அனந்தபுரியில் சாவித்திரிஅட்டைப்படத்திலேயே அஜீத்துக்கும் விஜய்க்கும் சண்டை மூட்டிவிட்டிருந்த அந்த வார ஆனந்த விகடனைப் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு, அப்படியே ஒரு தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு, அந்த இரவில் மதுரை இரயில் நிலையத்தின் பயணிகள் காத்திருப்பு அறையில் எனக்கென ஓர் இடம் தேடிப்பிடித்து அமர்ந்தேன். இன்னும் சற்று நேரத்தில் என் வண்டி முதலாம் நடைமேடையில் வந்து சேரலாம். பதினைந்து ரூபாய் ! ஐந்து ரூபாய்க்கு ஆனந்த விகடனும் ஐந்து ரூபாய்க்குக் குமுதமும் என்று வாராவாரம் வாங்கி வாசித்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றியது. வயது எட்டடி பாய்ந்திருக்கையில் விகடன் விலை பதினாறடி பாய்ந்துவிட்டிருக்கிறது. அப்படியே நிமிர்ந்து பார்த்தேன். என் அருகில் ஒரு மஞ்சள் பையும் வேட்டி சட்டையுமாய் ஒரு பெரியவர். "நாங்க எல்லாம் அந்தக்காலத்துல முக்கால் ரூவாய்க்கு மூணு மசால் தோசை திம்போம்" என்று அங்கலாய்த்த எத்தனை பெருசுகளை நினைத்து எத்தனை நாட்கள் சிரித்திருப்பேன். "நாங்க எல்லாம் அந்தக் காலத்துல பத்து ரூவாய்க்கு விகடனும் குமுதமும் சேர்த்து வாங்கிப் படிக்கையிலே....." என்று அந்த மஞ்சள் பை பெரியவர் என்னைக் கலாய்ப்பது போல் எனக்குத் தோன்றியது. அடடா! இப்படி நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இப்போதென்ன முதுமைக்கு அவசரம்.

சுற்றிமுற்றிப் பார்த்தேன். காத்திருந்த பயணிகளில் பலரும் நாற்பதுக்கு மேல்தான். அதுதான் ஏதோ ஒரு முதுமையின் அதிர்வு பாய்ந்திருக்கிறது போல. இந்தக் கல்லூரி விடுமுறையில் தனியாக ஊருக்குச் செல்லும் கதாநாயகிகள் எல்லாம் எந்த இரயிலில் போகிறார்கள் என்றே தெரியவில்லை. அல்லது அவர்கள் யாரும் அரை மணிக்கு முன்னாலேயே வந்து பயணியர் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து ஆனந்த விகடன் வாசிப்பதில்லையா?

அந்த அறையின் முதுமை வாடை என்னை உந்தித் தள்ள, எழுந்து வந்து நடைமேடையில் நிற்கலானேன். முத்து நகர் விரைவு இரயில் இப்போதுதான் போயிருக்கிறது. அடுத்தது அனந்தபுரிதான் !

ஐந்து இளம் பெண்களையும் , ஒரு முரட்டு அண்ணனையும் பார்த்துவிட்டு , ஒரு தேனீரும் பருகியபின், இருபது நிமிடங்கள் தாமதமாய் இரைந்து வந்து நின்றது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். நான் பதிவு செய்திருந்த பெட்டிக்குச் சென்றேன். அங்கே இறங்குவோரை  இறங்கவிடாமலும் ஏறுவோரை மீறவிடாமலும் கதவருகில் கூட்டம் கபடி ஆடிக்கொண்டிருந்தது. முன்பதிவு செய்திருந்தாலும் கூட கதவு ஒன்று கண்ணில் பட்ட உடன் அதில் நெருக்கியடித்துப் போராடி ஏறுவதில் எம் மக்கள் ஓர் அலாதி பிரியமே காட்டுகிறார்கள் ! அன்று முகூர்த்த நாள் வேறு. கலவரம் கரைந்து கடைசியாக நானும் ஏறிக்கொண்டபின் ஐந்து நிமிடம் அமைதியாய் நின்றுவிட்டு அசைய ஆரம்பித்தது வண்டி.

