நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்
புவி ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் முதன் முதலில் தெரிந்து கொண்ட நாள் நினைவிருக்கிறதா? கொடுத்து வைத்த சில பேருக்கு அந்தக் கணம் பெற்றோர் மூலமாகவோ அண்ணன்/ அக்கா மூலமாகவோ, ஏதோ ஒரு கேள்வியில் முளைத்து ஓர் உரையாடலில் கிளைத்து நிகழ்ந்திருக்கலாம். அனேகம் பேர்க்கு அந்தக் கணம் ஆறாங்கிளாஸ் இயற்பியல் வகுப்பில் தான் நிகழ்ந்திருக்கும். அந்த நிகழ்வைக் கொஞ்சம் மனதின் முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். சர் ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்திருக்கும் படம் போட்ட புத்தகம். அந்த வகுப்பறை. அந்த இயற்பியல் ஆசிரியர். அன்று உங்கள் பெஞ்ச்சில் உங்கள் அருகில் உட்கார்ந்திருந்த மாணவன்/ மாணவி. அன்று நீங்கள் செய்யாமல் மறந்திருந்த கணக்கு வீட்டுப்பாடம். இன்னும் எவ்வளவு துல்லியமாக அந்த நாளை நினைவு கூற இயலுமோ முயற்சித்துப் பாருங்கள்.
நம் ஆசிரியர் மெதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார். 'ஒரு பந்தை மேலே தூக்கிப் போட்டா ஏன் அது எப்பவுமே கீழே வருதுன்னு யாராவது யோசிச்சிருக்கீங்களா?' யாரும் பதில் சொல்லி இருக்க மாட்டோம். அதிலிருந்து துவங்கி அந்த ஆப்பிள் மரத்தடியில் இருக்கும் மனிதரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். 'சர் ஐசாக் நியூட்டன் ஒரு நாள் ஆப்பிள் மரத்துக்கு அடில உக்காந்து புக் படிச்சிட்டு இருந்தார். அப்போ ஒரு ஆப்பிள் திடீர்னு அவர் தலை மேல வந்து விழுந்துச்சு.. உடனே அவருக்கு 'என்னடா இந்த ஆப்பிள் எப்பவும் கீழேயே விழுந்துட்டு இருக்கு; ஏன் மரத்துல இருந்து விழும்போது மேல போக வேண்டியதுதானே' அப்டின்னு தோணிச்சாம்' இந்த வசனம் வரையிலும் நம் ஒவ்வொருவரின் கதையிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பின் நம் ஆசிரியர் வாயில் இருந்து வந்திருக்கக் கூடிய வாக்கியம் அட்சரம் பிசகாமல் நம் அனைவரின் கதையிலும் இருக்கும்.
வாத்தியார் சொல்லியிருப்பார், 'நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம். ஐயா ஆப்பிள்ன்னு அதைச் சாப்பிட்டுட்டு விதையைத் தூக்கித் தூர எறிஞ்சுட்டு நம்ம வேலையைப் பாத்திருப்போம்'. உண்டா இல்லையா?
இன்று தற்செயலாக சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அறிவியல் விளக்க நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர நேரிட்டது. இதே கதை. இதே வசனம். முன்பு பெரிதாய்த் தோன்றியிருக்கவில்லை. இப்போது இந்த வசனம் என்னை எக்கச்சக்கமாக யோசிக்க வைத்து விட்டது.
