போங்கடா டேய்

(நன்றி) படம்:  Leif Carlsen

திருவள்ளுவர் என்றொரு தாடிக்காரர் நம் மயிலாப்பூரில் ரொம்ப நாட்களுக்கு முன்பு வாழ்ந்தார். அவருக்குச் சதா ஏதாவது அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பதே இயல்பு. திண்ணையில் சாய்ந்து ஊர் இளவட்டங்களைக் கூட்டி உட்கார்த்தி வைத்துக் கொண்டு 'இப்படி இப்படித்தானப்பா வாழ வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், ஒரே பாட்டில் பெரிய ஆளாய் மாறுவதைப் போல் ஒரு சில பாடல்களில் திடீரென்று பெரிய ஆளாகிவிட்டார். ஒட்டுமொத்த சமுதாயமே அவரின் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி வாழ முயற்சிக்கத் தொடங்கியது. அவர் சொன்னதுதான் வாழ்க்கைக் கோட்பாடு என்றே நம்பப் படும் அளவுக்கு ஆகிவிட்டது. பல நூறு வருடங்களைத் தாண்டியும் அதே மயிலாப்பூரில், 'படில தொங்காதேடா சாவுகிராக்கி' என்று திட்டும் நடத்துனரின் கண் பார்வையிலேயே இருக்குமாறு 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்று பொறித்து வைத்திருக்கும் அளவுக்கு மனிதர் நிலைத்து நின்று விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்றைக்காவது அந்த நடத்துனர் காயை விட்டு விட்டு கனியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் திருவள்ளுவர் தன் கடமையை நிறுத்தப் போவதே இல்லை. மனிதன் தன் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் என்று மூன்று விஷயங்களைத் தேடிச் சம்பாதிப்பது தான் பிரதானம் என்றும் அவற்றை ஒவ்வொன்றாய் எப்படியெல்லாம் அடையலாம் என்றும் சமையல் குறிப்பைப் போல் விலாவாரியாய் எழுதி வைத்து விட்டார். அவரை மதிக்கலாம். தப்பில்லை. மனிதர் கருத்தாய்த் தான் பேசியிருக்கிறார்.

என் பிரச்சனை இப்போது உருவாகி வரும் புதுக் கோட்பாடு தான். அவரை மாதிரியே இப்போது சில பல பேர்வழிகள் இந்தச் சமுதாயத்தையே ஒரு புதிய கோட்பாட்டை நம்ப வைத்து விட்டார்கள். ஒவ்வொரு திண்ணையிலும் ஒவ்வொரு இளைஞனிடமும் இந்தக் கோட்பாடுதான் இப்போது போதிக்கப் படுகிறது. வெகு லாவகமாக அவனையும் கிட்டத்தட்ட நம்ப வைத்து விட்டார்கள். அறம், பொருள், இன்பம் போலவே மூன்று விஷயங்கள் தான். இதை முப்பதுக்குள்ளே முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு சிறு சட்டத் திருத்தத்தை இப்போது சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அதிகாரமாக இந்த மூன்று விஷயங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாகச் சரக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியான விவாதங்களோடும், வெகு பொருத்தமான உவமைகளோடும்! இவர்களின் கோட்பாட்டுப் புத்தகத்தின் முதல் குறள் இப்படித்தான் இருக்கும்.

கார்வீடு கல்யாணம் இம்மூன்றும் எய்தினாரே
சால்போடு வாழத் தகார்.

'நன்றாகக் கேட்டுக் கொள் இளைஞனே! கார். வீடு. கல்யாணம். ஓடு. ஓடு. ஓடு. இதுதான் வாழ்க்கை. இதுதான் மதிப்பு. இதுதான் மோட்சம். முப்பது வரைதான் கெடு. ஓடு.'