எனக்குக் கதவுக்குப் பக்கத்திலேயே ஆறாம் எண் இருக்கை. கொஞ்சம் அமளி துமளி எல்லாம் அடங்கட்டும் என்று கதவருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அன்று நிஜமாகவே கன கூட்டம் தான். கைக்குழந்தையோடு ஒரு கணவன் மனைவியும், ஏறத்தாழ ஏழாம் வகுப்பு வயதுடைய இரட்டைப் பையன்களோடு மற்றொரு அப்பா அம்மாவும் கதவுக்கு அருகில் கிடைத்த சின்ன இடத்தைச் சமமாகப் பங்கு போட்டுகொண்டு, போர்வைகளையும் பழைய புடவைகளையும் தரையில் விரித்து ஒரு வழியாக வசதி தேடிக்கொண்டிருந்தார்கள். Waiting list ! முன்பதிவுப் பெட்டியில் இப்படித் தரையில் தூங்கியாவது போய்விடலாம். பிள்ளைகளோடு அவர்கள் நிச்சயமாய்ப் பொது வகுப்பில் போய்விட முடியாதுதான் !

ஒரு பத்து பன்னிரெண்டு பேர் கொண்ட பெரிய இளைஞர் குழுவுக்குப் பாதி படுக்கைகள் RAC-யில் நிச்சயம் ஆகியிருந்தன. கதவருகில் நின்று கொண்டு அந்தக் குழுத்தலைவனான ஓர் இளைஞன் ஒவ்வொருவருக்காய் படுக்கை எண் சொல்லி அனுப்பி வைத்துக்கொண்டிருந்தான். அவர்கள் எல்லாம் அகன்றதும் , கொஞ்சம் இடம் வசதியாக , நான் என் படுக்கைக்குச் சென்று மேலே ஏறி படுத்துக்கொண்டேன்.

இவ்வளவும் நடந்து கொண்டிருக்கையிலும் நான் அந்த முதிய தம்பதியைக் கவனித்துக் கொண்டுதானிருந்தேன். என்னுடையது மேல் படுக்கை. அதன் கீழ் உள்ள நடு மற்றும் கீழ் படுக்கைகளில் அந்த அம்மாளும் அந்தப் பெரியவரும் படுத்திருந்தார்கள். நான் கதவருகே நின்று கொண்டிருந்த போது ஒரு முப்பது சுமார் வயதுடைய ஆள் ஒருவர் அந்த அம்மாளை எழுப்பி அது தன் படுக்கை என்று கூறி அவளை எழுந்திருக்கச் சொன்னார். மிக மெதுவாக அந்த அம்மாள் எழுந்து கொடுத்து ஏணியில் இறங்கினாள். கீழ் படுக்கையில் அந்த முதியவர் - அந்த அம்மாளின் கணவர் - மல்லாந்த நிலையில் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க, அவரை எழுப்பி விடாமல் கவனமாக அவரின் காலடியில் கழுத்தைக் குனிந்து கொண்டு அமர்ந்தாள். அதற்குள் அவளை எழுப்பி விட்ட நடுப் படுக்கைக்காரர் தன் படுக்கையில் ஏறி , கையோடு கொண்டு வந்திருந்த ஒரு காற்றுத் தலையணையைப் போட்டுக்கொண்டு குப்புறப் படுத்துத் தூங்கிவிட்டிருந்தார்.

அந்த அம்மாள் ஒரு பெட்டிக்குள் இருந்து தன் கண்ணாடியை எடுத்து அணிந்திருந்தாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. தலையில் நிறைய மல்லிகை. சிவப்பு எல்லைகளுடைய மஞ்சள் புடவை அணிந்திருந்தாள். அறுபதுக்குக் குறையாமல் வயதிருக்கும். "இது எந்த ஊர்" என்று எதிரில் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.

அடுத்த சில நொடிகளில் மற்றொருவர் - குள்ளமாய் வழுக்கைத்தலையோடு மிக அவசரமாய் எங்கோ போய்க்கொண்டிருப்பது போல் தோற்றமளித்த ஒருவர் - அங்கு வந்து கீழ் படுக்கை தனதென்று கூறி அவர்களை எழச் சொன்னார். அந்த அம்மாள் பொறுமையாகத் தன் கணவரை எழுப்புகிறாள், "அப்போ ....... அப்போ........ எளிந்திரிங்கப்போ..." அவர் உறக்கம் மெதுவாகக் கலைய, "என்னடி " என்று முனகுகிறார்.

"எளிந்திரிங்கப்போ .. இந்த சீட்டுக்கு ஆள் வந்துட்டாங்க, மெதுவா எளிந்திரிங்க ......."

"எந்த ஊர் வந்திருக்கு? யார் வந்திருக்காங்க?"

"மதுரை தாண்டிட்டுது. சீக்கிரம் அப்படியே மெதுவாட்டு எளிந்திரிங்கப்போ ..."

