#6 - விடலை யாரை விட்டது
(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் ஆறாவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள்.
என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.
என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.
சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)
......................................................................................................
அட ! இது கூட நல்லாயிருக்கே .... |
என்னுடைய இலக்கியத் திறமைக்கு இப்படி ஒரு சவால் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் திடீரென்று இப்படிக் கணக்குப் பாடவேளையின் நடுவில். Laplace transformation ரொம்பவும் சலித்துப் போகவே, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராமன் என்னைப் பார்த்துக் கேட்டான், "ஏன் சிவா, நீ இந்தக் கவிதையெல்லாம் எழுதுறேல்ல ... நான் உனக்கு இப்போ ஒரு சோதனை வெக்கட்டுமா?"
சுதாரித்துக் கொண்டு என்ன சோதனை என்று விசாரித்தேன். எனக்கும் Laplace-ஐப் பிடிக்கவே இல்லை. "கட்டிப்புடிடா கட்டிப்புடிடா பாட்டு இருக்குல்ல.. அந்த டியூனுக்கு அதே சிச்சுவேஷனுக்கு உன்னால ஒரு பாட்டு எழுத முடியுமா ?" எனக்கு ஆச்சரியம் ! நான் ஏதோ சின்னச் சின்ன அளவுகளில் தூக்கம் வராத இரவுகளில் என் கிறுக்கு மனத்தைப் பற்றியும் மழையையும் நிலவையும் பற்றியும் கவிதைகள் எழுதிக் கொண்டு இருக்கிறவன். இருந்தாலும் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை என்று முதியோர் இல்லங்கள் பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் சமூகச் சீர்திருத்தங்கள் பற்றியும் மட்டும் எழுதுவது இல்லை. கட்டிப்புடிடா வகையறாவெல்லாம் இதுவரை முயற்சித்ததே இல்லை.
"என்ன மச்சி யோசிக்கிறே ! அதுவும் கவிதைதானே . வள்ளுவரே காமத்துப்பால் எழுதலியா ? வைரமுத்து வாலி பத்தியெல்லாம் அன்னிக்கு அவ்வளவு பேசினே ..... சொந்த சரக்கு கஷ்டமா ?" என்றான். சரிதான். இன்று என் இலக்கியம் இவனுக்கு ஊறுகாயா ! போன வாரம்தான் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் ஒரு பேருண்மையை அவர்களுக்குப் புரிய வைத்திருந்தேன் - அதாவது வைரமுத்து கில்மாவாகப் பாட்டெழுதுவதற்கும் வாலி கில்மாவாக எழுதுவதற்கும் என்ன வித்தியாசமென்று ! வாலி ரொம்பவே பச்சையாக எல்லாருக்கும் புரியும்படி எழுதிவிடுவார். வைரமுத்து எழுதுவதில் ஒரு புதிர் இருக்கும் . அவருடைய கற்பனைகளை ரசிப்பதற்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும். சின்னப் பையன்கள் பாட்டு கேட்டால் ஒன்றும் புரியாது. கெட்டுப் போக மாட்டார்கள்.
இது போல் பல சமயங்களில் அக இலக்கியங்களில் இருந்தும் கவித்துவமான கில்மா பாடல்களிலிருந்தும் நண்பர்களுக்கு மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறேன். அப்போதுதான் கவிஞன் என்று ஒத்துக் கொள்கிறார்கள் ! இப்போது ராமனுடன் இன்னொரு சின்ன கூட்டமும் சேர்ந்து கொண்டது ! சவாலை ஏற்றுக் கொண்டேன். முயன்றுதான் பார்ப்போமே! .......
கட்டில் சுகம் கண்டுபிடிப்போம் - கண்ணே வா
விட்ட குறை தொட்டு முடிப்போம்
இந்த இரவு எனக்கென நீளும் - உந்தன் மேனியின்
நீள அகலங்கள் அளக்கப் போகிறேன் வாஅஆ (உயிரளபெடை!) ......
உந்தன் உடலிங்கு உலையிலே கொதிக்க
உஷ்ணம் குறைக்க - உழைத்துப் பார்த்தேன்
உணர்ச்சித் தீயில் - உருகிப் போனேன் ....
ஆஆ...
மூச்சடக்கி முக்குளித்து ( 1)
முத்தெடுப்பேன் மானே
முத்தம் கொடு கொடு
உச்சகட்டம் தொட்டுவிட்டால்
உணர்த்திட சின்ன
சத்தம் கொடு கொடு
........................................
மின்னல் இடை மூடும் உடை ( 2)
நழுவிட என்ன
தடை தடை தடை
என்னில் புதை என்னை வதை
முடியாது இந்த
கதை கதை கதை
............................................
