புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை - 1


உங்களில் பலருக்கும் என் முதல் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருக்கலாம். 'முதல் போணி' என்ற தலைப்பில் 16 சிறுகதைகள் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு. 2013 ஜனவரி 1-ஆம் தேதி சிலபல நண்பர்கள் சூழ, சென்னை EA வணிக வளாகத்தில் கூட்டம் குறைவான ஒரு தாழ்வாரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து கலைத்து விடுவதற்கு முன்பு கிடைத்த விலை மதிப்பில்லாத 15 நிமிடங்களில் வெளியான புத்தகம் அது. சரியாக ஒரு வருடம் முடியப் போகிறது. இப்போது அந்தத் தொகுப்பில் வராத, அது குறித்த 17-வது கதையை உங்களுக்குச் சொல்ல ஆர்வமாக இருக்கிறேன். இதுதான் கோமதி சங்கர் என்ற நான் 'மதி' என்று புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை!

கல்லூரிக் காலம் தொட்டே தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதுவதில் ஆர்வம் கொண்டு அடிக்கடி முயற்சித்து அந்தக் கதைகளை எல்லாம் ஒரு கையேட்டில் தேதியிட்டு எழுதி வைத்திருந்தேன். நல்ல புத்தகங்களை வாசிக்க வாசிக்க, நல்ல அறிமுகங்கள் கிடைக்கக் கிடைக்க என் எழுத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிக் கொண்டே வந்தது. வலைப் பதிவில் முகம் தெரியாத வாசக நண்பர்கள் ஊக்கம் கொடுக்கும் போதெல்லாம் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்த ஒரு ஆசை - புத்தக வெளியீடு. கல்லூரிக் காலத்திலேயே ஆர்வம் மிகுந்து என் கதைகளில் சிறந்தவை என்று சுயபரிசீலனையில் தேர்வான ஐந்து கதைகளின் நகல்களை எடுத்துக் கொண்டு ஆனந்த விகடன் அலுவலகத்துக்கும் உயிர்மை அலுவலகத்துக்கும் சென்றேன். பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்கேயாவது தொடங்குவோம். போகப் போக இந்தப் படைப்புலகச் சக்கரம் எப்படிச் சுழல்கிறது என்று கற்றுக் கொள்வோம் என்ற ஒரு எண்ணம். விகடன் அலுவலகத்தில் சிரித்த முகத்துடன் வரவேற்பறையில் அமர வைத்து என் நகல்களை வாங்கி வைத்துக் கொண்டு 'ஒரு மாதத்திற்குள் நாங்களாக அழைக்காவிடில் நீங்கள் மேற்கொண்டு இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யலாம்' என்றார்கள். உயிர்மையில் மனுஷ்யபுத்திரனையே வெகு சாதாரணமாக நேரில் பார்த்துவிட முடிந்தது. ஆனாலும் அந்தக் கணப் பரவசத்தில் சொதப்பு சொதப்பென்று சொதப்பித்தள்ளத்தான் முடிந்தது. 'இதற்கு முன் உங்கள் கதைகள் எங்காவது பிரசுரமாகி இருக்கின்றனவா?' என்றார் மனுஷ்யபுத்திரன். 'இல்லை சார்' என்றேன். 'வேறு பதிப்பகங்களில் முயற்சி பண்ணினீங்களா' என்றார் அவர். 'விகடனுக்குப் போனேன் சார்' என்றேன். அங்கு நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு 'சரி.. உங்கள் கதைகளுக்குப் பொருத்தமான அறிமுகம் விகடனின் வாசகர்களிடம் கிடைக்குமா உயிர்மையின் வாசகர்களிடம் கிடைக்குமா' என்றார். அசாத்தியமான தன்னம்பிக்கையுடன் அதை விட அசாத்தியமான வெகுளித்தனத்துடன் 'இரண்டு தளங்களுக்குமே என்னிடம் கதைகள் இருக்கு சார்.. இடத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்றேன்.

