புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை - 2

நான் கையெழுத்திட்டுக் கொடுத்த முதல் பிரதி
ஜனவரி 1-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரும் என்று சொல்லி இருந்தேன். (முன் கதைச் சுருக்கம் வேண்டுவோர் இங்கே கிளிக்கவும்). தாமதத்திற்கு மன்னிக்கவும். டிசம்பர் 31-ஆம் தேதி நடு நிசியில் இதைப் பதிவேற்றலாம் என்று தட்டத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எங்கள் மொட்டை மாடி இலக்கியக் குழுவின் நண்பர்கள் புத்தாண்டு கொண்டாட வீடு புகவும் பதிவு கொஞ்சம் ஒத்திப் போடப்பட்டது. இந்த இடைப்பட்ட பத்து நாட்களில் ஒரு முறை காய்ச்சல் கண்டு எழுந்தேன், நண்பர்களுடன் இரண்டு நாள் நடைப் பயணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் குமார பர்வதத்தை டங்குவார் கழண்டு போக ஏறி இறங்கினேன், பிழைப்பின் நிமித்தம் வார நாட்களில் சீக்கிரம் உறங்கி விட்டேன். இந்த வெள்ளிக் கிழமை இரவுக்கு நன்றி.

ஜனவரி 1 2013- மாலை 3 30 மணிக்குச் சென்னை Express Avenue வணிக வளாகத்தில் புத்தக வெளியீடு. Express Avenue என்று முடிவெடுத்ததே கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முடிவெடுத்தது போலத்தான் நடந்தது. புத்தகத்திற்கான ஃபேஸ்புக் பக்கத்தில் சில இடங்களைக் குறிப்பிட்டு ஒரு இணைய வாக்கெடுப்பு நிகழ்த்தி அதில் பெருவாரியான மக்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஜன நாயக முறைப்படி வெளியீட்டிற்குத் திட்டமிட்டோம். சின்ன பட்ஜெட் வெளியீடு என்பதால் கீழ்க்கண்டவாறுதான் நிகழ்ச்சி நிரல் அமைத்திருந்தோம்.

\\ புத்தக வெளியீட்டின் நிகழ்ச்சி நிரல்

1. பரஸ்பர அறிமுகங்கள்
2. புத்தக அறிமுகம்
3. சீட்டு குலுக்கிப் போட்டு முதல் போணி செய்யும் நபரைத் தேர்ந்தெடுத்தல்
4. அசின் அம்பாசிடர் காருடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டது போல் புத்தகத்துடனும் நண்பர்களுடனும் மாறி மாறி ஃபோட்டோ எடுத்துக் கொள்ளல்
5. புத்தகம் பற்றிய கேள்வி-பதில்கள் உரையாடல்கள்
6. வேடிக்கை பார்ப்பதை மையமாகக் கொண்டு ஒரு சிறு விளையாட்டு
7. கை குலுக்கி விடை பெறுதல்

பி.கு: இது இலக்கியக் கூட்டமாகையால் சிற்றுண்டி உபசரிப்புகள் கிடையாது.. சிங்கிள் டீதான் ! தேனீர் குடிப்பதனால் உடல் நலத்திற்கு விளையும் நன்மைகள் பற்றிய விவாதம் ஒன்றும் நடைபெறலாம் \\



கிட்டத்தட்ட பதினைந்து நண்பர்கள் வருகை தந்திருக்க, அனைவரின் பெயர்களையும் சீட்டில் எழுதிப் போட்டு முதல் பிரதியை வெளியிடுபவரையும் பெற்றுக் கொள்பவரையும் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். தோழி அசோகவர்ஷினி வெளியிட தோழர் சிவசுப்பிரமணியம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். என் வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயத்தை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்த ராசியான கைகள் ! பரஸ்பர அறிமுகங்களும் குறும்பேச்சுகளும் முடித்து குறித்தபடி நடைபாதைக் கடையில் தேனீர் விருந்தையும் முடித்து விருந்தினர்களை வழியனுப்பி வைத்து இனிதே வெளியானது 'முதல் போணி'. வந்திருந்த அனைவருமே சிறப்பு விருந்தினர்களாக நடைபெற்ற ஒரே புத்தக வெளியீடு இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் என் பிற புத்தகங்கள் வெளியாகலாம். ஆகாமல் போகலாம். கைக்கு அடக்கமாக, முழுத் திருப்தியோடு, ரிஜிஸ்தர் ஆபீஸில் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடியைப் போல அதிகப் படாடோபங்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த வெளியீடு என்றும் என் மனதில் பசுமையாக நினைவிருக்கும்.



