ஊடறுப்பில் இடமில்லை
(ஊடறுப்பு = intersection)
உன் வட்டத்தில் இருந்து நீயும்
என் வட்டத்தில் இருந்து நானும்
பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம்.
பழக்கப் போக்கில்
நெருங்கி நெருங்கி
இரு வட்டங்களுக்கும் பொதுவான
ஊடறுப்பை வந்தடைந்தோம்.
நாம் இருவரும்
கால் பரப்பி நின்று பேச
ஊடறுப்பில் இடமில்லை.
நமக்குப் பொதுவென்றிருந்தவை
ஓரிரு அழகிய அங்குலங்கள் மட்டுமே!
பேச்சின் சுவாரசியத்தில்
கிடைத்த இடத்திற்குள் இருவரும்
ஒற்றைக் காலில் நின்று கொண்டோம்.
இருந்தும்
எத்தனை காலம்தான்
அடுத்த கால் அந்தரத்திலேயே மிதந்திருக்கும்?
விழுந்து விடாதிருக்க
ஒருவரையொருவர் பற்றிக் கொண்டோம்.
பழக்கம் நெருக்கமானது.
சமநிலை திணறத் துவங்கியதும்
விளையாட்டாய் ஒருவரையொருவர்
தன் வட்டத்துக்குள்
இழுத்துக் கொள்ள எத்தனித்தோம்.
எத்தனை முயன்றும் இருவருக்கும்
வட்டத்தைத் தாண்டும்
வாட்டம் பிடிபடவில்லை.
அப்போதுதான்
விரக்தி உள் நுழைந்தது.
கால்களின் வலி
சிறுகச் சிறுகப் பெருகப் பெருக
பதற்றத்தில் ஒருவரையொருவர்
பிடித்துத் தள்ளிக் கொண்டோம்.
விட்டு வெளியேறவும்
இருவர்க்கும் விருப்பமில்லை.
ஊடறுப்பின் வெளி
தன்னிலைக்கான போராட்டமானது.
போரில் ரணப்பட்டு
தொடரத் திராணியற்றுத்
தளர்ந்த நிலையில்
எவரும் தள்ளி விடாமலே
வெளியேறத் தயாரானோம்.
கடைசி வீம்பாய்
முதலில் வெளியேறுவது
யாரென்று ஆனது.
நினைவு பிறழ்ந்த
சில நொடிகளில்
இமைத்து விழிக்கையில்
உன் வட்டத்தில் நீயும்
என் வட்டத்தில் நானும்
அவரவர் ரணங்களுக்கு
மருந்திட்டுக் கொண்டு இருக்கிறோம்.
நீ நானென்றாய்.
நான் நீயென்றேன்.
ஆனால்
உண்மையிலேயே
ஊடறுப்பில் இடமில்லை.
- மதி
படம் : நன்றி : bezael_moi
மனதில் உண்டு தானே....?
பதிலளிநீக்கு@ தனபாலன் சார்.. சமயங்களில் மிக எளிய கேள்விகளுக்கான பதில்கள்தான் மிக மிகச் சிக்கலாக அமைந்து விடுகின்றன :-)
பதிலளிநீக்கு