கவசம்
அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் அடர்ந்த இருள். இருளின் நடுவே ஒரு நீண்ட கறுப்பு மேசை. மேசை மேல் ஒற்றை மெழுகுவர்த்தி ஒன்று ஒரு மார்க்கமாக ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. மேசைக்கு இந்தப் பக்கம் ஒரே ஒரு நாற்காலியில் முகம் முழுக்கப் பதட்டத்துடன் ஓர் இளைஞன். அந்தப் பக்கம் ஆறு நாற்காலிகள். அவற்றில் முறையே யமதர்மராஜன், சித்திரகுப்தன் மற்றும் மதிப்பிற்குரிய கமிட்டி உறுப்பினர்கள் !

ஒரு நேர்காணல் போல இருந்தது. அந்த இளைஞனின் வாழ்க்கை வரலாற்றை - எழுதியவர் யாரோ - ஆராய்ந்தவாறே அவனிடம் கமிட்டியினர் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, அவன் பதட்டமாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறான். அவ்விடத்திற்குக் கீழே - வெகு கீழே - பூமி சூரியன்மேல் காய்விட்டுவிட்டு முகத்தைத் திருப்பி முதுகில் வெயில் வாங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் கீழே - ரொம்ப தூரம் கீழே - ஒரு போயிங் 747-உள் பைலட் விமானத்தை ஓட்டாமல் ஏர் ஹோஸ்டஸ்ஸை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கும் கீழே பல மைல் தொலைவில் ஒரு டியூப் லைட் அணைந்துகொண்டிருக்கிறது - எரிந்து கொண்டிருக்கவில்லையெனில் அணைந்துகொண்டிருக்கிறது என்றுதானே சொல்லவேண்டும். அந்த டியூப் லைட்டின் கீழே நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன் - கிட்டத்தட்ட.
அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் அடர்ந்த இருள். தவளைச்சத்தமும் சில்வண்டுகளின் சில்மிஷங்களும் தொடமுடியாத மூன்றாம் மாடியின் நிசப்தத்தைக் கிழிக்கும்படி போயிங் going. என் கண்கள் நீர் சொரிந்து கொண்டிருக்கின்றன. திரும்பிப் படுக்கிறேன். தலையணையில் எல்லாம் ஈரம். ஈரத்தின் உறுத்தலில் விழித்து அமர்கிறேன்.

"சே ! என்ன இது ? இப்படியுமா? ம்ஹூம் ... அத நினைக்காத .. ஆனா விடிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்வாங்களே .. ஒருவேளை ... சேசே .. இதே ஆளுங்கதான் கனவுல செத்துப்போனா ஆயுள் கெட்டின்னும் சொல்றாங்க... ஆனா நான் சாவலையே ? ம்ஹூம் .. வேண்டாம்.. நினைக்காத"

தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தேன். தூங்கவில்லை. தூங்க முடியவில்லை. நேரம் மெதுமெதுவாக நகர்ந்தது - கணக்கு வகுப்பு போல. காலையில் எழுந்தேன் - தூக்கத்திலிருந்தல்ல, படுக்கையிலிருந்து. ஒன்றும் சரியில்லை. செம மூட் அவுட். நினைக்க வேண்டாம் என்று நினைத்தால் முடியவில்லை. தொலைபேசி அழைக்கிறது. அபிஷேக் - தோழன்! வேறென்ன... இந்நாட்டு மன்னர்களாகிய நானும் அவனும் நகர் உலா போகத் திட்டமிட்டோம்.

