மதி - ஒரு நேர்காணல்

Freshface publications சமீபத்தில் தங்கள் facebook பக்கத்தில் வெளியிட்ட எனது சிறு நேர்காணல். அவர்களின் பக்கத்தில் காண இந்தச் சுட்டியைக் கிளிக்குங்கள்...

நேர்காணல் : மதி - புகற்சி பதிப்பகம்

இவ்வலைப்பதிவில் வாசிக்க தொடர்ந்து கீழ் செல்லுங்கள் ..




1.முதல் போணி உருவான ரகசியம்?

ரகசியம் என்றெல்லாம் பெரிதாய் இல்லை. இது ஒரு தேடல் - தொடக்கமா முடிவா என்பதைக் காலம் தான் சொல்லும்! இலக்கியத்திலும் எழுத்திலும் கொஞ்சம் தீவிரம் கூட்டத் துவங்கியதுமுதலே புத்தகம் வெளியிடும் ஆசை வந்துவிட்டது. கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வந்தாலும் அறிமுகத்திற்குச் சிறுகதைகள் தான் தோதாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். அவ்வப்போது அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கும் போதெல்லாம் என் முதல் புத்தகத்தைப் பற்றி நினைத்துக் கொள்வேன். சிலபல பதிப்பகங்களை நேரில் சென்று சந்தித்திருந்தேன். அங்கே இன்னும் என்னைக் கிடப்பில் வைத்திருக்கக் கூடும். என்றாவது முளைக்கும் என்ற நம்பிக்கையில் கதைகளை விதைத்துக் கொண்டேயிருந்தேன். எனக்குப் பிடித்த பாலோ சீலோவின் வரிகள் இவை : 'உன் மனம் விரும்புவதை நோக்கி முழுமுனைப்புடன் சென்று கொண்டேயிரு. உன் பயணத்துக்கு இந்த அண்ட சராசரமே ரகசியமாய்க் கூடி உதவும்' ! அது போல்தான் 'முதல் போணி' புத்தகமாய் வருவதற்கு இப்போதுதான் நேரம் அமைந்து வந்திருக்கிறது. இதற்குப் பெரிதும் உதவியது இணையமும் (குறிப்பாக என் பதிப்பாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஃபேஸ்புக்கும்) இனிய நண்பர்களும்தான். புத்தகம் வெளியானதில் மகிழ்ச்சி என்றாலும் மகிழ்ச்சி லேசாக யானைக்கு மதம் பிடிப்பதைப் போல் மீறுகையில் என் தோழி ஒருத்தி சொன்னதை நினைவு கொள்கிறேன். எல்லாரும் புத்தகம் வெளியானதற்கு வாழ்த்து உரைத்து இதை ஒரு வாழ்நாள் சாதனையாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவள் 'இங்க பாரு .. முதல் புத்தகம் போட்டாச்சுன்னு ரொம்ப சந்தோஷப் பட்டுத் திருப்தி ஆகிடாதே.. இப்போதான் ஆரம்பிச்சிருக்கே.. எவ்வளவு தூரம் போக முடியுமுன்னு நீ காட்டறதிலேதான் இருக்கு'  என்றாள். உண்மைதான்!




2. எத்தனையோ கதைகள் இருக்கும்போது குறிப்பா இந்த 16 கதைகள் தேர்ந்தெடுத்ததன் காரணம்?

