கனவுகளை விற்கிறேன் .. முதலீடு செய்கிறீர்களா ? - ஓர் எழுத்தாளனின் கடிதம்
வணக்கம்.

என் வலைப்பதிவில் வழக்கமாக வரும் பிற பதிவுகளில் இருந்து இந்தப் பதிவு கொஞ்சம் வேறுபட்டது. இதனை ஒரு திறந்த கடிதமாக எழுதுகிறேன். யோசித்துப் பார்த்தால் சமீப காலங்களில் இந்த 'திறந்த கடிதம்' (ஓப்பன் லெட்டெர்) என்பது கவிதை, கட்டுரை போல் ஓர் இலக்கிய வடிவமாகவே மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது. அத்தனை பேர் எழுதுகிறார்கள் ! இந்தக் கடிதத்தில் நான் உங்களிடம் கொஞ்சம் நேரத்தையும் கொஞ்சம் பணத்தையும் கேட்கப் போகிறேன். 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்,,, காசு குடு' என்று சப்பாணி கமல் முதல் 'சின்ன .. மாரியம்மன் கோவிலுக்குக் கூழ் ஊத்துறோம்' என்று கார்த்திக் வரை .... விக்கிபீடியாவின் ஜிம்மி வேல்ஸிலிருந்து உங்கள் பள்ளியில் சுதந்திர தினத்துக்குக் கொடிக்காசு வசூலிப்பது வரை நீங்கள் இது போல் பலவும் பார்த்திருக்கலாம். நான் ஏன் கேட்கிறேன் என்று வாசித்துப் பாருங்கள்.

முதல் புத்தகம் என்னும் கனவை ஒவ்வொரு எழுத்தாளனும் மிகப் பத்திரமாகத் தனக்குள் செதுக்கிச் செதுக்கி அதை நனவாக்க முயன்று கொண்டேயிருக்கிறான். அவன் காணும் அதே கனவை அவன் விழிகளின் வாயிலாகவே கண்டு அவனுக்கு ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு நல்ல பதிப்பகத்தின் துணை வேண்டும். சில சமயங்களில் பதிப்பகங்கள் அறிமுகங்களில் முதலீடு செய்கையில் கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுத்தாளனை முதலீட்டாளனாகவும் மாறச் சொல்வதுண்டு. கனவு நனவாகும் வாய்ப்பென்று கைக்காசைப் போட்டுப் புத்தகம் வெளியிட்ட கதை ஒன்று படைப்பாளிகளில் பலரிடமும் கட்டாயம் இருக்கும். அப்படி ஒரு கதையைத் தான் நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.உங்கள் வீட்டு அடுப்பறையில் இருந்து கொஞ்சம் சீனி எடுத்து நானே தருவதாய் எண்ணி வாயில் போட்டுக் கொள்ளுங்கள். என் முதல் புத்தகம் அச்சில் வெளிவரப் போகிறது. 'முதல் போணி' என்று புத்தகத்திற்குப் பெயர் வைத்திருக்கிறேன். இதே தலைப்பிலான என் சிறுகதை ஒன்றையும் சேர்த்து மொத்தம் பதினாறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாய் இப்புத்தகம் விரைவில் வெளி வர இருக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் தீராத கோபத்தில் துடிக்காத, பசியால் வாடாத, தோல்விகளால் துளைக்கப்படாத, ஒரு போர்முனையில் அனுதினமும் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருக்காத, காதலிலோ சமமான வேறு போதைகளிலோ முப்போழ்தும் மூழ்கிக் கிடக்காத - சுருங்கச் சொன்னால் கதைகள் எழுதுவதற்கான பெருவாரியான காரணங்கள் எதுவுமே இல்லாத அமைதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழக இளைஞனின் பேனா படைத்தவை. ஒரு பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு நகரத்தில் பிழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ஊருக்கு ரயிலில் முன்பதிவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் பலரைப் போலவேதான் இந்தக் கதைகளைப் படைத்த எனது யதார்த்த வாழ்வும் இருக்கிறது. அந்த யதார்த்தத்தின் நடுவேயும் பலரும் கவனிக்க மறந்துவிடும் சுவாரசியமான நிகழ்வுகளையும், இந்த யதார்த்தம் லேசாகச் சலிக்கும் போது நான் நுழைந்து கொள்ளும் என் கற்பனை தேசத்தின் சில புனைவுகளையும் இத்தொகுப்பில் சிறுகதைகளாக எழுதியிருக்கிறேன். இவற்றில் சில சிறுகதைகள் ஏற்கெனவே என் வலைப்பதிவில் வெளிவந்திருக்கும். நீங்கள் வாசித்தும் இருக்கலாம். தொகுப்பிற்காய்ச் சில கதைகளைத் திருத்தி மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொகுப்பிற்காகவே வலையில் வெளியிடாத கதைகள் சிலவற்றையும் புதிதாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இளைஞர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். என் புத்தகத்தை வெளியிட முன்வந்திருக்கும் பதிப்பகத்தைப் பற்றி நான் இங்கு கட்டாயம் சொல்லியாக வேண்டும். ரசனையின் மூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு அறிமுக எழுத்தாளர்களின் நடைமுறைக் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு தமிழுக்கு மேலும் பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, நம் தலைமுறை இளைஞர்களால் துவங்கப்பட்டிருக்கும் Fresh Face publications தான் என் கனவை என்னோடு சேர்ந்து நனவாக்கப் போகிறவர்கள்.