பதிப்புலகம் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத பருவம். வெறும் ஆர்வம் மட்டுமே இருந்த காலம். அதிகம் முகம் சுளிக்காமல் ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு 'உங்களைப் போல தினமும் எனக்கு நூற்றுக்கணக்கில் கதைகள் வருகின்றன. என்னால் எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. போய் உங்கள் தகுதியை நீங்களே ஆராய்ந்துவிட்டுத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இளைஞர் ஒருவரை இப்படிப் பார்ப்பது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது' என்று அனுப்பிவிட்டார் மனுஷ்யபுத்திரன். நல்ல மனிதர் ! விகடனும் ஒரு மாதத்திற்குள் ஒன்றும் சொல்லவில்லை.




அதன்பின் தான் உட்கார்ந்து யோசித்தேன். சரி நமக்கு இன்னும் பயிற்சி வேண்டும். இன்னும் பக்குவம் வேண்டும். அதுவரை தொடர்ந்து முயற்சி செய்வோம் என்றவாறே கடமையில் கருத்தாய் எழுதிக் கொண்டு இருந்தேன். அறிமுகப் புத்தகம் பற்றிய கனவு மாத்திரம் வளர்ந்து கொண்டே இருந்தது. பதிப்புலகைப் பற்றிய எந்த வித அனுபவ அறிவும் இன்றி, பதிப்புலகில் எந்தவித நட்பும் உறவும் அறிமுகமும் இன்றி வெறுமனே கதைகள் எழுதும் ஆர்வத்தை மட்டும் கொண்டு எழுத்தாளராகி விடலாம் என்பது மணல் வீடு கதைதான் என்று புரிந்தது. அதன் பின் புத்தகக் கடைகளுக்குச் செல்லும்போதும் புது எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கும் போதும் என் அறிமுகம் பற்றிய எண்ணம் வளர்ந்து கொண்டே வந்தது. வலைப்பதிவுகள் இந்த இடைப்பட்ட காலத்தில் சுயபரிசீலனைக்கும் வெளிப்பாட்டுக்கும் பெரும் உதவியாய் இருந்தன.

இணைய இதழ்கள் சிலவற்றிற்கு என் கதைகளை அனுப்பிக் கொண்டு இருந்தேன். பெரும்பாலான கதைகள் போன சுவடே தெரியாமல் நிராகரிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. பழைய காலத்தைப் போல தபால்காரன் நிராகரிக்கப்பட்ட கதையைத் திரும்பக் கொண்டு வந்து கொடுத்துப் புண்ணான மனதைப் பிறாண்டி விட்டுச் செல்வதில்லை என்பதால் என்னால் கூச்சப்படாமல் மீண்டும் மீண்டும் தோற்றுப் போக முடிந்தது. பின்னொரு பின்னிரவில் 'சொல்வனம்' இணைய இதழில் என் சிறுகதை ஒன்று முதல் முறையாக வெளியானது. 'பைரவன்' என்ற சிறுகதை அது. அந்தக் கதைக்கான வித்து என் மனதில் 4-5 ஆண்டுகளுக்கு முன்பே வந்த ஒன்றுதான். ஆனால் இதையெல்லாம் வைத்து எப்படிக் கதை பண்ண முடியும் என்று நான் நிராகரித்துக் கிடப்பிலேயே வைத்திருந்தேன். ஒரு உந்துதலில் அந்தக் கதையை எழுதி அனுப்பி விட்டால் பயபுள்ள பிரசுரமாகிவிட்டான் :-) நானே நம்பவில்லை. 'நல்ல வேளை 4-5 ஆண்டுகளுக்கு முன் இதை எழுதவில்லை. எழுதியிருந்தால் இந்தப் பக்குவம் இருந்திருக்காது' என்றுதான் தோன்றியது. என் எழுத்தின் மேல் எனக்கு ஒரு நம்பிக்கை பிறப்பதற்கான முதல் உத்வேகம் அதுதான். அந்தக் கதை பிரசுரமானது எனக்கு வேறு சில பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. நிராகரிப்பு என்பது முடிவல்ல. அதற்கான வேளை கூடி வரவில்லை என்று என் அனுபவத்தின் மூலமாகவே புரிந்து கொள்ளலானேன்.

ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் ஒரு நாள் ஒரு சுவாரசியமான அறிமுகத்தைச் செய்து வைத்தார். "புகற்சி பதிப்பகம்' என்ற பெயரில் சில கணினிப் பொறியாளர்கள் புது எழுத்தாளர்களுக்கு வாய்ப்புத் தரலாம் என்று முயல்கிறார்கள். அவர்களிடம் பேசிப் பாரேன்' என்ற அளவிலான அறிமுகம் அது. பேசிப்பார்த்து சில கதைகளை மாதிரிக்கு அனுப்பி வைத்தபின் புகற்சி நண்பர்கள் 'கதைகள் பிடித்திருக்கின்றன. நாவல் என்றால் நாங்களே வெளியிடலாம் என்று இருந்தோம். சிறுகதைத் தொகுப்பு என்பதால் நீங்கள் பதிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். புத்தகத்தை வெளியிட்டு விடலாம்' என்று ஒரு டீலிங்கை முன்வைக்க எனக்கும் அந்த டீலிங் பிடித்திருந்தது. எங்கோ ஒரு தேவதை என் பெயரைச் சொல்லி மணியடித்துக் கொண்டிருந்த தருணம் அது. என் எழுத்து அறிமுகத்துக்கு வித்திட்ட கணம்.

புகற்சி குழுவும் பதிப்புலகத்தில் புதுசுதான். ஒரு வகையில் இது எனக்குப் பிடித்திருந்தது. 'அறிமுக எழுத்தாளர்- பதிப்பாளர்' என்ற அளவில் இல்லாமல் நண்பர்களாய் எங்களால் பழக முடிந்தது. சேர்ந்து கற்றுக் கொண்டோம். ஒரு பெரிய பதிப்பகத்தின் மூலம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒரு 'எஜமான்-விசுவாசி' உறவு முறைதான் அனேகமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் புத்தகத்தைப் பெரிய அளவில் வியாபாரப்படுத்தி இருந்திருப்பார்கள். கூழ் அல்லது மீசை என்பதுதானே உலக நியதி. எனக்கு மீசை மட்டும் தான் முக்கியமாகப் பட்டது. சந்தோஷமாக மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு புத்தக வெளியீட்டு வேலைகளில் இறங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பொறுத்த அளவில் கூழை மனம் எதிர்பார்க்கவே இல்லை. பட்டினியாய் இருக்கக் கூட அது சம்மதம் என்றுதான் சொன்னது. அதனால் பணமும் சம்பாத்தியமும் வியாபாரமும் குறிக்கோள்களாகவே இல்லை.

