எல்லோருக்கும் கிடைக்காத இரண்டு நண்பர்கள்

படம் : டிஜிட்டல் கேயாஸ் (நன்றி)
நண்பர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார். நல்ல விஷயம்தான்! பெண்ணின் வீட்டிலும் சம்மதம் சொல்லி விட்டார்கள். எந்த விதத் திருப்பமும் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதையில் திடீர் முடிச்சாக நண்பரின் அப்பா கொஞ்சம் முகம் சுளித்தார். முடிச்சை எப்படி அவிழ்ப்பது என்று நண்பர், நான், அவரின் அம்மா மற்றும் காதலி ஆகியோர் கூடி யோசித்த போது கிடைத்த ஞானம் தான் இந்தப் பதிவின் மூலம். பிரச்சனை என்னவென்றால் நண்பரின் அப்பா நண்பரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் நட்பான அல்லது சகஜமான அணுகுமுறையை எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்காத பட்சத்தில் 'இன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று நண்பர் அறிவித்த சமயமும் அறிவித்த முறையும் அப்பாவிடம் தனக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் உறவுமுறை வெறும் பரிவர்த்தனைகளின் அளவில்தான் இருக்கிறதோ என்று எண்ண வைத்திருக்கிறது. பணம் வேண்டும் போது சம்பாதித்துத் தரவும், வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணைக்கு வரவும், உலகம் புரியாத வயதில் பிடித்துக் கொள்ள விரலைக் கொடுக்கவும், முதிர்ந்த காலத்தில் கௌரவமான இடைவெளியில் ஒதுங்கிக் கொள்ளவும் மட்டுமே ஆனதா தன் பங்கு என்ற குழப்பம் அவருக்கு. நண்பர் தன் அப்பா மேல் மிக உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறவர்தான். அப்பாவும் தன் மகன் மேல் மிக உயர்ந்த அன்பைக் கொஞ்சம் நாசூக்கான இடைவெளியில் வைத்திருக்கிறவர்தான். ஆனாலும் இவர்களுக்குள் ஒரு கருத்துப் பரிமாற்ற இடைவெளி எங்கோ எப்போதோ நுழைந்து மறைவாகவே வளர்ந்து விட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது.

இதே சமயத்தில் யதேச்சையாக வேறு சில நண்பர்களோடான உரையாடல்களிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான கருத்துப் பரிமாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க நேர்ந்தது. எனக்குக் கொஞ்சம் நெருடலாக உறைத்த ஒரு உண்மை - எம் தலைமுறை இளைஞர்கள் பெற்றோருடன் பேசுவதில்லை! பேசக் கூடாது என்று இல்லை. பேசுவதில்லை. அவ்வளவுதான்.

'என்னடா பேசுறது.. அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஃபோன்ல பேச முடியலடா.. நல்லா இருக்கீங்களா.. நல்லா இருக்கேன் | சாப்பிட்டாச்சா... சாப்பிட்டாச்சு | வேலைக்குப் போனியா.. வழக்கம் போல | பணம் ஏதாவது வேணுமா (அல்லது) வேணும்.. வேண்டாம் (அல்லது) அனுப்பி வைக்கிறேன் | இதுக்கு மேல எப்பயாவது மழை பெய்யுதா | இல்லேன்னா இப்போ சமீபமா இன்னைக்கு எவ்ளோ நேரம் கரண்ட் இருந்துச்சு.. இதுக்கு மேல என்னடா பேச முடியும் அப்பா அம்மாவோட' என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டார். அவரும் நானும் சந்தித்துக் கொள்ளும் சமயங்களில் வெகு சாதாரணமாக மணிக்கணக்கில் எங்களால் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த நண்பருக்கும் தன் பெற்றோர் மேல் மிகுந்த அபிமானம் உண்டு. ஆனாலும் இதற்குக் காரணம் என்னவென்று அலசினால் 'சின்னப் பிள்ளையில இருந்து இப்படியேதானே பழகி இருக்கோம். இதைச் சாப்பிடுன்னாங்க.. சாப்பிட்டோம். படின்னாங்க.. படிச்சோம்.. இப்போ திடீர்னு வா பேசலாம்னா வர மாட்டேங்குதேடா' என்றுதான் சொல்ல முடிந்தது அவரால்.