'போங்கடா டேய்' என்ற குரல் இவர்களை எதிர்த்து பலத்து ஒலிக்க வேண்டிய தேவையும், சமீபத்தில் கொஞ்சம் அதிகமாக எனக்கு நானே இதைச் சொல்லிக் கொண்டிருந்ததும் சேர்ந்து ஒரு முறை இதைச் சத்தமாகச் சொல்ல வைத்து விட்டிருக்கிறது.ஐந்து வருடத் தவணையில் கார். இருபது வருடத் தவணையில் வீடு. தனியாகத் தவணை கட்டிக் கொண்டே இருந்தால் முதுகு வலிக்குமே என்று ஒற்றைத் தவணை முதலீடாகக் கல்யாணம். அவளும் சேர்ந்து பின்னால் தவணை கட்ட உதவுவாளே! ஒவ்வொரு கடனாக முடிக்க முடிக்க அடுத்தது தயாராய்க் காத்திருக்கும். இருபது வருட வீட்டுத் தவணை முடித்து வீடு சொந்தமாகும் போதே பிள்ளைகளின் கல்விக் கடனுக்கு விண்ணப்பப் படிவங்கள் தயாராய் இருக்கலாம். எவன் அதிகமாகத் தவணை கட்டுகிறானோ அவனே பணக்காரன். தவணைகளுக்குள்ளான இந்த வாழ்க்கையில் குனிந்து ஊர்ந்து செல்லும் வழியெங்கும் தரையில் 'நீ பணக்காரன்', 'நீ வசதியானவன்', 'நீ சாதித்து விட்டாய்' என்றெல்லாம் எழுதி வைத்து விடுவார்கள். வாசிக்க வாசிக்க ஆசுவாசமாக இருக்கும். நிமிர்வதற்கெல்லாம் தேவையே இருக்காது. எதற்காக? இந்தத் தவணைக் குழாய்க்குள் குறுக்கிக் கொண்டு குனிந்து ஊர்பவர்களின் கண்களுக்கு அதன் வெளியே வாழ்பவனின் கால் மட்டும்தான் தெரியும். அவன் கடற்கரையில் காலாற நடந்து கொண்டிருப்பான். குழாய்க்குள் இருப்பவன் அவனைப் பார்த்து 'அய்யோ பாவம் கால்ல செருப்பு கூட இல்லாம இருக்கான். 6 மாச EMI-ல Adidas ஒண்ணு வாங்கிக்கோன்னு எவ்வளவோ சொன்னேன். கேக்க மாட்டேன்னுட்டான்' என்று பரிதாபப்பட்டு விட்டு முன்னோக்கி ஊர்ந்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குப் புரியவில்லை. பத்து வருடம் இருபது வருடம் என்று கடன் வாங்குதல் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு ஈடாகாதா? சகல துவாரங்களையும் சாத்திக் கொண்டு வாழ்வதற்கு சாயங்காலம் பட்டினியாய் வாழ்ந்து விட்டுப் போகலாமே. மூன்று வேளை உணவுக்கு வழியில்லாதவர்களைப் பற்றி நான் பேசவில்லை. குழாய்க்குள் இருப்பவன் எல்லாம் சாயங்காலமும் சாப்பிடும் பழக்கம் உள்ளவன் தான்.

பல பேரைப் பார்க்கிறேன். எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்றுதான் சொல்கிறார்கள். 'உன்னை விட இவ்வளவு அதிகமாகச் சம்பாதித்தும் எனக்குப் போதவில்லை பாரேன்' என்று சொல்லிக் கொள்வதற்கான போட்டிதான் நடக்கிறது.

பணம் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை என்று யாரிடமாவது தவறிச் சொல்லிவிட்டால் பயந்து போய்ப் பார்க்கிறார்கள். எனக்கு வறுமை பிடித்திருக்கிறது என்று புரிந்து கொள்கிறார்கள். நிஜத்தில் எனக்குப் பிடித்து இருப்பது எளிமை தான். என் சம்பாத்தியம் போட்டிக் களத்தில் குறைவுதான். போதவில்லைதான். இருந்தாலும் என் மனம் வங்கிக்கணக்கை விட வாழ்க்கைக் கணக்குதான் முக்கியம் என்கிறது. நிச்சயமாக நான் சோற்றுக்கு வழியில்லாமல் போக மாட்டேன். நாளை கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகளைப் பெற்றால் அவர்களைப் பசியில் வாட விட்டு விட மாட்டேன். ஆறு வேளை சாப்பிடும் அளவுக்குச் சம்பாதிக்க ஓடுவதுதான் எனக்கு வேண்டாம் என்று தோன்றுகிறது. தவணைக் குழாய்க்குள்ளும் என் முதுகெலும்பு குறுகத் தயங்குகிறது. செலவழித்து விட்டுக் கடனடைப்பதல்லாமல், சேர்த்து வைத்துச் செலவழிக்கும் பழக்கம் சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் அதையே விரும்புகிறேன்.