பதிப்புச் செலவுக்குப் பணம் புரட்டியாக வேண்டும் என்பதுதான் முன்வந்து பல்லிளித்து நின்ற ஒரே பிரச்சனை. கையில் அவ்வளவு காசு இல்லை. நா. முத்துக்குமார் மாதிரி பொண்டாட்டி தாலியை அடகு வைத்துப் புஸ்தகம் போடலாம் என்றால் கலியாணமும் ஆகியிருக்க வில்லை. மீண்டும் இணையமும் வலைப் பதிவும் உதவிக்கு வந்தது. 'இந்த மாதிரி இந்த மாதிரி ஒரு புஸ்தகம் போடப் போகிறேன். என் கனவில் முதலீடு செய்கிறீர்களா?' என்று நண்பர்களிடம் கடன் கேட்டு ஒரு பதிவை எழுதினேன். என் பெயரைச் சொல்லி மணியடித்த தேவதையின் மேல் அபார நம்பிக்கை இருந்தது. சுற்றி இருந்த முதல் வட்ட நண்பர்களே பெரிதும் ஊக்கப் படுத்தினார்கள். என் அறிமுகத்தைத் தங்கள் வெற்றியாகவே பார்த்த நண்பர்கள் என்னைச் சுற்றி இருந்ததற்காகப் பெருமைப் பட்டேன். வேண்டிய பணம் முழுவதும் ஒரே மாதத்தில் புரண்டு விட்டது. எதிர்பாராத சில இடங்களில் இருந்தெல்லாம் பணம் வந்து சேர்ந்தபோது புல்லரித்துப் போய் நின்று கொண்டிருந்த மாதங்கள் அவை. அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணியில் இருந்த பாரதியாரின் வீட்டுக்குப் போயிருந்த போது, அவர் கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு கடிதத்தைப் பார்க்க நேர்ந்தது. தன் புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்காக இதே போல நிதி கேட்ட அவர் எழுதியிருந்த கடிதம். நன்கொடையாக அவர் கேட்கவில்லை. முதலீடாகக் கேட்டிருந்தார். புத்தக விற்பனையைப் பற்றி அவரே ஒரு கணக்குப் போட்டுப் பெரும் லாபத்தைக் கணித்து அதில் இருந்து முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பங்கைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தது அவரது கணிப்பு. பக்கத்திலேயே செல்லமாளின் கூற்று ஒன்றையும் சட்டமிட்டு வைத்திருந்தார்கள். 'என் கணவர் பல கலைகளில் வல்லவராக இருந்தாலும் இறுதி வரை பணம் சம்பாதிக்கும் கலை மட்டும் அவருக்கு மட்டுப்படவே இல்லை' என்று தன் கணவரைப் பற்றிக் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசி இருப்பார் செல்லமாள். 'அட ! பாரதி கூட நம்மைப் போலவேதான் இருந்திருக்கிறார்' என்று உள்ளுக்குள் கொஞ்சம் சிரித்துக் கொண்ட தருணம் அது.

சரி பணம் சேர்த்தாயிற்று. பதினாறு கதைகளைச் சேர்த்தாயிற்று. இனி வேறு என்னெல்லாம் வேண்டும் என்று யோசித்தபோது தான் பெயர் சூட்டும் படலம் நிகழ்ந்தது. புஸ்தகத்துக்கு எளிதாகப் பெயர் வைத்தாயிற்று. 'முதல் போணி' என்ற தலைப்பில் ஒரு கதை வேறு ஏற்கெனவே புத்தகத்தில் இருந்தது. சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கவே அதையே பெயராய்ச் சூட்டியாயிற்று. அடுத்ததாக எனக்குப் பெயர் வைக்க வேண்டுமே! ஏனோ எனக்கு என் சொந்தப் பெயரில் கதைகளை வெளியிட விருப்பமில்லை. என் பெயரிலேயே ஒளிந்து இருக்கும் இன்னொரு சுருக்கமான பெயரான 'மதி' என்ற பெயரில்தான் வலைப்பதிவில் இயங்கிக் கொண்டிருந்தேன். அந்தப் பெயரில்தான் 'பைரவன்' வெளியாகி இருந்தது. அதுவே என் நாமகரணம் என்று அதிகாரப்பூர்வமாக 'மதி' என்ற பெயரை முடிவு செய்தேன்.

அட்டைப்படம் வடிவமைப்பதில் பதிப்பகத்தோடு அடம் பிடித்து நானே என் மனதுக்குப் பிடித்தபடி வரவேண்டும் என்று முயன்று பல நண்பர்களிடம் என் மனதில் இருந்த கருவைச் சொல்லி இதற்கு ஏற்ற ஒரு புகைப்படமோ அல்லது ஓவியமோ வேண்டும் என்று தேடி இறுதியாக நண்பர் வெற்றி வரைந்த ஓவியம் தான் 'முதல் போணி'க்கு முகம் என்று முடிவானது. அந்த ஓவியம் இதோ.