சுய வெளியீடு என்னும் Self publishing என்பது புத்தக வெளியீட்டு உலகில் தற்போது பரவலாக உள்ள ஒரு போக்கு. இது என்ன மேட்டர் என்றால் , தன்னிடம் அருமையான ஒரு படைப்பு இருக்கிறது.. இதை வெளியிட்டால் உலகம் ரசிக்கும் என்று ஒரு படைப்பாளி நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் வெளியீட்டுக்காகப் பல பிரபல பதிப்பகங்களை அணுகுவான். அவர்கள் அனைவரிடமும் தன் படைப்பின் ஒரு பிரதியை நம் படைப்பாளி அனுப்பி வைத்திருப்பான். இவனைப் போல ஆயிரக்கணக்கான பேரின் பிரதிகள் அந்தப் பதிப்பகங்களில் காத்துக் கிடக்கும். அறிமுகமே இல்லாத இவனின் படைப்பை ஒருவர் எடுத்துப் படித்துப் பார்த்து அதனை ரசித்து, பிறரிடம் பகிர்ந்து, அவர்கள் கூடிப்பேசி இவனை அழைத்து, அதன் பின்னும் கூடிப் பேசி அதனை வெளியிடுவது என்பதன் சாத்தியக் கூறுகளைக் கணித முறைகளில் அளந்து பார்த்தால் உரை இல்லாமல் மூலத் தொகுப்பிலிருந்தே ஒரு குறுந்தொகைப் பாடலை நாம் வாசித்துப் புரிந்து கொள்ளும் சாத்தியக் கூறுகளுக்கு மிக அருகில் வரும். அதனால் அந்தப் படைப்பாளி தன் கைக்காசைப் போட்டு, தானே பதிப்பிப்பவனாகவும் மாறி தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்வதுதான் சுய வெளியீட்டின் சாராம்சம். அவன் விரும்பியபடி அவன் படைப்புகளை உலகம் ரசித்ததென்றால் அவனின் பாதை அதற்கு மேல் சுலபமானதாகி விடும்.

'முதல் போணி' என்னும் என் அறிமுகத்தை இந்தச் சுய வெளியீட்டு முறையில்தான் நான் Freshface publications-உடன் இணைந்து நிகழ்த்தவுள்ளேன். சரி .. கைக்காசைப் போட்டுப் புத்தகம் போடலாம். காசுக்கு எங்கே போவது? நா.முத்துக்குமார் இதே போல் ஒரு சூழ்நிலையிலிருந்த போது மனைவியின் தாலியை அடகு வைத்துக் காசு புரட்டினாராம். எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லையே :-) (அழகான பெண்கள் முந்தைய வாக்கியத்தை அடிக்கோடிட்டுக் கொள்ளலாம்). அதற்குத் தான் நான் crowdsourced fundraising என்றால் என்ன என்று உங்களுக்கு விளக்கப் போகிறேன்.

