என் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தா பெயர் தெய்வநாயகம் செட்டியார்இந்தக் கட்டுரை தெய்வநாயகம் செட்டியாரைப் பற்றியது அல்ல. அவரின் பெயரைத் தவிர அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது! இது மற்றொரு திரு.தெய்வநாயகம் அவர்களைப் பற்றியது. இவர் என் அப்பாவின் பெரியப்பா. பெரிய தாத்தா !

என் சித்தப்பாவின் மகளின் பெரியப்பா மகன் யாரென்று யாராவது சட்டென்று என்னிடம் கேட்டாலே கொஞ்சம் அசட்டுத்தனமாகச் சிரித்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று குழப்பிவிட்டுத் தப்பிக்கப் பார்க்கும் ஆசாமி நான். திடீரென்று சில வாரங்களுக்கு முன் என் முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது. செய்வதற்கு வேறொன்றும் இல்லையென்றாலும் கூட எல்லாரும் எடுத்துச் செய்யும் காரியமல்ல. பெரும்பான்மையானோர்க்கு முகப்புத்தகம் போதும்!
திருநெல்வேலியிலிருந்து என் ஊருக்கு நேர் வழியில் சென்றால் ஒன்றரை மணி நேரம். அன்று நெல்லையில் பேருந்தில் ஏற முடியாத கன கூட்டம். நான் இடம் பிடித்துத் தருகிறேன் என்று வீராப்பாக வசனம் பேசிவிட்டு, அம்மாவையும் அப்பாவையும் நிற்க வைத்து விட்டு, சில நேரம் கழித்து உள் நுழைந்த ஒரு பேருந்தைத் துரத்திப் பிடித்து, தொங்கி ஏறி, கிடைத்த இடத்தில் பையைப் போட்டு, பருந்திடமிருந்து குஞ்சைக் காக்கும் பறவை போல அந்த இடத்தைப் பாதுகாத்து, 'பொறுமையாக ஏறி வாங்கள்' என்று அம்மாவுக்கு சைகை காட்டின போது  அவள் முகம் சுழித்தாள். அப்போது ஆரம்பித்தது இந்த நல்வினை. சுற்று வழியில் போகும் பேருந்துக்கு இப்படிக் கஷ்டப்பட்டு இடம் பிடித்தேனே என்று அம்மாவுக்கு அங்கலாய்ப்பு. அடுத்த நிமிடத்திலேயே பக்கத்தில் நேர்வழி வேறு! எனக்கோ மீண்டும் பறவையாக விருப்பமில்லை. ஊர் போய்ச் சேர இரண்டு மணி நேரத்துக்கு மேலும் ஆகலாம். மோசமான பாதையில் கூட்டமான பேருந்தில் அரதப் பழைய கிராமங்களின் வழியாக அதிக நேரம் போக வேண்டும். இடம் பிடித்தது போதாதென்று அம்மாவிடம் வசை வாங்கிக் கொண்டே போக வேண்டும்! போகும் வழி என் அம்மா வளர்ந்த கிராமத்துக்குப் பக்கத்து ஊர்களைத் தொட்டுச் செல்லும். திட்டு வாங்காமல் தப்பிக்க, அம்மாவின் முகத்தின் முன் கொசுவர்த்திச் சுருள்களைச் சுழற்றினேன்.

1960களில் திப்பணம்பட்டி கிராமத்தில் கணக்கப்பிள்ளை வீட்டில் அவரின் ஒன்பது பிள்ளைகளும் அவரவர் பிள்ளைகளோடு ஆண்டுதோறும் கூடுவதுண்டு. அப்படி ஒரு பிள்ளையின் பிள்ளைதான் என் அம்மா. சின்ன வயதில் கோடை விடுமுறைக்கு 27 பேரப்பிள்ளைகள் கூடும் வீடு! எப்படிக் களையாக இருந்திருக்க வேண்டும் அந்த வீடு! சின்ன வயதில் இருந்து அந்த வீட்டுக் கதைகளை அடிக்கடி அம்மா சொல்லியிருந்தாலும், கூடிப்போனால் ஒரு முப்பது மைல் தொலைவில் கொஞ்சம் சிதிலமடைந்து அந்த வீடு இன்னும் நின்றிருந்தாலும், இன்னும் நான் திப்பணம்பட்டியைப் பார்த்ததில்லை. அன்று அம்மாவைச் சமாளிக்க திப்பணம்பட்டிதான் கை கொடுத்து உதவியது.