விழிகளில் தென்னங்கள்
வேதியல் மாற்றங்கள்
சடுகுடு ஆட்டங்கள்
சத்தியத் தேடல்கள்
விடை தேடியே ..... உயிர் வேர்த்திடும் ....
இந்தத் தேடல்கள் தீராதடி ......
(அப்படியே சிக்கிச்சா சிக்கிச்சா என்று மனதிற்குள்ளேயே பாட்டை முடிக்கவும்)
சும்மா சொல்லக்கூடாது. பயல்கள் அசந்து போய்விட்டார்கள். எழுதின எனக்கே இது வாலி வகையறாவா வைரமுத்து வகையறாவா என்று குழப்பமாகி விட்டது. யோசிப்பதற்குள் கவிதை எழுதின தாள் மேசை மேசையாகப் பரவி விட்டிருந்தது. தூரத்திலிருந்து அர்த்த புஷ்டியாய்ப் பல புருவ நெறிப்புகளும் புன்னகைகளும் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. பாடவேளை முடிந்ததும் அபிஷேக் ஓடி வந்து சொன்னான், "மச்சி செமடா... ஆனா வேற யாரும் படிச்சா சத்தியமா இதை ஒரு அனுபவசாலிதான் எழுதியிருக்கணும்னு முடிவு பண்ணிருவாங்க" .
நிஜத்தில் அது எங்கள் எல்லாருக்குமே அனுபவங்கள் அமையாத பருவம். ஒரு விடலைத்தனமான ஆர்வமும் குறுகுறுப்பும் கூடிய காலம். உள்ளதிலேயே அதிகமாகப் புத்தகம் படித்தவன் படம் பார்த்தவன்தான் குரு. மற்றவரெல்லாம் மழலையர் ! தன் மழலைத்தனத்தின் அளவுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் கூடுமானவரை அறிவை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட்டிருப்போம். நான் ஏழாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்தபோதே , ஒரு நாள் ஹிண்டு பேப்பரில் பள்ளிகளில் பாலியல் கல்வியை அமல்படுத்துவது பற்றி எதையோ வாசித்துவிட்டு வந்து , அப்போதிருந்த ஒரு 'குரு' எங்களிடையே என்னென்னமோ கற்பனைகளை வளர்த்து விட்டிருந்தான். நம் நாட்டில் இன்றும் வேறு வழியில்லை. இப்படித்தான் அறிவு வளர்கிறது ! ராஜஸ்தானிலிருந்து வந்து எங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு வந்த அமித் கோயாலே பின்னொரு நாள் வெட்கப்பட்டுக் கொண்டே தனக்குப் பதினைந்து வயதிலேயே கல்யாணம் முடிந்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறான். கொய்யாலே !! அவன் ஒருவன் தான் எங்களிடையே அனுபவசாலி என்று பகிரங்க அறிக்கை வெளியிடத் தகுதி பெற்றவன் !
கோவையில் படித்து முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் பெங்களூரில் மேல்படிப்பு படித்திருந்த காலங்களிலெல்லாம் யோசித்திருக்கிறேன் - கோவையில் எவ்வளவு குழந்தைத்தனமாக இருந்திருக்கிறோம் என்று ! கோவிந்த் குமார் என்று ஒருவன் கோவை கல்லூரியில் ஜூனியராக இருந்தான். கல்லூரியிலேயே மிகப் பிரபலம். ஏதோ ஒரு பட்டணத்துப் பிள்ளையை கல்லூரி மைதானத்தில் ஒரு நிழலோரத்தில் வைத்து முத்தம் கொடுத்துவிட்டான் என்று காட்டுத் தீ போல விஷயம் பரவி வந்தது. அன்று முதல் அவன் அனைவராலும் 'கிஸ்ஸடிச்சான் கோயிந்து கிஸ்ஸடிச்சான் கோயிந்து' என்று கடுப்போடு அழைக்கப் பட்டிருக்கிறான். இதுவே பெங்களூராயிருந்தால் அவன் அங்கே ஒரு 'Kinder-garten கோயிந்து' அளவுக்குத்தான் பெயர் பெற்றிருப்பான்.
இந்த அறிவு வேட்கையும் விடலை ஆர்வமும் காலகாலமாய்க் கல்லூரிகளில் பல வழிகளில் நடந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. 80-களில் புத்தகங்களுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கதையாக வாசித்திருப்பார்கள். 90-களில் அச்சுத் தரம் கூடியிருக்கும். இணையம் வந்து சேர்ந்திருக்கும். எங்களுக்குப் பின் வந்தவர்கள் விடுதி அறைகளிலேயே விரும்பிய நேரங்களில் கணிணிகளைக் கன்னி கழித்திருப்பார்கள். அத்தனை காலங்களிலும் அசைந்து கொடுக்காமல் குருசக்தி தியேட்டர் இருந்திருக்கும். கல்லூரி முதலாமாண்டில் எங்களுக்கு வாய்த்த வரம் ஒரு பொதுத் தொலைக்காட்சியும் வசதி படைத்தவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த விசிடி பிளேயர்களும் தான்.