இது என்ன மேட்டர் என்றால், எனக்கு ஒரு புத்தகத்தை வெளியிட ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அது என்னிடம் இல்லை என்றும் வைத்துக் கொள்வோம். என் எழுத்து பிடித்துப் போய் நான் காணும் அதே கனவைக் காணும் என் வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று .. எந்த உலகம் என் படைப்பை ரசிக்கும் என்று நான் நம்புகிறேனோ ந்த உலகத்தினிடமே ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் என் புத்தக வெளியீட்டிற்கு உதவி செய்யும் வகையில் நான் நிதி திரட்டுவது தான் crowdsourced fundraising. ஆங்கிலப் பதிப்புலகில் இது மிகவும் வளர்ச்சியடைந்து தொழில்முறையாகக் கூட நடந்து கொண்டிருக்கிறது. சில எடுத்துக்காட்டுகளைப் பற்றி அறிய இங்கே கிளிக்கவும். இந்தக் கதை நம் ஊருக்கு இன்னும் பரவலாக வரவில்லை. சில காலம் முன்பு 'ஹிண்டு' நாளிதழில் படித்ததாய் ஞாபகம். இரண்டு தமிழக இளைஞர்கள் நம் தேசம் முழுவதும் ஒரு பத்து மாசம் பைக் ஒன்றில் சுற்றித் திரிந்து அந்த அனுபவங்களை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடப் போவதாய் அறிவித்து அவர்களின் பிரயாணத்திற்கும் புத்தகத்தின் வெளியீட்டிற்கும் ஃபேஸ்புக்கில் வெற்றிகரமாக நிதி திரட்டினார்களாம். இப்போது அவர்கள் பயணத்தில் எங்காவது ஒரு சுவாரசியமான இடத்தில் இருக்கக்கூடும். தமிழ் வெளியீட்டில் நான் இதற்கு முன் இப்படி எதையும் கேள்விப்பட்டதில்லை. 'முதல் போணி' வெளியீட்டிற்கு நிதி திரட்ட இந்த ஏற்பாட்டைத் துவக்கி வைத்து நானே இந்தக் கலாச்சாரத்தையும் நம் ஊருக்கு இறக்குமதி செய்யலாம். (முந்தைய வாக்கியத்தில் நான் தான் முதல் ஆள் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை. இது ஒரு யூகம் தான்).

ஆக, வெளியாகவிருக்கும் என் முதல் புத்தகத்தின் பதிப்புச் செலவைச் சமாளிப்பதற்காக என் புத்தகத்தை ரசிப்பீர்கள் என்று நான் நம்பும் உங்களனைவரிடமும் ஆளுக்குக் கொஞ்சம் என்ற வகையில் சிறிது சிறிதாகப் பெற்று இந்தக் கனவினை நனவாக்கலாம் என்றுதான் நான் உங்களிடம் பணம் கேட்கிறேன்.

இந்தப் பணம் எப்படிப் பயன்படுத்தப்படும் ?

புத்தகத்தின் அச்சுச் செலவை ஏற்றுக்கொள்ளவே இந்தப் பணம் பெரிதும் பயன்படுத்தப்படும். நல்ல தரமான அச்சில் இந்தப் புத்தகம் கணிசமான எண்ணிக்கைகளில் வெளியாகி உலகைச் சென்றடைய இத்தொகை தேவையாகிறது. நீங்கள் அளிக்கும் தொகையோடு நான் என் கைவசம் புரட்ட இயன்ற என் கைக்காசையும் போட்டுத் தான் அச்சுச் செலவை ஏற்றுக் கொள்ளப் போகிறேன். புத்தகத்தை வியாபாரப்படுத்துவதிலும் விற்பனை செய்வதிலும் உள்ள செலவுகளைப் பதிப்பகம் ஏற்றுக் கொள்கிறது.