நான் எழுதும் கதைகள் எல்லாவற்றையும் கையேடுகளில் எழுதி வைத்து வருவேன். இன்னும் தட்டச்சில் எழுதாமல் கையெழுத்தில் எழுதுகிறாயா என்று ஒருசிலர் என்னை ஆச்சரியமாகக் கேட்பதுண்டு. புத்தகம் போடுவது முடிவானபின் ஒரு வாசகனாகவும் விமர்சகனாகவும் என் மொத்தப் படைப்புகளையும் (கிட்டத்தட்ட 25 கதைகள் தேறும்) எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். நான் பெரிதாக அதிர்ஷ்டம் ராசி எல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் ஏனோ எனக்கு எண்களில் 16-உம் 21-உம் பிடித்தமானவை. 21 என்பது கல்லூரியில் என் பதிவேட்டு எண். 16- கல்லூரியில் மற்றொரு விசேஷ நபரின் பதிவேட்டு எண். அந்த உந்துதலில் முதலிலேயே நம் புத்தகத்தில் 21 அல்லது 16 கதைகள் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 21 கதைகள் போடுமளவிற்கு என் எழுத்துச் சட்டியில் கையிருப்பு இல்லை. பிறகெங்கே அகப்பையில் எடுக்க ?! இந்தப் பயணம் இப்போதுதானே தொடங்கியிருக்கிறது. அதனால் 16 கதைகள் என்று முடிவு செய்து அதில் 2 கதைகள் பிரத்யேகமாக இந்தப் புத்தகத்துக்காய்ப் புதிதாக எழுத முடிவு செய்து ஏற்கெனவே எழுதியிருந்ததில் இருந்து 14 கதைகளை எடுத்துக் கொண்டேன். அப்படி அமைந்தவை தான் இந்தப் பதினாறும். 

3. தமிழும் சம கால இளைஞர்களும் - உங்கள் கருத்து ?

தமிழ் மொழியைச் சம கால இளைஞர்கள் சுவீகரிக்கவில்லையோ என்ற கேள்வி பல நிலைகளில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமும் அப்படியே. என் வயதினர் பெரும்பாலும் புத்தகங்களுக்கெல்லாம் நேரம் செலவழிப்பதில்லை. அப்படியே வாசித்தாலும் சிட்னி ஷெல்டனும் சேத்தன் பகத்தும் வாசிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் என்றாலே போன தலைமுறைக்கு எழுதியவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. பத்தாம் வகுப்பிற்கு மேல் தமிழ் படித்தால் மதிப்பெண் கிடைப்பதில்லை. சில இடங்களில் மதிப்பே கிடைப்பதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் ?!  எம் தலைமுறைக்குத் தமிழ் கொஞ்சம் தூரம்தான். ஆனால் தூரத்தில் நின்று கொண்டு அவர்களைக் குறை கூறிப் பயனில்லை. அவர்களுக்குத் தேவை சில எடுத்துக்காட்டுகளும், தங்கள் வாழ்வோடு ஒத்த மொழியின் வெளிப்பாடுகளும்தான். அந்த வகையில் தமிழும் அவர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து இணையத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் வளர்ந்தே வருகிறது. நல்ல எடுத்துக்காட்டுகள் மொழியின் மேலும் இளமையின் மேலும் அடிக்கடி நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன. எம் தலைமுறை ஆனந்த விகடனைத் தாண்டி விட்டால் முதலில் சுஜாதாவிலிருந்து இலக்கியம் பழகலாம். அப்படியே எஸ். ராமகிருஷ்ணன்... அப்படியே வால் பிடித்து மேலேறி வந்தால் குறுந்தொகை வாசித்துக் காதலிமார்க்குக் கடிதம் எழுதி அசத்தி விடலாம் !

4. புது எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்? எதனால்? 

நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் எனக்கு நிறையப் புது எழுத்தாளர்களைத் தெரியவே தெரியாது. ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி சட்டென்று நினைவுக்கு வருகிறார். நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள புது எழுத்தாளர். தமிழில் புது எழுத்தாளர்களுக்குப் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லையா அல்லது நான் முயன்று தேடவில்லையா என்று தெரியவில்லை. இன்னமும் தமிழில் பெரிய தலைகளின் படைப்புகளையே முழுவதும் வாசிக்கவில்லை என்பதால் பெரும்பாலும் புது எழுத்தாளர்களைத் தேடாமல் விட்டு விடுகிறோமா என்றும் தெரியவில்லை. இப்படித்தான் கொஞ்ச நாள் முன்னால் யுவன் சந்திரசேகரின் ஒரு நாவலைப் படித்து விட்டு 'புது எழுத்தாளர் ஒருவர் அட்டகாசமாய் எழுதியிருக்கிறாரே' என்று சிலாகித்துக் கொண்டிருந்தேன். மனிதர் புகைப்படத்தில் வேறு தலை நரைக்காமல் இளமையாய் இருந்தாரா .. ஏமாந்து விட்டேன்! விசாரித்தால் தெரிகிறது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் யுவன் சந்திரசேகர் பேரில் ஒரு முழு அலமாரிக்குப் புத்தகங்கள் இருக்கிறது :-) இணையத்தில் 'துரோணா' என்ற வலைப்பதிவை வாசித்து வருகிறேன். யாமறிந்த புது எழுத்தாளர்! ரொம்பவும் வயசு கம்மி. ஆனால் அவர் எழுதுவதைப் பார்த்தால் தலை வணங்கலாம் போலிருக்கிறது. மொழியை அப்படி அனாயசமாகக் கையாளுகிறார். 

www.sparknbeyond.com

5. MBA படிச்சிட்டு ஒரு MNC ல வேலை தேடிக்கிட்டு ஒரு safe வாழ்கை வாழணும்னு நினைக்கிற உலகத்துல நீங்க துணிவா சுய தொழில் துவங்கியது எதனால?

சுய தொழில் என்று முடிவெடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. கொஞ்சம் கிறுக்குத்தனமான முடிவுதான் :-) ஆனால் இந்தக் கிறுக்குத்தனத்திற்காக நான் பெருமைப்படலாம். இருபதுகளின் ஆரம்பத்தில் தன்னம்பிக்கையும் தனித்துவத் தேடலும் பிரகாசமாய்ச் சுடர் விட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்த முடிவை எடுத்து விட்டேன். கைவசம் திறமை இருக்கிறது.. முதலில் கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையும், உடன் வர என்னைப் போன்றே கிறுக்குத்தனமும் திறமையும் நம்பிக்கையும் கொண்ட நண்பர்களும், பின் நிற்க என் கிறுக்குத்தனத்தைச் சகித்துக் கொண்ட என் குடும்பமும் இருந்ததால் இந்தத் துணிவு எனக்குச் சாத்தியமானது. 

6. உங்க SPARK N BEYOND பத்தி சொல்லுங்க, குறிப்பா ஏன் இந்த பேருன்னு சொல்லுங்க ?

SPARK N BEYOND ஒரு படைப்பு நிறுவனம். தொழில் வட்டாரத்தில் எங்கள் நிறுவனத்தை ஒரு creativity hotspot என்று சொல்லிக் கொள்கிறோம். விளம்பரத் துறையில் பிரதானமாய் வருமானம் ஈட்டுகிறோம். நல்ல படைப்பாற்றல் செல்லுபடியாகும் பிற பொழுதுபோக்கு ஊடகங்களையும் ஆழம் பார்க்கும் ஆசை எல்லாம் இருக்கிறது. கல்வியிலும் படைப்பாற்றலைப் புகுத்திப் பரீட்சிக்கும் வகையில் சிறு பட்டறைகளை நடத்தி வருகிறோம். ஒரு சின்னப் பொறியாக ஆரம்பித்தது எங்கள் நிறுவனம். தம் கட்டி ஊதி ஊதி எவ்வளவு தூரம் அந்தப் பொறியிலிருந்து ஒரு பிரவாகத்தை உருவாக்க முடியுமோ அதுவரை உழைப்போம். அதனால்தான் இந்தப் பெயர் ! சொல்லப் போனால் முதலில் நாங்கள் இந்தப் பெயரைத் தேர்வு செய்யவில்லை. எந்த அர்த்தமும் இல்லாமல் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயர் போல ஒரு நாலெழுத்துப் பேரை முடிவு செய்தோம். எல்லாருக்கும் பிடித்துப் போய் visiting card எல்லாம் அடித்தாயிற்று. பிறகுதான் தெரியவந்தது அந்தப் பெயருடன் .காம் சேர்த்துக் கொண்டு ஒரு பலான இணையதளம் இயங்கி வருகிறது என்று ! விதி ! :-) எல்லாம் நன்மைக்கே என்றாற்போல் இந்த எதிர்பாராத திருப்பம் எங்கள் நிறுவனத்திற்கு இன்று ஒரு அட்டகாசமான பெயரைக் கொடுத்திருக்கிறது. 

