மூணுகண்ணன்


இரண்டு நாட்களுக்குத் தேவையான துணிமணி, ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு சமீபத்திய குமுதம், அப்புறம் ஓரமாக சுஜாதாவின் 'கணேஷ் வசந்த்', இவை அனைத்தும் பையினுள்ளே. பை அவன் தோளின் மேலே. தனக்குள் நினைத்துக் கொண்டான், "பத்து மணி நேரம். ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள ஒழுங்கா முடிச்சிரணும்".

(அவன் ஒரு சாதாரண பிரயாணி)

கடிகாரம் இரவு பதினொன்று என்கிறது. மாநகரப் பேருந்து நிலைய நுழைவாயிலிலிருந்து ஐம்பது அடி தூரத்தில் தெருவில் நிற்கிறான். அந்தத் தெரு இன்னும் ஒரு நானூறு அடியில் அமைதியாக வளைகிறது. அவன் முதுகுக்குப் பின்னால் தெரியும் வெளிச்சமும் பரபரப்பும் முழுசாக முக்காலே மூணு வீதம் கூட அவன் முன்னால் இல்லை. சந்தடியற்ற சாலை வளைவு.

தேனீர்க்கடை வாசலில் ஒரு முறை சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக் கொண்டு கேட்கிறான், "தம்பி டீ ஒண்ணு எவ்வளவு?"

"மூணு ரூவா சார்"

"ஒரு டீ"

(அவன் ஒரு குடிகாரன். ஆனால் கோப்பையில் தேனீரை மட்டும்தான் நிரப்புவான்)


எதிரே அமைதியான வளைவில் நான்கு காலடிச் சத்தங்கள். இரண்டு பேர் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள் - மூச்சிரைக்க. ஒருவன் ஓடுகிறான். கண்ணில் பயம். ஒருவன் துரத்துகிறான். கண்ணில் குரோதம்.

டொக்.

"சார் டீ"

கையில் எடுத்து ஒரு முறை ஊதிவிட்டுக் கொஞ்சம் உறிஞ்சுகிறான். சூடு அவனின் தொண்டை வழியாக உணவுக்குழாய் முழுவதும் எழுப்பி விடுகிறது. பிறகு மெல்ல மீதி தேனீரை ஆற்றிக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் அவனருகில் - வெகு அருகில். சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளி ஒருவனின் கத்தியில் பளபளத்தது. அத்தனை பகையும் தீரும் ஒரே வெட்டு. - கழுத்தில். முடிந்து போனது. மூன்று இரத்தத் துளிகள் தெறித்துப் பறந்து அவனின் தேனீரில் விழுந்து மெல்லக் கரைகின்றன.

அவன் அது கரைவதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு கோப்பையை ஒரு முறை நன்றாக ஆட்டி மீதமிருக்கும் தேனீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மூன்று ரூபாய் எண்ணி வைக்கிறான்.

(அவன் கொஞ்சம் வித்தியாசமானவன்)





இன்னும் பெரிய வித்தியாசம் - இந்தக் கொலையை மற்ற எவரும் பார்த்ததாகக் கூடத் தெரியவில்லை. எதுவுமே நடக்காதது போலப் பையைத் தூக்கிகொண்டு கொஞ்சம் வேகமாக நடந்து ஒரு பேருந்தினுள்ளே ஜன்னல் சீட்டைப் பிடித்துச் சாய்ந்து அமர்கிறான். அந்தக் கொலைகாரன் அவன் பின்னாலேயே நடந்து அதே பேருந்தினுள்ளே அதே ஜன்னல் சீட்டுக்கு அடுத்த சீட்டில் அமர்கிறான். தேனீர்க் கடை வாசலில் பிணம்!

(அவன் சாதாரண பிரயாணி அல்ல ! ஒரு கொலையில் சம்பந்தப்பட்டவன் !)


ஜன்னலோரம் அவன். அடுத்த சீட்டில் இவன்!

'கொன்னுட்டான்யா ! கிளாஸிக் மர்டர். கங்கிராஜுலேஷன்ஸ் . கலக்கிட்டே போ'

இவன் திரும்பி அவனைப் பார்க்கிறான்.

'சரி கொன்னுட்ட . அடுத்து என்ன? ஏன் கொன்னேன்னு கேப்பாங்களே. சொல்லு எதுக்குக் குத்தினே?'

(அவன் ஒரு பைத்தியக்காரன் ! மூளைக்காரன் பேசும் பேச்சா இது)


'நான் ஏன் சொல்லணும் .ஒழுங்கா ஊரு போய்ச் சேரப் பாருடா பொழப்பத்த பயலே'

'இத பார் ..... நீ கொன்னுருக்க . நான் பாத்துருக்கேன். எங்கிட்ட முறைக்காதே. நீ இப்ப எங்கிட்ட மாட்டிகிட்டிருக்கே. சொல்லு. வாயைத் தொற. யாரு அவன் . எதுக்குக் குத்தினே. கமான்'

கொலைகாரனின் உணர்ச்சிகள் மெதுவாக மாறுவதை அவனின் முகம் காட்டுகிறது. பலவித மாற்றங்கள். பலவித சிந்தனைகள். இறுதியாக ,
'அவன் என் நண்பன் !'

'ஓஹோ'

'துரோகி'

'குழப்புறியே தம்பி. நண்பனா .. துரோகியா'

(அவன் ஒரு மனிதப் பிறவியே அல்ல ! ஒரு கொலைகாரன் பாடு பாவம் !)


'நண்பர்கள் நமக்குத் துரோகம் பண்ணும்போது தான் சார் வலிக்குது'

'இது நல்லாயிருக்கே..... ரைட்டு மேல போ'

'சின்ன வயசுலருந்தே நாங்க நண்பர்கள். ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சோம். ஒரே காலேஜ். எப்படி இருந்தோம் தெரியுமா?'