உடுமலை.காம், Flipkart உள்ளிட்ட சில புத்தக விற்பனைத் தளங்களில் புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்தோம். பிரபலமான கடைகளில் புத்தகங்கள் கிடைக்குமாறு செய்வதற்குப் போதிய தொடர்புகள் அப்போது இருந்திருக்கவில்லை. நமக்கு நாமே என்று இணையத்திலேயே கூவிக் கூவிப் புத்தகத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியப் படுத்திக் கொண்டிருந்தேன். நண்பர்கள் பலர் முதல் வாரத்திலேயே பிரதிகளை வாங்கி விட்டிருந்தார்கள். இவர்கள் புத்தகத்தில் உள்ள கதைகளை வாசிப்பதற்காகப் புத்தகம் வாங்கினவர்கள் இல்லை. என் கதைகள் புத்தக வடிவத்திலும் தங்கள் வீட்டு அலமாரியில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் வாங்கினவர்கள். எந்தப் புத்தகத்துக்கும் முதல் கட்ட போணி இவர்களால் தான் நடைபெறுகிறது. முதல் வாரத்திலேயே புத்தகப் பதிப்பிற்கு எனக்குக் கடன் தந்து உதவியிருந்த நண்பர்களுக்குச் சொல்லியிருந்தபடியே இலவசப் பிரதிகளைத் தபாலில் அனுப்பி விட்டிருந்தேன். என்னிடம் இருந்து இலவசப் பிரதிகள் வந்தாலும் சில நண்பர்கள் தங்கள் திருப்திக்குப் போணி செய்தே தீருவோம் என்று கூடுதல் பிரதிகளை இணையத்திலும் வாங்கி ஆச்சரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த நண்பர்கள் வட்டாரத்தில் இது ஒரு இலக்கிய நிகழ்வு அல்ல. அவர்களுக்கு இது ஒரு வாழ்க்கை நிகழ்வு. என்னோடும் என் எழுத்தோடும் நெருங்கிய அறிமுகமும் நட்பும் கொண்டிருந்தவர்கள் இவர்கள். என் புத்தக வெளியீட்டைத் தங்கள் வீட்டுக் கல்யாணமாகவே பார்த்த மனிதர்கள். இவர்களில் சிலர் பரவலாக வாசிப்பு அனுபவமும் பழக்கமும் உள்ளவர்கள். இன்னும் சிலர் வாசித்திருந்த தீவிர இலக்கியமே என் புத்தகமாய்த்தான் இருந்திருக்கலாம். சிலர் ஆங்கிலத்தில் வாசிக்கும் அளவுக்குத் தமிழை இன்னும் ருசி பார்த்திராதவர்கள். தமிழே தெரியாத சில நண்பர்கள் கூடப் புத்தகத்தை வாங்கினதெல்லாம் இந்த வாரத்தின் 'நண்பேண்டா' தருணங்கள். வாழ்த்துக்கள் செல்லிலும் இணையத்திலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு தோழி சொன்னது மட்டும் குறிப்பாக நினைவிருக்கிறது. "இது ஆரம்பம்தான். புஸ்தகம் வெளியே வந்திருச்சுன்னு ஜாலியா இருந்திராதே. இதுக்கு அப்புறம் நீ என்ன எழுதுறே எங்கே போறேன்னு பாக்கத்தான் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு" என்று சொல்லியிருந்தாள். மிக உண்மையான வார்த்தைகள்!

இணையத்தில் மட்டுமே முழுக்க முழுக்க விற்பனை செய்வதில் ஒரு சிறு பிரச்சனை இருக்கிறது. பெரும்பாலும் தமிழில் புத்தகங்கள் வாங்குவோர் இன்னும் இணையத்திற்கு வரவில்லை. புத்தகக்கடைகளையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆங்கிலப் புத்தகங்களில் இந்த நிலை வேகமாக மாறி வருகிறது. தமிழில் சூடு பிடிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம். இது நம் சந்தையை நாமே சுருக்கிக் கொள்வது போலத்தான். ஜனவரி மாதம் ஆகையால் அப்போது பலரும் என்னிடம் " புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகம் கிடைக்குமா" என்று கேட்டார்கள். ஏதோ அறியாமையால் அதற்கெல்லாம் ஏற்பாடே செய்யாமல் விட்டு விட்டிருந்தேன்.