சரி அப்படியே நான் எக்கச்சக்கமாய்ச் சம்பாதித்து விட்டாலும் இவர்கள் சொல்லும் செலவுகள் எனக்குப் பிரதானமாகத் தோன்றவில்லை. என் கோட்பாடுகள் வேறு. நிறையப் பணம் இருந்தால் நான் நிறையப் பயணம் பண்ணலாம் என்ற காரணத்துக்காகத் தான் நான் 'பணம் போதவில்லையே' என்று ஏங்கியிருக்கிறேன். நிறைய பயணம் பண்ண வேண்டும் எனக்கு! உலகம் முழுவதும். அதுவும் பணக்காரனாக அல்ல. பிரயாணியாக! மலைகள், தீவுகள், பாலைவனங்கள், காடுகள் என்று இயற்கையோடும், விதவிதவிதவிதமான கலாச்சரங்களின் மனிதர்களோடும் எனக்குப் பல கதைகள் பேச வேண்டும். இதற்காக நான் பணம் சேர்க்கிறேன். ஒரு வருடம் சேர்த்த பணத்தை ஒரு வாரத்திற்காகச் செலவழிக்கலாம். பயணத்துக்கு அதற்கான தகுதி உள்ளது!

நிறைய புத்தகங்கள் வேண்டும் எனக்கு. அலமாரியில் வைப்பதற்கல்ல. வாசிப்பதற்கு! இதற்கு இரவலாய்க் கிடைத்தாலும் போதும். வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல வேளையாக எனக்குப் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் வரவில்லை. நான் பார்க்கும் அதிசயக் கோணங்களை உலகிற்குக் காட்ட எனக்குக் காகிதமும் பேனாவும் போதும். DSLR சமாச்சாரங்கள் வாங்கும் செலவு குறைகிறது இல்லையா!

கார் எனக்குப் பழகவில்லை. பைக் என்றால் அலாதிப் பிரியம். பைக்கில் உலகம் சுற்ற வேண்டும். வெயிலில் கறுத்து, மழையில் நனைந்து, எதிர்க்காற்றைச் சுவாசித்து, சாலைகளோடு உரையாடிக் கொண்டே பயணம் பண்ண வேண்டும். அதற்கேற்றாற்போல் முதுகுக்கு இதமான பைக் வாங்க வேண்டும். முதுகெலும்பு எனக்கு மிகவும் முக்கியம். தவணை இல்லாமல் வாங்க வேண்டும்! பின் அதைப் பராமரிக்கவும் அதற்குப் பெட்ரோல் ஊற்றவும் பணம் வேண்டும் எனக்கு. அதற்காகச் சம்பாதிக்கவும் சேர்த்து வைக்கவும் தயார். அது திருப்தி!

இன்றைக்குச் சம்பளக்காரனுக்குத் தான் மரியாதை அதிகம். சுயமாய்த் தொழில் செய்பவன் முட்டாளாய்த் தான் பார்க்கப் படுகிறான். எதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தினாலோ, அல்லது ஏற்கெனவே தவணைக் குழாய்களுக்குள் சிக்கிக் கொள்வதாலோ, சுயதொழில் முயற்சிகள் சிங்க வாய்க்குள் தலையை விடுவது போல் பேசப்படுகிறது. நான் அப்படித் தலையைக் கொடுத்து மூன்று வருடங்களாகிறது. தலை இன்னும் கழுத்தோடு ஒட்டிக் கொண்டேதான் இருக்கிறது. இவர்கள் சொல்வது போல் இதில் ஒரு சாகச உணர்வு இருக்கத்தான் இருக்கிறது. தினசரி இரவு கழுத்தோடு தலை ஒட்டிக் கொண்டிருப்பதைத் தடவிப் பார்ப்பது மட்டுமே பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. இந்தத் தொழில் முயற்சியில் வெற்றி என்பது பணத்தாலும் அளக்கப் படும். அதற்காகச் சம்பாதிக்க வேண்டும். 'மாதம் இருபத்தைந்து நாள் இதைத் தான் செய்கிறேன் என்றால் இதற்குக் காரணம் பணமல்ல, பணமும்' என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என் தொழிலில் எனக்கு! 'மும்' என்பது முக்கியம். வெற்றியும், தோல்வியும், சவாலும், சாகசமும் நிறைந்த இந்த அனுபவம் தான் எனக்குப் பிரதானம்.