பெரும்பாலும் நாம் இப்போது பெற்றோருடன் வசிப்பதில்லை. வெகு சிலரே தினசரி பெற்றோருடன் செல்லிலாவது பேசுகிறோம். கடிதம் கிடிதமெல்லாம் 'ஒளியும் ஒலியும்' முடிந்ததும் முடிந்து விட்டது. மாதம் ஒரு முறை ஊருக்குப் போகிறோம். வீட்டில் பையை வைத்து விட்டு, அதனுள்ளிருந்து ஒரு மூட்டை அழுக்குத் துணிகளை அம்மாவிடம் துவைக்கக் கொடுத்து விட்டு, நன்றாகச் சாப்பிட்டு விட்டு ஊரில் உள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்று விடுகிறோம். ஒரே வீட்டில் இருப்பவர்களிடம் கூட பேச்சு குறைவுதான்!

வெகு சிலரைத் தவிர நம் தலைமுறையினர் பலருக்குத் தங்கள் பெற்றோர் மேல் வெறுப்போ காட்டமோ ஒன்றும் கிடையாது. அதே சமயம் ஒரு நட்பான உறவுமுறையும் இருப்பதில்லை போலத் தோன்றுகிறது. பலரும் அவர்களைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறோம். சம்பாதிப்பதில் அவர்களுக்காக ஒரு கணிசமான தொகையைக் கணக்கில் வைத்திருக்கிறோம். ஆனால் எங்கோ ஒரு நூலிழையில் பரிவர்த்தனைகளைத் தாண்டிப் பேச மறந்து விடுகிறோம். விட்டால் வாய் கிழியப் பேசுபவர்கள்தான்- நாமும் சரி அவர்களும் சரி! விதி.. அவர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருப்பதில்லை. நமக்கு நேரில் பேச நேரமில்லை. எதையோ இழக்கிறோம் என்று உணர்ந்து கொள்ளும் தருவாயில் எங்கே ஆரம்பிப்பது என்றும் தெரிந்து தொலைவதில்லை. திடீரென்று போய் ஒரு நாள் அப்பாவிடம் பணம்/ பணி/ உடல் நலம் இவை தவிர்த்து வேறு எதையாவது பற்றிப் பேசுவது என்பது ஒரு பெண்ணிடம் திடீரென்று போய் 'உங்களுக்கு இந்த மஞ்சள் சுடிதார் அழகா இருக்கு' என்று சொல்வதை விடக் கூச்சமாக இருக்காதா! அவருக்கும் வேடிக்கையாகத் தானே இருக்கும்.

ஆக மொத்தத்தில் இந்தப் பிரச்சனையால் நம் வீட்டிலேயே நமக்குக் கிடைக்கவிருக்கும் இரண்டு அற்புதமான நண்பர்களை நாம் இழக்கிறோம் அல்லது அடைய முயற்சிக்காமலே விட்டு விடுகிறோம். இந்த உறைந்த பனிக்கட்டியை உடைக்க எவரும் முன்வராமலே போய் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்க வேண்டியதுதான். அவர்கள் தரப்பில் முதல் அடி எடுத்து வைக்கட்டும் என்றெல்லாம் சொல்வது 'As I am suffering from fever' காலத்துச் சாக்குபோக்கு. பூனைக்கு மணி கட்ட முடியுமா! யோசித்துப் பார்த்தேன். இன்னின்ன விஷயங்களையெல்லாம் பெற்றோருடன் பேச முடியும் என்று தோன்றுகிறது. முயற்சி திருவினையாக்கலாம்!