அந்தத் தொலைக்காட்சியால் ஓர் இரவில் எங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் தடம் புரண்டு போயிருக்கலாம் என்றும் நாங்கள் எப்படி வழி கண்டுபிடித்துச் சமாளித்தோம் என்பதும்தான் இந்தக் கதை. (ஆம் ! நீங்கள் இதுவரை வாசித்ததெல்லாம் கதையல்ல... கொஞ்சம் நிஜம்)
விடுதியின் அந்தப் பொதுத் தொலைக்காட்சி பல விசேஷ அம்சங்கள் நிறைந்தது. அதனை ரிமோட் மூலம் மட்டுமே இயக்க முடியும். தொலைக்காட்சியிலேயே இருக்கும் விசைகளை எல்லாம் விடுதிக்காக வாங்கும்போதே நோண்டி எடுத்து விடுவார்கள். அந்த ஒற்றை ரிமோட்டையும் தினமும் இரவில் பன்னிரெண்டு மணிக்கு விடுதிக் காப்பாளர் மார்ட்டின் சிங்காரம் வந்து பறிமுதல் செய்து போய் விடுவார். மீண்டும் மறுநாள் காலை ஆறு மணிக்கு அவர் கையால் வந்து ஆரோக்கிய ஜெபக் கூட்ட ஒளிபரப்பைப் போடும்போது தான் ரிமோட் வெளியே வரும். மார்ட்டின் சிங்காரம் - வயதானாலும் தன் கம்பீரத்தாலும் கட்டுக்கோப்பாலும் மொத்த முதலாமாண்டு விடுதியையே தன் கட்டுப்பாட்டில் சிறப்பாக நடத்தி வருகிறவர். சுருங்கச் சொன்னால் அவர் சாதாரண தாத்தா இல்லை . அவர் ஒரு ஜூம் தாதா !
அப்பேற்பட்ட தாத்தாவையே ஏமாற்றிப் பல இரவுகள் பதினோரு மணி வாக்கில் பையன்கள் யாராவது ரிமோட்டைக் கபளீகரம் செய்து விட்டுக் கமுக்கமாக அறைக்குள் முடங்கி விடுவார்கள். பன்னிரெண்டு மணிக்குத் தாத்தா வரும்போது ஒருத்தனும் அங்கே இருக்க மாட்டான். தொலைக்காட்சியில் யாராவது ஒருவர் கண்ணாடியும் கோட்டும் போட்டுக் கொண்டு ஆங்கிலச் செய்திகள் வாசித்துக் கொண்டிருப்பார். ரிமோட்டைக் காணோம் என்று கொஞ்ச நேரம் தேடிவிட்டு வேறு வழியில்லாமல் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு உறங்கப் போய்விடுவார் தாத்தா. பயல்கள் ஏதோ சேட்டை பண்ணப் போகிறான்கள் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். அவன்களின் பாவக்கணக்கைப் பரமபிதாவிடம் ஒப்படைத்துவிட்டுக் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிடுவார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கூத்து ஆரம்பமாகும். முதலில் மூன்று பேர் ரிமோட்டோடு வந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ஒரு பத்து நிமிடம் சத்தத்தைக் குறைத்து வைத்துப் பார்த்திருப்பார்கள். அதன் பின் இரண்டு பேர் வெற்றிச் செருக்கோடு ஒரு விசிடி பிளேயரையும் பல கீறல்கள் விழுந்த ஒன்றிரண்டு குறுந்தகடுகளைய்ம் கொண்டு வருவார்கள். இணைப்புகள் கொடுக்கப்படும். சிலபல குறுஞ்சேதிகள் தட்டப்பட்டு விடும். அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு கூட்டமே அங்கு கூடியிருக்கும். ஓரமாகக் கடலை போட்டுக் கொண்டே நிலத்தை அளந்து கொண்டிருப்பவர்களில் சில பேர் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் வந்து சேர்ந்து படம் பார்த்துக் கொண்டே கடலையைத் தொடர்வார்கள். கண்ணியக் காதலர்கள் இடத்தைக் காலி செய்துவிட்டுக் காதலுரையாடல்களை வேறு எங்காவது தொடரப் போய்விடுவார்கள்.
