ஏன் நான் உனக்குப் பிறகு பிறந்தேன்


நிலவினைக் கலந்து பேசி
முக வடிவம் முழுமை செய்து
கதிரொளியைப் பிரதிபலிக்கும்
வித்தைகள் அதற்குப் புகட்டினான் .

கண்ணழகை வடிவமைக்க
தூக்கம் கெட்டு யோசித்து
ஆழமும் ஈர்ப்பும் சரிவரப் பொருந்த
சிலபல மின்னல் கீற்றுகளைத்
திரட்டியோர் உருண்டை செய்து
அதற்குக் குறும்பும் பேச்சும்
கற்றுக்கொடுத்தான்.

குரலின் சிறப்பிற்காய்த்
தேடித்தேடித் தேர்ந்தெடுத்து
ஒவ்வொரு மலரிலும்
ஒரு துளி தேனெடுத்து
குழைத்துக் குழைத்துக்
குரல் வார்த்தான்.

அறிவும் திமிரும்
அளந்து கலந்து
மழலையும் ரசனையும்
சேர்த்துத் தெளித்து
அகத்தழகும் பூர்த்தி செய்தான்.

புன்னகையில் மட்டும்தான்
ஏதோ இடிக்குதென்று
இராப்பகலாய் அலைக்கழிந்து
என்னவென்று கண்டுகொண்டான்
மூக்கில் கொஞ்சம்
கூர்மை குறைத்தான்.

பிரம்மனே இப்படி
பிரம்மப்பிரயத்தனப்பட்டுப் படைத்த
பெண்ணடி நீ !

எல்லாம் ஆனதும்
வேலை முடிந்ததென்று
திருப்தியாய்த் தலைசாய்க்கையில்தான்
இப்பேற்பட்ட பெண்ணொருத்தி
பேரழகி
இவளுக்குத் துணை ஆக
ஈடான இணையாக
ஓர் ஆணும் உலகில் இல்லையென
உணர்ந்தான் பிரம்மன் .

ஆதலால்
மேலும் மூன்று மாதங்கள்
மெனக்கெட்டு உழைத்து
என்னைப் படைத்தான் !- மதி

(இந்தக் கவிதை ஏற்கெனவே நான் வலையில் வெளியிட்டதுதான் என்றாலும் இந்தக் கவிதாட்சரத்தில் இந்தக் கவிதையைச் சேர்க்காமல் விட மனம் வரவில்லை. ஆதலால் என் 50வது வலைப்பதிவு எனக்குப் பிடித்த ஒரு மறுபதிவாகிறது! கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

 1. பெயரில்லாஜனவரி 07, 2011

  கண்ணழகை வடிவமைக்க
  தூக்கம் கெட்டு யோசித்து
  ஆழமும் ஈர்ப்பும் சரிவரப் பொருந்த
  சிலபல மின்னல் கீற்றுகளைத்
  திரட்டியோர் உருண்டை செய்து
  அதற்குக் குறும்பும் பேச்சும்
  கற்றுக்கொடுத்தான்.

  Nalla vaarthai prayogam.

  இவளுக்குத் துணை ஆக
  ஈடான இணையாக
  ஓர் ஆணும் உலகில் இல்லையென
  உணர்ந்தான் பிரம்மன் .
  ஆதலால்
  மேலும் மூன்று மாதங்கள்
  மெனக்கெட்டு உழைத்து
  என்னைப் படைத்தான் !

  Nalla sitharippu.

  பதிலளிநீக்கு
 2. @ Anonymous நீங்க யாரு எவருன்னு தெரியல .. ஆனா என் பதிவுகளை ரசிச்சுப் படிச்சுக் கருத்து சொல்றீங்க. ஏனோ பேரைச் சொல்ல மாட்டேங்குறீங்க... கருத்துகளுக்கு நன்றி. சந்தோஷம். மகிழ்ச்சி :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..