கவிதை படிக்கும் பூனை


கவிதையை வாசித்துவிட்டு இதையும் பாருங்கள் நான்
கவிதைகள் சமைத்து வைப்பேன்.
ஒரு பூனை போல்
பதுங்கி வந்து யாரோ
சந்தடியின்றிச் சுவைத்துவிட்டு
சுவடுகளை விட்டுப் போகிறார்.
மீண்டும் மீண்டும்
அதே பூனை.
சுவடுகளால் நல்ல பரீட்சயம்
முகம் பெயர்
மற்றெல்லாம் சூட்சுமம்.
விடை காண ஒரு சின்ன வேட்கை
விசாரணையே இந்த வேடிக்கை!
ஆணோ பெண்ணோ
நட்போ உறவோ
பகையோ
பயமோ
நாணமோ

ரசனையும் கருத்தும்
பெண் சாயல் காட்டுது
ஒளிவும் மறைவும் அதற்கு
வலுவே கூட்டுது

சும்மா பிடித்திருக்கும்
யாரோ எவரோ?
சொல்லத் துடித்திருக்கும்
ஏதோ உறவோ?

என் எதிர்வீட்டு அழகியோ?
தமிழ் பழகி வரும்
பழைய காதலியோ?

தூரத்துத் தங்கையோ?
அத்தையோ சித்தியோ?
அர்ஜுனின் அம்மாவோ?

போன பிறப்பின் தொடர்போ?
அந்தப் பூனைக்கு
நான் பூச்சாண்டியோ?

பார்த்த முகம்தான் என்று
பட்சி சொல்கிறது.
பரந்த உலகத்தில்
நிச்சயம் என்பதேது?

ஆணாக இருக்கலாம்
உளவியல் வித்தையில்
நானாகவும் இருக்கலாம்
உண்மை அறிவதே
வீணாகவும் இருக்கலாம்.

ருசி கண்ட மனத்திற்கு
ரிஷிமூலம் ரகசியம் போல.
ரசனையில் இது ஒரு
திருட்டு மாங்காய் ரகம் போல.

எதற்கு வம்பு?
பேசாமல் நான்
அடுத்த கவிதை
சமைக்கப் போகிறேன்.

- மதி

The Pink Panther படம் பார்த்திருக்கிறீர்களா? :-)

கருத்துகள்

 1. அழகிய ரசிக்கும்படியான கவிதை...

  பதிலளிநீக்கு
 2. சௌந்தர் & ஜீவன் .. இருவருக்கும் மிக நன்றி .. என் பதிவுக்குப் புது வருகை தந்திருக்கின்றீர்கள் .. நன்றி

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாஆகஸ்ட் 07, 2011

  பூனைக்கே உரியது திருட்டுத்தனம் என்றதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் கொடுத்த உவமைத் தலைப்பு அருமை....ஆணா, பெண்ணா என்ற சந்தேகத்தைப் போக்குவதற்காக மேற்கொள்ளும் தேடலை வெளிப்படுத்தும் படத்தின் தேடலும் அற்புதம்...பிங்க் பாந்தெர் படம் பார்த்திருக்கிறேன்??????

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. நன்றி anonymous .. முன் ஒரு முறை சொன்னது போல இந்தக் கவிதை எழுதுவதற்கு நீங்களும் ஒரு காரணமே ! அந்த அடிப்படை விஷயத்தை எடுத்துக் கொண்டு என் பாணியில் கவிதையாக்கிவிட்டேன்.. பிங்க் பேந்த்தர் படத்தில் வரும் இதே போன்ற ஒரு தேடலின் நகைச்சுவைக் காட்சியைத்தான் இணைப்பாகக் கொடுத்துள்ளேன் .

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாஆகஸ்ட் 08, 2011

  இணைப்பை நான் பார்க்கத் தவறிவிட்டடேன்...இப்பொழுது பார்த்துவிட்டேன்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..