சேர்ந்த புதிதில் தலையில் முக்காடிட்டுக் கொண்டு ஒற்றையாய் அமைதியாய் வருவார்கள். பழகப் பழக பகிரங்கமாகப் படையாக வருவார்கள். ஒரு ஆண் எவன் ஒருவனோடு சேர்ந்து இருந்து படம் பார்க்க ஆரம்பிக்கிறானோ, அவனைத் தன் மிக நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கூப்பிடக் கூப்பிட நட்பு பலமாகும். ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே அந்த வசவுகள் அவற்றிற்கான நிஜ அர்த்தங்களை ஏற்பதில்லை. பெண்களின் நட்பு பாராட்டுகளால் பலப்படுவது இதுபோலத்தான். அந்தப் பாராட்டுகளும் பெரும்பாலும் நிஜ அர்த்தங்களில் இருப்பதில்லை !
பொதுவாகப் பெண்கள் சித்திரம் வரைதல், ரெக்கார்டு நோட்டுகளில் மார்ஜின் போடுதல், லேபில் ஒட்டுதல் போன்ற வழிகளில் தங்கள் கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவார்கள். ஆண்களின் படைப்பாற்றல் புதுப்புது கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் அட்டகாசமாய் வெளிப்படுகிறது. அதிலும் நண்பர்களுக்கு ஒரு பாணி விரோதிகளுக்கு ஒரு பாணி என்றெல்லாம் வசவு வார்த்தைகள் ரகம் பிரித்துப் படைக்கப்படும். சபை நாகரீகம் கருதி என்னால் மனதில் முட்டி நிற்கும் சில அற்புத எடுத்துக்காட்டுகளை இங்கு எழுத முடியவில்லை.
ஆண்கள் படம் பார்ப்பது போல பெண்கள் என்ன செய்வார்கள் ? யாமறியேன் பராபரமே !
"ஓ.... என்னடா அடிக்கடி அவனுங்களே படம் காட்டுறானுங்க ? அவங்கிட்ட மட்டும்தான் பொருள் இருக்கா ? இதைப் பாத்தியா !" ஊருக்குப் போய்விட்டுத் திரும்பியிருந்த சந்துரு திடீரென்று அன்று மாலை தன் பையிலிருந்து ஒரு புத்தம் புதிய விசிடி பிளேயரை வெளியே எடுத்தபடி கேட்டான். அறையிலிருந்த நான், அருள், கிருஷ்ணன், ராகேஷ், குமார் என்று எல்லோருக்கும் அவன் சொன்னதின் ஆழம் புரிந்துவிட்டது. மேற்கொண்டு சில குறுந்தகடுகளையும் சந்துரு எடுத்து அடுக்கினான். பர்மா பஜாரில் வாங்கப்பட்டவை. சானியா மிர்ஸாவெல்லாம் கூட உண்டாம் !
ஆர்வத்துடனும் குறுகுறுப்புடனும் அடுத்த சில நிமிடங்களில் திட்டம் தீட்டப்பட்டது. சந்துருவே அத்தனையையும் முடிவு செய்தான். "இன்னிக்கு ராத்திரி சாப்பிட மெஸ்ஸுக்குப் போகும்போது நான் ரிமோட்டை எடுத்துடறேன். குமார், நீ என் கூட வா..... அப்புறம் ஒரு மணி வரைக்கும் சும்மா இருப்போம். ராகேஷ் , சிவா, அருள் .. நீங்க மத்த பசங்க கிட்ட சொல்லிருங்க. கிருஷ்ணா நீ வரமாட்டே . வெட்கப்படுவே..... போத்திட்டுத் தூங்கிரு. திடீருன்னு தோணிச்சுன்னா சும்மா வந்துரு. முக்காடு மட்டும் போட்டுட்டு வராதே என்னா ... "
அன்று பல பேருக்கும் ஒரு நல்லது காட்டின புண்ணியம் எங்கள் அறைக்குக் கிடைக்கப் போகிறது !
சொன்னபடியே சந்துரு சாப்பிடப் போகும்போது ரிமோட்டை எடுத்துச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். ஒரு பரவசத்தில் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே சாப்பிடப் போய்விட்டான். அங்குதான் சறுக்கிவிட்டோம். பத்து மணிக்கு ஒரு கூட்டம் EPL பார்க்க வேண்டும் என்று வந்தால் ரிமோட் இல்லை. எங்கள் கெட்ட நேரம் நாங்கள் ரிமோட்டைத் தூக்கிய போது National Geographic Channel ஓடிக் கொண்டிருந்தது. எட்டு மணியிலிருந்து ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. ரிமோட் இல்லை. மாற்றவும் முடியாது. எத்தனை நேரம்தான் ஒட்டகச்சிவிங்கிகளையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? EPL கூட்டம் கொஞ்ச நேரத்தில் ஒரு பெரும் குழப்பத்தையே உருவாக்கி விட்டார்கள்.