எவ்வளவு பணம் தேவை? 

என் கணிப்புப்படி ரூபாய் 40,000 தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் 500-இலிருந்து 1000 பிரதிகள் பதிப்பிக்கப்படும். வரவேற்பைப் பொறுத்து மறு பதிப்புகள் வெளிவரும். இத்தொகையை இன்னும் இரண்டு மாதங்களில் புரட்ட முடியும் என்று நம்புகிறேன்.

அவ்வளவு பணம் வசூலாகவில்லை என்றால் ? 

வசூல் என்ற வார்த்தையை உபயோகிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. அவ்வளவு பணம் சேரவில்லை என்றால் நான் வந்த காசைக் கொடுத்தவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு மீண்டும் என் கனவை அடைகாக்கப் போய்விடுவேன். சில காலம் கழித்து மீண்டும் இந்தப் புத்தகத்தை வெளிக் கொணர முயற்சிப்பேன்.

'முதல் போணி'யில் வரக்கூடிய பல கதைகளை நான் இந்த வலைப்பதிவிலேயே வாசித்து விட்டேன். நான் ஏன் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்?

அப்படிப் பல கதைகளை நீங்கள் ஏற்கெனவே வாசித்து ரசித்திருந்தால் மிக்க நன்றி. நான் முன்னமே சொன்ன மாதிரி, இத்தொகுப்பிற்காக என்றே இதுவரை வெளியிடாத சில கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும் பழைய கதைகள் சிலவற்றையும் கொஞ்சம் திருத்தி எழுதிக் கொண்டும் இருக்கிறேன். ஆகவே உங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பழைய சோற்றைப் போட்டுப் பசியில் விட்டு விடாது என்று உறுதி கூறுகிறேன். மேலும், ஒரு புத்தகத்தை அச்சு வடிவில் கையில் வைத்து, புத்தக வாசனை முகர்ந்து, பக்கங்களைத் திருப்பி, அலமாரியில் வைத்து அழகு பார்த்து, பக்கங்களைக் குறிக்க அவற்றின் காதை மடக்கி வைத்து, பிடித்தவர்களுக்கு அன்பளிப்பாய் வாங்கிக் கொடுத்து .. என இன்னும் பல வகைகளில் இக்கதைகள் அட்டையும் தாளுமாய் ஒரு புத்தகமாய் வருகையில் உங்களை வேறொரு வகையில் ரசிக்க வைக்கும் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.

இந்தத் தொகையை நீங்கள் எனக்குத் தரும் தானமாக நினைத்தால் தயை கூர்ந்து அந்தத் தொகைக்கு உங்கள் தெருவிலோ ஊரிலோ ஒரு குழந்தையைப் படிக்க வைக்கவோ பசியாற வைக்கவோ செய்யுங்கள். வெறும் கடன் என்று பார்த்தால் இன்னும் அதிக வட்டி கொடுக்கும் ஏதாவது வங்கியில் போடுங்கள். இதை ஏதோ சூதில் போடும் பணம் என்று நினைத்தால், இதற்குப் பதிலாக நாளை காலை ஏதாவது ஒரு ஊருக்குப் போக IRCTCயில் தட்கால் பயணச்சீட்டு எடுக்க உபயோகியுங்கள். நீங்கள் தரும் தொகையை ஒரு எழுத்தாளனின் கனவில் நீங்கள் செய்யும் முதலீடாகப் பார்த்தால் மட்டுமே எனக்கு அனுப்பி வையுங்கள். என்னால் இயன்ற வரை நிச்சயமாக அந்த முதலீட்டை உங்களுக்கு ஓர் அருமையான வாசிப்பு அனுபவமாகவும் கூடவே பணமாகவும் திருப்பிக் கொடுப்பேன்.

உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் : 

நான் சென்னையில் வசித்து வருகிறேன். என் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ஒரு படைப்பு நிறுவனத்தை உருவாக்கி, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்து வருகிறேன். மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யும் திருப்தியோடு தற்காலிகமாய்த் தடபுடலாய்ச் சம்பாதிக்காமல் அடக்கமாய்ப் பணம் பண்ணிச் சிக்கனமாய் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் ஆரம்பித்துள்ள நிறுவனம் சிறப்பாக வளர்ந்து வருகிறது. இன்னும் மூன்று வருடங்களில் ஒரு இருபது பேருக்காவது சம்பளம் கொடுத்து லாபகரமாய் இயங்க வைப்பதற்கு என்னிடமும் இதில் இணைந்துள்ள என் நண்பர்களிடமும் தெம்பும் நம்பிக்கையும் இருக்கிறது. சமமாக மற்றொரு தளத்தில் இலக்கிய உலகில் ஒரு அறிமுகம் பெறவும் என் எழுத்தின் மூலம் உலகோடு பேசிக் கொண்டிருக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் விவரங்கள் வேண்டுமானால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

எப்படிப் பணம் அனுப்புவது? 

(இவ்விடத்தில் என் வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் இருந்தன. இந்த முதலீடு வெற்றிகரமாக நிகழ்ந்து புத்தகம் வெளிவந்து விட்டதால் அவற்றை நீக்கி இருக்கிறேன்)

பணம் அனுப்புவதைத் தவிரவும் உங்களால் என் கனவுக்கு உதவ முடியும். இப்படி ஒருத்தன் இருக்கிறான். அவன் இன்ன காரியம் செய்கிறான் என்று நீங்களறிந்த தமிழ் பேசும் நல்லுலகிற்கு... உங்கள் நண்பர்களுக்கு சேதியைச் சொல்லலாம். செய்தால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாவேன்.

என் எழுத்தோடு தொடர்ந்து பயணித்து வாருங்கள்..
நன்றி,
மதி

பி-கு : என்னைத் தெரிந்தவர்கள் எவரும் இதைப் படித்துவிட்டு 'என்னடா இவனைப் பார்த்தால் காசு கேட்பான் போல' என்று பயந்து ஓட வேண்டாம் :-) சில நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவே நான் இந்த நிதியை முழுக்க முழுக்க இணைய வழியில் திரட்டுகிறேன். அவர்களாய்க் கேட்காவிட்டால் நேரில் எவரிடமும் இதைப் பற்றிப் பேசக் கூட எண்ணமில்லை.

(படம் அளித்து உதவிய அவோரீக்கு நன்றி. Aveoree's photostream)

கருத்துகள்

  1. அன்பான சொந்த்திற்கு வணக்கம்.தங்கள் தேடலும் தாகமும் புரிகிறது.என் பதிவுலக அறிமுகம் கூட ஒரு நூல் வெளியிடுவதற்கான அனுபவ சேகரிப்பும் அறிவுத்தேடலும் தான்.ஒவ்வொரு எழுத்தாழனுக்கும் தன் ஒவ்வொரு எழுத்தின் மீதுமுள்ள கனவும் காதலும் எதிர்பார்ப்பும் நான் அறிவேன்.தங்கள் பணியை இவ்விடத்தில' மெச்சுகிறேன்.நான் சிறியவள் என்பதாலும் பணம் தரக்கூடிய நிலையிலி இல்லை என்பதற்காகவும் வருந்துகிறேன்.உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.இறை ஆசீர் உங்களோடு தங்கட்டுமட.இந்தக் கனவுப்பயணம் நிச்சயம் செந்நி பெற வேண்டும் என மனதார பிராத்ததித்து வாழ்த்துகிறேன்.

    அன்புடன் அதிசயா
    காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி அதிசயா .... உங்கள் வார்த்தைகள் நிச்சயம் ஊக்கமளிக்கின்றன ... என் முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லி நீங்கள் உற்சாகப்படுத்துவதே பணம் அளித்ததைப் போலாகும். நம்பிக்கையுடன் நிதி திரட்டுகிறேன் ...:-) உங்கள் படைப்பு முயற்சி நல்வழியில் மெருகேறவும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..