"ம்மா , வெளிய போறேன்.. அபிஷேக் வரான். வண்டியெடுத்துட்டுப் போறேன்... அப்புறம் ஒரு நூறு ரூபா எடுத்துக்கறேன்"

"டேய் நில்லுடா .. போகாதே. இரு வரேன்"

"ஆங் சரி சீக்கிரம் வந்துர்றேன்"

வண்டிச்சாவி எடுத்துக்கொண்டே வெளியே வந்து பார்க்கிங் லாட்டிலிருந்து வண்டியை வெளியிழுத்தேன். உதைத்து ஏறி உட்கார்ந்தால்.... ஒரு நிமிஷம். உள்ளே போய் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டேன். இந்த ஹெல்மெட்டை - இத்துணை நாட்கள் மூலையில் மட்டுமே முட்டிக்கொண்டிருந்த ஹெல்மெட் - இரவில் தூங்கும் தம்பியை எழுப்பிப் பயமுறுத்துவதற்காக மட்டுமே மாட்டிய ஹெல்மெட் - முதல் முறையாக எனக்கு சேவகம் செய்யப் போகிறது - இன்று.

நல்ல உறுதியான கறுப்பு நிற ஃபுல்-கவர்டு ஹெல்மெட். கண்ணாடியை வேறு இறக்கி விட்டேனா, லேசாக மூச்சு முட்டியது. என் மூச்சுக்காற்று கண்ணாடியில் பட்டு எனக்கே ரிப்பீட் அடித்தது. சுற்றிமுற்றி வரும் வாகனங்களின் இரைச்சல் குறைந்தது. எல்லாவற்றுக்கும் மேலே தலையில் ஒரு கல்லைக் கட்டிவிட்ட கனம். வேகமாக எதிரே செல்லும் ஸ்கூட்டிகளைத் திரும்பிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

அபிஷேக் வீட்டு வாசலில் வண்டியை அணைத்து நிப்பாட்டினால், எதிரே அவன், சிரிக்கிறான். நானும் சிரிக்கிறேன், கல்லைக் கழட்டிக்கொண்டே. வந்து என் கையிலிருந்து ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டு, "என்ன நண்பா, புதுப் பழக்கம்?" என்கிறான்.

"இல்லடா ஒரு கனவு கண்டேன்"

:அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஹெல்மெட் போடச் சொல்லி கனவுல அண்ணி வந்து சொன்னாங்களா?"

"டேய் அடங்குடா அடங்குடா"

சற்று நேரத்தில் அவன் வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் நானும் அவனும். "சொல்லு"

"என்ன சொல்லு"

"அதான் கனவுல அண்ணி.. ஹெல்மெட்.. "

"போடா"

"ஓ.. பெர்சனலா? "

"டேய் சும்மாரு.. இது டிராஜெடிடா"

"அப்டியா,.. என்னாச்சு"

சொல்ல ஆரம்பித்தேன். என் கனவு. இன்று காலை நான் கண்ட கனவு. என்னை ஹெல்மெட் மாட்ட வைத்த கனவு. யாரிடமாவது சொன்னால் தேவலாம் என்றுதான் இருந்தேன்.

"நல்லாக் கேளு. இதே மாதிரி காலையில நீ ஃபோன் பண்ணி வரச் சொல்றே.. நானும் வீட்ல இருந்து கெளம்புறேன்"

"ஹெல்மெட் இல்லாம"

"Exactly. கிளம்பி உங்க வீட்டு ரோடு முனையில் திரும்புறேன். நீ நின்னுட்டிருக்க. பாத்து ஒரு ஹாய் சொல்ற. நானும் சொல்றேன். சொல்றேனா.... இங்க இடது பக்கம் டர்னிங்லேர்ந்து ஒரு சுமோ. என்னோட ஒரு கை ஏர்ல இருக்கு. ஒரு கை பார்ல இருக்கு. டப்புனு ஒரு அடி. சும்மா மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ல பறக்குறேன்"

"நண்பா... வண்டி நம்பர் நோட் பண்ணியா?"

"ப்ச்...இல்லடா .. டாப் வியூல நம்பர் தெரிலடா"

"சரி சரி மேல சொல்லு"

"மேலதானே பறக்குறேன்.. பறந்து கீழு விழுறேன். நீ ஓடி வரது தெரியுது. மேலே மரத்துல் ஒரு காக்கா தெரியுது. அவ்ளோதான். அப்புறம் ஃபுல் பிளாக். ஃபுல் பிளாங்க். "

"என்ன .. போயிட்டியா..."