பேச்சை அப்படியே அவளின் பிள்ளைப் பிராயத்தின் பக்கம் திருப்பி, சீக்கிரம் ஊர் வந்து சேர வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தேன். பேச்சு சுவாரசியத்தில் நிஜமாகவே சீக்கிரம் திப்பணம்பட்டிக்குப் போய் அந்த வீட்டைப் பார்த்து வந்தால் என்ன என்று தோன்றியது. ஊருக்கு வந்ததும் கூட விடாது பேச்சு தொடர்ந்தது. அந்த சூட்டில்தான் கொஞ்சம் சொந்தபந்தங்களைத் தெரிந்து கொள்வோம் என்று அம்மாவிடம் , அந்த 27 பேரப்பிள்ளைகளின் பெயர்களும் அவர்கள் யார் யாரின் பிள்ளைகள் என்றும் கேட்க ஆரம்பித்தேன். குத்துமதிப்பாக பெரியம்மா மாமா என்று இது வரை நான் அறிந்தோரெல்லாம் நிஜத்தில் ஒருதாய் வயிற்று மக்கள் என்று இதுவரை எனக்குத் தோன்றவேயில்லை என்று தெரிந்தது. அதே போல சகோதரர்கள் என்று நான் நினைத்திருந்தவர்களெல்லாம் அப்படி இல்லை என்றும் தெரிந்தது. ஒரு சில சொந்தங்களின் பட்டப்பெயர்கள் அல்லாத நிஜப்பெயர்கள், அவர்கள் சிறு வயதில் செய்த சேட்டைகள் என்று சுவாரசியங்கள் கூடிக்கொண்டே போக, அப்படியே திப்பணம்பட்டி கணக்கப்பிள்ளை நல்லசிவம் ஐயா பற்றியும் அவருக்கும் முந்தைய தலைமுறை பற்றியும் செய்தி சேகரிக்க ஆரம்பித்தேன். சொன்னேனே , செய்வதற்கு வேறொன்றும் இல்லையென்றாலும் எல்லாரும் எடுத்துச் செய்யும் காரியமல்ல என்று!

அம்மா மிகவும் சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்து அவளின் அம்மாவின் தாத்தா பெயர் வரை சொல்லிவிட்டாள். அதற்கு மேல் சொல்ல என் ஆச்சி இப்போது உயிரோடு இல்லை. நல்லசிவம் ஐயாவின் தகப்பனார் கேரள நாட்டுக் கொல்லத்தில் இருந்து மலை தாண்டி இந்தப் பக்கம் வந்து தங்கிவிட்டவர் என்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் என் தாய்வழி முன்னோர் மலையாளத்தைத் தாய்மொழியாய்க் கொண்டிருந்தனர் என்றும் கண்டுபிடித்தது சுவாரசியமாக இருந்தது! அப்படி மலை தாண்டி வந்த கனகசபாபதி கூடவே இரண்டு மனைவிகளையும் வைத்துச் சமாளித்தார் என்று தெரிந்துகொண்டதும் ஒரு மாதிரி சுவாரசியமாகவே இருந்தது.

அம்மாவின் இரண்டு தம்பிகளிடமும் ஒரு பெரியம்மாவிடமும் அம்மாவின் அப்பாவிடமும் கேட்டுக் கேட்டு இன்னும் சில பெயர்களைக் கண்டுபிடித்தேன். இன்ன காரியம் செய்கிறேன் என்று சொன்னபோது எல்லாருமே 'நாடோடிகள்' படத்தில் சசிகுமார் பேசின வசனம் பார்த்து இப்படி ஆரம்பித்துவிட்டாயா என்றுதான் கேட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி விழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் முன்னோர்களைப் பற்றியும் வேர்களைப் பற்றியும் பேசின நல்ல பேச்சும் இந்தக் காரியத்துக்குத் தூண்டியிருக்கலாம்.

அம்மா வழியில் ஐந்து தலைமுறைக்கு மேல் போகவில்லை. அப்பா வழியிலும் கொஞ்சம் சேகரித்து வைப்போம் என்று அப்பாவைக் கேட்டேன். அப்பா தன் பெட்டிக்குள் பல நாள் பூட்டி வைத்திருந்த ஒரு பொக்கிஷத்தை எடுத்து வந்தார்! என் அப்பாவின் பெரியப்பா (அவரின் தகப்பனாரின் அண்ணன்) அவரிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு கடிதமும் ஒரு கற்றைத் தாள்களும்! "பெரிய தாத்தா 1997-இல் நம்ம முன்னோர்களைப் பத்தி விவரம் சேர்த்து வைச்சு எங்கிட்ட குடுத்திருந்தார். இத்தனை நாள் ஒரு பொக்கிஷமா வைச்சிருந்தேன். நானே கூட இன்னும் வாசிச்சுப்பாத்ததில்லை. வா வாசிச்சுப் பாப்போம்" என்று எடுத்து வைத்தார். என் அப்பாவின் பெரியப்பா தான் திரு தெய்வநாயகம் !