என் எழுத்திற்குப் பெரிய வித்தாக இருந்தவர் என் அப்பா. பெரிய எழுத்தாளர்களிடம் எல்லாம் முன்னுரை கேட்டுப் போக நமக்குப் பழக்கமும் இல்லை பவிசும் இல்லை. மிகப் பொருத்தமாக என் அப்பாவே முன்னுரை எழுதட்டும் என்று முடிவு செய்து அவரின் முன்னுரையையும் எழுதி வாங்கியாயிற்று. கூடவே என் முன்னுரையையும் ரசித்து ரசித்துத் தயார் செய்தேன்.

பதிப்பிற்காக மாங்கு மாங்கென்று கதைகளைத் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்து அவர்கள் அவற்றைத் தரவிறக்கி மீண்டும் மாங்கு மாங்கென்று பதிப்பிற்குத் தோதான எழுத்துருவிலும் மென்பொருளிலும் தட்டச்சு செய்து எனக்குப் பிழை பார்க்க அனுப்பி வைத்து, நான் பிழைதிருத்தி, அவர்கள் பிழை திருத்தி, மீண்டும் நான் பிழை திருத்தி, மீண்டும் அவர்கள் பிழை திருத்தி, இதையெல்லாம் தாண்டித் தப்பித்து விட்ட பிழைகளுடன் புத்தகம் அச்சேறி வந்து நின்றது. தஞ்சாவூரில் இருந்து முதல் சில பிரதிகளை எனக்கு என் பதிப்பகத்தார் பார்சல் சர்வீஸில் அனுப்பி வைக்க, புத்தாண்டு தினத்தன்று காலையில் நண்பர் ஒருவருடன் கோயம்பேட்டுக்குச் சென்று அந்தப் பிரதிகளைக் கையில் ஏந்திக் கொஞ்சம் புளகாங்கிதம் அடைந்த கணத்தோடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.

புத்தகம் தயார். புத்தாண்டு தினத்தன்று சென்னை EA வணிக வளாகத்தில் புத்தகத்தைச் சீட்டு குலுக்கிப் போட்டு வெளியிட்டதையும், இணையத்திலேயே கூவிக் கூவி விற்றதையும், சிறுகச் சிறுக நான் வாங்கிய கடனை 2013-குள்ளாகவே திருப்பிக் கொடுத்ததையும், கொஞ்சமே கொஞ்சமாக இந்தப் புத்தக வியாபாரத்தின் மூலம் சம்பாதித்ததையும், புத்தகத்தை வாசித்தவர்கள் கொடுத்த வாழ்த்துக்களையும் ஊக்கங்களையும், இந்த மொத்தக் கதையின் மூலம் பதிப்புலகம் பற்றி இன்னும் பெரிதாக எதையுமே கற்றுக் கொள்ளாமலேய இருக்கும் வெகுளித்தனத்தையும், இரண்டாம் புத்தகம் பற்றிய கனவையும் பற்றி அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். அடுத்த பாகம் இங்கே !


நன்றி.

- மதி

கருத்துகள்

  1. வரும் ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கதைப் புத்தகம் போட்ட உங்களின் கதை, - அது கதைபோலவே சுவை.
    அடுத்த பாகமா? ம்... நடத்துங்.....

    பதிலளிநீக்கு
  3. மதிக்கு புத்தகம் வெளிவந்தபின் நிம்மதிதானே?இரண்டாவது போணியையும் செய்து விடுவீர்கள் !வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. எழுதத் துவங்குபவர்களுக்கு ஒரு உந்துதல். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. // வேறு சில பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. நிராகரிப்பு என்பது முடிவல்ல. // அருமை நண்பா

    //நா. முத்துக்குமார் மாதிரி பொண்டாட்டி தாலியை அடகு வைத்துப் புஸ்தகம் போடலாம் என்றால் கலியாணமும் ஆகியிருக்க வில்லை.// ஹா ஹா ஹா

    முதல் புத்தகத்தை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்... உங்களைப் போல் புத்தகம் வெளியிட காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு கொஞ்சம் உற்சாக டானிக்காக ஒரு உந்துதலாக இருக்கும் நண்பா...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..