அம்பலக்குளத்தில் முங்கியபடி மூன்று நாட்கள்
பல வருட காலமாய்ப் பக்கத்திலேயே இருந்திருந்தும் நாம் தொட்டறிந்திராத விஷயங்கள் எல்லோருக்கும் சிலது இருக்கும் - அலமாரியில் இருக்கும் புஸ்தகம், அடுக்களையில் இருக்கும் ஐந்தறைப் பெட்டி, அதிர்ஷ்டம் குறைந்தவர்களுக்குக் காதலி கூட! அது போலத்தான் எனக்குக் கேரளம்! 'இந்தாத்தானே இருக்கு... எப்பயாவது போவோம்' என்ற மனநிலையிலேயே வாழ்வின் கால் பாகத்தைக் கழித்து விட்டேன். சின்னப் பிள்ளையில் விவரம் அறியாத பிராயத்திலும், கல்லூரிச் சுற்றுலா என்ற பெயரில் மந்தையாட்டைப் போலவும் எட்டிப்பார்த்ததுதான். கேரளா ஏனோ எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. சமீபத்தில் நண்பர் ரகு ஒரு நாள் சாயந்திரம் தூக்கத்தில் எழுப்பி விளித்து, "ஜி.. கேரளால எங்க வீட்டில ஒரு சின்ன விசேஷம். வரீங்களா எல்லாருமாப் போவோம்" என்றார். சடாரென்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.
ஒரு வெள்ளிக் கிழமை விடுப்பெடுத்துக் கொண்டு நான், ரகு, சிவா, பிரபு என்று நால்வரும் கிளம்பி விட்டோம். சென்னையில் இருந்து ஷோரனூர் வரை முன்பதிவு செய்த இரயில். அங்கிருந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்யாத இரயில். பட்டாம்பியில் நள்ளிரவில் சென்றிறங்கி அங்கு திறந்திருந்த ஒரே ஒரு சாயாக் கடையில் அரை மணிக்கொரு தரம் சாயா குடித்தபடியே பொழுதைப் புலர வைத்துவிட்டு, அங்கிருந்து குன்னங்குளம் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்துக் குன்னங்குளத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக் காவீடு கிராமத்தில் இறங்கி அங்கிருந்து ஈரமான சாலை ஒன்றின் வழியாகக் கொஞ்ச தூரம் நடந்து நாங்கள் சேர வேண்டிய வீட்டை அடைந்தோம். அந்தப் பட்டாம்பிச் சாயாக் கடையில் பத்திரி என்று ஒரு ஐட்டம் சாப்பிட்டோம். எல்லா இடத்திலும் கிடைக்குமாம். தனியாகவும் சுவைக்கவில்லை. சாயாவோடும் சுவைக்கவில்லை. இந்தக் கேரளப் பயணத்தில் என்னைப் பெரிதும் கவராத ஒரே விஷயம் அதுதான்.
நாங்கள் போனது ரகுவின் தாத்தா வாழ்ந்த வீடு. தற்போது அவரின் பாட்டியும் தாய் மாமா குடும்பமும் வசித்து வருகிறார்கள். நல்ல அமைதியான சூழலில் இந்தப் பக்கம் நூறு தென்னை, அந்தப் பக்கம் நூறு தென்னை, நடுவில் ஒரு திண்ணை வைத்த ஓட்டு வீடு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டின் திண்ணையில் மறைந்த ரகுவின் தாத்தாவின் சாய்வு நாற்காலி இன்னும் கம்பீரமாய் அமர்ந்திருந்தது. காவீடு கிராமம் குருவாயூரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவுதான். ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் தேடி வராத ஒரு இயல்பான, மெதுவான, அழகான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த கிராமம் அது! கெல்ஃபின் பணம் ஊரிலிருந்த வீடுகளின் கட்டுமானத்தரத்தில் பிரதிபலித்தது. ஊர்வாசிகள் எல்லோரையும் எல்லோர்க்கும் தெரிந்திருந்தது.
