மொழி பெயர்த்துக் கிடைத்த ஒரு குதிரைச் சவாரி


புத்தகம் : கருப்பழகன் (Black beauty என்ற புகழ் பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : அன்னா சிவெல் (தமிழில் யூமா வாசுகி)
பக்கங்கள் : 200+
எடுத்துக் கொண்ட நேரம் : 1 வாரம்

ஒரு வரியில் : ஒரு குதிரையின் வாயிலாகவே சொல்லப்படும் ஒரு குதிரையின் வாழ்க்கைக் கதை. மனிதர்களைப் பற்றியும் குதிரைகளைப் பற்றியும் நிறைய சிந்திக்க வைக்கும். மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆழமான புத்தகம்.

1870-களில் ஆங்கிலத்தில் அன்னா சிவெல் என்ற பெண்மணி எழுதிய புகழ் பெற்ற நாவல். ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே அதிகமாக விற்பனையாகி இருக்கும் முதல் பத்து புத்தகங்களுள் ஒன்றாம். Black beauty என்ற பெயருடைய ஒரு குதிரையின் கதை. இது ஒன்றும் போர்க்குதிரை அல்ல. இங்கிலாந்தின் தெருக்களில் பிரபுக்களுக்கு வண்டியிழுத்த சராசரிக் குதிரைதான். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சரித்திர முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கையாக மாறி அது பெற்ற அனுபவங்களையும் புரிதல்களையும் அதன் பார்வையிலேயே விவரிக்கிறது இந்தக் கதை. தன் பதின்வயதிலேயே ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆனவர் அன்னா சிவெல். பிறகு அவரின் வாழ்க்கை முழுக்க அவர் நடமாடியது குதிரைகளின் மேல்தான். அதனால் குதிரைகளைப் பற்றி ஆச்சரியப்படும் அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார். கடற்கரையில் குதிரைச் சவாரி செய்து மட்டுமே குதிரைகளோடு பரிச்சயமான நம் தலைமுறையினர்க்கு இந்தப் புத்தகம் ரொம்பப் புதிதாக இருக்கும்.



விலங்குகளின் மேல் கருணை காட்ட வேண்டியதன் அவசியம்தான் இந்தப் புத்தகத்தின் ஆதார சுருதி. Blue Crossகாரர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அது மட்டுமின்றி மனிதத்தன்மை குறித்த ஆழமான கேள்விகளையும் அடிக்கடி எழுப்புகிறது. கருணையோடும் அன்போடும் பராமரிக்கும் எஜமானனிடம் இருக்கும் போதும் முரட்டு முட்டாள் எஜமானர்களிடம் இருக்கும் போதும் தான் பெறும் அனுபவங்களை யதார்த்தமாகவும் சுருக்கமாகவும் சொல்லிக் கொண்டே செல்கிறான் கருப்பழகன்.

குதிரைகள் எப்போதுமே என்னை மிகவும் ஈர்க்கும் விலங்குகள். பழைய படங்களின் குதிரைச் சண்டைக் காட்சிகளை எல்லாம் விரும்பிப் பார்த்துவிட்டு, குதிரை ஓட்டும்போது இடம் வலம் திரும்புவதற்கும் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் என்ன செய்வார்கள் என்றெல்லாம் சின்ன வயதிலேயே நிறைய கற்பனைகளால் யோசித்திருக்கிறேன். இன்றும் கூட அந்த ஞானம் பெரிதாக வளரவில்லை. சென்ற வருடம் வட இந்தியச் சுற்றுலா ஒன்றிற்குப் போனபோது சிம்லா அருகே நல்தேரா என்ற மலைச்சரிவில் காஜல் என்ற குதிரையின் மேல் ஒன்றரை மணி நேரம் சவாரி செய்ததுதான் எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய குதிரை அனுபவம். காஜலின் குதிரைக்காரன் கூடவே கதை பேசிக் கொண்டே நடந்து வந்தான். பல்லாயிரம் அடி உயரத்தில் மலையின் சரிவில் ஒடுங்கலான கரடுமுரடான பாதையில் முழு உயிரையும் முன்பின் தெரியாத அந்தக் குதிரையிடம் கொடுத்து விட்டுக் கொஞ்சம் திகிலாகவேதான் உட்கார்ந்திருந்தேன். போகும் வழியில் திடீரென்று குதிரைக்காரன் 'குனிஞ்சு பாருங்க சாப்.. சத்லஜ் நதி தெரியும்' என்றான். குனிந்து பார்த்தால் ஒரே மேகக் கூட்டம்தான் தெரிந்தது. அப்போதுதான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்று புரிந்தது. பயத்தில் கடிவாளத்தைக் கொஞ்சம் இறுக்கிப் பிடித்து விட்டேன். என்ன நினைத்ததோ தெரியவில்லை, காஜல் என்னை இன்னும் பயமுறுத்துமாறு பாதையினை விட்டுச் சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரு ஐந்து அங்குலம் அதனைத் திசை மாற்ற எவ்வளவு முயற்சித்தும் பயனில்லை. பதட்டத்தில் கையில் கிடைத்த கடிவாளத்தைக் கன்னாபின்னா என்று வீடியோ கேம் ஜாய்ஸ்டிக் போன்று நாலாபக்கமும் திருப்பியதை எல்லாம் இந்தப் புத்தகம் நினைவுபடுத்தியது. அந்தக் குதிரையை எவ்வளவு குழப்பி இருக்க வேண்டும் நான்! அது என்னைப் போல் எத்தனை முட்டாள்களை முதுகில் ஏற்றி இருக்கும்! எல்லாவற்றையும் தன் எஜமானுக்காகப் பொறுத்துக் கொண்டு வாழ்கிறதே! கருப்பழகனைப் போல!

