பாட்டிமை
ஒரு குழந்தையோடு குழந்தையாகவும்
அதன் தாயோடு தாயாகவும்
ஒரு பெண்ணை இங்கு காண்கிறேன்.
இவள் புதிதாகப் பாட்டி ஆகியிருக்கிறவள்.
தன் பேத்தியின் பிரதாபங்கள் குறித்து
பிறரிடம் பேசுகையிலெல்லாம்
அப்படி ஒரு ஒளிர்வைத் தருகிறது
பேத்தியும் ஒன்றும்
லேசுபட்டவள் அல்ல ....
அவசரமாய்ப் பிறந்துவிட்டு
ஐசியூவில் இருந்துகொண்டு
பத்து நாட்கள் அலைக்கழித்தே
பாட்டிக்கு முதல் தரிசனம் தந்த தேவதை அவள் !
அந்தக் கர்ப்பக்கிரகத்தின் கதவினில்
மறுபுறம் காட்டும் ஒளிபுகு வளையம்
ஆறடி உயரத்தில் இருக்க ........
எட்டாமல் ஏமாந்து போய்ச் சிணுங்கிவிட்டு
பாரதத்தின் திருதராஷ்டிரனைப் போல்
உன் பேத்தி காலை உதைக்கிறாள்
குப்புறக் கிடக்கிறாள்
துரு துருவெனத் துடிப்பு
கரு கருவெனக் கூந்தல்
என்றவாறெல்லாம்
வளர்ந்தவர்களின் வர்ணனைகளை மாத்திரமே கொண்டு
மனக்கண்ணில் நிகழ்ந்தது அவர்களின் ஆதி சங்கமம் !
அதில் தொடங்கி இன்று வரை
அந்தப் புது உறவின் வித்தைக் கொண்டே
ஒரு ஆனந்த உலகைத்தைச்
சிருஷ்டித்து வாழ்கின்றாள்.
பத்தியச் சோறு தின்ன
முகம் சுளிக்கும் மகளிடம்
அவள் மகளொடும் கூட்டுச் சேர்ந்து
பழிப்பு காட்டிச் சிரிக்கின்றாள்.
நீ வளர்ந்து மரமாகி
நிழல் தரும் காலம் வரை
என்று பாட்டாய்ப் பாடிப் பாடி
தூளியை ஆட்டிவிட்டு
அருகிலேயே கோழித் தூக்கம் பயில்கின்றாள்.
இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து
இதமாய் எண்ணெய் தேய்த்து
தினம் காலை குளிப்பாட்டுகையில்
கண்ணசைவும் புன்னகையும் பேத்தி தர
சந்தோஷத்தில் குளிக்கின்றாள்.
திருமதி செல்வம் முதல்
தெய்வலோக ரகசியங்கள் வரை
ங்க்கா ங்க்கூ ஆகூ என்று
தினசரி பேத்திக்கு
தேவ பாஷையில் கதையாய்ச் சொல்கின்றாள்.
தாத்தா முகம் பார்த்து
பேத்தி சிரிக்கையிலும்
அவர் தோளில் ஏறித்
திருவலம் வருகையிலும்
தன்னவர் பால் கொண்ட காதலைப்
புதுப்பித்து ரசிக்கின்றாள்.
ஊரும் உறவும் கொஞ்சிப் போனபின்
உப்பும் மிளகும் தீயில் இட்டு
கற்பூரம் சுற்றி வைத்து
கைவிரலிலும் சொடுக்கெடுத்து
கடுகளவும் மிச்சமின்றி
கண் திருஷ்டி கழிக்கின்றாள்.
தடுப்பூசி போட்டுவிட்ட இரவெல்லாம்
துடித்து அழும் பிள்ளையை
தூங்கச் செய்ய முயன்று தோற்று
தானும் தேம்பி அழுகின்றாள்.
பேதியிலே போவான் அந்த வைத்தியனை
பெயருக்குச் சபித்துவிட்டுப் பின்
சிரமப்பட்டுச் சமாதானமாகின்றாள்.
இவ்வளவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
முதிர்வில் மழலை சேர்ந்த பூரிப்பில்
இன்னும் இன்னும்
அழகேறிக் கொண்டே செல்கின்றாள்.
தாய்மை தரும் அழகைப் பற்றி
ஆயிரம் படித்திருக்கிறேன்.
பெண்ணுக்கு வாய்க்கப் பெறும்
பாட்டிமை எனும் இவ்வழகை
இப்போது
கண்டுகொள்கிறேன்.
-மதி
முதிர்வில் மழலை சேர்ந்த பூரிப்பில்
பதிலளிநீக்குஇன்னும் இன்னும்
அழகேறிக் கொண்டே செல்கின்றாள்.
மிகவும் ரசித்த வரிகள்!!!
என் வீட்டில் இருக்கும் பாட்டியை (என் அம்மாவை) நினைவுபடுத்தியது.
அருமை :)
வித்தியாசமான பார்வை .. பாட்டிமை nu oru puthu definition eh kuduthutiye GS .. Nice
பதிலளிநீக்கு@ shiva and prem .. thanks a lot
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை ...
பதிலளிநீக்குஉணர்வுள்ள கவி வரிகளுக்கு வாழ்த்துக்கள்
நன்றி அரசன்.. எல்லாப் புகழும் என் தாய்க்கே (அந்தப் பாட்டிக்கே) :-)
பதிலளிநீக்குazhagana kannotam..nalla rasanai na..chennai la oru day care peru kachana patti.ur lines depicts y they named as such
பதிலளிநீக்குமிக அழகான படைப்பு.எனை மறந்து ரசித்தேன் அன்பரே!!! ரசித்தபின் நீவிரும் எவ்வளவு ரசித்து எழுதியிருப்பீர் என யோசித்தேன்...தொடரட்டும் இது போன்றவை....
பதிலளிநீக்கு@sangeetha and anonymous ... thanks a lot
பதிலளிநீக்கு