந்தை துறுதுறுவென்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறதே' என்று முதியவர் சந்தோஷப் படுவார்.

'சுமித்ரா' புதினம் மரணத்தைப் பற்றி மீண்டும் என்னைப் பல கேள்விகளை எழுப்ப வைத்துவிட்டது. கதையின் ஒற்றை வரி இதுதான். சுமித்ரா என்னும் நடுவயது கேரளச் சீமாட்டி ஓர் அதிகாலையில் எதிர்பாராதவிதமாக மரணித்து விடுகிறாள். அது தொடங்கி அன்று பிற்பகல் அவளைக் கொண்டு எரிக்கும் வரை அவளைக் கிடத்தி வைத்திருந்த கூடத்தில் வந்து சேர்ந்த ஒவ்வொருவரின் பார்வையில் அவளின் மரணம் எழுப்பும் சலனங்கள் தான் இந்தக் கதை. கவித்துவமாகப் பல பேருண்மைகளை அனாயசமாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். மொழிபெயர்ப்பிலும் கே.வி.ஷைலஜா அவர்கள் மிக நேர்த்தியாக அந்த உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார். அற்புதமான கதைகள் பலவும் மொழிபெயர்ப்பில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஜாக்கி சான் படம் பார்ப்பது போலாகி விடக்கூடும். பல முறை நானே நொந்திருக்கிறேன். அந்த மாதிரி எதுவும் பண்ணாமல் கூடவே நிஜமாகவே கேரளச் சாயலும் வயநாட்டின் குளிரும் தொலைந்து போகாமல் மொழி பெயர்த்திருக்கும் இவருக்கு ஒரு பெரிய நன்றி.



இதற்கு மேல் கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. வாசித்துப் பாருங்கள். நல்ல புத்தகம். இந்தப் பதிவில் இந்தப் புத்தகம் என்னுள் எழுப்பின எண்ணங்களையே எழுத முற்படுகிறேன். கூடவே மெய் சிலிர்க்க வைத்த சில மேற்கோள்களும்.



இயல்பாகவே இந்தக் கதையை வாசிக்க வாசிக்க என் மனம் சுமித்ராவின் இடத்தில் ஒரு கணம் என்னை வைத்துப் பார்த்தது. இளம் வயதிலேயே எவரும் எதிர்பாராத ஒரு அதிகாலை நான் ஒருவேளை செத்து விட்டால் என் வீட்டுக் கூடத்தில் யாரெல்லாம் வருவார்கள், அவர்களின் மனங்களில் என்னென்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்று எண்ணத் தோன்றி விட்டது. அதற்காக நான் வாழ்வை வெறுத்து எப்போதடா சாகப் போகிறோம் என்று தவித்துக் கிடக்கும் விரக்திக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். நிஜத்தில் நூறாண்டுகள் ஆரோக்கியமாக வாழ எனக்கு ரொம்ப ஆசை. என் நூறாவது பிறந்த நாள் அன்று எவரும் பிடித்துத் தாங்காமல் தானாகவே எழுந்து நடந்து வந்து ஒரு மரக்கன்றை நடுவது போலவும் நான் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன். இதுவும் அந்த வகையறாவில் ஒரு சுவாரசியமான கற்பனைதான்.

