அகத்தினைத் தந்தவன் அகத்திணை முயல்கிறேன்


ஒரு மார்கழி முன்பனியில்
என் காதலி மனம்புகுந்தேன் !
தன் மாளிகை மாடத்திலேயோர்
சாம்பல் முயலொடு
மூக்குரசிக் களித்திருந்தாள் !

"ஏது?
இளவரசி தன் தட்டை மூக்கை
மேலும் மழுங்கடிக்க எண்ணமோ?"

எதிர்பாராது என் குரல் தொடவும்
சட்டெனத் திரும்பியவள்
சுந்தர முகத்தில்
கோபமும் நாணமும் போட்டியிட ,
ஈரடிகள் பின்வைத்து
"எப்படி நுழைந்தீர்"
என்று வினவினள்.

"மதில் உயரம் அதிகம்தான்
இருப்பினும் மனமிருந்தால்
ஏறிக் கடந்திடலாம்
வாயிற்பூட்டிற்குத்தான்
வழியறியாது நின்றிருந்தேன்
வரமாய் ஓர் சிறுகதவு
உள்ளிருந்து திறந்து கொண்டது.
இளவரசி என்னை
எதிர்நோக்கித்தான் இருந்தீரோ?"

"எண்ணித்தான் கொள்ளுங்கள் !
தனித்திருக்கும் மங்கை உள்ளத்துள்
அத்துமீறி நுழைவது உங்களூரில்
அதர்மம் ஆகாதோ ?"

"ஏதேது?
உந்தன் ஒரு பார்வைக்கும்
புன்சிரிப்புக்குமே
என் அகம் தாழ்திறந்து வரவேற்று
அறையெங்கும் விளக்கேற்றி
இன்னிசையும் தவழவிட்டதே
இங்கென்ன
என் தைரியசாலிக் காதலி
பூட்டிக்கொண்டு பதுங்குகிறாள் ?
அகழியும் முதலைகளும்தான் குறைச்சல்"

"அழகாய்த்தான் பேசுகிறீர் !
ஆடவர் மனங்களுக்குக்
கதவிருந்தே பயனில்லை
தாழ் வேறு தேவையோ ?
சீக்கிரம் வெளியே போய்விடுங்கள் "

"என்ன கோபம் ?
மதிலேறி வந்த மரியாதைக்கேனும்
சில நாழிகை பொறுக்கக்கூடாதா
சூரியகாந்திப் பெண்ணே "

காதல் மறைக்கத்
தவித்திடும் கண்களை அடக்கிவைத்து
பொய்யாய்க் கண்டித்தாள்.

"சரி !
ஒரு நாள் அவகாசம் தருகிறேன்
தாங்களாகவே
அதற்குள் வெளியேறாவிடில்......"

"ஆஹா !
பத்தடி தூரம் திரும்பிப் போவதற்கு
ஒரு நாள் கெடுவா ?
இது விரட்டும் தொனியிலேயே இல்லையே ,
கண்ணே !
இதுதான் உங்களூர் விருந்தோம்பல் பாணியா ?"

"வாதம் வேண்டாம் !
நீங்கள் சொன்ன அந்த
மதிலேறிய மரியாதைக்குத்தான்
இந்த ஒரு நாள் .
இதனால் உங்களை விரும்புகிறேன்
என்றெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டாம் "

"சரிதான் !
கதவு திறந்ததே
காதலின் குறிதான் என்றிருந்தேன்
கற்பனையாயன்றோ போகின்றது ?
காதலிக்க இல்லையேல் வெறும்
காத்திருப்பிற்கோ ஒரு நாள் ,
நான் புறப்படுகிறேன் "

"நில்லுங்கள் !
அவகாசம் முடியுமுன்னே
அவசரம் காட்டுதல்
அவமரியாதை ஆகாதா :

"என் காதலுக்கே
இங்கே மரியாதை இல்லையே "

"ஓஹோ !
நீங்கள் மட்டும் மரியாதை அறிவீரோ ?
காதலியைச் சந்திக்க ஆசையாய் வருகையில்
இங்கீதம் அறியாமல்
நண்பரையுமா அழைத்து வருவீர் "

'நண்பனா ?
!
அந்தக் கிராதகன்
இங்கெப்படி வந்தான் !'

"மச்சான்
எட்டரையாயிருச்சுடா
கொஞ்ச நேரத்துல
தண்ணி நின்னுரும்
எந்திச்சுக் கெளம்பு போ"

ஓ !
ஆருயிர் நட்பன்றோ
அடியேன் பெற்றுள்ளேன் !

சொப்பனம் !
மெல்லக் குறுநகை உதிர்த்தேன் !

என் காதல்
சரித்திரத்தில் இடம் பெறுகின்றது !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

  1. என் தைரியசாலிக் காதலி
    பூட்டிக்கொண்டு பதுங்குகிறாள் ?
    அகழியும் முதலைகளும்தான் குறைச்சல்

    arumayana varigal,
    vaazhthukal anna!!!!!

    பதிலளிநீக்கு
  2. என் காதலியின் இதழ்களுக்கிடையில் தாங்கிய ரோஜா இதழை கையில் பெற்றது போல் உணர்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது..

    பதிலளிநீக்கு
  3. @சிவா .. நன்றி
    @வில் ... கருத்தையே கவிதையாகச் சொல்லிட்டீங்க . செம

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜனவரி 18, 2011

    Padaipaalarin manathil
    aazhamaai kaal
    oondriyaval
    oru tholai iyakkiyai iyakkuvippathu pol
    ubayokippathu avar
    manathaiyaaa?
    sindhanaikalaiyaa?
    mathiyaiyaa?!?

    purathinai pondre ithuvum valuvutrathaaka!

    பதிலளிநீக்கு
  5. @ anonymous.. thanks again !!! Try downloading software 'Azhagi'. It is a free Tamil typing software.. it will convert what you type in SMS type tamil to actual Tamil letters.. May be helpful to you

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாஜனவரி 18, 2011

    ya i ll try.tanz 4 ur idea!

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதையை படித்த நிறைவு.
    தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..