"அப்படித்தான் நானும் நெனச்சேன்.. ஆனா அதுக்கப்புறம்தான் மேட்டரு"

"போகலியா?"

"போயிட்டிருக்கேன். மேலே. மேலே..... சும்மா பலூன் மாதிரி. மேலே மரத்துல் அந்தக் காக்கா மெரண்டு பறக்குது. இன்னும் மேலே.... அப்படியே போனா ஒரு ஜெலுஃப்தான்ஸா என்னைக் கிராஸ் பண்ணுது. போயிங்னு நெனைக்கிறேன். உள்ள பைலட் ஏர் ஹோஸ்டஸ்ஸை பிக்கப் பண்ணிட்டிருக்காரு"

"செத்தும் திருந்தலையேடா நீ"

"கேளு. இன்னும் இன்னும் மேலே அப்படியே போறேன். ஸோலார் ஸிஸ்டமே தெரியுது. "

"ஆஹா. இது கொஞ்சம் ஓவரா இருக்கே"

"அதுக்கும் மேலே போறேன். ஒரு ரூம் மாதிரி இருக்கு. ஃபுல்லா இருட்டு. ஒரே ஒரு மெழுகுவர்த்தி. டேபிளுக்கு இந்தப் பக்கம் நான். அந்தப்பக்கம் யாரோ கொஞ்சம் பேர். என்னன்னே புரியல"

"எமனா இருக்கும். நரகத்துக்கு கேட் பாஸ் குடுக்குறதுக்காகக் கூப்பிட்டிருப்பாரு."

"இல்லையே... என்னைப் பார்த்து 'ஹவ் டூ யூ ஃபீல்' அப்படின்னு கேட்டாரே"

தோடா .. இங்கிலீஷ் எமன்"

"டே கேளுடா.. 'பெட்டர்'னு சொல்லி நிமிந்து பாத்தா நீ நிக்கிற"

"ஓ நானா.. டே நல்லாப் பாத்தியா. அது கடவுளா இருந்திருப்பாரு"

"ஆமாண்டா, கடவுள் ஜீன்ஸ் போட்டுட்டு அழுவுற மாதிரி என் முன்னாடு நின்னுட்டிருக்காரு"

"சரி விடு.. மேலே சொல்லு"

"இங்கதான் ஷாக்கே. முழிச்சுப் பாத்தா என்னைச் சுத்தி நீ, குமார், என் அப்பா அம்மா, தம்பி, ரெண்டு நர்ஸுங்க, ஒரு டாக்டர் எல்லாம்ம் நின்னுட்டிருக்காங்க"

"அடப்பாவி நீ சாவலையா?"

"நல்ல எண்ணம்டா... ஆனா எல்லான் அழுவுறீங்க. என்னன்னு கேட்டா எங்க அம்மா என்னைக் கட்டிப்புடிச்சுத் தலையைக் கோதி விடுறாங்க. தம்பி காலையே பாக்குறான். என்னடான்னு பாத்தா காலைக் காணோம்"

"காலு..... காணோமா..."

"ஆமாண்டா.. அதப் பாத்து நான் அழ, என்னைப் பாத்து அம்மா அழ, அதப் பாத்து நான் அழ, அம்மா அழ, நான் அழ, அம்மா அழ .......... முழிச்சுட்டேன். என்ன மாதிரி இருந்திச்சு தெரியுமா"

"வாவ் கிரேட். சரி இதுல எங்க ஹெல்மெட் வருது?"

"இல்லடா அப்புறம் தூக்கமே வரல. காலைலேர்ந்து ஒரு மாதிரி இருந்திச்சு. வண்டி வேற எடுத்தேனா... ஒரு பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு .. ஹெல்மெட்"

"ஆனா நண்பா... நீ இதைத் தலைல இல்ல மாட்டிட்டு வந்தே !!"

- மதி


கருத்துகள்

 1. வணக்கம் நண்பரே..
  வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

  என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாஜூன் 29, 2011

  Miga rasithen...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..