ஒரு சுடுசொட்டுச் சீனிப்பாகின் வரலாறு
(ரொம்ப சுருக்கமான வரலாறு; கொஞ்சம் நீளமான கவிதை)
முதல் முறை உன்னைப் பார்த்தேன்
நண்பா
இவள் நம்மூர்க்காரி
நல்ல அழகி
குறித்துக்கொள்
என்றது இளமை.
என் மனதில் நீ
ஓரமாய் ஒளிந்து கொண்டாய் !
மறுமுறை வகுப்பில்
ஜன்னலோரம் பிரகாசித்தாய்
நான் திரும்பிய கணத்தில்
சூரியனை வாங்கிப் பிரதிபலித்தாய்
நிஜமாகவே இது
நிலாமுகம் தான்
என்றது விழி.
என் மனதில் நீ
ஓவியமாய் உன்முகம் வரைந்தாய் !
அழகான ஓர் பார்வையில்
கண்களுக்குள் ஊடுருவி
கற்பனையை ஆக்கிரமித்து
என் வாலிபத்தின் இறுமாப்பை
அசைத்துப் பார்ப்பவள் எவளோ
என்று காத்திருந்த என் பேனா
உன்னைப் பார்த்துதான்
முதலில்
ஒரு பெண்ணை எழுதியது.
அடடா இவளைக் கவனி
என்றது கவிதை.
என் மனதில் நீ
ஒய்யாரமாய் நடை பழகினாய் !
எதிர்பாராத தருணத்தில்
தென்படும் உன் சிரிப்பும்
எப்போதோ ஒரு நிமிஷம்
ததும்பிடும் உன் நினைப்பும்
அப்போதிருந்து ஆரம்பிக்கும்
ஒரு புரியாத தவிப்பும்
இன்னமும் இவள்
இருக்கத்தான் செய்கிறாள்
என்றன இரவுகள்,
என் மனதில் நீ
இரகசியமாய் உனைநிரப்பினாய் !
பிறகு வந்த நாட்களில்
பின்னிரவுகள் விழித்திருந்தேன்
பிறைநிலவோடு பேசிப்பார்த்தேன்
எண்ணங்களை அசைபோட்டேன்
என்னிடமே கேள்விகள் கேட்டேன்
காதல்தானா என்று கிள்ளிப்பார்த்தேன்
ஆமாம்
என்றது வலி.
என் மனதில் நீ
கண்ணாமூச்சிகள் ஆடினாய் !
உள்ளுக்குள் காதல் சுமந்து
ஒற்றை ரோஜா கையில் சுமந்து
சொல்லாமல் காத்திருந்து
பதிலையெண்ணிப் பயந்திருந்து
கனவுகளின் கனம் தாங்காமல்
ஏங்கிச் சாகாதே
கண் பார்த்துச் சொல்
என்றது காதல்.
என் மனதில் நீ
சந்தோஷமாய்ச் சம்மதித்தாய் !
தெளிவாக
என் காதலைச் சொன்னேன்
தெள்ளத் தெளிவாக
உன் மறுப்பைச் சொன்னாய்
இருக்கட்டும் காதலி
அப்போதெல்லாம்
நிம்மதியாய் உறங்கினேன்
நம்பிக்கையாய்க் காத்திருந்தேன்
இரசித்து இரசித்துக் காதலித்தேன்
கவிஞனும்
தனிமையும்
காதலும்
ஆபத்தான கூட்டணி
என்றது மொட்டை மாடி.
என் மனதில் நீ
ஆமோதித்துத் தலையசைத்தாய் !
(சில வருடக் காத்திருப்பிற்குப் பிறகு சமீபத்தில் சேர்த்த மீதி வரலாறு)
சுடச்சுட ஆக்கிவைத்த
காதல் அமுதம்
இதோ ஆறிடும் அதோ ஆறிடும்
மனம் மாறிடும் என்று
பொறுத்தே இருந்தேன்
நிஜமும் சுட்டது
மனமும் சுட்டது
கணம் யுகமாய்
துளி கடலாய்
கொதிநிலையில் கண்முன்னே
ஆவியாய்ப் போய்க்கொண்டிருந்தது
ஆறா வமுது !
புரிந்து கொள்
என்றது கொதிப்பு.
என் மனதில் நீ
பாடமெடுத்துப் பரீட்சைகளும் வைத்தாய் !
கடைசிச் சொட்டுக் காதலும்
கொதித்தே மறையுமுன்
தெரிந்தே பருகிவிட்டேன்.
பொத்துக் கொண்டேன்.
ஒத்துக் கொண்டேன்.
சுடுபுண்ணே தந்தாலும்
பெண்ணே உன்
அதிசுவை அதில் நினைவிருக்கட்டும்.
ஒரு குழந்தையைப் போல
'காலியாப் போச்சீ'
என்றது அமுதக் கோப்பை.
ஒரு
சுடுசொட்டுச் சீனிப்பாகாய்
என் மனதில் நீ
உனைப் பதிந்துவிட்டுச்
சென்றுவிட்டாய் !
இஃதே என் காதல் கதை
என்றெழுதிப் புள்ளி வைத்தேன்.
பாகம் ஒன்றென்றும் சேர்த்தெழுது
ரெண்டாம் பாகமெழுதிடப்
பின்னால் ஒரு காரணம் வரலாம்
புதுசாய் ஒரு பாத்திரம் வரலாம்
என்கிறது காலம்.
வரட்டுமே பார்க்கலாம்
என்கிறது என் மனம்.
வருகிறேன் பார்த்துக்கொண்டேயிரு
என்கிறாள்
இக்கணம்
எவளோ ஒருத்தி !
- மதி
சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் தேதியில் ஆரம்பித்த ஒரு பயணத்தில் நான் கண்ட சுகங்கள், சுவாரசியங்கள், பாடங்கள், காயங்கள், ஆச்சரியங்கள் - இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த நினைவுகளை மீண்டும் அசைபோட்டு இந்த நாளைக் கொண்டாட எண்ணினேன். இதில் நான் கண்ட அனைத்துக் காட்சிகளும் இனி என்னின் எல்லாவற்றிலும் எதிரொலிக்கும். ஒரு கவிஞனுக்குக் காதல் காட்டினதற்காய் இந்த நாள் வரலாற்றில் இடம் பிடிக்கட்டும். உடன் பயணித்தோர் அனைவர்க்கும் நன்றி. கவிதாட்சரம் சந்தோஷமாக முடிவடைகிறது.
பிள்ளையார்சுழியில் இனி வெவ்வேறு சுவைகளுடன் வெவ்வேறு பயணக்கதைகளோடு சந்திப்போம்.
oru azhaghana payanam...enimayana yemattram..:):(
பதிலளிநீக்குபயணம் சுகமாய் இருக்கையில் தூரம் ஒரு பொருட்டல்ல.
பதிலளிநீக்குகவிதை இதமாய் இருக்கையில் நீளம் ஒரு சுகமே
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே ... நல்ல படைப்பு
பதிலளிநீக்குKathai churukkathai kavithaiyin vaayilaaga uraithadhu arumai!uvamaiyum miga azhagaaga porunthi irukirathu!vaazhthukkal anbare!
பதிலளிநீக்கு@all ... thanks a lot for your comments and continued interest in reading kavidhaatcharam. we ll meet with more interesting stuff in the future !
பதிலளிநீக்கு