7. பிசினஸ், எழுத்து  எப்படி சமாளிக்க முடியுது?

இரண்டையும் பணம் பண்ணும் முழு நேரத் தொழில்களாக வைத்துக் கொண்டிருந்தால் கஷ்டம். எனக்கு எழுத்து தொழில் அல்ல. எழுத்து எனக்குக் காதல் போல ! கூடுமானவரை பிழைப்புக்குப் பங்கம் வராமல் வார இறுதிகளில் எழுதுகிறேன். அதையும் மீறிச் சில கருக்கள் பரவசத்தில் தூக்கம் தொலைத்து வார நாட்களின் இரவுகளிலேயே பேனா பிடிக்க வைத்தால் கருத்தாக உட்கார்ந்து கதையோ கவிதையோ எழுதி முடித்துவிட்டு மறுநாள் காலையில் அரை விடுப்பெடுத்துக் கொண்டு அலுவலகத்தில் அசடு வழிந்து கொள்ள வேண்டும். காதலென்று சொல்லிவிட்டேனே .. இதையெல்லாம் பார்த்தால் முடியுமா பின்னே ? :-)

8. கதைகள்ள ஆங்கிலம் கலந்து எழுதுறதப் பத்திய உங்க கருத்து ?

கதைகள் முடிந்தவரை உண்மையாக இருக்க வேண்டும். எனக்கு அதுவே முக்கியமாகப் படுகிறது. உண்மையில் அந்தக் காட்சியில் ஆங்கிலம் தான் வருகிறது என்றால் பாதகமில்லாமல் பயன்படுத்தலாம். தமிழானாலும் ஆங்கிலமானாலும் வலியப் புகுத்தினாற்போல் ஆகிவிடக் கூடாது. 'மச்சி உனக்கு கால் பண்ணிப் பண்ணிப் பாத்தேன்.. நாட் ரீச்சபிள்னே வருதே'  என்று சொல்லுமிடத்தில் 'மச்சி உன்னை அழைச்சு அழைச்சுப் பாத்தேன்.. தொடர்பு எல்லைக்கு வெளியேலேயே இருக்கேன்னு சொன்னாங்களே' ன்னா சிரிப்பாதான் இருக்கும். இந்த முடிவு எழுத்தாளரின் பாணியையும் பொறுத்தது. பெரும்பான்மை ஆங்கிலக் கலப்பு நேர வரும் இடங்களில் நான் கதையோட்டத்துக்கும் உண்மைத்தனத்துக்கும் கெடுதல் வராமல் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முடிந்தால் சந்தோஷமாகப் பயன்படுத்துவேன். இதைச் செய்ய முடிந்தால் ஒரு எழுத்தாளன் பெருமைப்படலாம். 

9. நீங்கள்  எழுதியதில் உங்களுக்கு பிடித்த கவிதை?

இலக்கியமும் காதலும் எனக்கு எப்போது திகட்டாத சிந்தனைகள். இவையிரண்டையுமே ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து நான் படைத்த கவிதை இது. நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிதை. 