நாங்கள் போகும்போது குருவாயூர், கொச்சி, புன்னாத்தூர்கோட்டா யானைக் காப்பகம் எல்லா இடங்களுக்கும் போய்வந்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். காலை உணவு, குளியல் எல்லாம் முடிந்தவுடன் காவீட்டில் உள்ள அம்பலக்குளத்தை எட்டிப்பார்த்து வந்து விடலாம் என்று கிளம்பினோம். அம்பலக்குளம் என்றால் கோவில் குளம். ரகுவைத் தவிர எங்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. படித்துறைப் பாண்டிகள்தான்! இருந்தாலும் நல்ல விசாலமான படித்துறை இருந்ததால் அந்தக் குளம் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது. குளித்து முடித்துப் பசியோடு வீட்டுக்கு வந்தால் மீன் குழம்பும் சோறும் தயாராக இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் திண்ணையில் அமர்ந்து யோசித்தபோது எங்களுக்கு அந்த அற்புதமான திட்டம் உதயமானது. 'கொச்சி கிச்சியெல்லாம் எதற்கு, பேசாமல் மூன்று நாளும் காவீட்டின் இயல்பு வாழ்க்கையையே வாழ்ந்து பார்த்தால் என்ன' என்று நான் முன்மொழிய நண்பர்கள் டக்கென்று வழிமொழிந்து விட்டார்கள்.
குருவாயூருக்கு மட்டும் போய் வருவதாக ஏற்பாடு. அன்று மதியம் புறப்பட்டுச் சென்றோம். நான் பொதுவாகப் பக்தியின் பெரிய ரசிகனில்லை. ஆனால் தக்க அமைதியும் ஏகாந்தமும் கொண்ட கோவில்களை ரசிப்பேன். குருவாயூர் கோவிலில் அப்படி நான் ரசிப்பதற்கு நிறைய இருந்தது. அவற்றில் முதல் விஷயம் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாத வரிசை. நம் ஊர் கோவில்களைப் போல் விரைவு தரிசனம், அதிவிரைவு தரிசனம், உடனடி தரிசனம் என்றெல்லாம் வியாபாரமாக்காமல் பக்தர்கள் எல்லோரையும் ஒரே பொது வரிசையில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கம்மூனிசம் பேசும் நாடாச்சே!
கேரளத்தில் வரிசையில் நிற்பதும் ரொம்பக் கஷ்டமான காரியம் இல்லை. பத்தில் எட்டு பெண்கள் அழகோ அழகாய் இருக்கிறார்கள். மீதி இரண்டு பேரும் அடக்கமான அளவு அழகாகவே இருக்கிறார்கள். இத்தனை அழகான பெண்கள் இருக்குமிடத்தில் கண்ணன் இருப்பது மிகப் பொருத்தமாகவே பட்டது. நம் ஊரில் ஊர் சுற்றும்போது கண்ணுக்கழகாய் ஒரு பெண்ணைப் பார்த்தால் நண்பர்களுக்கும் சடாரென்று சமிக்ஞை செய்து எல்லோர் கவனத்திற்கும் விஷயத்தைக் கொண்டு சேர்த்து விடுவோம். அங்கே அந்தக் கலாச்சாரமே தேவை இல்லை போல. எங்கெங்கு நோக்கினும் கயல் விழிகளுடன் அழகு சிரித்துக் கொண்டிருக்கிறது. வள்ளுவரே காமத்துப் பால் எழுதத் தொடங்குவதற்கு முன் ஒரு மாசம் விடுப்பெடுத்துக் கொண்டு ஒரு சேர நாட்டுச் சுற்றுப் பயணம் போய் வந்திருப்பாரோ என்ற சந்தேகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது!
தரிசனம் முடிந்து மாலையில் மீண்டும் காவீடு வந்தோம். கிருஷ்ண தரிசனம்தான்! மீண்டும் மீன் குழம்பும் சோறும்! அந்தக் கிராமத்தில் மக்கள் மீன் வாங்குவதே ரொம்ப சுவாரசியமாக இருந்தது. மீன் வியாபாரி ஒருவர் தன் பைக்கில் மீன் கூடை வைத்துக் கொண்டு இரண்டாவது கியரிலேயே ஓட்டிக் கொண்டு வருகிறார். வருகையில் ஊஊ என்ற சப்தமெழுப்பிக் கொண்டே வருகிறார். அந்தச் சத்தம் மீன் விற்பதற்கான சங்கேத பாஷையாம் ! சொல்லப் போனால் மலையாளமே ஒரு சங்கீத பாஷையாக இருக்கிறது. அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அடிக்கடி பேசத்தான் செய்கிறார்களா இல்லை பாட்டுக்குப் பாட்டு விளையாடுகிறார்களா என்று சந்தேகம் வருகிறது. உதாரணத்திற்கு மலையாளிகள் எதற்காவது வேண்டாம் என்று சொல்ல வேண்டுமானால் ராகமாய் ஏஏ என்கிறார்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: மீன் காரன் மீன் வேண்டுமா என்று கேட்கிறான். குடும்பத்தலைவி வேண்டாம் என்கிறாள். நம் ஊரில் "மீனு மீனு.. மீனு வாங்கலையோ மீனு?" | "வேண்டாம்ப்பா.. நாளைக்குப் பாத்துக்கலாம்" இதே பரிவர்த்தனை மலையாளத்தில் எவ்வளவு சுலபமாக முடிகிறது பாருங்கள். மீன்காரர்: "ஊஊ" | குடும்பத்தலைவி : "ஏஏ" !!!! அவ்வளவுதான்! சட்டு புட்டுன்னு பேச்சை முடித்துவிட்டு மழையை ரசிக்கப் போய்விடலாம்!