வருத்தம் இயல்பாகப் பலருக்கும் இருக்கக் கூடியதுதான். அதையும் தாண்டி ஒரு மரணம் எத்தனை பரிவர்த்தனைகளை முன்னேற்பாடில்லாமல் முடித்து வைத்து விடுகிறது! என் நண்பர்கள், உறவுகள், தொழில் நிமித்தத் தொடர்புகள் என்று யாரெல்லாம் அன்றைக்கே வேறு வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வருவார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அடுத்த கட்டப் பழக்கங்கள் ஃபேஸ்புக்கில் என்னைக் குறித்த ஒரு இனிய நினைவைப் பதிந்து விட்டு ஒரு R.I.P போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடக்கூடும். எத்தனை பேர் என்னிடம் சொல்ல வைத்திருந்து சொல்லாமலேயே விட்டுவிட்ட ரகசியங்களை நினைத்துத் தவிப்பார்களோ. எத்தனை பேர் என்னிடம் சொல்லி வைத்திருந்த ரகசியங்கள் என்னவாகின என்று தவிப்பார்களோ. உயிரோடு இருந்திருக்கும் போதே இழுத்து நாலு அறை விட்டிருக்கலாம் என்று எத்தனை பேர் நினைப்பார்களோ. எத்தனை பேர் என்னிடம் மௌன மன்னிப்புகள் கேட்டுக் கொண்டிருப்பார்களோ. என்னை ரசித்தவர்களும் நான் ரசித்தவர்களும் அந்தக் கணத்தில் என்னைப் பற்றி என்னென்ன நினைத்துப் பார்ப்பார்கள். என்னோடு முரண்பட்டுப் போனவர்கள் அந்த தினத்தில் எப்பேற்பட்ட அபத்தத்தின் சுமையை உணரக்கூடும்? என் சவம் கிடக்கும் அறையில் எத்தனை கண்கள் என் மூடின கண்களை நோக்கியிருக்கும்; எத்தனை கண்கள் என் பாதங்களை நோக்கியிருக்கும்; எத்தனை கண்கள் என் கைகளை நோக்கியிருக்கும்; எத்தனை கண்கள் என் ஆண் குறியை நோக்கியிருக்கும்; மேலும் எத்தனை கண்கள் சுவரில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை நோக்கியிருக்கும்! நான் இல்லாவிடில் என்னால் முடித்துத் தர வேண்டிய பணிகளை யாரை வைத்து முடிப்பது என்று என் தொழில் வாடிக்கையாளர்கள் பதறக் கூடும் அல்லவா. வாடகைக்கு இருந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே இனி இங்கே யாரைக் குடி வைப்பது என்று என் வீட்டு உரிமையாளர் நினைக்கக் கூடும் அல்லவா. பெருவருத்தங்கள் மட்டுமல்லாமல் ஒரு மரணம் பல யதார்த்தச் சிக்கல்களையும் முன்வைக்கிறது. ஆனால் அத்தனையிலும் கொஞ்சம் கனத்தை ஏற்றி விட்டு விடுகிறது.

இதுவரை என் வாழ்வில் இரண்டு மரணங்களுக்குத் தான் மனதறிந்து அழுதிருக்கிறேன். என் பதினெட்டாவது வயதில் என் ஆச்சி ஒரு பௌர்ணமியன்று எதிர்பாராமல் இறந்து போனபோது ஒரு தாயின் பிரிவைப் போல் வலித்து அழுதேன். இன்னமும் முழு நிலவின் தினங்களில் மொட்டை மாடிகளில் அவளோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். அவளை எரித்த இடத்திற்கு அடுத்த நாள் சென்றபோது அவளின் தொடை எலும்பிற்கு மாற்றாக வைக்கப் பட்டிருந்த உலோகக் கம்பி எரியாமல் அந்தச் சாம்பலினூடே கிடந்த காட்சி என்னுள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின ஒன்றாகும். அந்த மரணத்தன்று இறந்தவரை நினைத்து அழுதேன் என்றால் வேறொரு மரணத்தில் இறந்தவர் விட்டுச் சென்றவர்களை நினைத்துத்தான் நிஜமாக அழுதேன். ஒரு பெண்ணின் மரணம் அவளின் தனிப்பட்ட முடிவு மாத்திரம் அல்ல. அது பலரின் இயக்கத்தையும் படக்கென்று நிறுத்தி விடுகிறது.

அதே போல இதுவரை நான் மரணங்களின் சேதி கேட்டுச் சென்றிருக்கிறேனே ஒழிய ஒருபோதும் மரித்தவர் வீட்டில் இருந்ததில்லை. ஒரு வகையில் இதற்காகச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். இருந்தாலும் எல்லாமே அநித்தியம்தானே ! வீட்டில் ஒருவர் இறந்துவிட்டார் என்று ஊருக்குச் சேதி சொல்லி அனுப்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். மரணத்தின் பின் என்ன என்று பல முறை யோசித்திருக்கிறேன். அது இதுவரை மரித்தவரின் பார்வையிலேயே ஓடியிருந்திருக்கிறது. இந்தப் புத்தகம்தான் மரணத்தின் பின் என்ன என்று வேறோரு பார்வையைக் காட்டி இருக்கிறது.