குதிங்காலில் கூச்சம் காட்டலாம்
கரும்பாலே பாணம் பூட்டலாம்
கரைந்து மனம் மருளச் செய்யலாம்
கணம் யுகம் பிறழச் செய்யலாம்
குளிர் நீரை முகத்தில் அறையலாம்
கொன்று குருதி குடித்துச் செல்லலாம்

குறைந்தபட்சம் இவற்றில்
ஏதாவது ஒன்றாகவும்
எல்லாமாய் இல்லாமலும்
இருக்கிறது
நல்ல இலக்கியம்

கண்டிப்பாய் இவற்றுள்
அத்தனையுமாய் அமைகிறது
காதல்

-மதி

10. கதைகள் பொழுதுபோக்கு அம்சமா மட்டும் இல்லாம, அது ஒரு கருத்து சொல்லணும்னு எதிர்பார்ப்பு இருக்கா ? உங்க அடுத்த அடுத்த படைப்புகள் சமூக சிந்தனைகள் தாங்கி இருக்குமா?

கதைகள் கருத்தைச் சொல்லாமல் கருத்தைத் தூண்டி விட வேண்டுமென்று நினைப்பவன் நான். சமூகச் சிந்தனையைச் சொல்லிக் கொடுத்துப் பரீட்சை எழுத வைக்க முடியாது. ஒரு எழுத்தாளனுக்கு ஒரு சமூகத்தை உண்மையாகக் காட்ட வேண்டிய கடமை இருக்கிறது. ஒவ்வொடு கதையும் ஒரு தனிச் சமூக அமைப்பின் வாழ்வு முறைக்கு நம்மை அறிமுகம் செய்து வைக்கிறது. அந்த அமைப்பு கஷ்டப்பட்டாலும், கோவப்பட்டாலும், காதலித்தாலும், கிரிக்கெட் விளையாடினாலும் உண்மையின் வரம்புகளுக்குள் அதை ரசம் கூட்டும் கற்பனைகளோடு சொல்வதே ஒரு கதைசொல்லியின் திறமை. வாசகனுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்போதே அந்தச் சமூகத்தைப் பற்றிய புரிதலும் அமைந்து விடும். 'முதல் போணி' தொகுப்பில் 'ஒரு சோறு பதம்' என்ற கதையைப் பெருவாரியான தற்காலச் சமூகச் சிந்தனைக் கதை இலக்கணங்களின் படி சமூகக் கதை என்று ஒத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை 'காதல் மரத்தில் நீலச் சாயம்' சிறுகதை கூடச் சமூகச் சிந்தனைக் கதைதான். அளவு கோல்கள் அவரவரைப் பொறுத்தவை. அதே நேரத்தில் இலக்கியம் மற்றொரு பரீட்சார்த்த தளத்திலும் இப்போது பல எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. சமூகமே இல்லாமல் மாய எதார்த்தங்களில் பயணிக்கும் இலக்கியமும் வசீகரிக்கவே செய்கிறது. என் தொகுப்பில் 'பரணி' சிறுகதை இவ்வகையில் என்னுடைய பரீட்சார்த்த முயற்சி. சமூக சிந்தனைகள் உண்டோ இல்லையோ, என் அடுத்தடுத்த படைப்புகளும் உண்மையாகவும் கருத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்க நான் முயற்சிப்பேன். 

11. அடுத்து நீங்கள் எழுத விரும்பும் கரு?

அடுத்ததாய் ஒரு கல்லூரிச் சிறுகதைத் தொகுப்பை எழுத நினைத்திருக்கிறேன். கல்லூரிக் காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு விசேஷ அனுபவம். அக்காலத்தில் சந்திக்க நேரும் பலவகையான சுவாரசிய மனிதர்களைக் கதைகள் மூலம் அறிமுகப்படுத்தி வைக்க முயற்சிப்பேன். அனேகமாக அந்தத் தொகுப்பிலும் 16 கதைகளே இருக்கலாம் :-) கல்லூரிக் கதைகள் என்றதும் காதலும் விடலை விளையாட்டுகளும் மட்டும் என்று நினைத்து விட வேண்டாம். நான் பார்த்ததிலேயே மிகப் பொறுப்பான மக்களும் இன்னும் கல்லூரி வளாகங்களில் இருக்கிறார்கள். காதலர்கள் முதல் சமூகச் சீர்திருத்தவாதிகள் வரை பலரையும் உங்களுக்கு அறிமுகம் செய்யவே விருப்பம். விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட எண்ணமிருக்கிறது. முதல் கவிதைத் தொகுப்பிற்கு 'பிள்ளையார்சுழி' என்பது பெயராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். 