முதலில் இந்தப் புத்தகம் குதிரைகள் எப்படி மனிதர்களைப் புரிந்து கொள்கின்றன என்று புரிய வைத்தது. குதிரையின் வாய்க்குள் இருக்கும் மெல்லிய சதைதான் மனிதர்களின் கட்டளைகளைக் கடிவாள இழுப்பின் மூலம் உணர்த்துகின்றன. நன்றாகப் பராமரிக்கப்படும் குதிரைகள் மெல்லிய அசைவுகளிலேயே விஷயத்தைப் புரிந்து கொள்கின்றன. பாவப்பட்ட குதிரைகள் முட்டாள்களால் பயன்படுத்தப்பட்டுத் தங்கள் வாய்ச்சதையின் தொடு உணர்வை இழந்து விடுகின்றன. கிளெட்ச் சரியில்லாத பைக்கின் கியர் மாற்ற வேண்டுமானால் முரட்டுத்தனமாக மாற்ற வேண்டுமே அதுபோல அவற்றிற்கும் கொஞ்சம் முரட்டுத்தனமான அணுகுமுறை தேவைப்படுகிறது. நாளடைவில் தங்கள் மதிப்பை இழந்து, பொலிவை இழந்து, வாய்ச்சதையின் உணர்ச்சியை இழந்து, நிலக்கரி சுமக்கும் அடிமை வேலைக்கு அடிமாட்டு விலைக்கோ, அல்லது உயிரோடே கசாப்புக் கடைக்கோ போய் விடுகின்றன. எல்லாம் மனிதர்களால்! வாய், கண், முதுகு, வால், கழுத்து, கால், தலை என்று அதன் பாகங்கள் அனைத்தையும் மனிதர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் ஆண்டெனாக்களாக மாற்ற முடிகிறது குதிரைகளால். தன் மேல் உட்கார்ந்திருக்கும் ஆள் எவ்வளவு பயப்படுகிறார், எவ்வளவு தேர்ச்சி பெற்றவர், எவ்வளவு கருணை உள்ளவர் என்பதை எல்லாம் குதிரையால் சவாரி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆளுக்கும் ஏற்றாற்போல் அது தன்னை மாற்றிக் கொள்ளக் கூட முயற்சிக்கிறது.

இவ்வளவு புரிந்து கொள்ளும் குதிரைகளை மனிதர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. சவாரியிலும் பராமரிப்பிலும் ஒரு மனிதன் தன் நடத்தையின் மூலம் எப்பேற்பட்ட குதிரையையும் செம்மையாக்கவும் முடிகிறது முடமாக்கவும் முடிகிறது. இயந்திரங்களைப் போலல்லாமல் ஒவ்வொரு குதிரைக்கும் அதன் சக்தி வேறுபடுகிறது. குதிரைகள் 160 cc என்று முத்திரை குத்தப்பட்டுத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாவதில்லை. பிரசவிக்கப்படத்தானே செய்கின்றன. சமயங்களில் மனிதன் இதைப் புரிந்து கொள்வதில்லை. சிலர் இயல்பிலேயே முரட்டு முட்டாள்களாக இருக்கிறார்கள். நல்ல குதிரைகளை அளவுக்கதிகமாக உழைக்க வைத்து ஓய வைத்து விடுகிறார்கள். கொஞ்சம் திமிறும் குதிரையாக இருந்தால் அவர்களின் உயிரே கூடப் போய்விடும். சிலர் இயல்பில் நல்லவர்களாக இருந்தாலும் போதையாலும் அஜாக்கிரதையாலும் நல்ல குதிரைகளுக்குத் தீங்கு விளைவித்து விடுகிறார்கள். சக ஜீவனாகப் பாவித்து அதனைப் புரிந்து கொண்டு நட்பாக்கி வேலை வாங்குவது சிலர் தான். நல்ல வேளை மனிதன் இயந்திர வாகனங்களைக் கண்டுபிடித்தான் என்றுதான் தோன்றுகிறது. கொஞ்சம் வெயில் அதிகமாக மண்டையைப் பிளந்தால் பைக்கிலேயே பிரேக்கையும் ஆக்ஸிலரேட்டரையும் ஒன்றாக முடுக்கும் ஜனம்தான் பெரும்பான்மையில் இருக்கிறது. குதிரைகளைக் கையாள மனித இனம் லாயக்கில்லை.