..................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...
- மதி

கருத்துகள்

 1. பொதுவா பெரிய கதை களமோ, ஆடம்பர பாத்திரங்களோ இல்லாம அன்றாடத் தொணியில ரொம்பவே நல்லா இருந்தது ...

  வாழ்க்கை என்பது ஒரு பயணம், சேருமிடம் (முடிவிடம் ) ஒரு பொருட்டு இல்லை . இந்த நொடி, வாழ்ந்து விடு . என் வாழ்நாளின் ௭௮௦ நொடிப் பொழுதை உங்கள் கதையோடு பயணித்ததை எண்ணி உளப்பூர்வமாக மகிழ்ச்சி அடைகிறேன் ..

  பதிலளிநீக்கு
 2. மதி,

  நல்ல நடை .. அன்றாடம் காணும் காட்சிதான் என்றாலும் முதுமையின் வலி, இயலாமை அனைத்தையும் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே அழுத்தமாக உண்மை .. வாசிக்க வாசிக்க காட்சியாகவே கண் முன்னே விரிந்தது ...

  //அலாதி பிரியமே காடுகிறார்கள்

  காடுகிறார்கள் / காட்டுகிறார்கள் ?? எழுத்துப்பிழையா இல்ல அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா ?

  //நடந்து வந்து கொண்டிருந்தபோது அவளின் பெயர் சாவித்திரியாக இருக்கலாம்

  ஏதோ ஒரு எழுத்தாளரின் சாயல் இருப்பதாக தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. @ உதயகுமார் .. மிக நன்றி..

  @ பிரேம்நாத் ... காட்டுகிறோம் என்பதுதான் வார்த்தை .. எழுத்துப்பிழை என்றுகூட சரியாகச் சொல்ல முடியாது... Typo-வைத் தமிழில் தட்டுப்பிழை எனலாமா ?

  /// எழுத்தாளரின் சாயல் தெரிகிறது //// மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள். அதற்குத் தான் முயன்று கொண்டிருக்கிறேன் . நன்றி.

  பதிலளிநீக்கு
 4. யதார்த்தமான கதை. கதையின் நடை அருமை.

  பதிலளிநீக்கு
 5. Romba nallaa irundhichi naa... Naan padikka padikka andha mudhiyavargalukkum, matra characters kum oru uruvam kooda thondriyadhu.. Andha alavirku narration arumai..

  பதிலளிநீக்கு
 6. @siva and @anand ... thanks da.. indha kadhaiku acceptance epadi irukumo nu enaku oru chinna doubt irundichu ... since it s not my usual style and subject . glad that i ve managed this subject well too

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாசெப்டம்பர் 22, 2011

  இது போன்ற சூழ்நிலையை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்திருப்பர்...கூடவே இருந்தும், கஷ்டபடுகிறவர்களுக்கு நம்மால் உதவ இயலாத தருணத்தை மிகச் சிறப்பாக உணர்த்தியிருகிறீர்கள்...நீங்கள் இது உங்கள் வாடிக்கையான நடை இல்லை என்று சொல்லக் காரணம்?எனக்கு இது உங்களுடைய வழக்கமான பாணி மாதிரிதான் தெரிகிறது....

  பதிலளிநீக்கு
 8. நன்றி anonymous... தமிழிலேயே type செய்யப் பழகிக் கொண்டீர்களா இப்போது? நல்லது ! என் பாணி என்று ஒன்றை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சி... எனக்கு ஏன் தோன்றியது என்றால் வழக்கமாக என் கதைகள் இளைஞர்கள் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு திருப்பத்தை உடைய முடிவை ஏற்றோ வரும்.. சில கதைகள் மாறுபடும்.. இதுவும் அது போன்ற ஒன்றே.. இந்தக் கதையில் ஒரு முதிய தம்பதியினரின் ஓரிரவுப் பிரயாணக் கஷ்டத்தை எத்தனை பேர் கொஞ்சம் நீளமாக வாசிக்கத் தயாராக இருப்பார்கள் என்று ஒரு சின்ன சந்தேகம் இருந்தது எனக்கு... இப்போது திருப்தி !

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் ஏன் அவர்களுக்கு இடம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உங்கள் இடத்திற்கு அவர்களால் ஏறி வர முடியாது என்பதலா? அப்படியிருந்தாலும் அது கொஞ்சம் உறுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 10. நியாயமான கேள்வி ரமேஷ்... இந்தக் கேள்வி என்னையும் பல முறை உறுத்தியிருக்கிறது .. சில சமயங்களில் இது யதார்த்தம் என்று நான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.. சில முறை முடியவில்லை ...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..