பொம்மைக்கூடும் பிள்ளைத்தமிழும்
ஒரு குழந்தை
தன் பொம்மைக்கூட்டின் ஜீவராசிகட்கு
உம்மை அறிமுகம் செய்து வைத்தால்
தெரிந்து கொள்ளலாம்.
அதன் நட்புக்கும்
நம்பிக்கைக்கும்
அருகதை பெற்று விட்டீர் என்று.
அனுபவத்தில் சொல்கிறேன் !
என் வீட்டின் சின்ன ராணி
தன்னொடு ஊஞ்சலில் உடனாடும்
பஞ்சடைத்த பாப்பாக்களிடம்
எனக்கும் இடம் தரச் சொல்வாள்.
அங்கீகாரச் சான்றிதழ் இதுதான் !
ஆட்டம் முடிந்ததும் அவர்களை
என் மடியில் கிடத்தித்
தட்டித் தூங்க வைக்கச் சொல்லிவிட்டுத்
தரணிக்கே படியளக்கப் போவாள்.
பொம்மை அடுப்பும்
பண்ட பாத்திரங்களும்
சமைந்து நிற்க
கிண்டிக் கிளறிப் பொங்க வைத்துப்
பிசைந்து உருட்டிப் படைக்கிறாள்.
ஊஞ்சல் நண்பர்கள் உறங்கினதை
ஊர்ஜிதம் செய்து கொண்டு
கடமையைச் செவ்வனே செய்த எனக்குக்
கன்னம் கிள்ளி ஒரு கொஞ்சலும்
முதல் கவளச் சோறும் தருவாள்.
சிறுத்தை புலி
ஆனை குதிரை கரடி
கடவுள்
எல்லோரும் வரிசையாய்
அமுதூட்டலுக்காய்க் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவராய்ப் பசியாற்றுகிறாள்.
இன்றுதான் புதிதாய்
தண்ணீர் கேட்கப் பழகியிருக்கிறது கரடி.
அதனைக் கண்டு தொடர்ந்து
ஒவ்வொருவருக்காய்த் தாகசாந்தி.
மிருகராசிகள் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கிக்
கொஞ்ச நேரம் தான் போயிருக்கும்.
குதிரை முதுகில் ஏறி விட்டதாய்ச்
சண்டை பிடித்துப் பஞ்சாயத்துக்கு வந்தது யானை.
இதென்னடா புதுப்பழக்கம் என்று
தீர்ப்புச் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்த்தால்...
சேட்டைக்காரப் பந்துகள் ஒன்றிரண்டு
சொல் பேச்சு கேளாமல் உருண்டுருண்டு
சலம்பிக் கொண்டிருக்கும்.
இதற்கொரு எத்து.
அதற்கொரு எத்து.
நேற்று கொடுத்த சாவியில்
சடாரென்று விக்கிக் கொண்டு
கைகொட்டிக் கொட்டடிக்கும்
கோமாளிக் குரங்கு.
சபாஷ்
சரியான தீர்ப்பு !
காய்ந்து இறுகிக் கசங்கிப் போன
தோசைத்துண்டொன்று
கூச்சத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.
பசிக்குப் பிறந்த மாவுத்துண்டு
ஒரு நாள் மிச்சப்பட்டதில்
தன் மீதி வாழ்வின் பேற்றை அடைந்து
பொம்மையாய் மாறிக்
களி பழகிக் கொண்டிருக்கும்.
அடுத்த முறை ஊஞ்சல் செல்லுமுன்
சிறகொடிந்த கிள்ளையையும்
சிறிதொடிந்த பொம்மையையும்
சிகிச்சைக்கு என்னிடம் அனுப்பி வைப்பாள்.
அவள் கொஞ்சலுக்கும்
கோபத்துக்கும்
வளைந்து கொடுத்தும்
உடைந்து கொடுத்தும்
வாழ்வாங்கு வாழ் ஜீவன்கள் !
விசாரிக்கிறேன்.
வெளிக்காயம்தான்
எம்மை விளையாட விடுங்கள் என்கின்றன.
இவள்
கொட்டி வாரிக் கொண்டாடுவதற்காய்
நித்தம் நித்தம்
எத்தனை எலும்புகளையும்
இழக்கத் தயாராம்.
ஒரு தொடுகையில் எல்லாம்
சரியாய்ப் போகுமாமே.
இளவரசிக்குத் தூக்கம் வந்து விடும்.
சிதறிக் கிடக்கும் பொம்மைகளையெலாம்
கூட்டில் சேர்ப்பாள்.
கடைசியாய்க் கூடு செல்லும் குதிரையிடம்
விடியும் வரை என்ன செய்வீர்கள் என்கிறேன்.
இனி என்ன ?
கூடோடு கைலாசம் தான்..
தேவ சேதிகளோடும்
புதுக் கற்பனைகளோடும்
நாளையின் அழைப்பிற்காய்க் காத்திருப்போம்
என்கிறது.
முக்தி !
இதை
ஒட்டுக் கேட்ட யானை
எட்டிப்பார்த்து என்னிடம்
ஓய்
கதை பூராம் கேட்டுவிட்டுக்
காற்றில் விட்டிராதீரும்..
பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் ஏதேதோ உண்டுமாமே..
எழுதி வையும் !
கவிஞர்கள் கோட்டாவில்
மேலே இடம் போட்டு வைக்கிறேன் என்று சொல்லி
ஆடி ஆடிக் கூடு செல்கிறது.
தொல்காப்பியர் என்ன சொல்கிறாரென்றால்....
- மதி
(படம் அளித்து உதவிய Pietro Motta-கு நன்றி. Pietro Motta's photostream)
அறிவிப்பு : என் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முதல் போணி' என்ற பெயரில் சமீபத்தில் புகற்சி பதிப்பகத்தார் மூலம் புத்தகமாய் வெளிவந்துள்ளது.. புத்தகத்தை இங்கிங்கெலாம் வாங்கலாம். உடுமலை.காம் | நன்நூல்.காம் (கடல் கடந்து வாழ்வோர் கூட இங்கே வாங்கலாம்) | நன்நூல்.இன் | indiaplaza.com | flipkart
அருமை..
பதிலளிநீக்குகவிஞர்கள் கோட்டாவில்
பதிலளிநீக்குமேலே இடம் போட்டு வைக்கிறேன் என்று சொல்லி
ஆடி ஆடிக் கூடு செல்கிறது.
தொல்காப்பியர் என்ன சொல்கிறாரென்றால்....
செம !!
இன்றுதான் புதிதாய்
பதிலளிநீக்குதண்ணீர் கேட்கப் பழகியிருக்கிறது கரடி.
அதனைக் கண்டு தொடர்ந்து
ஒவ்வொருவருக்காய்த் தாகசாந்தி
romba pidichudhu..
ஒட்டுக் கேட்ட யானை
பதிலளிநீக்குஎட்டிப்பார்த்து என்னிடம்
ஓய்
கதை பூராம் கேட்டுவிட்டுக்
காற்றில் விட்டிராதீரும்..
பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் ஏதேதோ உண்டுமாமே..
எழுதி வையும் !
கவிஞர்கள் கோட்டாவில்
மேலே இடம் போட்டு வைக்கிறேன் என்று சொல்லி
ஆடி ஆடிக் கூடு செல்கிறது.
தொல்காப்பியர் என்ன சொல்கிறாரென்றால்....
nice one na:-)
ctrl A+ctrl v....mulu kavidhayium alagu..rasithu padithen
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே :-)
பதிலளிநீக்கு