சவாரியிலும் பராமரிப்பிலும் குதிரைகளைப் பற்றி இன்னும் பல விஷயங்களைக் கதையின் ஓட்டத்தோடு கூடவே ஓடித் தெரிந்து கொள்ள முடிகிறது. கடந்த நூற்றாண்டின் வாழ்க்கை நமக்குப் பரிச்சயமில்லாத ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஒவ்வொரு நாவலும் ஒரு புது உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன். என் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளைத் தெரிந்து கொள்ள இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. இந்தப் புத்தகம் எனக்குக் கொடுத்த அறிமுகம் என் கற்பனையின் எல்லைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் யதார்த்தமான நேர்மறை முடிவு. இது போன்ற பல கதைகள் ஒரு கொடும் துயரத்தின் கண்ணீர்ச் சொட்டோடு முடியவே பிரியப் படும். ஆனால் இந்தக் கதைக்கு அன்னா சிவெல் எழுதியிருந்த முடிவு எனக்குப் பிடித்திருந்தது. யதார்த்தம் என்பதே பல நாவல்களால் துயரம் என்று சித்தரிக்கப்பட்டு விட்டிருக்கும் நிலையில் நம் வாழ்க்கைகள் யதார்த்தத்தில் அத்தனை துயரமானதா என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

சமீபத்தில் நான் வாசித்த 'யானை டாக்டர்' என்ற ஜெயமோகனின் தமிழ்ச்சிறுகதையும் 'Jonathan Livingston Seagull' என்ற Richar Bach-இன் ஆங்கில நாவலும் கூடக் கிட்டத்தட்ட இதே அனுபவங்களைக் கொடுத்தவைதான். ஒன்றில் யானை. இன்னொன்றில் கடற்பறவை. அந்தந்தப் புத்தகமும் அந்தந்த உயிரினத்தைப் பற்றி எந்த ஒரு அறிவியல் பாடப்புத்தகமும் சொல்லிக் கொடுப்பதை விட அதிகமாக, மனதில் பதிகிறாற்போல் சொல்லிக் கொடுத்தது. ஒரு யானையின் பாதம் எவ்வளவு மென்மையானது என்றும் பறவையின் சிறகில் உள்ள பலம் அதற்கு எத்தனை உயரத்தைக் காட்ட முடியும் என்றும் எனக்குத் தெரிய இப்புத்தகங்கள்தான் காரணம். சமயத்தில் மொட்டை மாடியில் காகங்களை வேடிக்கை பார்த்திருப்பேன். மேலோட்டமாக அவற்றை ஒட்டுமொத்தமாகக் காகம் என்றுதான் பெரும்பாலும் பார்த்திருப்போம். அதில் முனுசாமி, ராமசாமி, சுப்புலெட்சுமி எல்லாம் நமக்குத் தெரிந்து இருக்காது. மிஞ்சிப் போனால் நாலு வேளை சோறு போட்டிருப்போம். அத்தனை காகங்களுக்கும் ஒரே குணம்தான் நம்மைப் பொறுத்தவரை. கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொரு காகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியும். எது பசித்திருக்கிறது, எது பயந்திருக்கிறது, எது பறக்கப் பழகுகிறது, எது பறக்கச் சொல்லிக் கொடுக்கிறது என்று கூடப் புரியும். சுவாரசியமாக இருக்கும். நாய்கள், பூனைகள், ஆடு, மாடு வளர்ப்போருக்கு இதெல்லாம் முன்பே பிடிபட்டிருக்கலாம். என் போன்றோர்க்கு இதுதான் கண்திறப்பு.

இன்னும் கொஞ்சம் யோசித்தால் இந்த அத்தனை ஜீவராசிகளுக்கும் நாம் எல்லோருமே ஒட்டுமொத்தமாக 'மனிதர்கள்' என்றுதானே அர்த்தமாவோம் என்று யோசிக்கத் தோன்றுகிறது. நமக்குள் உள்ள Ashwin Rajagopalan, Meera Suresh, Kapil Sharma, Archana Iyer போன்ற அடையாளங்களெல்லாம் அவற்றிற்குத் தெரியுமா? அல்லது பொதுவாக நாம் எல்லோருமே ஒரு முரட்டு முட்டாள் கூட்டமா? வீட்டில் ஏதேனும் செல்லப் பிராணி வளர்த்தால் இன்றிரவு அதனிடம் வெளிப்படையாக உரையாடிப் பாருங்கள். ஜி.நாகராஜன் சொன்னதுபோல் 'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்று அது சொன்னாலும் சொல்லலாம்!



- மதி

படங்கள்
குதிரை: Christian Behren
புத்தகத்தின் அசல் ஆங்கிலப் பிரதி: Calsidyrose
(யாரு பெத்த புள்ளையோ எந்த ஊரோ, என் பதிவிற்குப் படம் தந்து புண்ணியம் தேடிக் கொள்ளும் இவர்களுக்கு மனமார்ந்த நன்றி)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..