உத்தியோகமும் உத்தியோகம் சார்ந்த விஷயங்களும்: 'அப்பா என்ன பண்றார்' என்று வகுப்பில் ஆசிரியர் கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று பழகி வைத்திருப்போம். அப்போது அது ஒரு தகவல். அவ்வளவுதான். இப்போது அனேகமாக நாமும் ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டிருப்போம். இப்போது இது அனுபவம்! நம் அனுபவம் நமக்கு அத்துப்படி. அவரின் அனுபவம் எப்படி இருந்திருக்கும். குளிர் அறைகளில் கணிப்பொறித் திரைகளின் முன் உட்காராமல் அவர் காலத்தில் உத்தியோகங்கள் எப்படி இருந்திருக்கும்? கடன் அட்டைகள் பரவலாக இல்லாத காலத்தில் எப்படிச் சிறு முடைகளைச் சமாளித்திருப்பார்? தந்தை-மகன் ரீதியில் அல்லாமல் வெகு சகஜமாக இரு நண்பர்கள் போல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் பெரும் வாய்ப்பளிப்பது இந்த விஷயம்தான். குறிப்பாக உத்தியோக ஸ்தலத்தில் காணும் முட்டாள்கள் அல்லது சிடுமூஞ்சிகளைப் பற்றிப் பேசுவது உசிதம். இருவர் காலத்திலும் இந்தக் கதாபாத்திரங்கள் கண்டிப்பாக இருந்திருக்கும். அலுவலக அரசியல் பற்றியும் குறை சொல்லும் தொனியில் இல்லாமல் கேலிக்கூத்துகளைப் பேசுகிறாற்போல் பேசலாம். அலுவலக நண்பர்கள், உணவு வேளைக் கிசுகிசுக்கள் என்று நட்பு வளர வளரப் பேசலாம். அவர் பார்த்த வேலையின் நுணுக்கங்களைக் கேட்கலாம். பள்ளிக் கூடத்துக்கு மணியடிக்கும் வேலை பார்த்திருந்தால் கூட அதில் பல நுணுக்கங்களைச் சந்தோஷமாகச் சொல்வார். பெரும்பாலும் அவர்களின் தலைமுறையில் ஓய்வு பெறும் வரை ஒரே வேலையில் இருந்திருப்பார்கள். சரியாகப் புகை போட்டால் பழுத்த சுவாரசியமான கதைகள் கிடைக்கும். சில வீடுகளில் அம்மாக்களும் உத்தியோகத்தில் இருந்திருக்கலாம். உத்தி ஒன்றுதான்.

அடுக்களையும் அடுக்களை சார்ந்த விஷயங்களும்: சமைக்கத் தெரியுமா? குறைந்தபட்சம் வெங்காயம் உரிக்கத் தெரியுமா? அம்மாக்களுடன் நட்பாக வேண்டுமானால் முதலில் அடுக்களைக்குள் நுழைய வேண்டும். நம் போல் பேச்சிலர்கள் இதைச் செய்வதன் மூலம் அவசரத்துக்குக் கொஞ்சம் ரசம் வைக்கக் கற்றுக் கொள்ளுதல் கூடுதல் லாபம். அடுக்களை என்பது மிக அந்தரங்கமான ஒரு இடம். சரியான கடவுச்சொல் இல்லாமல் அங்கே சகஜ அனுமதி கிடைப்பது அரிது. எப்படிச் சமைப்பது என்று கற்றுக்கொள்ளத் துவங்கலாம். நம் அறியாமையும் அம்மாக்களின் ஆளுமையும் வெளிப்படும் அற்புதமான அனுபவம் அது. படிப்படியாகப் பேச்சிலர் சமையலில் குக்கரை வைத்து விசில் வைக்க மறந்த கதை, தயிர் சாதத்தை இட்லிப் பொடியில் பிசைந்து சாப்பிட்ட கதை எல்லாம் சொல்லலாம். கொஞ்சம் ஞானம் பெற்ற உடன் அருகில் சூடான கரண்டிகள் இல்லை என்று உறுதி செய்து கொண்டு சமையல் விமர்சனங்கள் செய்யத் துவங்கலாம். ஒரு நாள் நான் சமைத்துத் தருகிறேன் என்று அறிவிக்கலாம். பெரும்பான்மை அம்மாக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் சந்தோஷப் படுவார்கள்.

