கொல்லும் வெள்ளை யானைபுத்தகம் : வெள்ளை யானை (புதினம்)
ஆசிரியர் : ஜெயமோகன்
பக்கங்கள் : 400+
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 1 மாதம்
ஒரு வரியில் : எனக்குத் தெரியாத ஒரு வரலாற்றைச் சொல்லி என்னைக் கூச்சப்படவும், கோபப்படவும், நிறைய சிந்திக்கவும் வைத்த புதினம். 

ஐஸ் ஹவுஸ் என்று சென்னையில் இருக்கின்ற இடத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உறைய வைக்கும் வரலாறு இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. 1875 வாக்கில் இந்த மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் பலியான ஒரு பஞ்சம் நிகழ்ந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்புராணியாக இருக்கும் ஐஸ் கட்டிகள் அளவில் பெரியதானால் இவ்வளவு பயங்கரமான மிருகமாக மாற முடியும் என்று நான் உணர்ந்ததில்லை. அடிமை நிலையில் பஞ்சம் என்பது இத்தனை கொடூரமானது என்று எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது என்று முன்னுரை எச்சரிக்கிறது. நிஜம் தான்!


1875 வாக்கில் தென்னிந்தியாவை மாபெரும் பஞ்சம் ஒன்று பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வேளையில் சென்னையில் அதன் கோரத்தின் ஓரங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த ஓர் ஆங்கிலேய அதிகாரியின் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கும் கதை. தன்னால் இந்தக் கோரத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதே என்ற உறுத்தலுடன் வாழும் அதிகாரி அவர். தன்னால் இயன்ற அளவு இந்த மனிதாபிமானமற்ற கொடுமைகளைத் தடுக்க முனைகிறார். ஆனாலும் அவருக்குள்ளும் ஆளும் வர்க்கத்தின் அகந்தையை ஊட்டி விட்டிருப்பதன் பாதிப்பு ஆங்காங்கே தெறித்து வெளி வருகிறது. ஆங்கிலேயர்கள், உயர்சாதி இந்தியர்கள், அடிமை இந்தியர்கள் என்று சமுதாயம் மூன்றாகப் பிரிந்திருந்த காலம். கதையைப் பற்றி மேலும் நான் சொல்ல வில்லை. வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

முதலில் 'வெள்ளை யானை' என்ற பெயர்த் தேர்வு. யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க மருந்துகள் கொடுத்துப் பெயர்த்து எடுத்து, உறக்கத்திலேயே அதை ஓர் வெப்ப நாட்டுக்குக் கொண்டு வந்து வியர்வையில் உருகச் செய்து வெறியேற்றி விட்டால் கண்மண் தெரியாமல் கொல்லத்தானே செய்யும். ஐஸ் ஹவுஸிற்கு வந்திறங்கி இருக்கும் பனிக்கட்டியை முதல் முறை விவரித்து அதை ஒரு மதம் பிடித்த யானையோடு ஒப்பிடச் செய்யும் இடத்தில் புதினம் நம்மை நிமிர்ந்து அமரச் செய்து விடுகிறது. கத்தாமல், முறைக்காமல், குதிக்காமல் வெறும் இருப்பின் மூலம் மட்டுமே எதிரில் நிற்பவரை முதுகு உறையப் பயப்பட வைக்கும் சக்தி யானைக்கும் அந்தப் பனிப்பாறைக்கும் இருந்திருக்கிறது. அந்த விவரிப்பிற்கு மட்டுமே பல முறை மரியாதை செலுத்தலாம். 

இந்த நாட்டையும் இதன் மக்களையும் புரிந்து கொள்ள ஏய்டன் (அந்த ஆங்கிலேய அதிகாரி) எடுக்கும் முயற்சிகளால் இந்தச் சமூகம் எவ்வளவு சிக்கலாகக் கிடந்திருக்கிறது என்று புரிகிறது. ஒரு வகையில் ஒரு அற்ப மனிதனின் அங்குசத்திற்குப் பயந்து அடங்கிக் கிடக்கும் யானையைப் போலத்தான் நம் நாடும் இருந்திருக்கிறது. ஊர் ரெண்டுபட்டாலே கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நம்மை ஆண்ட கூத்தாடி இந்த ஊர் எத்தனையாகப் பிரிந்து கிடக்கிறது என்று கணக்கிடவே சம்பளத்திற்கு ஆளமர்த்தி இருக்கிறான் என்றால் நாம் இருந்த லட்சணம் அப்படி! இப்போது முன்னேறி இருக்கிறோம். முழுமையாக மாறி இருக்கிறோமா ? நம்மை ஆண்டு கொண்டிருந்தாலும் நம்மைக் கண்டு உள்ளூரப் பயந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த மிருகம் எப்போது தன்னிலை உணருமோ அப்போது நம் கதை முடியும் என்று தெரிந்தே ஒரு நூற்றாண்டு நம்மை ஆண்டிருக்கிறார்கள். 

அந்தக் காலகட்டத்தில் நம் நாட்டில் விளைவித்த தானியத்தை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டு, உள்ளூர் மக்களைப் பஞ்சத்தில் சாக விட்டு, அதன் பின் பஞ்சத்தில் சாகிறவர்களுக்காகப் பரிதாப அடிப்படையில் சொற்பக் கூலிக்கு வேலை தந்து, அந்த உழைப்பை உறிஞ்சி மாட மாளிகைகளும் நெடுஞ்சாலைகளும் கட்டியிருக்கிறார்கள். உழைக்கத் திராணியற்றவர்கள் உடனே சாக வேண்டியதுதான். உழைப்பவர்களும் கொஞ்சம் பொறுமையாகச் சாக வேண்டியதுதான். இத்தனை ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்த வாய்கள் ரத்தச் சுவையை மறந்து மது குடிப்பதற்காகத் தான் அந்தப் பனிக்கட்டிகள்!