மரணத்தைத் தாண்டியும் பல நுட்பமான உணர்வுகளை இந்தப் புத்தகம் மீட்டுகிறது. குறிப்பாக நினைவுக்கு வருபவை பெண்களுக்கும் தண்ணீருக்குமான உறவு. முன்னுரையில் எஸ். ராமகிருஷ்ணனும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். பெண்களுக்குக் குளியல் என்பது ஒரு அன்றாட நிகழ்வு என்பதைத் தாண்டி ஒரு அன்னியோன்ய உறவாக மாறி விடுவதைச் சில பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சுத்தம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டில் பல உள்ளர்த்தங்கள் அடங்கி இருப்பதாகவே படுகிறது.

'சாவு வீடு' என்ற சூழல் எப்பேற்பட்ட மனிதரையும் ஒரு அடர்த்தியையும் நெகிழ்வையும் ஒரு சேர அனுபவிக்க வைத்து விடுகிறது. 'சாவு வீட்டில் கடன் கேட்டுப்பாருங்கள் இல்லை என்ற பதில் வரவே வராது' என்று ஆசிரியர் சொல்கிறார். அடிக்கடி 'அட' போட்டு யோசித்த விஷயம். அதே போலத்தான் அரிதாகப் பெற்ற ஆண் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி முந்தானைக்குள்ளேயே வளர்த்து அவர்களின் இயல்பையே மாற்றி விடும் அம்மாக்களைப் பற்றிய வர்ணனைகளும். அப்படி வளர்க்கப்பட்ட சில நண்பர்களை நேரில் கண்டிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை மிக நுட்பமாக இந்தப் புதினம் சொல்லிச் செல்கிறது.

பெண்களின் மனங்களில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்களைப் பற்றி இந்தப் புத்தகம் பிரதானமாக ஓர் ஆய்வையே நடத்தி இருக்கிறது போலத் தோன்றுகிறது. எத்தனை வகையான ரகசியங்கள்! ஒவ்வொரு பெண்ணிடமும் இது போன்ற ரகசியங்கள் பல பொதிந்துதானே கிடக்கும் என்று தானாகத் தோன்றுகிறது. இருந்தும் ரகசியங்களைச் சொல்லத் தகுந்தவர்களாய் வரலாற்றில் ஒரு போதும் பெண்களை நாம் நம்பினதே இல்லை. யோசித்துப் பார்த்தால் இதுவே பெண்கள் கையாண்டிருக்கும் அதிஉன்னத உத்தி என்று தோன்றுகிறது. தங்கள் மேல் சந்தேகங்களே வரக்கூடாது என்பதற்காகவே சிலபல ரகசியங்களைக் கசியவிட்டு அதனைத் தக்க முறையில் எல்லாரும் தெரிந்து கொள்கிறாற்போல் செய்தும் விட்டு, வெகு நேக்காக மக்களைத் திசை திருப்பி வரலாறுகளை எழுதவிட்டுவிட்டு உள்ளூரச் சிரித்துக் கொண்டே தங்கள் ரகசியங்களைப் பெண்கள் பாதுகாத்திருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் தொலைத்த ரகசியங்களெல்லாம் ஆண்களின் உப்புச்சப்பில்லாத அரசியல் ரகசியங்கள்தானே!