வரலாறும் வரலாறு சார்ந்த விஷயங்களும்: அப்பா அம்மாவின் சின்ன வயசுக் கதைகளைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமாகச் சொல்வார்கள். எங்கோ ஒரு பெட்டிக்குள் இருந்து தான் டவுசர் போட்டுத் திரிந்த நாட்களின் பழுப்புப் புகைப்படத்தை எடுத்து வருவார் அப்பா. கல்யாணத்துக்கும் முன்னால் தரகர்களுக்குத் தருவதற்கென்று முழு அலங்காரத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படம் நிச்சயமாக அம்மாவிடம் இருக்கும். அவர்கள் பெரும்பாலும் பல சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்திருப்பார்கள். அந்தப் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா அத்தை மாமாக்களில் எத்தனை பேர் சிறு வயதில் இருட்டில் ஒண்ணுக்குப் போகப் பயந்தவர்கள், எத்தனை பேர் இரட்டைச் சுழிச் சேட்டைக்காரர்கள் என்று தெரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும். உறவுக்காரர்களைப் பற்றியும் ஒரு புதுக் கண்ணோட்டத்தைத் தரவல்ல விஷயங்கள் இவை. அவர்களின் பால்யகாலம் கட்டாயம் நமது பால்ய காலத்தை விட வெகு சுவாரசியமானதாகவே இருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னேறினால் அவர்களின் நினைவுக் கிடங்குகளைத் திறந்து வைத்துக் கொண்டு முன்னோர்களின் பெயர்களைத் திரட்டலாம். எல்லோருமே குறைந்தபட்சம் ஐந்து ஆறு தலைமுறைகள் முன்னால் செல்ல முடியும். அங்கிருந்து ஆரம்பித்து ஒரு குடும்ப மரத்தை வரைய முற்பட்டால் கடைசியில் எதிர் வீட்டு ஃபிகர் உங்களுக்கு இரண்டு விட்ட மாமன் மகளாக அமையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

படம் : யோகேந்திரா174 (நன்றி)

மழலையும் மழலை சார்ந்த விஷயங்களும்: அப்பா அம்மா இருவருமே சந்தோஷமாகப் பேசக் கூடிய இன்னொரு தலைப்பு - நாம் தான். நம் பால்ய காலத்தைப் பற்றி அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்பது இன்னும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். சேட்டை தாங்காமல் உங்களையும் உங்கள் அம்மா அடுக்களையில் இருக்கும் சமயங்களில் ஜன்னலில் கட்டி வைத்திருக்கலாம். முதல் முதலில் குப்புற விழுந்த நாளை ஒட்டி அண்ணாக்கயிறைத் தவிர்த்து வேறொன்றும் தரிக்காமல் முக்தி நிலையில் நாம் இருக்கும் புகைப்படம் ஒன்று கட்டாயம் எங்காவது இருக்கும். இடையில் நம் கண்ணில் பட்டுக் கிழிக்கப்படாமலோ பதுக்கப் படாமலோ இருந்தால்! நம் உடன்பிறந்தோரை நாம் கடித்து வைத்ததும் கண்டது கழுதையையெல்லாம் கேட்டு அரண்டு புரண்டு அழுததும் என்று நாமே மறந்து போன பல விஷயங்கள் வெளிவரலாம். விவரம் அறியாத வயதில் நாம் 'இது என்ன அது என்ன' என்று கேட்ட பல மழலைக் கேள்விகள் அவர்களுக்கு நேற்று நடந்தாற்போல் நினைவிருக்கும். இதையெல்லாம் பேசும்போது ஒரு அக்கா மகளோ அண்ணன் மகனோ தற்கால மழலையாகக் கூட இருந்தால் இன்னும் சிறப்பு. அட! என் சொந்தக் குழந்தையே இருக்கே என்று சொல்கிறவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு இது இளைஞர்களுக்கான பதிவு என்று மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறேன். நீங்கள் வேண்டுமானால் இந்தப் பதிவை உங்கள் பிள்ளைகளுக்கு எழுத்துக் கூட்டி வாசித்துக் காட்டலாம். மற்றபடி மன்னிக்கவும் :-)