உலகம் சுற்றுதலும், இலக்கியம் படித்தலும், சுயதொழில் அனுபவங்களைத் துரத்துதலும் நான் உள்வாங்கிக் கொள்ளும் சந்தோஷங்கள். என்னில் இருந்து வெளிச்செல்லும் ஒன்று மற்றொருவரின் வாழ்வை அழகாக்கும் அனுபவத்தைச் சிறுவர்களோடு இருக்கும்போது உணர்ந்திருக்கிறேன். ஒரு சில தொண்டு நிறுவனங்களோடும் சமூக சேவகர்களோடும் இணைந்து மாற்றுக் கல்வி சார்ந்த துறைகளில் சிறுவர்களோடு வேலை பார்த்த அனுபவங்கள் தந்த உணர்வுகள் அவை. விலை மதிப்பற்ற அனுபவங்கள்! நம்மால் உருப்படியாக இதைச் செய்ய முடியும் என்ற எண்ணத்தையும், நாம் செய்ய முடியும் விஷயங்கள் இவர்களுக்கு மிகவும் தேவை என்ற எண்ணத்தையும் ஒருசேரத் தரும் அனுபவங்கள் இவை. இந்த ஒரு வாழ்க்கையில் என்னால் இயன்ற அளவுக்குப் பல சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்களை யோசிக்க வைத்து விட வேண்டும் எனக்கு.

இந்த ஐந்து விஷயங்கள்தான் என் வாழ்க்கையில் எனக்குப் பிரதானமானவையாகத் தோன்றுகின்றன. எனக்கான கோட்பாடு! இதையெல்லாம் இவர்களிடம் சொன்னால் எல்லாம் கேட்டுவிட்டு, 'நல்லாத்தான் பேசுறான்.. ஆனா இப்படி இருந்தா யாரு இவனுக்குப் பொண்ணு குடுப்பாங்க?' என்று என் அம்மாவைப் பயமுறுத்தி விடுகிறார்கள். அதுதான் இவர்களின் பிரம்மாஸ்திரம்! சிரித்துக் கொண்டே 'போங்கடா டேய்' என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

காரையும் வீடையும் விடக் கல்யாணம் வித்தியாசமானதாகவும் முக்கியமானதாகவும் தான் படுகிறது. ஆனால் எப்படிப்பட்ட கல்யாணம் என்பதுதான் என் கேள்வி. இவர்களின் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று, இவர்கள் சொல்லும் பாதுகாப்புகளை அடைந்து விட்டு, இவர்கள் சொல்லும் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது எனக்குச் சரி வராதே. காதலித்திருக்கலாம். எடுத்த முயற்சிகள் (பலவின்பால்) எவையும் கைகூடவில்லை. வாய்ப்பில்லை என்று சொல்வதை விட வக்கில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது வேறு கதை!

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் மேற்கோள் வரி ஒன்றை வாசித்தேன். 'நம்மை ஒத்த வயதுடையவர்கள் இயற்கை மரணம் எய்தத் தொடங்கும்போதுதான் மரண பயம் வருகிறது' என்று சொல்லியிருப்பார். கல்யாண விஷயத்தில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. கூடவே சுற்றிக் கொண்டிருந்த செவ்வாழைகள் எல்லாம் ஒவ்வொருவராய் கல்யாணப் பத்திரிகை அடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் 'அட! நமக்கான பெண் யார்?' என்ற கேள்வி ஆர்வத்தைத் தூண்டுகிறது. பயத்தைத் தூண்டும் நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது சந்தோஷம். கொடுப்பதற்கு என்னிடம் நிறைய அன்பு இருக்கிறது. எடுத்துக் கொள்ளத் தயாராய் வருபவள் என் கோட்பாடுகளைப் புரிந்து கொண்டு வந்தால் இருவரும் 'Happily ever after' என்று வாழலாம்.