காலை நடைக்குச் சென்ற கணவன் என்றைக்கும் இல்லாமல் அன்றைக்குக் குளத்தங்கரையில் மீன்களின் விளையாட்டைக் கொஞ்சம் கூடுதல் நேரம் கண்டு விட்டான். இந்த நேரத்தில் வீட்டில் மனைவி கடைசி மூச்சை விட்டிருக்கிறாள். உயிரோடிருக்கும் தன் மனைவியோடான வாழ்வை மனதளவில் கொஞ்சம் கூடுதல் காலம் வாழ்வதற்காகவே அவ்வாறு வாய்த்தது போலும் என்று கதையின் முதல் பக்கத்திலேயே கட்டிப் போடுகிற ஒரு கவித்துவம். அந்த வரிகளில் விழுந்துதான் இந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்கத் தொடங்கியதாக மொழி பெயர்ப்பாளர் தன் குறிப்பிலும் கூறுகிறார்.

அதே போல முடிவிலும் ஒரு அற்புதமான நுண்கருத்தோடு முடிகிறது கதை. மரணத்தின் வீட்டில் வெகு நேரம் நிற்கக் கூடிய திராணியை மனித சமூகம் கொஞ்ச கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது என்று கதை முடிகிறது.

முற்றுப்புள்ளிகளில்லாத வாக்கியங்களுக்கு அழகு கூடுவதில்லை. ஒரு முற்றுப்புள்ளி வாக்கியமாகி, கதையாகி, கவிதையான அனுபவம் இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது. வாசித்துப் பாருங்கள் உங்களுக்கும் பல கேள்விகள் தோன்றலாம்.

- மதி

நன்றி : இந்தப் பதிவிற்குப் படம் தந்து உதிவயமைக்கு : Remi Longva

கருத்துகள்

  1. சிற்சில ரசனைகளே மெய் சிலிர்க்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. நான் செத்தா யாரெல்லாம் வருவார்கள் என்று நானும் யோசித்ததுண்டு. தங்களின் கட்டுரையில் இருக்கும் பல எண்ணங்கள் எனக்கும் வந்ததுண்டும். "veronika decides to die" நூலைப் படித்தமுடித்த போது எனக்கு இதேபோல ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. நான் இன்னும் ஒருபடிமேல சென்று " நான் செத்த உனக்கு அழுக வருமா?" என்று சில நெருங்கிய நண்பர்களிடம் கேட்டதும் உண்டு. உடனே அவர்கள் ஏதோ நான் சாக முடிவு செய்து என் கடைசி நாட்களை கண்ணீரில் கழிப்பதாய் எண்ணி பதறிவிடுகின்றனர். உண்மையில் தெரிந்த கொள்ள ஆர்வம் தான். யாரெல்லாம் வருவார், யாருக்கெல்லாம் அழுகை வரும், யாரெல்லாம் "சனியன் தொலஞ்சுது" என்று நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை. அவ்வளவே!!! :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுபாஷினி.. அந்தப் புத்தகம் என்னுள்ளும் மரணம் குறித்த பல கேள்விகளை எழுப்பின புத்தகம்தான். மரணத்தைக் காட்டிலும் வாழ்வைப் பற்றியே அதிக கேள்விகள் எனக்கு வந்தன. பியானோ வாசிக்கும் அந்த மன நோயாளி இன்னும் என் மனதில் இருக்கிறான் :-) இந்தப் பதிவை எழுதும்போதே எனக்குள் தோன்றியது. வாசித்ததும் சில பேர் ஏதோ நாளைக்கே நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்துக் கொண்டிருப்பதாய் நினைத்துப் பதறி விடுவார்கள் என்று :-) அதே அனுபவம்தான் உனக்கும் ஏற்பட்டிருக்கும் என்று புரிகிறது :-)

    பதிலளிநீக்கு
  4. கேள்வி தோன்றுமா தெரியவில்லை ,ஆனால் உங்கள் பதிவில் இருந்துஏற்பட்ட ஞானம் .... யார் செத்தாலும் யாரும் கூட வர மாட்டாங்க :)

    பதிலளிநீக்கு
  5. நன்றி பகவான்ஜி... இந்தப் பதிவே உங்களை யோசிக்க வைத்திருக்கிறதென்றால் கட்டாயம் புத்தகம் வாசியுங்கள்.. இன்னும் நிறைய ஞானம் கிடைக்கும் :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..