இதற்கு முன் 'காடு' புதினம் படிக்கையில் குறுந்தொகை பாடிய கபிலரை அறிமுகம் செய்து வைத்த மாதிரி இந்தப் புதினத்தில் ஷெல்லியை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமோ. கவிதையைப் புரிந்து கொள்ள இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு கவிஞன் முன்பே வரிகளைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். சமயத்தில் அவனை நினைவு கூறத் தக்கவர்கள் எப்பேற்பட்ட பாக்கியசாலிகள் என்ற உணர்வு இந்தக் கதாபாத்திரங்களைப் படிக்கிறபோது வருகிறது. ராயபுரத்தில் இருந்து செங்கல்பட்டிற்குச் செல்லும் ஒரு பயணம் புதினத்தில் வருகிறது. பஞ்சம் என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ள ஏய்டன் ஒரு குதிரை வண்டியில் செங்கல்பட்டிற்குச் செல்கிறான். அந்தப் பயணம் முழுக்கப் பேரதிர்ச்சியைத் தரக் கூடிய விவரிப்பு. சாலையோரம் நெடுகக் கிடக்கும் பிணங்களை நாய்கள் கடித்து இழுத்துத் தின்னும் காட்சிகள் நிறைந்த பக்கங்கள். உயிர் கொஞ்சம் எஞ்சியிருந்தாலும் பொறுமை இழந்த நாய்கள் அப்படியே வயிற்றைக் கிழித்துக் குடலை உண்ணும் கோரங்கள். சாவின் விளிம்பில் இருக்கும் வ்வொரு உயிரின் கண்ணிலும் பயமுறுத்தக்கூடிய வெறுமையை உணர முடியும். செத்தவர்கள் போக, பிச்சை கேட்கத் தெம்புள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகச் சாலை ஓரங்களில் நின்று பிச்சை கேட்கிறார்கள். இரக்கப்பட்டு உணவு கொடுத்தாலும் அதைச் செரிக்கத் திராணி இல்லாமல் தொண்டை அடைத்துச் செத்துப் போகப் போகிறவர்கள். பசிக்கும் பஞ்சத்துக்கும் உள்ள வித்தியாசம் பனிக்கட்டியில் கையை வைத்தாற்போல் உணரக் கூடிய பக்கங்கள் அவை. ஒரு கட்டத்தில் கூட்டத்தைத் தாண்டிச் செல்ல, வண்டிக்கு முன் வந்து மன்றாடி விழும் மனிதர்களைச் சக்கரத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை. சக்கரத்தில் மாட்டிக் கொண்டவர்கள் எவரும் நசுங்குவதில்லை. உடைகிறார்கள்! நசுங்கிச் சாகக் கூடச் சொற்ப அளவுக்குச் சதை இருக்க வேண்டுமே உடலில். சக்கரத்தில் எலும்புகள் உடையும் சத்தம் நிச்சயம் சில இரவுகள் உங்களைத் தூங்க விடாது. அப்போதும் கூட எலும்புகள் உடையும் சத்தம்தான் கேட்கும். சாகிறவர்கள் எவரும் ஓலமிடுவதில்லை. அடிமைகள் அமைதியாகத் தான் சாக வேண்டும். 

அந்தச் சமூகத்தில் விடியலுக்கு வழி தேடி ஒரு முதல் குரல் அடிமை வர்க்கத்தின் உள்ளிருந்து வெளிவரும் ஒரு சந்தர்ப்பமும் அது முளையிலேயே உடைக்கப்படுவதும் அதைச் சாட்சியாக இருந்து பார்த்து இயலாமையில் துவண்டு மனம் விட்டுப் போகும் ஏய்டன் அப்புறம் என்னவாகிறான் என்றும் கதை முடிகிறது. 

சகமனிதன் தன்னை விடக் கீழானவன் என்று எண்ணும் வெறி, தனக்குத் தானே செய்து கொள்ளும் கற்பிதங்கள் இந்தப் புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப் படுகின்றன. நிச்சயமாக மனதில் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி இருந்தால் அதைச் செய்ய முடியாது. முழுக்க முழுக்க மனப்பூர்வமாக தன் உயர் நிலையை நம்பினால் மட்டுமே கீழானவன் சாவது நியாயம் என்று உணர முடியும். அவனைக் கொன்று விட்டுக் கூசாமல் உணவு உண்ண முடியும். இந்த நம்பிக்கைகளை வெள்ளையர்கள் கொண்டிருந்ததை விட நம் நாட்டு மேல்வர்க்கம் கொண்டிருந்ததுதான் குரூரமாகத் தெரிகிறது. இவர்களின் சந்ததி என்று உணர்கையில் கூசுகிறது. இங்கே சாகிற சாதியினரும் கூடத் தங்கள் மீட்பர் வெள்ளைத் தோல் உடுத்தித் தான் வருவார் என்று நம்பும் அளவுக்குக் கொடூரமாக இருந்திருக்கிறார்கள். அத்தனை கொடூரத்தையும் உள்ளுக்குள் மறைத்துக் கௌரவமாக வாழ்ந்திருக்கிறார்கள். சே!

கொல்கிறவர்களும் சாகிறவர்களும் அதைத் தங்கள் கடமை போல் வலியின்றி ஏற்றுக் கொண்டு போகும் ஒரு நாட்டில் இதனை வேடிக்கை பார்ப்பவன் பெறும் வலிதான் ஏய்டனுக்கும் நமக்கும் வருகிறது. 

- மதி

பனி : படம் : நன்றி : Massimo Margagnoni
பஞ்சம் : படம் : நன்றி : தி இந்து நாளிதழ்

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..