என்னோடு கூடச் சேர்ந்து பயணிக்கவும், புத்தகங்கள் பற்றி உரையாடவும், என் தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமாகவும், சிறுவர்களையும் குழந்தைகளையும் பிடித்திருப்பவளாகவும் இருப்பது மட்டும் கூட முழுமை ஆகாது. இதே போல அவளும் ஒரு சுவாரசியமான பட்டியலை வைத்துக் கொண்டு அதை என்னோடு பகிர்ந்து வாழத் தயாராகவும் இருந்தால் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொண்டு நிறைவாக வாழலாம். தவணைக் குழாயும் காரும் வீடும் இன்ன பிற பகட்டுகளும் அவள் பட்டியலில் இல்லாமலிருக்கும் வரை இது மிகச் சாத்தியம். சிறகுகள் நறுக்கப்பட்ட ஜோடிக் கிளிகளாய்க் கூண்டில் வாழாமல், கூட்டுப் புறாக்களாய், காட்டுப் புறாக்களாய் சிறகுகள் விரித்து வாழ வேண்டும். அப்படி வாழக் கொஞ்சம் ரசனையும் சுயசிந்தனையும் வேண்டும். திமிரும் வேண்டும். பணிவும் வேண்டும். இவை எதையும் இழக்காமல் தொடரும் நிதானம் வேண்டும். இருவருக்கும்! கல்யாணம் அப்படி அமைந்தால் தான் இறைவன் கொடுத்த வரம்!

இந்தப் பதிவை இப்போது நான் விவாதமாக எழுதிவைக்கவில்லை. வாக்குமூலமாக எழுதி வைக்கிறேன். இந்தக் கோட்பாடுகளோடே வாழ்ந்து நான் முப்பதைத் தாண்டி விட்டால் போதும். அதன் பின் அதுவே பழகிவிடும். அதுவரை என்னை நானே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க உறுதி எடுக்கும் வாக்குமூலம் இது. சிலபல ஆண்டுகள் கழித்து இதிலிருந்து நான் பிசகி விட்டிருப்பதாய் உணர்ந்தால் சவரம் செய்து கொள்ளும் போது கண்ணாடியைப் பார்த்து என்னைக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்ள வேண்டும். மாறாக இதை நிகழ்த்திக் காட்டி விட்டால், அதை அவளுடன் சேர்ந்து ஒரு மலை முகட்டில் குளிருக்கு இதமாய்த் தேனீர் பகிர்ந்து கொண்டே கொண்டாட வேண்டும்.

அதுவரையிலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கலாம். 'போங்கடா டேய்' !

- மதி

கருத்துகள்

 1. Attagasam.nichayam ungal unarvai purindhu, unardhu vazha oruval yengo pirandhirukiraal. Matravargal koorum veen pechai satai kolamal inum pala sadhanai seidhu vazhvil valam pera en ulam kanidha valthukal. -Arjuna

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பர்களே.. இங்கே கருத்து சொன்னவர்கள் நல்ல விதமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். இந்தப் பதிவு தங்களைப் புண்படுத்தியதாகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் கூட சில நண்பர்கள் அழைத்துச் சொல்லி இருக்கிறார்கள். அந்த மதிப்பீடு அவரவரின் கோட்பாடுகளைப் பொறுத்தது. திணிக்கப்பட்ட ஒன்றை ஒத்துக் கொள்ளாமல் சுயமாகச் சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் அந்த வாழ்க்கை சந்தோஷமாகத் தான் இருக்கும். சிந்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் எனக்கு

  பதிலளிநீக்கு
 3. It is really wonderful. romba yadarthamana unmaiyai solli irukireergal. keep it up. life will be really happy for you. materials cannot give the happiness that the heart yearns for. some one like you have openly come out of this man made cucoon is a good thing. i bless you to get the right partner at
  the right time.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..