நிமிஷங்கள்
இருள்.
காரிருள். அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் சிறு வயதில் ஒண்ணுக்குப் போகப் பயந்து கிடந்த ராத்திரிகளை நினைவூட்டும் கன்னங்கரிய இருள். ஆனால் இப்போது பயமுறுத்தவில்லை. காரணம் இருளைக் கிழித்து விழுந்து கொண்டிருந்த தூறல். இரவு வானின் பின்னணியில் பெய்யும் மழை போலத்தான் இருந்தது. ஆனால் இது அது இல்லை.
பச்சையாக ஒரு திரவம் அந்த இருளைத் துளைத்துத் துளைத்துத் தெறித்துக் கொண்டிருந்தது. அந்தப் பச்சைத் துளிகளுக்கு ஊடாக றெக்கை முளைக்காத பறவைகள் போல பலப்பல குடுவைகள் பறந்து கொண்டிருந்தன - அல்லது மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். ஆனால் அதே பச்சை நிறம். வெளியே தூறிக் கொண்டிருக்கும் திரவம் அக்குடுவைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடந்தது. இருள், தூறல், குடுவைகள் - இவையன்றி ஒன்றும் இல்லை.
அமைதியாக மிதந்து வந்த குடுவை ஒன்று படாரென்று தெறித்து உடைந்தது. உள்ளிருந்த திரவம் ஒழுகி ஒரு வயதான மனிதனின் உருவத்தைப் பிரதிபலிக்கும் பிம்பமாக உருமாறியது. அந்த மனிதனின் கண்களின் ஆழம் அபாயகரமானதாயிருந்தது. அந்தக் கிழவர் நெஞ்சைத் தடவிக் கொண்டே கொஞ்சம் இருமினார். உருகிய மெழுகு ஒழுகி ஓடுவது போல அவரின் பிம்பத்தை உருவாக்கின துளிகள் பிரிந்து தனித்தனியே அந்த மாபெரும் தூறலோடு கலந்து விட்டன. அவர் இறந்து விட்டார்! ஒழுகி ஓடியது அவரின் உயிர். குடுவையிலிருந்து விடுதலை பெற்று ஊழிப்பெருமழையில் துளிகளாய் ஐக்கியமாகிவிட்டது.
அந்தக் கரும் பெருவெளியில் மறு மூலையில் ஒரு குடுவை தன் பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளிருக்கும் உயிரானது திரவ விதிப்படி குடுவையின் வடிவெடுத்துத் தோற்றம் தருகிறது. அவன் எல்லா மாத்திரைகளையும் கையில் கொட்டிவிட்டுக் குடுவையைக் கீழே போடுகிறான். முப்பத்து எட்டு தூக்க மாத்திரைகள். மற்றும் ஒரு குடுவை உடையப் போகிறது.
"ஏன் என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நானும் மனுஷந்தானே .... எனக்கும் மனசில்லையா ... மீசை கூட முளைச்சிருச்சு .. அந்த .. அந்த... சார்.. சே , கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் ... அய்யோ பொண்ணுங்கல்லாம் பாத்து சிரிச்சு .... இனி எப்படி அங்க போவேன் ... "
மீண்டும் எண்ணுகிறான். சரியாக முப்பத்து எட்டு . வாய்ப்பே இல்லை !
"அப்பா . அம்மா. அவங்கதான் பாவம் . அழுவாங்க இல்ல ? அதுக்கென்ன பண்ண முடியும் ... நான் இனிமே இருக்க முடியாது. அர்த்தமே இல்லை. எனக்குப் பிறகாவது அந்த சார் திருந்தட்டும்"
மடமடவென்று எல்லா மாத்திரைகளையும் விழுங்கினான். வாந்தி வந்தது. கண் வலித்தது. வயிற்றைப் பிரட்டியது. தூக்க மாத்திரை வலிக்காது என்றுதானே எண்ணியிருந்தான் !
அந்தக் குடுவை உடையவில்லை. மெல்ல மெல்ல வாழைப்பழத் தோல் தானே உரிவது போல உதிர்கிறது. குடுவைக்குள்ளே இருந்த திரவம் இன்னும் கசியத் தொடங்கவில்லை.
