அறை எண் 74-இல் அமைதி




பண்ணைக் கோழிகளைப் பார்த்திருக்கிறேன் .
கொறிக்கவும் குடிக்கவும் கழியவும் மட்டுமே
அனுமதிக்கப்பட்ட புழக்கம் .
என் வாழ்விடம்
இந்த விடுதியறை .
இங்கே உணவும் நீரும்
உட்கார்ந்து கழிவதும் கூட
தேவைப்பட்டால் தேடிப்போகும் தூரம்
சில சமயம் வரிசை விதிகளுக்குட்பட்டு .

இதுவல்ல என் குடைச்சல் .
சத்தம் .
கோழி கொக்கரிக்கும்
மனிதன் பேசுகிறான் பாடுகிறான்
புலம்புகிறான் ஏசுகிறான்
அத்தனையும் கேட்டுக்கொண்டும் இருக்கிறான் .




எனக்குத் தலைவலி
தூக்கம் வருகிறது
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்
நீ கேட்கும் பாடல் எனக்குப் பிடிக்கவில்லை
நீ எவன் பிறப்பையோ பழித்துக் கொண்டிருக்கிறாய்
..................................
....................................
காரணம் எதுவாயிருக்கட்டும்
நிவாரணத்துக்கு வாய்ப்பே இல்லை.

பூட்டின கதவுகளும்
மெலிந்த நடுச்சுவர்களும்
பொய்யான தனிமைகளும்
சத்தத்தின் சக்தியிடம்
தோற்றுப் போய் பல்லிளித்துவிடும் .

பழகுவது கடினம்
பகைத்துக் கொள்ளல் அசாத்தியம்
மறுநாள் காலை பல் விளக்கப் பசை கேட்டால்
பக்கத்து அறைதான் பிதுக்கித் தரும் .

அமைதி என்ற சொல்லிற்கு
ஆயிரம் அர்த்தம் உண்டு
அதன் அப்பாவித்தனமான
அடிப்படை அர்த்தம்தான்
இங்கே அதிகம் தேவைப்படுகிறது .

பரம்பொருள்
அமைதியின் வடிவம் .

அறை எண் 74-இல்
அமைதி
பரம்பொருள் வடிவம் .

- மதி

(சில மாதங்களாகவே GCT # 6 சிறுகதை எழுத முயன்று முயன்று தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறேன் .. இடையில் சில பரீட்சைகள் எல்லாம் வருவதாலும் நானும் கொஞ்சம் கிழிக்க வேண்டி உள்ளதாலும் இன்னும் சிலகாலமாவது அந்தக் கதை தள்ளிப் போகும் என்றே நினைக்கிறேன்..  ஆனாலும் வலையில் கல்லூரி அறையில் ஒட்டடை படர்ந்து விடாமல் இருக்க வேண்டி சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரி அறையைக் கொண்டே எழுதிய கவிதையை இப்போது வெளியிடுகிறேன் , )

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..