வழக்கமாக ரிமோட்டைத் தூக்கும் பசங்களை எல்லாம் போய்க் கேட்டால் எவனிடமும் இல்லை. அவர்களுக்கே அது ஆச்சரியமாய் இருந்தது ! போதாக்குறைக்கு எவனோ ஒருவனுக்கு செல்லில் குறுஞ்சேதி வந்து வேறு வந்து விஷயத்தை ஊதிவிட்டது. EPL ஆட்டம் மிகச் சூடாய்ப் போய்க்கொண்டிருக்கிறதாம். ஆர்ப்பாட்டத்தைக் கவனித்து மார்ட்டின் தாத்தாவும் வந்துவிட்டார்.
விஷயம் இன்னதென்று விளக்கப்பட்டவுடன் அவரும் துடிப்பாகி விட்டார். பல நாளாய்த் தேடிக் கொண்டு இருக்கும் அந்த ரிமோட் களவாணியை இன்று பிடிக்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடுதியின் மாணவர் பிரதிநிதியை வரச் சொன்னார். விசாரணை ஆரம்பமானது. தாத்தா அழைக்கிறாரென்று கடலையைப் பாதியில் விட்டுவிட்டு கடமையைச் செய்ய ஓடி வந்தான் Hostel representative கோபால். விஷயம் கேட்டதும் மெதுவாக அவன் வழக்கமான விசிடி பிளேயர் கூட்டத்திடம் போய்ப் பேசினான், "ஏண்டா..... இன்னிக்குப் படம் இருக்குன்னா பதினோரு மணிக்கு மேல எடுத்திருக்கலாமே. எங்கிட்ட சொல்லியிருந்தா நானே எடுத்து வைச்சிருப்பேனே.. ஏண்டா ஏழரை மணிக்கே அவசரப்பட்டு இப்பிடி ஏழரையைக் கூட்டுறீங்க.. அந்த லூசுக் கெளவன் இப்போ அடங்க மாட்டானே ...."
இவ்வாறாக நடந்து கொண்டிருக்கையில் ஒரு புதுத் திருப்பம் வந்து விட்டது. அவர்கள் எடுக்கவில்லை என்று கோபால் உணர்ந்து கொள்வதற்கும் , "சந்துருதான் சாப்பிடப் போகும்போது எதையோ எடுத்துப் பாக்கெட்டில போட்ட மாதிரி இருந்தது" என்று ஆல்பர்ட் வந்து குட்டையைக் குழப்பவும் சரியாக இருந்தது ! மார்ட்டின் தாத்தா பிரம்மாஸ்திரத்தை எடுக்கத் துணிந்து விட்டார். அறையில் தேடல் ! ROOM SEARCH ! மாட்டினால் இதுவரை பதியப்பட்ட அத்தனை வழக்குகளும் எங்கள் தலை மேல் ! அவசர அவசரமாக குமார்தான் விவரம் சேகரித்து ஓடி வந்து சொன்னான். தேள் கொட்டினாற்போல் இருந்தது எங்கள் அனைவருக்கும்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல தாத்தா வந்துருவாரு. இந்த ரிமோட்டை முதல்ல வேற எங்கயாவது பதுக்கணும். இப்போ என்ன செய்யலாம்?"
அனைவரின் மனங்களும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கின. ரிமோட் இடம் மாற்றப்பட வேண்டும். ஆல்பர்ட்டின் சாட்சியைக் கலைக்க வேண்டும். சந்துரு மேல் இருக்கும் பழியை மாற்ற வேண்டும். முடிந்தால் கொஞ்சம் அனுதாப அலைகளையும் வீச வைக்கலாம். என்ன செய்ய? என்ன செய்ய?
சந்துரு அந்த விசிடி பிளேயரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் துணிமணிகள் கலைந்து கிடந்த தன் கட்டிலை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். குமார் தன் கட்டிலுக்குக் கீழே சுவரோரத்தில் இருந்து இரண்டு மூன்று பாட்டில்களை அறை மாற்றிக் கொண்டிருந்தான். அருளும் ராகேஷும் தீவிர கலந்துரையாடலில் இருக்க, நான் கொஞ்சம் ஓரமாக மல்லாக்கப் படுத்து யோசித்தேன். சற்று நேரத்தில் அனைவரின் முயற்சியுடன் ஒரு நான்முனைத் திட்டம் தயாராகிவிட்டிருந்தது.