அந்தக் கிறக்கத்தில் அவன் பேப்பரும் பேனாவும் தேடி மரண வாக்குமூலம் எழுதினான். அதே புலம்பல்தான். புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க .. மனசு ... அவமானம் ....
அவனது குடுவை முழுவதுமாக உதிர்ந்து விழுந்து விட்டது. ஆனால் திரவ விதிகளுக்கு முரணாக உயிர் இன்னும் அதே குடுவையின் வடிவைப் பற்றிக் கொண்டிருந்தது. டைட்ரேஷன் செய்யும் கோனிக்கல் ஃப்ளாஸ்க்கின் வடிவம். ஃப்ளாஸ்க்கே இல்லாமல்.
"சார் சார் ப்ளீஸ் சார் ... வேண்டாம் சார் ... நாளைக்குக் கண்டிப்பா ... "
"டேய் வாயை மூடுறா இடியட். உன்னையெல்லாம் இப்படிப் பண்ணாதான் திருந்துவ. சட்டையைக் கழட்டுறா"
"சார் சார் .. ப்..ளீ..ஸ்... சா..ர்.."
"கழட்டுறா.. ஓஹோ .. வெக்கப்படுறீங்களோ .. கழட்டுறா மடையா"
"சார் வேண்டாம் சார்.. எல்லாரும் இருக்காங்க சார்"
"இருக்கட்டும். அவங்களும் உன் கூடத்தானே படிக்கிறாங்க. கழட்டுறான்னா?...."
"சார்... சார்.. வே...ண்...டா...ம்... சா....ர்...."
அட ! இன்னும் அதே வடிவத்திலேயேதான் இருக்கிறது குடுவை.
"கண்ணா.. சாப்பிட்டியாடா .."
"ஆங்.. சாப்ட்டேம்மா"
.................................................................
நண்பர்கள் .............. மூன்றாம் கிளாஸில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியது. எல்லோரும் கை தட்டியது. அப்பா அம்மா. ஊட்டிக்கு டூர் போனது. போட்டிங் போனோம் .... குளிரடிக்குது . பொட்டானிக்கல் கார்டன் ....
மெல்ல அவன் உயிர் கசியத் தொடங்கியது. கோனிக்கல் ஃப்ளாஸ்க் மாறி அவனுடைய முகம் தெரிகிறது.
'கண்ணா ஏண்டா இப்படிப் பண்ணே ... ஸ்கூல் பிடிக்கலைன்னா அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம்ல . இந்த ஸ்கூல் இல்லைன்னா வேற ஸ்கூல் . இதுக்குப் போயி யாராவது இப்படிப் பண்ணுவாங்களா'
'இல்லம்மா... நான் பண்ணலம்மா... நான் பண்ணல. என்னை எழுப்புங்கம்மா. நான் சும்மா தூங்கறேன். எழுப்புங்கம்மா. எழுப்புங்க. என்னை வேற ஸ்கூல் மாத்திருங்கம்மா. எழுப்புங்க... எழுப்புங்க.... நான் தூங்கறேன். சும்மாதான் தூங்கிட்டிருக்கேன்..'
'ப்ச்.. இப்படிப் பண்ணிட்டியே கண்ணா'
'அம்மா .. எழுப்புங்கம்மா... நான் எந்திச்சுப்பேன். அப்பா. அம்மா. எழுப்புங்கம்மா...'
அந்தப் பச்சைத் திரவம் மெல்ல மெல்ல ஒழுகி கசிந்து தூறலில் கலந்து விட்டது. கடைசித் துளி வரை.
கட்டில் மேல் குடுவை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு.
எல்லாம் நிமிஷங்கள்தான் !
- மதி
(படம் அளித்து உதவிய மேட் மர்ஃபிக்கு நன்றி. Matt Murphy's photostream)
very good narration da... superb :)
பதிலளிநீக்குthanks raghu ..
பதிலளிநீக்கு