டிவியும் டிவி சார்ந்த விஷயங்களும்: கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு அவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்களுடன் சேர்ந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். சிற்சில சீரியல்கள்/ ரியாலிட்டி ஷோக்களைப் பொறுத்தவரையில் விதிவிலக்குகள் எடுத்துக் கொள்ளலாம். மனித மூளையும் பஞ்சு போன்ற மென்மையானதுதான்! பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய வஸ்து. மற்றபடி அம்மாக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல்களின் கதைச் சுருக்கங்களைக் கேட்டுப் பார்க்கலாம். பல அம்மாக்கள் பிள்ளைகளிடம் சகஜமாகச் சொல்லக் கூச்சப்படும் அளவில்தான் இக்கதைச் சுருக்கங்கள் இருக்கின்றன. அதையும் மீறிப் பேசிக் கொள்ளும் நிலை வந்து விட்டால் நட்பு பலப்படுகிறது என்று அர்த்தம். வெறுமனே குறை சொல்லாமல் சிலபல நல்ல நிகழ்ச்சிகளை அவர்களோடு சேர்ந்து பார்க்கலாம். அல்லது பொதிகை டிவி/ முரசு டிவி/ டிஸ்கவரி தமிழ் போன்ற சில சேனல்களை ஒன்றிரண்டு நாட்கள் அடம்பிடித்து அவர்களைப் பார்க்க வைக்கலாம். எங்கே துவங்குவது என்று தெரியாவிட்டால் பாட்டு போடும் சேனல்கள் எதையாவது போட்டுவிட்டுப் பொறுமையாகக் கொஞ்ச நேரம் இருக்கவும். உங்களுக்கும் அவர்களுக்கும் பிடித்த ஒரு இளையராஜா பாட்டு வரும். 'நல்ல பாட்டுல்ல' என்று தொடங்கலாம். 'உனக்கு இந்தப் பாட்டெல்லாம் தெரியுமாடா... இந்தப் படம் வந்தப்போ நான் பி.காம் செகண்ட் இயர் படிச்சிட்டிருக்கேன்' என்று பதில் கிடைத்தால் அன்றைய பொழுது இனிதே கழியும்.

உலகமும் உலகம் சார்ந்த விஷயங்களும்: பொதுவாக என்ன பேசுவது? நாம் பேசிக்கொள்ளும் உலகப் பொது விஷயங்கள் பல இந்தச் சபையில் எடுபடாமல் பேசலாம். அவர்களிடம் ஆங்கிலப் படங்களைப் பற்றியும் அர்னாப் கோஸ்வாமியைப் பற்றியும் பேசுவது உசிதமாகாது. ஆனாலும் சிலது இருக்கும். அப்பாக்களிடம் எப்போதும் அரசியல் பேசலாம். 'தமிழில் இந்து வருதாமே , படிச்சுப் பாத்தீங்களா' என்று ஆரம்பிக்கலாம். சென்னையில் இருக்கும் சில பிள்ளைகளைச் சில வீடுகளில் பெற்றோர்கள் கூடப் பார்த்துப் பொறாமைப் பட்டுச் சபிக்கும் அளவுக்குச் சமீபத்தில் பவர்கட் வந்தது. அப்படிச் சாபம் வாங்கிய பிள்ளைகளைத் தவிரப் பிறர் பவர்கட் பேசலாம். இருந்தாலும் ஜாக்கிரதை! வீணாக வெறுப்பேற்றி விடாதீர்கள். அம்மாக்களிடம் நகர நாகரீகங்கள் பற்றிப் பேசலாம். அவர்கள் ரொம்ப ஆர்வமாகக் கேட்பார்கள். அப்பா அம்மாவை எங்காவது வெளியில் அழைத்துச் செல்லலாம். சமீபத்தில் ஊரில் இருந்து வந்திருந்த அம்மா அப்பாவைச் சென்னையில் சத்யம் தியேட்டருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கேப்பச்சீனோ எல்லாம் பிடித்திருந்தது அவர்களுக்கு. அதன் பின் 'ஒப்பனை அறை' என்று பெயர் வைத்தது சரிதான் என்று அம்மா வந்து என்னிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தாள். 'ஏண்டா.. உள்ளே ஒவ்வொருத்தியும் அரை மணி நேரமாக் கண்ணாடி முன்னாடியே நின்னுட்டு இருக்காளுகளே.. வீட்டுலயும் இதத்தானே பண்ணியிருப்பாங்க' என்று என்னிடம் அங்கலாய்த்தாள். அம்மாவுக்கு ஏனோ நகரப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம். அதன் பின்னால் என்னைக் குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வும் இருப்பதாகவே ஏனோ எனக்குத் தோன்றுகிறது.