முன்பே இந்தப் பொக்கிஷத்தைப் பற்றி அப்பா சொல்லியிருந்தாலும் இத்தனை நாள் நானும் இதை வாசித்ததில்லை. முதலில் எத்தனை தலைமுறைகள் வரை போகிறதென்று பார்த்தேன். என்னுடையது ஒன்பதாம் தலைமுறை! பதினேழாம் நூற்றாண்டு வரை! அந்தக் கடிதத்தை வாசித்தேன். ஆதி முதலில் இருப்பவர் தெய்வநாயகம் செட்டியார். அவர் தொடங்கி இன்று வரை தன்னால் இயன்ற அளவுக்கு விவரங்கள் சேர்த்து வைத்திருப்பது பற்றி எழுதியிருந்தார். அந்த விவரங்களை எப்படி வாசித்துப் புரிந்து கொள்வதென்றும் தான் உபயோகித்துள்ள வைப்புமுறை, குறியீடுகள் பற்றியும் விளக்கியிருந்தார். ஆவலோடு அவரின் குறிப்புகளைப் புரட்டினோம்.

ஒரு முழு நாள் தேவைப்பட்டது எனக்கும் என் அப்பாவுக்கும், அவரின் குறிப்புகளைப் புரிந்து தலைமுறைகளைச் சரியாக மீண்டும் வரிசைப்படுத்த! அத்தனையும் குறைந்தது ஆறு ஏழு பெற்ற குடும்பங்கள். ஆறேழுக்கும் ஒவ்வொன்றாக ஆறேழு என்று அட்டகாசமாய்க் கிளை விரித்துப் பரவும் குடும்ப மரம்! இடையிடையே இரட்டை மனைவிகள், பிறந்து இறந்த பிள்ளைகள், கொடுத்து வாங்கிய திருமணங்கள் என்று முழுதாய்ப் புரிந்து கொள்வதற்குள் மண்டை காய்ந்துவிட்டது. அத்தனையையும் ஒரு கடித அளவிலான காகிதத்தில் சீராக வரிசைப்படுத்தி, தொடர்புபடுத்தி அவர் விளக்கியிருந்த விதம் அவர் மேல் ஒரு பெரிய பிரமிப்பைத் தந்தது! நான் கணிணியில் ஒன்றின் கீழ் ஒன்றாகக் கிளை விரித்து மென்பொருள் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். முழு மரத்தையும் பார்க்க வேண்டுமென்றால் 25% வரை zoom out செய்ய வேண்டியிருந்தது.

அந்த 25% zoom out

பதினேழாம் நூற்றாண்டிலே செட்டியார் என்றழைக்கப்பட்ட தெய்வநாயகம் பின்வந்த மூன்று தலைமுறைகளில் எங்கோ எப்போதோ ஜாதி மாறிப் பிள்ளைவாள் ஆகியிருக்கிறார். கலப்புத் திருமணமா? சீர்திருத்தமா? என்ன நடந்திருக்கும்? மிக யோசிக்க வைக்கும் கேள்வி. என் பெரிய தாத்தாவுக்கும் விடை தெரியவில்லை. கேள்விக்குறியாகவே விட்டிருக்கிறார். தெய்வநாயகம் செட்டியாரின் பேரனின் பேரன் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பஞ்சு வியாபாரம் பண்ண
விருதுநகருக்கு வந்திருக்கிறார். அவரிடமிருந்து தொடங்கி வரும் தலைமுறைகளில் பலரின் பெயர்களும் கிடைத்துவிட்டன. பெரிய தாத்தாவும் அவரின் தந்தை வழியிலும் தாய் வழியிலும் முயன்று விவரம் சேர்த்திருக்கிறார். அவரின் தந்தை வழியில் ஒன்பது தலைமுறைகள்!

முழுவதும் கணிணியில் ஏற்றி முடித்த பின்னும் எனக்கு அவர் மேல் இருந்த பிரமிப்பு தீரவில்லை. சின்ன வயதில் நான் கடி ஜோக்குகள் சொல்வதெல்லாம் ஆர்வமாகக் கேட்டு ஊருக்குப் போய் எனக்குக் கடி ஜோக்குகள் புத்தகம் வாங்கி அனுப்பியவர். பள்ளிக்கூடப் பேச்சுப் போட்டிகளில் எதிலாவது வெற்றி பெற்றால் வாழ்த்துக்கடிதத்தோடு ஐம்பது ரூபாய் பண அஞ்சல் அனுப்புபவர். வயதான காலத்திலும் பார்வைத்திறனும் செவித்திறனும் மங்கிப் போன போதும் கம்பீரமாக வாழ்ந்த மனிதர். அவர் பற்றிய நினைவுகள் வந்து வந்து போயின. அப்பாவுக்கும் அவரைப் பற்றிச் சொல்வதில் அவ்வளவு ஆர்வம். என் அப்பா சிறு வயதில் எடுத்துக்காட்டாகப் பார்த்து வளர்ந்த மனிதர் அவர்.

ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் என் அப்பா எதேச்சையாகக் கேட்டதைத் தொடர்ந்து எப்படியோ சேகரித்து உருவாக்கிய தகவல் களஞ்சியம் அவரின் கையெழுத்தில் நாங்கள் அன்று கண்ட காகிதங்கள். இரண்டு பிரதிகள் எடுத்து ஒன்றை என் அப்பாவிடமும் இன்னொன்றைத் தன் மகனிடமும் கொடுத்து வைத்திருந்தாராம். அந்த மற்றொரு பிரதியும் இது நாள் வரை யாரும் வாசிக்காமல் பெட்டிக்குள் பொக்கிஷமாகவே இருந்திருக்க வேண்டும். விளையாட்டாக நான் விவரம் சேர்க்க ஆரம்பித்ததில்தான் தெரிந்தது இது எத்தனை சுவாரசியமான விஷயம் என்று. இதில் உள்ள ஒவ்வொரு செய்தியையும் பெயரையும் அவரால் எப்படி சேர்க்க முடிந்திருக்கும் என்றும் அவருக்கு இந்த ஆர்வத்தில் எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும் என்றும் இப்போது தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கிறது. மூன்று நான்கு வருடங்கள் முன்னால்தான் இறந்திருக்கிறார். அந்த சுற்றுவழி பேருந்தோ , 'நாடோடிகள்' சசிகுமாரோ, எஸ். ராமகிருஷ்ணனோ எனக்கு ஒரு ஐந்து வருடங்கள் முன்னால் இந்தப் பொறியைத் தந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. பெரிய தாத்தா உயிரோடு இருந்து அவர் வாயாலேயே இந்த வரலாற்றைக் கேட்டிருக்கலாம்!

பெரிய தாத்தா பெரிய தாத்தா என்று விவரம் தெரிந்தது முதல் அவரை அழைத்திருக்கிறேன். நிஜத்தில் அவர் 'பெரிய தாத்தா' தான் !

- மதி

இந்த மொத்த ஆராய்ச்சியில் தெரிந்த மற்றும் சில சுவாரசியங்கள் :

- வேலைக்காரன் படத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம் வரும் - "I am Ragupathy s/o Gajapathy s/o Valaiyapathy". அதே போல "I am Gomathi Shankar s/o Kaliappan s/o Packiam s/o Kaliappan s/o Deivanayagam s/o Kaliappan s/o Deivanayagam s/o Kaliappan s/o Deivanayagam". இப்படியே போனால் இன்னும் மூன்று நான்கு தலைமுறைகள் மேலே போனாலும் காளியப்பன் தெய்வநாயகம் தான் போல. ஆனால் இது வரை எனக்கு ஆதாரம் இருக்கிறது.

- என் தலைமுறையில் என்னோடு சேர்த்து மொத்தம் நான்கு ஆண் வாரிசுகள் ஒரு சிறப்பு பெற்றுள்ளோம். எங்கள் பிள்ளைகள் தன் அப்பாவின் அப்பாவின் அப்பா பெயரை பத்துத் தலைமுறை வரை சொல்லலாம். மற்ற எல்லா இடங்களிலும் எங்கோ ஓர் ஆண் வாரிசு தொடர்பு அறுந்து விடுகிறது.

- திப்பணம்பட்டியில் என் அம்மா சிறு வயதில் விளையாடித்திரிந்த வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் தமிழ் எழுத்தாளர் சு.சமுத்திரம் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

- இன்னும் தெரியாத பெயர்கள் சில இருக்கின்றன. இப்போதுதான் என் சொந்தங்களில் மிக மூத்த தாத்தா பாட்டிகள் மேல் ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. எப்படியாவது அவர்களின் நினைவுக்கிடங்குகளிலிருந்து இன்னும் சில பெயர்களை வெளிக்கொணர முடிந்தால் என் குடும்ப வரலாற்றைக் கணிணியில் ஏற்றி என் பின் வரும் தலைமுறைகளுக்குக் கொடுக்கலாம். எவ்வளவு பெரிய பொக்கிஷமாக இருக்கும்!

கருத்துகள்

  1. Super machi... Romba nalla irunthuchu.. one thing comes to my mind. i have also found that my mother's Dad's Dad's Dad came from Ceylone(Srilanka)... But its difficult to get the names of them.. Your Grandfather is really great for having recorded the History of your family.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..