12. குறுங்கதை - நெடுங்கதை எது எழுதுவது சுலபம் ?
Image courtesy: vignetfishnet

என் அனுபவத்தில் குறுங்கதை தான் சுலபமாக இருக்கிறது. நெடுங்கதை எழுதுவதற்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. இத்தொகுப்பில் வரும் 'பரணி' கதையை முதலில் நெடுங்கதையாக எழுத உத்தேசித்திருந்தேன். அதன் முதல் அத்தியாயமாய்த்தான் இக்கதையை எழுதியிருந்தேன். மனம் நெடுங்கதை எழுத நினைக்கையில்தான் ஏனோ எங்கோ முட்டி நின்று விடுகிறது. சிறுகதைகளில் ஒரு கவித்துவக் குறுமையும் எழுத்துச் சுதந்திரமும் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். அதற்காகச் சிறுகதைகளை ஒரு இரவில் எழுதி விட முடியும் என்றெல்லாம் கிடையாது. 'பைரவன்' சிறுகதையின் கரு தோன்றியது முதல் அதை எழுத்தாக்குவதற்கு எனக்குக் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தேவைப்பட்டன. 'கைராசிப்பிள்ளை' கதை சுலபமாக ஒரு நெடுங்கதை ஆகியிருக்கலாம். என் பேனா சிறுகதைகளையே இப்போது விரும்பிப் படைக்கிறது. அதுவாய்ச் சொல்லும் வரை நெடுங்கதை எழுதப் போவதில்லை :-)

13. புது எழுத்தாளர்களுக்கு நீங்க சொல்ல விரும்பும் குறிப்புகள்?

அறிவுரையின் தொனியில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல எனக்கு அந்தஸ்து பற்றாது. சமமாய்ப் பயணிக்கும் ஒரு புது எழுத்தாளனாக, ஒரு தோழனாக, எனக்கு உதவின சில கருத்துகளை இங்கு சொல்கிறேன். நிறைய வாசியுங்கள். நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் எடுங்கள். நீங்கள் எதை எழுதினாலும் அதைக் கண்மூடித்தனமாகப் பாராட்டும் ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உத்வேகத்துக்கு ரொம்ப நல்லது. நீங்கள் எழுதுவது குப்பை என்றால் அதை முகத்துக்கு நேராய்ச் சொல்லும் மற்றொரு நண்பர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். உண்மைக்கு உதவும். இரு சாரார் கருத்துகளையும் காதில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் உள்மனம் சொல்வது போல் எழுதுங்கள். இணையத்தில் வலைப்பதிவுகள் தொடங்கி அதன் மூலம் முகம் தெரியாத வாசகர்களையும் சென்றடைய முயலுங்கள். கற்பனைக் குதிரை இன்னும் கணிணித் தட்டச்சுக்கு நெருக்கமாய் நட்பாகவில்லையோ என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம் உண்டு. உங்களுக்கும் அந்தச் சந்தேகம் இருப்பின் கையேடுகளில் பேனா பிடித்து எழுதிப் பாருங்கள். எழுத்தின் மேல் ரசனையும் மோகமும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி : புகற்சி


அறிவிப்பு : என் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முதல் போணி'  என்ற பெயரில் சமீபத்தில் புகற்சி பதிப்பகத்தார் மூலம் புத்தகமாய் வெளிவந்துள்ளது.. அதன் பின்விளைவே இந்த நேர்காணல். புத்தகத்தை இங்கிங்கெலாம் வாங்கலாம். உடுமலை.காம் | நன்நூல்.காம் (கடல் கடந்து வாழ்வோர் கூட இங்கே வாங்கலாம்) | நன்நூல்.இன் | indiaplaza.com | flipkart

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..