ரிமோட்டைப் பதுக்க வேண்டும். எங்களில் ஒருவர் கையால் இடம் மாற்றப்படுவது கடினம். எங்கள் நடமாட்டம் கவனத்தை ஈர்க்கும். மாடி அறையில் இருந்து சித்தார்த்தை வரவழைத்து ரிமோட்டையும் பொறுப்பையும் ஒப்படைத்தோம். ஒரு தலைவலி முடிந்தது !
சாட்சியைக் கலைக்க வேண்டும். ராகேஷும் குமாரும் ஆல்பர்ட்டைப் பார்க்கப் போனார்கள். ஆல்பர்ட் கீழே அந்தத் தொலைக்காட்சிக்குப் பக்கத்தில்தான் மற்ற குழப்பக் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தான். குமார் நன்றாகக் குழப்பிவிட்டு விடுவான். பஞ்சாயத்து பெரிதானால் குரல் உயர்த்திப் பேச ராகேஷ் இருக்கிறான்.
குமார் நேராக விஷயத்துக்கு வந்தான், " மச்சி ஆல்பர்ட் , நீதான் சந்துரு ரிமோட் எடுத்தான்னு சொன்னியா? " கூட்டத்தில் அவன் மானசீகமாய்ச் சந்துருவின் தரப்பு வக்கீல் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
"அவன்தான் எடுத்தான்னு சொல்லலைடா... அவன் இங்கேருந்து எதையோ எடுத்துப் பாக்கெட்டில போட்டுட்டுப் போன மாதிரி இருந்துச்சுன்னுதான் சொன்னேன்"
ஆஹா ! இது போதும் ! "என்னடா மச்சி , தெளிவாப் பாக்காம நீ பாட்டுக்குக் கெளப்பி விட்டுட்டே .. இப்போ எல்லாரும் பாவம் எங்க ரூம் மேட்டைச் சந்தேகப்படுறாங்க ... "
"டேய் அப்படி இல்லடா.. எனக்குத் தெரிஞ்சதை நான் சொன்னேன். ரிமோட்டான்னு தெரியல. ஆனா எதையோ பாக்கெட்டில போட்டானே ........"
ஒட்டகச்சிவிங்கிகள் ஓய்ந்து போய் அப்போது National Geographic அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பேசிக் கொண்டிருந்தது. ஆர்வமாய் வாய் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் சட்டென்று ஒருவனின் செல் அழைக்கவே, அவன் பாக்கெட்டில் இருந்து செல்லை எடுத்துவிட்டு ஒதுங்கினான். குமாரின் கண்கள் விரிந்தன !
"புரிஞ்சிருச்சு மச்சி ... சந்துரு வெச்சிருக்கிறது அம்பானி செல் ஃபோன்டா.. பின்னால் இருந்து பார்க்க டிவி ரிமோட் மாதிரியே இருக்கும். அதே கலர். நீ அதைப் பாத்தியோ என்னமோ .."
ராகேஷும் விஷயம் புரிந்து வலியுறுத்த ஆரம்பித்தான். "இங்க பாரு மச்சி .. உன்னைக் குறை சொல்லலை. ஆனா நீ எதோ நல்லதுக்காக சாட்சி சொன்னே. பாவம் ஒண்ணும் பண்ணாத சந்துரு மேல பழி வருது பாரு. உனக்குத் தெரியாதா வழக்கமா யாரு ரிமோட் எடுப்பாங்கன்னு ... போன வாரம் கூட ஒரு ரேடியம் கலர் துண்டைத் தலையில் சுத்திகிட்டு வந்தியே .. சந்துருவுக்கு உடம்பு வேற சரியில்லை ....."
சாட்சிக்காரனிடம் அடித்துப் பேசுவதை விட அணைத்துப் பேசிக் குழப்பி விடுவதே உத்தமம். செய்தாகிவிட்டது !
தாத்தாவும் கோபாலும் இன்னும் சிலரும் சற்று நேரத்தில் எங்கள் அறைக்கு வந்தார்கள். குமாரும் ஆல்பர்ட்டை அழைத்து வந்து விட்டான். ஆல்பர்ட்டே தாத்தாவிடம் தன் சாட்சியின் மேல் சந்தேகம் இருக்கிறதென்று சொன்னால் நன்றாக இருக்குமில்லையா?