500 பிரதிகள் முதல் பதிப்பில் வெளியிட்டிருந்தோம். இயல்பிலேயே நான் ஒரு பயங்கர நன்னம்பிக்கைவாதி (optimist என்பதற்கு 'உகமையன்' என்ற வார்த்தையைத் தருகிறது கூகுள். நல்லா இருக்குல்ல!) என்பதால் கொஞ்சம் அதிகமாகவே பிரதிகள் விற்பனையாகும் என்று மனக்கணக்கிட்டிருந்தேன். எழுத்தாளனுக்கும் பதிப்பாளனுக்கும் இந்த இடத்தில் ஒரு வித்தியாசம் வருகிறது. எழுத்தாளன் தன் புத்தகத்தை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்படுவான். பதிப்பாளன் தன் புத்தகத்தை நிறைய பேர் வாங்க வேண்டும் என்றே பிரதானமாய் ஆசைப்படுவான். இந்தக் கதையில் இரண்டு கதாபாத்திரங்களிலுமே நான் நடிக்க நேர்ந்ததால் என் புத்தகங்களை நிறைய பேர் 'வாங்கி' வாசிக்க வேண்டும் என்று விழைந்து கொண்டிருந்தேன்.

இங்குதான் இரண்டாம் கட்ட விற்பனை வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு நண்பர்களாய் இருந்து என் எழுத்திற்குப் பெரிய அளவில் அறிமுகமாகி இருந்திராதவர்கள் என் புத்தகத்தை வாங்கத் தொடங்கினார்கள். முதல் கட்ட விற்பனை எப்படியும் நடந்து விடும். மூன்றாம் கட்ட விற்பனை என்னைக் கூட அறிந்திராதவர்களால் நடைபெறுவது. இந்த இரண்டாம் கட்ட விற்பனையில்தான் ஃபேஸ்புக் மிகவும் கை கொடுத்தது.

ஃபேஸ்புக்கில் புத்தகத்தின் பக்கத்துக்கு அதிக 'லைக்'குகள் வந்து கொண்டே இருந்தன. என் நண்பர்கள் மூலமாக அவர்களின் நண்பர்கள் பலரும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஒரே பிரதியைப் பலரும் பகிர்ந்து வாசித்துப் பாராட்டிக் கொண்டிருந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்தன. 'என் அலுவலகத்தில் உன் புத்தகம் மிகப் பிரபலமடைந்து விட்டதடா. ஒவ்வொருவராக உன் புத்தகத்தை வாசிக்க வரிசையில் இருக்கிறார்கள். நீங்கள் வாசித்ததும் அடுத்து எனக்குத்தான் என்று துண்டு போட்டு இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று ஒரு நாள் ஒரு நண்பர் குறுஞ்சேதி அனுப்பி இருந்தார். முன்பே சொன்னது போல வெறும் எழுத்தாளனாக மட்டும் நான் இதற்குச் சந்தோஷப் பட்டிருக்கலாம். பல பேர் வாசிக்க ஆர்வமாக இருக்கிற இடத்தில் ஒரே ஒரு புத்தகம் தான் விற்க முடிந்திருக்கிறது என்று பதிப்பாளன் பாத்திரம் கொஞ்சம் வருத்தப்பட்டதெல்லாம் நேர்மையான உண்மை!

'லைக்' போடுகிறவர்கள் புஸ்தகத்தை வாசித்து விட்டுத்தான் போடுகிறார்களா என்று கண்டுபிடிப்பதே கடினம்தான். அதிலும் வாங்கி விட்டு 'லைக்' போடுகிறார்களா என்று வேறு ஆராய ஆரம்பித்தால் பிரச்சனைதான் :-)