இதற்கு முன் யோசித்துப் பார்த்திராத ஒரு அறிவியல் உண்மையைச் சிறுவர்கள் சிந்திக்கப் போகிற நாள். அதிலும் வறட்டுத் தனமான அறிமுகமாய் இராமல் அழகான ஒரு கதை மூலம் விளக்கிச் சொல்லக் கூடிய வெகு சில அறிவியல் விளக்கங்களில் ஒன்று. மனித வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு மனிதரை அறிமுகம் செய்து வைக்கப் போகிற தருணம். வரிசையாக இதெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் கூடவே 'அவர் மகான். அறிவாளி. ஆப்பிள் ஏன் கீழே விழுந்துச்சுன்னு யோசிச்சார். நம்மையெல்லாம் ரட்சித்து அருளினார். நாம முட்டாளுங்கதானே.. அப்படியெல்லாம் யோசிப்போமா' என்பது போல் இப்படியும் ஒரு வசனம். இந்தச் சுவாரசியமான கதையின் சாராம்சமே இது போல் ஒவ்வொரு சாதாரண நிகழ்வின் பின்னணியிலும் இருக்கக்கூடிய சில அடிப்படை அறிவியல் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளச் சிறுவர்களிடம் ஒரு அறிவார்வத்தைத் தூண்டி விடுவதுதான் என்பது என் கருத்து. அப்படியான ஒரு தருணத்தில் சிறுவர்களின் சிந்தனையை - சொல்லப் போனால் நம் சமூகத்தின் சிந்தனையையே - கொஞ்சம் மட்டம் தட்டி வைக்கும் இந்த வாக்கியம் வேதபோதனை போல வாய்வழியாகவே வழிவழியாகத் தொடர்ந்து இன்றும் ஆசிரியர் சொல்லும் சுய எள்ளல் துணுக்காக இருக்கிறது. ஏன்?
'ஒரு சின்ன விஷயம். அதுல கூட அது எப்படி நடக்குதுன்னு நியூட்டன் யோசிச்சதாலதான் அவரால இவ்வளவு முக்கியமான சாதனையைப் பண்ண முடிஞ்சது. இதே மாதிரி நீங்க கூட பல சமயம் சாதாரண விஷயங்கள் ஏன் நடக்குதுன்னு யோசிச்சுப் பாத்திருப்பீங்க இல்லையா..' என்று கேட்டால் குறைந்தது பத்து மாணவர்களாவது உள்ளுக்குள் 'ஆமால்ல' என்று சொல்லிக் கொள்வார்கள். தானும் ஒரு அறிவியல் மேதையும் ஒரே மாதிரி யோசித்து இருக்கிறோம் என்று உரைக்கத் துவங்கும் போதே அந்தச் சிறுவனுக்குத் தன்னைப் பற்றிய ஒரு உயர்ந்த மதிப்பீடு வந்திருக்கும். அவன் தொடர்ந்து தன் அறிவார்வத்தைப் பெருக்கிக் கொள்ள அது வழி செய்யலாம்.
இந்த வாக்கியமும் இதே போன்ற சிறு சம்பவங்களும் மாணவர்கள் மனதில் பதியப் பதிய, 'அவர் ஏதோ பெரிய ஆளு. கண்டுபுடிச்சிட்டார். அதை நம்மளைப் படிக்கச் சொல்லிச் சாவடிக்கிறாங்க. நம்மளுக்கு எது வரும்னு நமக்குத் தெரியாதா' என்ற எண்ணம் சீக்கிரம் மாணவர்களுக்கு வரத் தொடங்கலாம்.
சமீபத்தில் என் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களால் இப்போது கொஞ்சம் சிறுவர்களின் உலகிற்குள் வழியறிந்து பயணிக்க முடிகிறது. இந்தச் சின்ன வாக்கியம் ஏற்படுத்தின ஒரு பொறி பல எண்ணங்களைக் கிளறி விடுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் கல்வி முறையில் இந்தச் சுய எள்ளல் நிகழ்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. அடிக்கடி இந்த 'நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்' தான். மீண்டும் மீண்டும் நடக்க நடக்க இந்தக் கேள்வி 'நாம எல்லாம் இதைப் பண்ண முடியாது' என்ற எதிர்வினையைத் தவறாமல் நடத்திக் காட்டுகிறது. 'நாமளும் இதைப் பண்ணியிருக்கோமே/ பண்ணலாமே' என்றல்லவா கற்றலின் ஒவ்வொரு கணமும் நமக்குப் புரிய வைக்க வேண்டும்?
சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியர்களின் மொழி 90% சதவீதம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. 'நான் பாத்ததுலயே உங்களை மாதிரி மோசமான பசங்க யாருமே இல்லை', 'உங்க நல்லதுக்குத் தான் சொல்றோம். படிச்சாப் படி. இல்லைன்னா மாடு மேய்', 'அங்க என்ன சிரிப்பு.. எங்களுக்கும் சொல்லேன். நாங்களும் சேர்ந்து சிரிக்கிறோம்', 'நான் என்ன ஏதாவது ஜோக் சொல்றேனா.. ஏன் சிரிச்சிட்டே இருக்கே', 'கேக்கலே.. சத்தமாச் சொல்லு.. ஃப்ரெண்ட்ஸோட விளையாடும்போது மட்டும் அப்படிக் கத்துறே', உங்கிட்ட என்ன பேச்சு.. நீ உன் அப்பாவை வரச் சொல்லு நாளைக்கு' - எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் நம் ஆசிரியர்கள் இந்த வசனங்களைச் சொன்னது நமக்கு நினைவிருக்கும் இல்லையா. இன்னும் இதே வசனங்களைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கும் இந்த வசனங்கள் எல்லாம் காலாகாலமாகச் சொல்லப் பட்டு வரும் வெற்று வசனங்கள் என்பது புரிந்தே இருக்கிறது. காலப் போக்கில் இந்த வசனங்கள் தங்கள் அர்த்தத்தை இழந்து விட்டன. இன்று இவை வெறும் வார்த்தைக் குவியல்கள்தான். பதிவு செய்து வைக்கப்பட்டு ஒலிக்கும் இரயில் நிலையங்களின் 'கிருபயா தியான் தீஜியே' போல இவற்றிற்கு என்ன அர்த்தம் என்று யோசிக்கக் கூட ஒருவருக்கும் தோன்றாது. அது பாட்டுக்கு ஒரு ஓரமாகத் தொலைந்து விடும்.
பாடத்திட்டம் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது போல ஆசிரியர்களின் மொழியும் அவ்வப்போது மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். வழக்கமான விஷயத்தையே வழக்கமான வசனங்களைப் பயன்படுத்தாமல் சொன்னால் மாணவர்கள் அவற்றிற்கு மதிப்புக் கொடுப்பதை நானே கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன். அனுபவத்தில் பயன்படுத்த ஓரளவு மெனக்கெட்டு இருக்கிறேன். பல முயற்சிகள் வெற்றியைத் தந்திருக்கின்றன.
முடிந்த வரை மாணவர்களின் சுயமரியாதையை ஊக்குவிக்கும் மொழி ஆசிரியர்களிடம் புழங்கினால் பல பிரச்சினைகள் தானாகவே சரியாகலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நமக்கே தெரியாமல் தன்னைத் தானே தாழ்த்தி நினைத்துக் கொண்டு அதை நகைச்சுவையாக்கிச் சிரித்துக் கொள்ளும் விளையாட்டு வகுப்பறைகளில் இருக்கக் கூடாது. தன் இயலாமையை ஏற்றுக் கொள்வதே இந்த மொழியின் அடிப்படை. எந்த மாணவனும் எதையும் தன்னால் இயலாது என்று நினைத்து விடக்கூடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் அந்த வகுப்பின் இறுதியில் 'நீங்களும் இதே மாதிரி விஞ்ஞானியா வரணும்னு நினைக்கணும்' என்று சொல்லும் வாக்கியமும் பதிவு செய்யப்பட்ட பழைய தகடு போல் பயனற்றுப் போய் விடும்.
இனி வகுப்பறைகளில் உத்தமர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுத்த உடன் 'நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்' என்று ஒரு அற்பத் துணுக்கைச் சொல்வதற்குப் பதிலாக மாணவர்களிடமே 'நாமளா இருந்தா என்ன பண்ணியிருக்கலாம்' என்றோ 'நாமளும் இதே மாதிரி யோசிச்சிருப்போம் இல்லியா' என்றும் சொல்லிப் பார்க்கலாம். ஆசிரியர்கள் கவனித்தால் மகிழ்ச்சி !