படம் : அசிம் சௌத்ரி (நன்றி)

கல்யாணமும் கல்யாணம் சார்ந்த விஷயங்களும்: இந்நேரம் கட்டாயமாக வீட்டில் ஆரம்பிக்கப் பட்டிருக்கும் தலைப்பு இது. ஆட்டத்தில் நம்மையும் சேர்த்துக் கொண்டு பேசுகிறார்களா என்பதே கேள்வி. அப்படி இருப்பின் இது ஒரு நல்ல அனுபவமாகவும் நல்ல நட்புக்கு அடித்தளமாகவும் அமையப் பிரகாசமான வாய்ப்புண்டு. 'கல்யாணப் பேச்சை எடுத்தாலே கடுப்பா வருது' என்றுதான் நம் தலைமுறையினர் அடிக்கடி நண்பர் வட்டாரத்தில் புலம்புகிறோம். ஆனால் உள்ளூர எல்லோருக்குமே ஆர்வம் இருக்கத்தானே செய்கிறது. கொஞ்ச காலம் தள்ளிப் போனால் 'எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா மாட்டீங்களா' என்று கூச்சத்தை விட்டு நாமே கேட்கத்தான் போகிறோம். வீட்டில் இந்தப் பேச்சு வரும்போது சிடுசிடுக்காமல் சிரித்துப் பேச முயற்சி செய்யலாம். கல்யாணத்திற்குத் தகுந்த வயது எது என்பதில் இருந்து தகுந்த துணை யார் என்பது வரை சுவாரசியமாகப் பேசப் பல விஷயங்கள் கிடைக்கும். அம்மாவிடம் அப்பா பெண் பார்க்க வந்த கதையைச் சொல்லச் சொல்லலாம். அப்பாவையும் வைத்துக் கொண்டே கேட்பது சாலச் சிறந்தது. வரும் வரன் விசாரணைகளைப் பற்றி நாமாகவே அவ்வப்போது விசாரித்து வைத்துக் கொள்ளலாம். 'சொந்தத்தில் மட்டும் பாக்காதீங்க.. குழந்தை குறையாப் பிறக்கும்.. பிறகு எதுக்கு என்னைப் படிக்க வைச்சீங்க' என்று விவாதிக்கலாம். பாரத் மேட்ரிமனி போன்ற தளங்களில் அவர்களோடு சேர்ந்து நாமும் வரன் தேடலாம். அதிகாரப்பூர்வமாக சைட் அடிக்கலாம். இந்த விஷயத்தில் அத்தியாவசியத் தேவை கொஞ்சம் சிரித்த முகம். கல்யாணம் பற்றிப் பேசினாலே ஒதுங்கிப் போனாலோ பேச்சை மாற்றினாலோ எரிந்து விழுந்தாலோ நம்மை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவஸ்தை பின்னாளில் நமக்குத்தான்! ஆக, இந்த விஷயத்தில் நட்பாகப் பேசுவது கொஞ்சம் சுயநல நோக்குடனும்தான்!