முன் ஏற்பாடுகளின்படி அறையில் கிருஷ்ணனும் சந்துருவும் மட்டும் இருந்தார்கள். கிருஷ்ணன் எதையோ படித்துக் கொண்டிருந்தான். சந்துரு இழுத்துப் போர்த்திக் கொண்டு முடங்கி விட்டிருந்தான். இரவு மெஸ்ஸில் போட்ட கிச்சடியைத் தின்றதிலிருந்து மூன்று முறை வாந்தி எடுத்துவிட்டுத் தலைவலி வயிற்று வலியுடன் கிடக்கிறான் என்று சொன்னோம். அந்தக் கிச்சடியை நம்பி காலராவே வந்து விட்டது என்றுகூட கதை கட்டலாம். ஒரு சந்தேகமும் வராது ! விஷயம் கேள்விப்பட்டதும் அவ்வளவு வெகுளியாக முகத்தை வைத்துக் கொண்டு , "எனக்கு ஒண்ணும் தெரியாதே தாத்தா" என்று சாதித்தான் சந்துரு. தாத்தா அறை முழுக்கத் தேடிப் பார்த்தார்.
சந்துருவிடம் இருந்து அவனின் செல்லை வாங்கி அதற்கும் அந்த ரிமோட்டுக்கும் உள்ள உருவ ஒற்றுமைகளை எல்லாருக்கும் குமார் விளக்கிக் கொண்டிருந்தான். ஆல்பர்ட்டே அப்போது முழுதாக மனம் மாறி மற்றவர்களிடமும் அந்த உருவ ஒற்றுமையைப் பற்றிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். தேடிக் களைத்த தாத்தாவிடம் சந்துரு வந்து, " எனக்கு வயித்தை என்னமோ செய்யுது. நீங்க தேடிப்பாத்துட்டு ரிமோட் கெடைச்சா எழுப்புறீங்களா தாத்தா.. நான் கொஞ்சம் படுத்துக்குறேன்" என்றான். கடைசி ஆணியையும் அறைந்தாயிற்று !
இவ்வளவும் நடக்கையில் நானும் அருளும் விடுதி முழுக்க ஒவ்வொரு அறையாய்ச் சுற்றிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நாள் முன்னாடி Hostel representative பதவிக்குப் போட்டியிட்ட ஒவ்வொருத்தனும் இப்படித்தான் பிரச்சாரம் பண்ணிச் சுற்றிக் கொண்டிருந்தான்கள். அதில் முளைத்த திட்டம்தான் இந்த நான்காம் முனை.
அடுத்த அறைக் கதவைத் தட்டினோம். தடித்த கண்ணாடியுடன் அதிகம் பழக்கமில்லாத எவனோ ஒருவன் கதவைத் திறந்தான்.
"டேய் மச்சி ... நான் சிவாடா.. ரூம் நம்பர் 10-ல இருக்கேன். ஒரு சின்ன பிரச்சினை. இந்த டிவி ரிமோட்டக் காணலை. எங்க ரூமிலதான் எடுத்து வெச்சிருக்கோம்னு எவனோ கெளப்பி விட்டுட்டான். ரூம்ல தாத்தா தேடிட்டிருக்காரு. நாங்க எடுக்கலை. ஆனா அது கெடைக்கற வரைக்கும் எங்க மேல சந்தேகம் இருந்துட்டேதான் இருக்கும். தப்பா நெனைச்சுக்காதே ..... ஒரு வேளை உனக்குத் தெரிஞ்சு யாரும் எடுத்திருந்தாலோ , இல்ல கீழ கீல பாத்தாலோ எதாவது பொது இடத்துல வெச்சுரச் சொல்லுடா மச்சி ... ப்ளீஸ்டா.. தாங்க்ஸ்டா ... "
மந்தமாய்க் கேட்டுவிட்டு கண்ணாடி கதவடைத்துக் கொண்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டாம் மாடி பாத்ரூமில் ஒண்ணுக்குப் போகும் எவனாவது 'ரிமோட் கெடைச்சாச்சு' என்று அறிவித்தபடி வரப் போகிறான். எங்களுக்கு இன்னும் நாற்பது அறைக்கதவுகள் பாக்கி இருந்தன.
"டேய் அருளு ..... அடுத்த ரூம்ல நீ பேசுடா. எனக்கு வாய் வலிக்குது........... தேவையாடா நமக்கு இந்த நாய் பொழைப்பு?"
"விடுறா சிவா... ஆனானப்பட்ட சிவபெருமானே அந்தக் காலத்துல பிட்டுக்காக மண்ணெல்லாம் சுமந்திருக்காரு மச்சி .. இதையெல்லாம் பாத்தா முடியுமா............"
- மதி
ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே அந்த வசவுகள் அவற்றிற்கான நிஜ அர்த்தங்களை ஏற்பதில்லை. பெண்களின் நட்பு பாராட்டுகளால் பலப்படுவது இதுபோலத்தான். அந்தப் பாராட்டுகளும் பெரும்பாலும் நிஜ அர்த்தங்களில் இருப்பதில்லை !
