கடல் பார்த்தல்கடற்கரைக்குச் சென்றால் மட்டும்
கூடிவிடும் காரியமல்ல
கடல் பார்த்தல்.
அது தியானம்.
நிலைகளைக் கடந்திட
மெனக்கெடல் வேண்டும்.

கரையில் மேயும் கூட்டம் விடாது
கட்டி விளையாடும் காதல் விடாது
மணலை அளையும் மழலை விடாது
மாங்காய் தேங்காய் சுண்டல் விடாது
பேச்சுக்குத் துணை இருந்தாலே
பெருசாய் எதையும் உணர விடாது
மனிதப் பிரக்ஞை
முற்றிலும் துறந்து
கரையின் நிலை கடந்தாலும்...

காலோடு ஓடும் நண்டு விடாது
கரையோடு ஒதுங்கும் கிளிஞ்சல் விடாது
இரைந்து அழைக்கும் அலையும் விடாது
அது இட்டுச் செல்லும் நுரையும் விடாது
இடைக்கிடை ஒரு கணம்
தரிசனம் கிடைப்பினும்
அலையின் நிலை கடலை
அணுகவே விடாது.அதனோடு முட்டி மோதாமல்
முறைத்துக் கொள்ளாமல்
நிதானமாய்ச் சரணடைந்தால்
ஒரு வேளை
உள்வாங்கும் அலை நம்மைப்
படகின் நிலை வரை அழைத்துச் செல்லும்.

கரையில் வாழும் காக்கைகள் அங்கே
தம் றெக்கையின் பலத்தைச் சோதிக்க
கடலுக்குள் பறந்து
படகைத் தொட்டு விட்டு
மூச்சிரைத்துக் கரை திரும்பும்.
மீண்டும் படகு
மீண்டும் கரை.

நிஜத்தில் கடல் இன்னும் தூரமானது
கடல் இன்னும் ஆழமானது
குறிப்பாய் இந்த நிலையில்
கடல் இன்னும் ஆபத்தானது.
மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை எல்லாம்
விட்டுக் கொடுக்காமல்
முன்னேறவே விடாது.

கடந்து கடந்து
கண்ணுற்று நிமிர்ந்தால்
தூரத்தில் கடல் தெரியும்.
சலனமே இல்லாமல்.
மறுமொழி சொல்லாமல்.
முதல் பார்வைக்கு எப்போதுமே
சலிப்புத் தட்டும்
சந்தேகம் முளைக்கும்.
'இதற்கா இத்தனை பிரயத்தனம்?'
நம்புங்கள்
இது நிசப்த நிலை.
இரைச்சல் பழகின கண்களுக்கு
அமைதி உணரவே அவகாசம் வேண்டும்.

பயிற்சிக்கு நங்கூரமாய்
ஒரு கப்பலைப் பிடித்துக் கொள்ளலாம்
இடது கண்ணின் இடது ஓரம் முதல்
வலது கண்ணின் வலது ஓரம் வரை
அது கடலில் நகர்வதைப்
பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கலாம்.
பயிற்சி ஞானம் வளர வளர
பிடிமானங்கள் தேவையில்லாமல் போகும்.

இந்தப் புள்ளியில்தான் தொடங்குகிறது
கடல் பார்த்தல்.
கடல் நம்மைப் பார்த்தல்.

பார்த்து விட்டால் கடல்
மெதுவாகப் பேசத் தொடங்கும்.
பிறகு விடவே விடாது.

-மதி

(படம் : நன்றி : Mazen Abdulaziz)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..