பீத்துணி களவாடும் பிள்ளையார்
உலகின் மிக அழகான நிகழ்வு
உறங்கும் குழந்தையின் சிரிப்பு !
பிறந்த குழந்தைகள்
உறங்கும் பொழுதினில்
பிள்ளையார் வந்து
பூ காட்டிப் போவாராம்.
பூக்கள்
புன்னகையைப் பிரசவிக்குமாம் !
அம்மா சொன்னாள்.
அவளுக்குச் சொன்னது
அவளின் அம்மாவாம்.
சின்னக் குழந்தைகளின்
செய்கை ஒவ்வொன்றிற்கும்
காரணங்கள் கற்பித்து
கதைகளில் வடித்து
காலங்காலமாய்ச் சொல்லி வருகிறார்கள்.
வேறென்ன கதைகள்
தெரியுமென்றேன்.
பாலுக்கழாத சமயங்களில்
பச்சைப் பிள்ளை அழுதால்
பூவை ஒளித்து வைத்து விட்டு
பிள்ளையார்
பூச்சாண்டி காட்டி விளையாடுகிறாராம்.
பிறக்கும் குழந்தைகட்கெல்லாம்
பிறர் கண்ணுக்குத் தெரியாத
பறக்கும் சைக்கிள் ஒன்றைப்
பரிசளித்துவிட்டு
பிள்ளையார்
அதை ஓட்டுவதெப்படி என்றும்
காதில் ஓதிப் போவாராம் !
குழந்தை
கையை காலை அசைக்கையிலெல்லாம்
தேவ வீதிகளில்
தன் சைக்கிளில் உலா வருகிறதாம் !
ஒவ்வொரு உயிரையும்
உலகிற்கு அனுப்பி வைக்குமுன்
அதற்கு முன்பாகப் பிறந்த குழந்தையின்
கைப்பிடி மண் கேட்பாராம்
கடவுள்.
அவ்வாறு பிறக்கவிருக்கும்
அடுத்த குழந்தைக்காய்
மண் சுமந்து போவதால்தான்
மணிக்குழந்தை
முக்குமாம்
முனகுமாம் !
எத்தனையோ
பழைய வேட்டிகளை
வெட்டிக் கிழித்து
எத்தனைதான் வைத்திருந்தாலும்
எப்போது வேண்டுமோ
அப்போது பல துணிகள்
மாயமாய் மறைந்திடுமாம்.
என்னடா இதுவென்று
புரியாத பாட்டிமாரெலாம்
பிள்ளையர்தான் வந்து
பீத்துணி களவாடுகிறார் எனப்
பிள்ளையிடம் முறையிடுவார்களாம் !
ஒரு குழந்தையின் பிறப்பு
எத்தனை சந்தோஷங்களைப் பிரசவிக்க வல்லது !
பேச்சின் சுவாரசியத்தில்
அருகில் உறங்கிக் கொண்டிருந்த
எங்கள் வீட்டுப் புதுக் குழந்தையை
எதேச்சையாய்த் திரும்பிப் பார்த்தேன்.
உலகின் மிக அழகான நிகழ்வு !
பூ காட்டும் தரிசனத்துக்காக
பிள்ளையார் வந்து விட்டார் போல !
அந்தப் புன்னகையில்
கடவுள்
என் கண்ணுக்கும் தெரிந்தார் !
அம்மாவிடம் சொன்னேன்
"பீத்துணி பத்திரம்" !
- மதி
உங்களை இவ்வளவு நாட்கள் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்...
பதிலளிநீக்கு@ Prabhakaran நானும் உங்களை இத்தனை நாள் பதிவுலகத்தில் சந்திக்காதது ஆச்சரியமே... ஆனால் இது வரை நான் உங்களைப் போல் பதிவுலகத்தில் நண்பர்கள் வட்டத்தை உருவாக்கப் பெரிதாக முயற்சிக்கவில்லை என்று தெரிகிறது.. பதிவர்கள் சந்திப்பு பற்றிய உங்கள் பதிவை வாசிக்கையில் நானும் மற்ற பதிவர்களின் நட்பு வட்டத்திற்குள் வர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.... நன்றி.. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குhey.. nice one! kulanthaiyum deivamum ondru dhane!
பதிலளிநீக்குIt's a Blesing to watch the child smiling while it sleeps
@vaibhavi ... great to see your comments after a long time in my blog :-) thanks
பதிலளிநீக்குஒரு குழந்தையின் பிறப்பு
பதிலளிநீக்குஎத்தனை சந்தோஷங்களைப் பிரசவிக்க வல்லது !
மிகவும் ரசனையுள்ள வார்த்தைகள்...
ஒரு குழந்தையின் அசைவுகளுக்குப் பின்னால் இப்படி ஒரு கதை(கற்பனை) இருப்பதை நான் இதுவரை அறியவில்லை...
மிக அருமை...
நன்றி anonymous.... இந்தக் கதைகளை நானே இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.. அருமையான கற்பனைகள்
பதிலளிநீக்கு