மூன்றாம் கட்ட விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. இந்தக் கட்டத்தில்தான் வியாபாரம் பிரதானமாகிறது. எப்படிப் பார்த்தாலும் நம்மை ஒரு தனி மனிதனாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகபட்சம் ஆயிரம் பேர்தான். அவர்களைத் தாண்டிப் புத்தகம் ஊடுருவ ஆரம்பிக்கையில்தான் ஒரு புத்தகம் பிரபலமடைகிறது. பல்லாயிரங்களில் பிரதிகள் விற்பனை ஆகின்றன. புத்தகம் பரவலாக விவாதிக்கப் படுகிறது. வாங்கப் படுகிறது. பெரிய பெரிய பதிப்பகங்கள் மூலம் அறிமுகங்கள் கிடைக்கப் பெறுபவர்களுக்கே இந்த மூன்றாம் கட்ட விற்பனை சவால்தான்! நாம் கத்துக் குட்டிதானே ! மூன்றாம் கட்டத்தில் விற்பனை கொஞ்சம் சுமார்தான். பெரும்பான்மை வாசகர் வட்டத்திற்கு என் புத்தகத்தை நான் விரும்பிய அளவுக்குக் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பெரிய திட்டம் கைவசம் இல்லை. ஒரு விஷயம் எனக்கு மெது மெதுவாக உரைக்க ஆரம்பித்தது. இரு கதாபாத்திரங்களையும் திருப்திப் படுத்தப் பார்த்தால் கொஞ்சம் சங்கடம் தான் என்று மெதுவாகப் புரிந்து கொள்ளத் துவங்கினேன். விற்பனை பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கப் பழகிக் கொண்டேன். அதன் பின் வந்தது எழுத்தாளனாக மட்டும் புத்தகத்தை அணுகிய காலம்.

வாசகர்களிடம் இருந்து வந்த பின்னூட்டங்கள் அதிக ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன. புத்தகத்தில் 106-ஆம் பக்கத்தில் ஒரு மின்னல் போன்ற பெண்ணைப் பற்றி எழுதியிருப்பேன்.. என் கைக்கிளைக் காதல் கதை! அப்பா வாசித்துவிட்டு என்ன கேட்கப் போகிறாரோ என்று ஆர்வமாக நகம் கடித்துக் கொண்டிருக்கையில் ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் விட்டுவிட்டார்! மற்றபடி புத்தகத்தைக் கையில் ஏந்தி மிகவும் பெருமைப் பட்டிருப்பார். என் தாத்தாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட கதை ஒன்று புத்தகத்தில் இருக்கும். பதிமூன்று வயதில் பிழைப்பதற்காகக் கள்ளத்தோணி ஏறி இலங்கைக்குச் சென்ற மனுஷர் அவர். பின் சிறுகச் சிறுக வளர்ந்து நாடு திரும்பி, வியாபாரம் செய்து, குடும்பம் நடத்தி, வயது முதிர்ந்து இப்போது தினமும் தாமிரபரணி ஆற்றில் குளித்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தபோதே அதிகமாகச் சந்தோஷப்பட்டார். புத்தகப் பிரதி ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். நாளிதழில் ராசி பலன் வாசிப்பதைத் தவிரப் பெரிதாக வேறு எதையும் வாசிக்காதவர். தன் கதையைப் புத்தகத்தில் வாசித்து விட்டு என்னை அழைத்துத் தழுதழுத்த குரலில் நன்றியும் வாழ்த்துக்களும் சொன்னது மறக்க முடியாத தருணம். அவரைக் கதாநாயகனாக்கிக் கதை செய்ததற்காய் நான் நிஜமாய் அன்று பெருமைப் பட்டேன். முதல் ரேங்க் வாங்கின சின்னக் குழந்தை போல் தாத்தா அந்தப் பிரதியை எப்போதும்  கையிலேயே வைத்திருந்து சில நாட்கள் பார்ப்பவர்கள் பலரிடமும் காட்டிக் கொண்டு என் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு சின்ன நிகழ்வு அந்த நாளையே அழகாய் மாற்றும் வண்ணமான சம்பவங்கள் புத்தகத்தால் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தன. சில வாசக நண்பர்களிடம் இருந்து கைப்பட எழுதிய கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் வந்து கொண்டிருந்தன. சில நண்பர்கள் இணையத்தில் என் புத்தகத்துக்கு நேர்மையான நல்ல விமர்சனங்கள் எழுதினார்கள். சில நண்பர்கள் புத்தகத்தில் தங்களுக்குப் பிடித்த பகுதிகள், மொக்கை என்று தோன்றிய பகுதிகள் எல்லாவற்றையும் மேற்கோள் காட்டிப் பேசினார்கள். இடையில் ஒரு நாள் திடீரென்று Flipkart இணையதளம் Tamil Bestsellers list-இல் 'முதல் போணி'யையும் காட்டிக் கொண்டிருந்தது. அந்தத் தளத்திலேயே தமிழ் விற்பனைகள் குறைவுதான் என்றாலும் அது ஒரு மாதிரி சந்தோதமாக இருந்தது. Screenshot எடுத்து வைத்துக் கொண்டேன். நண்பர்கள் சிலர் வீட்டுக்குப் போகும்போது அவர்களின் பெற்றோர் 'ஏம்ப்பா இவருதான் அந்தப் புஸ்தகம் போட்ட தம்பியா' என்று விசாரித்தார்கள். என் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட 'புகற்சி பதிப்பகத்தார்' என் நேர்காணல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டார்கள். சுவாரசியமான ஒரு கேள்வி-பதில் தொகுப்பு அது. சில காலமாகவே வலையில் எழுதிக் கொண்டிருந்தாலும் கடந்த வருடத்தில்தான் இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு எழுத்தாளன் என்ற ஒரு புதிய அடையாளம் கிடைத்திருந்தது.