- மதி
படம் : நன்றி : Tracy hunter
அடடா... ஆறாம் வகுப்பை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபாடத்திட்டம் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது போல ஆசிரியர்களின் மொழியும் அவ்வப்போது மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்//
மிகச் சரியான கருத்து
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
எப்போதும் அடுத்தவர்கள் நிலையில் நம்மை பொருத்தி + பொறுத்துப் பார்த்தால் என்றும் சந்தோசம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
கட்டுரையின் சாராம்சம் வித்தியாசம் .பாடத்திட்டம் பெரும்பாலும் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறிவிடும். ஆசிரியர்களும் சாதாரண மக்களில் இருந்து வந்தவர்களே. பெரும்பாலோர் சராசரிகளாத்தான் இருப்பார்கள். இது போன்று மாற்றி சிந்திப்பவர்கள் மிகக் குறைவானவர்களே!
பதிலளிநீக்குநன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி நண்பர்களே
பதிலளிநீக்குஇந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதன்முறையாக வந்தது. அந்த ஆசிரியைப் பெயர் கல்பனா. நன்றாக நினைவிருக்கிறது. "ஆப்பிள் கீழே விழுந்த என்ன பன்னியிருப்பீங்க?" என்று கேட்டுவிட்டு எங்கள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை, " சாப்பிட்டுருப்பீங்க, அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்" என்று பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். "அடேங்கப்பா.. எனக்கு ஆப்பிளே பிடிக்காது, நான் எப்படி அதை சாப்பிட்டிருப்பேன் என்று சொல்கிறார்கள்" இப்படியாக ஏதோ எண்ணிக்கொண்டிருந்து வகுப்பு ஓடியிருக்கும். இதெல்லாம் நினைவிருக்கிறதா? என்று கேட்க தோன்றும் பலருக்கு. அதற்குக் காரணம் பிற்பாடு நடந்த இந்த கூத்து தான்.
பதிலளிநீக்குself evaluation பகுதியில் இருந்து மட்டும் தான் கேள்விகள் வரும். அதற்கு முன்னமே ஆசிரியை நடத்த class work நோட்டில் "is was" மாறாமல் எழுதிவைத்துக்கொண்டு அதை அப்படியே விழுங்கி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டும். இது தானே நடக்கிறது ரொம்ப காலமாக. அந்த முறை தேர்வில், புதிதாக ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு பதில் எழுதாமலேயே அனைவருக்கும் மதிப்பெண். நான் மட்டும் சொந்தமாக ஏதோ எழுதிவைக்க, "அது self evaluation ல இல்லனு கூட உனக்கு தெரியல, வர வர நீ ஒழுங்காப் படிக்கறது இல்ல சுபாஷினி" என்று தொடங்கி திட்டி தீர்த்து, பக்கத்து வகுப்பு ஆசிரியையிடம் "பாருங்க இவள, இப்பவே கதை எழுதற எங்க போய் படிச்சு மார்க் வாங்கி உருப்பட போற" என்ற அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார். அது எனது படிக்கத் தகுதியில்லாத் தனத்தின் வெளிப்பாடகவே கருதப்பட்டது. ஒரு அவமானம் சின்னமாகவே என் மனதில் பதிந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் ஒருமுறை அந்த ஆசிரியைப் பார்த்த போது கூட இதை சொல்லி சிரித்தார்.
இந்த நிகழ்வுகளை நினைவூட்டியது தங்கள் பதிவு அண்ணா!!! :) :)
சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியர்களின் மொழி 90% சதவீதம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. 'நான் பாத்ததுலயே உங்களை மாதிரி மோசமான பசங்க யாருமே இல்லை', 'உங்க நல்லதுக்குத் தான் சொல்றோம். படிச்சாப் படி. இல்லைன்னா மாடு மேய்', 'அங்க என்ன சிரிப்பு.. எங்களுக்கும் சொல்லேன். நாங்களும் சேர்ந்து சிரிக்கிறோம்', 'நான் என்ன ஏதாவது ஜோக் சொல்றேனா.. ஏன் சிரிச்சிட்டே இருக்கே', 'கேக்கலே.. சத்தமாச் சொல்லு.. ஃப்ரெண்ட்ஸோட விளையாடும்போது மட்டும் அப்படிக் கத்துறே', உங்கிட்ட என்ன பேச்சு.. நீ உன் அப்பாவை வரச் சொல்லு நாளைக்கு' - எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் நம் ஆசிரியர்கள் இந்த வசனங்களைச் சொன்னது நமக்கு நினைவிருக்கும் இல்லையா.
பதிலளிநீக்கு