ரசித்து வாழ வேண்டிய வாழ்க்கைதான் அவர்களுடையது! பேச்சுவாக்கில் ரகுவின் அப்பாவிடம் "இங்கே ஏதாவது திடீர்னு அர்ஜெண்ட்னா எப்படி நீங்க வேற இடத்துக்குப் போவீங்க" என்றதற்கு அழகாய்ப் புன்சிரித்துவிட்டு "இங்க எதுவுமே அர்ஜெண்ட் கிடையாது. எல்லாமே ஆர்டினரிதான்" என்றார்! உண்மைதான். தள்ளித் தள்ளிக் கட்டப்பட்ட வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் தோட்டமும் தென்னைகளும். சிற்சில வீடுகளில் சின்னக் குளங்கள் கூட இருக்கின்றன. அவர்களுக்கு வேண்டிய காய் கறிகளும் தேங்காயும் தாராளமாக அவர்களின் தோட்டத்திலேயே கிடைக்கிறது. மீனும் கூட வீட்டுக்கே ஊஊ என்று வந்து விடுகிறது. அந்த ஊரில் மளிகைக் கடையே தேவை கிடையாது என்பதை உணர்ந்த போது பிரமித்துத் தான் போனோம்.
எப்போதும் மழை தூறிக் கொண்டே இருக்கிறது. குடை விரிக்கத் தேவை இல்லாத மழை. மிக மெல்லிசாகப் பூக்களின் மேல் தண்ணீர் தெளித்து வைத்திருத்தலைப் போல ஊரையும் மக்களையும் ஈரமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஓட்டு வீட்டுத் திண்ணையில் இருந்து பார்க்கையில் சீரான இடைவெளியில் ஓடிறங்கும் மழைத் துளிகள் ஈர மண்ணில் விழுந்து விழுந்து பறித்து வைக்கும் குட்டிக் குழிகள் கவிதையாகத் தெரிகின்றன. சூடாக ஒரு கோப்பைச் சாயாவைக் கையில் ஏந்திக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து மழை பார்த்திருத்தல் ஒரு வகை தியானம் போல் நடந்து கொண்டிருக்கிறது!
மறு நாளும் அம்பலக் குளத்திற்கே சென்று விட்டோம். ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் ஏதோ தண்ணீர் காணாத தேசத்தில் இருந்து சின்னப் பையன்கள் வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வருமளவுக்குக் குளத்திலேயே ஊறிக் கிடந்தோம். அந்தப் படித்துறையிலேயே மிதவையும் முதல் கட்ட நீச்சலும் கற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் கிடந்தோம். எப்படியும் மீன் குழம்பும் சோறும் தயாராய் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது! மிதமான மழையும் பொழிந்த கணங்களில் குளத்தில் மிதந்தபடி மழையில் நனைந்தது சொர்க்க அனுபவமாய் இருந்தது. கோவில் குளம்தான் என்றாலும் எங்களுக்கென்னவோ கடவுள் அந்த நீரிலும் சுற்றியிருந்த தென்னைகளிலும் தான் தெரிந்ததாய்த் தோன்றியது. குளத்து மீன்கள்தான் பாவம்! எங்கள் தொல்லை தாங்காமல் ஆழமாய்க் கண்காணாமல் போய்விட்டன. இருந்தாலும் நாங்கள் ஒரு வழியாய்த் தலை துவட்டிக் கரையேறிய மறு கணம் முழுப் படித்துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன. 'இது எங்க ஏரியா' என்ற தோரணையோடு! நாங்கள் வீட்டுக்குப் போய் மீன் குழம்பு தின்று விட்டு மீண்டும் குளத்திற்கு வந்து நின்றபோது எங்களைச் சபித்தாலும் சபித்திருக்கக் கூடும் அந்த மச்சங்கள்!