அந்த Flipkart screenshot

இந்தப் புத்தகத்தின் பதிப்புச் செலவுக்காக நண்பர்களிடம் வாங்கியிருந்த கடன்களை மாதாமாதம் சிறுகச் சிறுக அடைத்துத் திட்டமிட்டபடி 2013-குள்ளாகவே முழுமையும் திருப்பிக் கொடுத்துவிட்டது தனிப்பட்ட அளவில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த விஷயம். புத்தக விற்பனையால் பெரிதாகச் சம்பாதிக்காமல் விட்டது பணத்தை மட்டும்தான்! புது நட்பு, தன்னம்பிக்கை, புது வாசகர்கள் என்றெல்லாம் சந்தோஷமாகச் சம்பாதித்து விட்டிருக்கிறேன் 'முதல் போணி'யால்.

தற்போது நிலைமை என்ன? கிட்டத்தட்ட 300 பிரதிகள் இன்னும் விற்பனையாகவில்லை. புத்தகத்திற்கு அதிக விலை வைத்து விட்டிருக்கலாம்; அல்லது போதிய தேவை இருந்த இடங்களில் புத்தகம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்; அல்லது புத்தகம் வெளியே பெரிதாய்த் தெரியாமலேயே போய் இருக்கலாம்; அல்லது எல்லாமுமாக இருக்கலாம். முதல் இரண்டு கட்டங்களிலும் என்னால் 150 புத்தகங்களைத் தான் விற்க முடிந்திருக்கிறது. மீதிப் பிரதிகளை இப்போது என் வீட்டில்தான் வைத்திருக்கிறேன். பல நாள் உழைப்பிலும் கனவிலும் உருவான பிரதிகள் அட்டைப் பெட்டிக்குள் அடைந்திருப்பது சின்ன வருத்தம்தான். இந்தப் பிரதிகளும் ரசனையுள்ள நல்ல கரங்களுக்கும் நல்ல அலமாரிகளுக்கும் போய்ச் சேர்ந்தால் மிகத் திருப்தி அடைவேன். அதற்காகச் சின்னச் சின்ன முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2014 சென்னை புத்தகக் கண்காட்சியில் என் புத்தகம் கிடைக்கப் பெற முயற்சித்ததில் சில புத்தக நிலையங்களில் என் புத்தகம் கிடைக்கப்பெறுமாறு செய்ய முடிந்திருக்கிறது :-) புத்தகக் கண்காட்சியில் என் புத்தகத்தை வாங்க விரும்பினால் இங்கே வாங்குங்கள்.


இது தவிர, நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பெற நீங்கள் விரும்பினாலும் எனக்கு gomskgs@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். தபால் செலவுக்கும் புத்தகத்துக்கும் சேர்த்து ஒரு 100 ரூபாயை என் வங்கிக் கணக்குக்கு நீங்களே அனுப்பி விடலாம். என் வங்கிக் கணக்கு விவரங்கள் :

Acc name: Gomathi Shankar K
Acc no. : 20085977089 (SBI Chromepet branch)
IFSC Code : SBIN0013383

இரண்டாம் புத்தகம் எப்போது எழுதப் போகிறீர்கள் என்று சிலர் அடிக்கடி கேட்டதுண்டு. இப்போது அதற்கு ஒரு கரு கிடைத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் வாழ்வைப் பற்றிப் பெரியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய புத்தகம் அது. இடையிடையே பதிப்புலகம் பற்றியும் புரிந்து கொள்ள முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். சுவாரசியமாக இருக்கிறது. அடுத்த புத்தகம் வெளியாகும்போது எழுத்தாளனாக மட்டும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் மூன்றாம் கட்ட விற்பனை எப்படி இருக்கப் போகிறது என்பது சுவாரசியமான கணிப்புதான். பார்க்கலாம்.

- மதி

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..