'டேய் நிறுத்து. இந்த வேகத்துக்கு ஃப்ளாஷ்பேக் சரியா வராது. ஏன் கொன்னே? அதை மட்டும் சொல்லு'

(அவன் ஒரு வேகப் பிரியன். இழுவைகளுக்கு அவனிடம் இடமில்லை)


இந்நேரம் பேருந்து இரவைக் கிழித்துக் கொண்டு நெடுஞ்சாலையில் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. தேனீர்க்கடை வாசலில் காக்கைகளின் கண்ணுக்குக் கூடத் தெரியாமல் அந்தப் பிணம். சத்தியமாக இது வரை ஒருவரும் அதைப் பார்க்கவில்லை. அவனைத் தவிர. குளிர் அதிகமாவதால் ஜன்னலைச் சாத்திவிட்டு மேலே சொல்லுமாறு சைகை காட்டினான். இந்த இரவில் பல அசாதாரணங்கள் அவதரித்துக் கொண்டிருக்கின்றன.

'அவன் ஒரு ..... ஒரு .... ஒரு மாதிரி ஆளு சார். ஒரு பயம். ஒரு கோவம். எப்பவும் தன்னை எல்லாரும் ஏமாத்திருவாங்கன்னே எண்ணம். ஏதோ பைத்தியம் மாதிரி பண்ணுவான் சார் சில நேரம். ஆனா.... எங்க நட்பு மட்டும் பிரச்சினையில்லாம போயிட்டிருந்தது'

'நட்புக்குக் கண்ணில்லை'

'இங்கதான் அவ எங்க வாழ்க்கைல வந்தா'

நெனைச்சேன். தெரியும். எத்தனை கதை. யாரு நாங்க'

(அவன் ஒரு குழந்தை. கதை கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம் அவனுக்கு)


'முதல்ல நண்பர்களாத்தான் இருந்தோம். கௌரவமான நட்பு. ஆனா நாட்கள் போகப் போக எங்களுக்குள்ள இருந்தது நட்பு மட்டும் இல்லைன்னு உணர்ந்துகிட்டோம்'

'காதலும் குருடுதான். மேலே சொல்லு மேலே சொல்லு'

;போகப் போக நானும் அவளும் கொஞ்சம் நெருக்கமாப் பழக ஆரம்பிச்சோம். ஆனா நாங்க எதிர்பார்க்காத ஒண்ணும் நடந்திச்சு. அவனும்...........'

'அது. அப்படிப் போடு. நெனைச்சேண்டா ! அங்கதாண்டா சேர் போட்டு உக்காந்துருக்கோம் நாங்க'

(அவன் சொல்லப்போனால் ஒரு குதிரை வீரன். அடங்காத கற்பனைக் குதிரைகளையும் அற்புதமாக ஓட்டுபவன். கற்பனை வளமோ வளம்)


'ஆனா எங்க காதல் அவனுக்குத் தெரியலை. அப்படித்தான் நெனைச்சோம்'

'அடப்பாவிங்களா.. காதலர்களும் குருட்டுக் கபோதிங்களாதான் அலைவோம்னு அடம்பிடிக்குறீங்களேடா'

'இது தாங்க முடியாத அவன்... அவன்.... அவன்', கொலைகாரன் அழுகையை அடக்க முடியாமல் போராடித் தோற்கிறான். 'கொன்.....னுட்....டான்..... சார். அவளை.. அவளைக் கொலை பண்ண அவனை....', அழுகையினூடாகவே கோபமும் வெறியும் பூதாகரமாகப் பொங்கி வழிய, 'தீர்த்துட்டேன் சார். அவ எனக்குத்தான். எனக்குத்தான். இவன் உயிரோட இருக்கக் கூடாது. அதான் முடிச்சுட்டேன்'

'முடிச்சுட்டியா... அதே பழைய கதை. ஒரு ட்விஸ்ட்டே இல்லையே. கொஞ்சம் பொறு. எந்த விஷயமா இருந்தாலும் ரெண்டு பக்கமும் விசாரிக்கணும்'

(அவன் ஒரு நியாயவாதி !)

'மிஸ்டர் பொணம், உங்க மேல ஒரு கொலைக் குற்றச்சாட்டு வந்திருக்கு. நீங்க ..... ஒத்துக்கிறீங்களா?'

தேனீர்க்கடைப் பிணம் ஏதோ விட்டலாச்சார்யா வேலை செய்து கொலைகாரனைக் கீழே தள்ளிவிட்டு அந்த இருக்கையில் அமர்ந்தது. செத்துப்போன வருத்தம் அதன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அது அமைதியாகப் பேச ஆரம்பித்தது. கொலைகாரனைப் பார்த்து,

'மாத்திட்டியேடா பாவி. உன் கதை உண்மையாயிருந்தா நீயில்லடா செத்துருக்கணும்'

சொல்லிவிட்டு மீண்டும் தேனீர்க்கடை வாசலுக்கே போய்ப் படுத்துக் கொண்டது. டேய்! என்னடா நடக்குது இங்கே!

'வெரி குட். இந்தா ட்விஸ்ட். ஓகே. நல்லாருக்கு. கொஞ்சம் டச்சப் பண்ணி ஏத்திரலாம்'

(அவன் ஒரு மூணுகண்ணன். சாதாரணர்கள் காண இயலாததைக் காட்டும் மூன்றாம் கண் படைத்தவன்)


(அவன் ஒரு கதாசிரியன். குமுதத்தில் வாராவாரம் திகில் கதை எழுதுபவன்)

- மதி

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..