காதலும் காதல் சார்ந்த விஷயங்களும்: பெற்றோருடன் இந்தத் தலைப்பை வீட்டில் சுமூகமாகப் பேச முடிந்தால் நீங்கள் ஒரு உறுதியான நட்பை உருவாக்கி விட்டீர்கள் என்றே சொல்லலாம். தெரிந்தோ தெரியாமலோ யார் செய்த பாவமோ நம் அனைவருக்கும் சுவாரசியமான காதல் கதைகள் அமைந்து விடுவதில்லை. இருந்தாலும் கல்லூரிக் காலங்களில் கூடப் படிப்பவர்களில் இன்ன பெண் அழகாக இருக்கிறாள் என்ற ரீதியில் அம்மாவிடம் அவ்வப்போது பேச்சைத் தொடங்கலாம். பின்னாளில் உபயோகப்படும். ஒரே பெண்ணை அடிக்கடி காட்டி விடாமல் இருப்பது சிறப்பு. வாழ்க்கை எப்படி வேண்டுமானால் வளையலாம். அவ்வப்போது ஃபேஸ்புக்கில் வேண்டப்பட்ட சிலரின் புகைப்படத்தை அம்மாவிடம் காட்டி 'லைக்' செய்கிறாரா என்று சோதிக்கலாம். அப்பாக்களிடம் காதல் விஷயம் பேசத் தொடங்குவது மேல் நிலை. அதற்கும் மேல் நிலை வேண்டுமென்றால் அப்பாவின் காதல் கதையைச் சொல்ல வைப்பது. எளிதில் சாத்தியமாகாத விஷயம். நடந்தால் எவரெஸ்ட்டில் ஏறின பெருமை அடையலாம்!

இவை தவிர உதிரியாக உறவினர் வீட்டுக் கதைகள், பணம்/ சொத்து/ முதலீடு குறித்த விஷயங்கள், பெற்றோர் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் என்று கிடைக்கும் எல்லா விஷயங்களையும் நட்பாகப் பேசலாம். இந்தக் கருத்துப் பரிமாற்ற இடைவெளி விஷயத்தைப் பற்றிச் சமீபத்தில் என் அப்பாவிடம் கூடப் பேசிக் கொண்டிருந்தேன். 'நியாயம்தான்.. யாராவது ஏதாவது செய்யணும்' என்றார்!

இப்படி ஒரு பட்டியலை எழுதுவதால் நான் பெரிய புடுங்கி என்றோ எம் தலைமுறைக்கு உபதேசம் செய்கிறேன் என்றோ அர்த்தமில்லை. சிலபல விஷயங்கள் என் வீட்டில் நடக்கின்றன. சிலபல விஷயங்கள் என் நண்பர்கள் வீட்டில் நடக்கின்றன. சிலபல விஷயங்கள் என் தலைமுறையில் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது இதை எழுதத் தோன்றியது. திரைக்கதையில் எந்தத் திருப்பமும் வராமல் என் கல்யாணமும் நாளைக்கு நடக்கணுமே!

பின்குறிப்பு: முதல் பத்தியில் சொன்ன நண்பரின் அப்பா கடைசியில் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லி விட்டார். நட்பாய்ப் பழகுவதில் அவர்கள் அடுத்தடுத்த course-களாக முடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

- மதி

கருத்துகள்

  1. Romba nalla irunthathu machi....

    Pidatha sila varigal:

    1. எல்லோருமே குறைந்தபட்சம் ஐந்து ஆறு தலைமுறைகள் முன்னால் செல்ல முடியும். அங்கிருந்து ஆரம்பித்து ஒரு குடும்ப மரத்தை வரைய முற்பட்டால் கடைசியில் எதிர் வீட்டு ஃபிகர் உங்களுக்கு இரண்டு விட்ட மாமன் மகளாக அமையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு

    2. முதல் முதலில் குப்புற விழுந்த நாளை ஒட்டி அண்ணாக்கயிறைத் தவிர்த்து வேறொன்றும் தரிக்காமல் முக்தி நிலையில் நாம் இருக்கும் புகைப்படம் ஒன்று கட்டாயம் எங்காவது இருக்கும். இடையில் நம் கண்ணில் பட்டுக் கிழிக்கப்படாமலோ பதுக்கப் படாமலோ இருந்தால்!

    பதிலளிநீக்கு
  2. அப்படியோ சுபம்...!!!

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. Followers ஆகி விட்டேன்.... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாடிசம்பர் 04, 2013

    வணக்கம்
    மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..