அருகில்தானே இருக்கிறது என்று மறுநாள் புன்னாத்தூர்கோட்டா யானைக் காப்பகம் சென்றோம். கிட்டத்தட்ட அறுபது யானைகளைப் பொமரேனியன் நாய்க்குட்டிகளைப் போலப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். குளிப்பாட்டி, கவளம் உருட்டி வைத்து, விளையாட வைத்து, நடை பழக வைத்து, மதம் பிடித்த யானைகளைச் சில நாள் ஒதுக்குப் புறமாய்ப் பிரித்து வைத்து அனாயசமாய் அம்மாம்பெரிய மிருகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று பல ஆச்சரியங்கள்! பாகன் பேசும் மலையாளம் யானைக்குப் புரிகிறது. 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் பார்த்த பிறகு ஒரு மனிதனும் ஒரு யானையும் இவ்வளவு புரிதலுடன் பழக முடியமா என்று வியக்க வைத்த அனுபவம் அது. அத்தனை யானைகளைப் பார்த்தாலும் அவற்றில் பல யானைகள் ஒற்றைத் தந்தத்தோடேயே இருந்தன. ஏனென்று தெரியவில்லை. அதிலும் பெண் யானைகளின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவாகவே இருந்தது. ஏனோ?! மேலும் அன்றுதான் யானையின் ஆண்குறியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லவே கொஞ்சம் கூச்சமாகத் தான் இருக்கிறது. யானை குளிப்பாட்டும் பாகன்கள் கூச்சப்படாமல் யானையை நேக்காய்த் தூண்டி விட்டு அதை முழுதும் விறைக்க வைத்துக் கழுவி விடுகிறார்கள். அதைக் குடும்பம் குடும்பமாக மக்கள் நமுட்டுச் சிரிப்புடன் கண்டு களிக்கிறார்கள்!
மீன் குழம்பு, சோறு, கண்ணாடி கிளாஸில் சாயா, அம்பலக் குளப் படித்துறை, அவ்வப்போது கொஞ்சம் உலா என்று இப்படியே மூன்று நாட்களும் கழிந்து விட்டன. கிளம்பின அன்றைக்கு ரகு சொன்ன அந்த விசேஷம். விருந்து! அதிமதுரமும், அடப்பிரதமனும் தித்திக்கத் தித்திக்க இனிப்பாகப் பண்ணி இருந்தார்கள். நாலைந்து முறை கேட்டு வாங்கிக் குடித்து விட்டுக் கிளம்பி வந்தோம். கிளம்பி வரும் வழியெல்லாம் மக்கள் எங்களைக் காட்டிக் காட்டி அவர்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாற்போல் இருந்தது. ரகுவிடம் விசாரித்தோம். "நீங்க அம்பலக் குளத்தில குளிச்சதுதாண்டா ரெண்டு நாளா ஊருக்குள்ள நியூஸே! இவங்கதான் அந்தக் குளத்தில குளிச்ச பசங்கன்னு அறிமுகப் படுத்தி வைச்சுப் பேசிட்டிருக்காங்க" என்றான். அந்தக் குளத்தில் வரலாற்றில் எங்களளவுக்கு எவனும் அதை ரசித்திருக்கவில்லை போலும். சரி வரலாற்றில் இடம் பிடித்து விட்டோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம். அதிமதுரத்தின் இனிப்பை நாவிலும் கேரளத்தில் மழைச் சுவையை மனசிலும் அசைபோட்டபடியே!
- மதி
புகைப்படங்கள் : ரகு
Travel story ah kooda ivalo interesting ah solrengalae boss .. _/\_ .. Bookmarked this place ..
பதிலளிநீக்குwhat is more interesting in the world than travel?! :-)you will definitely love this place boss..
பதிலளிநீக்குkerala azaghu dhan..edhu varai sendradhu illai...neegal varandha mattum yen kerala thozhigal vayilaga kettadhundu...yenku ondru mattum puriya villai tamizhan mattum yengavadhu azhagiyalai(man,pen,poon etc...)..udaney than orrodu alavitu vittukoduthu pesugiran..oru velai adhuvum thamil panpatil otty valarka padukiradho ...varun payana padhivil kuraithukkondal melum nandru
பதிலளிநீக்குபுன்னாத்தூர்கோட்டா யானைக் காப்பகம் - போட்டோ ப்ளீஸ் சார்...ரொம்ப சுவையா எழுதுறீங்க...நான் இதை facebook இல் அப்டேட் செய்துகிறேன்..
பதிலளிநீக்குகணேஷ்குமார்.ராஜாராம்.
நன்றி கணேஷ்
பதிலளிநீக்கு