பதிலளிநீக்குமிகவும் ரசித்த வரிகள்!!! அருமை
ஒரு ஆண் எவன் ஒருவனோடு சேர்ந்து இருந்து படம் பார்க்க ஆரம்பிக்கிறானோ, அவனைத் தன் மிக நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம்.
உண்மை......
விவகாரமான கதை, விவரமா கையாண்டு இருக்கீங்க :)
எனக்கு பிடித்த உங்களது படைப்புகள்ல இதுவும் ஒண்ணு :)
தொடர்ந்து வரட்டும் கல்லூரி கதை
நன்றி சிவா.... நிஜத்தில் ரொம்ப விவகாரமான கதைதான் .. இதை எழுதலாமா என்று முடிவெடுக்கவே கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது .. இதையெல்லாம் எழுதலாமா என்று வேறு ஒரு புறம் சின்ன குழப்பம் :-) கடைசியில் கல்லூரி வாழ்க்கை பற்றின பதிவில் இந்த விஷயம் இல்லாமல் போனால் நன்றாக இருக்காது என்று துணிந்துவிட்டேன் ... தொடர்ந்து மற்ற கல்லூரிக் கதைகள் விரைவிலேயே வெளிவரும் ..
பதிலளிநீக்குபின்னி பெடல் எடுத்துட்ட !!!...
பதிலளிநீக்குஒருவேளை குஷி படத்த remake பண்ணினா இந்த பாட்டை கண்டிப்பா use பண்ணுவாங்க ... இந்த வரி அருமை
"அவர் சாதாரண தாத்தா இல்லை . அவர் ஒரு ஜூம் தாதா !",
romba nnal aachula machi.... ippo nenacha kooda siripa iruku..:D :D
பதிலளிநீக்குThanks raghu :-) and Thanks to vada naatu machi too :-)
பதிலளிநீக்கு"ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே அந்த வசவுகள் அவற்றிற்கான நிஜ அர்த்தங்களை ஏற்பதில்லை." semma lines machi. indha visyatha realize panave enaku 1 yr eduthadhu college la. you brought back the 1 yr memories in 5 mins. Hostel rep and his dialogues semma. I cant stop laughing. enjoyed it verymuch.
பதிலளிநீக்குthanks sheik :-)
பதிலளிநீக்குnallaa irukku naa...
பதிலளிநீக்கு"Uyiralapedai" - Excellent...
kadhai katturai maadhiri aaiduchu nnaa... But, it was really really great again.. write more...
kavidhai kalakkal... vaali vairamuthu ragam laam illa...GS ragam... verithanam...
@ஜோக்கர்... நன்றி .. கல்லூரிக் கதைகளில் சில சமயம் நிறைய விஷயங்களை ஒரு கதையில் அடைக்க முயற்சிக்கையில் அந்தக் கட்டுரைத்தனம் கண்ணாமூச்சி ஆடி உள்ளே வந்து விடத்தான் செய்கிறது .. இருந்தாலும் சுவைக்குப் பாதகமில்லாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒரு ஓரமாக இருக்கட்டுமே என்று என் மனமே மறுநொடி வாதாடி அவற்றிற்கு இடம் கொடுத்தும் விடுகிறது.. தடுக்க முடியவில்லை :-)
பதிலளிநீக்குகுழந்தைகள் தினத்தன்று வெளியிடும் கதையா இது? ஹா ஹா... சந்தேகத்துக்கு இடமின்றி அந்தக் கவிதை வரிகள் வாலியின் வகையறாதான்...ஆண்கள் படம் பார்ப்பது போல பெண்கள் என்ன செய்வார்கள் ? இப்படியெல்லாம் தங்களைத்தவிர வேறொருவராலும் எண்ண முடியாது...இந்தக் கதையில் கற்பனைகள் கலந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை... எழுதுபவர்கள் இதைத்தான் இவற்றைத்தான் எழுதவேண்டும் என்று வரையறுத்துக்கொள்ளக்கூடாது... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...தொடரட்டும் தங்கள் பதிவுகள்...
பதிலளிநீக்கு@ நன்றி .. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தக் கதையிலும் ஒரு குழந்தைத்தனம் தெரியுமே.. மற்றபபடி திட்டம் போட்டு வெளியிட்டதெல்லாம் கிடையாது.. அதுவா வந்திருச்சுங்க .. இதையெல்லாம் நான் மட்டும் யோசிக்கிறேன்னு தப்பா நெனைச்சுறாதீங்க.. நான் வெளிப்படையா கேட்டுருக்கேன் அவ்வளவுதான் :-) மற்ற கதைகளோடு ஒப்பிடுகையில் இந்தக் கதையில் கற்பனைகள் கொஞ்சம் குறைவுதான்... எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ???
பதிலளிநீக்கு