நதி போலும் என் காதல்
அண்மையில் Paulo Coelho-வின் 'Aleph' புதினத்தை வாசித்து அதன் பாதிப்பில் படைத்த ஒரு கவிதையே இது. ஆண்-பெண் உறவில் நாம் எளிதில் பெயரிட்டு வகைப்படுத்தக்கூடிய உறவுகள் மிகக் கொஞ்சமே. ஒவ்வொருவருக்குள்ளும் பெயரிட முடியாத ஒரு காதல் இருக்கும். அத்தகைய ஒரு காதலுக்கு மிகப் பொருத்தமான ஒரு விளக்கத்தை இந்த நாவலில் படித்தேன். ஆண் பெண்ணைக் காதலிப்பது போலல்லாமல் கடல்வழிப்படூஉம் ஒரு நதி அதன் கரையைக் காதலிப்பது போல நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணையாவது காதலித்துக் கொண்டிருப்போம். அவ்வாறான அடையாளமற்ற காதல்களுக்கு இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.
படத்தேர்வு : பாட்டுடைத் தலைவி Image courtesy : Monica Philosophergurl (via Pinterest) |
ஆண் பெண்ணைக்
காதலிப்பது போலன்றி
ஆதிச் சுடர் அண்டத்தைக்
காதலிப்பது போலவுமன்றி
நதி கரையைக்
காதலித்தல் போலானது
நம் காதல்.
நதியாய் நான்
ஒரே நேரத்தில்
ஓடிக் கொண்டும்
நின்று கொண்டும் இருக்கிறேன்.
அதே சமயத்தில் நீ
நின்று கொண்டும்
ஓடிக் கொண்டும் இருக்கிறாய்.
தொட்டுக் கொண்டே இருப்பினும்
நம் தளங்கள் வெவ்வேறு.
நாம் சேர்வதில்லை.
உன்னில்
வனம் பார்க்கவே
நான் விழைந்து நீர் கொணர்வேன்.
என்னைக் கடல் சேர்க்கவே
நீ திரண்டு திசை தருவாய்.
எனினும்
எதையும்
கொடுப்பதற்கும்
பெறுவதற்குமாய் அன்றி
இருப்பதற்காக மட்டும் இருக்கும்
நம்மிடையே காதல்.
ஓடையிலும் கோடையிலும்
ஓங்குமலை வீழ்ச்சியிலும்
திரட்டி வந்த காதலை எல்லாம்
ஒவ்வொரு புது வளைவிலும்
மறுபடி புதுப்பித்தவாறே
நான் கடல் ஏகுவேன்.
அங்கே கடல் என்னை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்
கடல் என்னை அரவணைக்கும்
நான் கடலைப் பூரணமாக்கும்
அதே நொடியில்
கடல் என்னைச் சூனியமாக்கும்.
விதிக்கப்பட்டபடி
பிரபஞ்சத்தின் காதல் எல்லாம்
கடலில் சங்கமிக்கும்.
மீண்டும் மழை வீழும்.
வனம் துளிர்க்கும்.
மிகச்சரியாய் அதே கணத்தில்
நான்
நதியாயும் இருப்பேன்.
நீ கரையாய் இருப்பாய்.
வேறொரு தளத்தில்
எனைக் கடந்து போகையில்
நதியென
நீ உணர்ந்தால்
நான் கரையில்
வனமாகிக் கிளைத்து ஒரு
மஞ்சள் மலரையும் பூத்திருப்பேன்.
- மதி
Migavum arumaiyana kadhal ka(thai)vithai.....
பதிலளிநீக்கு// நதியாய் நான்
பதிலளிநீக்குஒரே நேரத்தில்
ஓடிக் கொண்டும்
நின்று கொண்டும் இருக்கிறேன்.
அதே சமயத்தில் நீ
நின்று கொண்டும்
ஓடிக் கொண்டும் இருக்கிறாய். //
Enjoyed the poem. Awesome.
வேறொரு தளத்தில்
பதிலளிநீக்குஎனைக் கடந்து போகையில்
நதியென
நீ உணர்ந்தால்
நான் கரையில்
வனமாகிக் கிளைத்து ஒரு
மஞ்சள் மலரையும் பூத்திருப்பேன்
!!!
நன்றி மக்கோள் :-)
பதிலளிநீக்குmachi love pannum podhae adhu failure nu theriyum , appo than innoru ponna love panna mudiyum!
பதிலளிநீக்குidhai than nee romaba nalla solliiruka!!!
liked it !!!