லெமூரியாக் கண்டத்தில் வசிக்கும் என் காதலிக்கு

எனக்கொரு காதலி இருக்கின்றாள்.
அவள்
லெமூரியாக் கண்டத்தில் வசிக்கின்றாள்.

என் காதல் சங்கதி சொன்னதும்
கொஞ்சம் யோசித்துவிட்டு
இப்போதைக்கு இங்கே வருவதற்கு
லெமூரியாவிலிருந்து வண்டியேதுமில்லை
தன்னால் வர இயலாது என்றாள்
பாவம்
அந்த வண்டி
எப்போது வருமென்பதும்
அவள் அறியவில்லை.

சரி
நம் காதலி
நாமே கையோடு போய்
காதலோடு அழைத்து வந்திடலாம்
என்று முடிவு செய்தேன்.

வேலை வெட்டிகள்
விட்டுப்போகாமல்
என் உலகைச் சுருட்டி
ஒரு கூடைப்பந்தாக்கி
விளையாடியபடி
நடக்கத் தொடங்கினேன்.

தூரம் அதிகம்தான்
என் காதல்
காலதூரக் கோட்பாடுகள் களைந்து
கூடவே வந்தது.

சோம்பிய பொழுதுகளில்
எங்கேனும் ஒரு
நிலாநிழல் அமர்ந்து
அவளை செல்லில் அழைப்பேன்.
நான் லெமூரியாவை விசாரிக்க
அவள்
என் கூடைப்பந்தை விசாரித்துவிட்டு
இன்னும் வண்டி வரவில்லை என்பாள்.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு
குழலும் யாழும் குப்பை என்று
கவிதைகள் கிறுக்கிவிட்டு
என் சொப்பனக்கூடுகளை
அவள் சொற்களால் நிரப்பி
மீண்டும் நடை தொடர்வேன்.

அவளும்
தன் புன்சிரிப்புகளையும்
புருவ நெறிப்புகளையும்
என்பால் அனுப்பி
எங்கிருக்கிறேன் என்று
பார்த்துவரச் சொல்வாள்.
நான் அவற்றிடம்
பயணம் பூரணசுகம்
போய் உம் தலைவியிடம்
அடுத்த தடவை
ஒரு கடைக்கண் பார்வையை
அனுப்பச் சொல்லுங்கள்
என்று சொல்லி விடுவேன்.
சிலசமயம்
அவற்றைத் திருப்பி அனுப்ப
மனசே வராமல்
என் இமைகளுக்குள்ளேயே
களவாண்டு பூட்டிவிடுவேன்.

அவளைப் பார்த்ததும் தருவதற்காய்
போகும் வழியெல்லாம்
மழை ஈரங்கள்
மலர் வாசனைகள்
நிலாக் குளிர்கள்
சூரியக் கதிர்கள்
என்று சேகரித்துச் செல்கிறேன்
கூடவே
கனவுகளை அடைகாக்கும்
என் கவிதைகளும்.

அவளைச் சந்தித்து
பரஸ்பரம்
காதல் பரிமாறும்வரை
அவள் கொஞ்சம் காத்திருக்கட்டும்.

அதன்பின்
லெமூரியாவையும் சுருட்டி
மற்றொரு பந்தாக்கி
விளையாடிக்கொண்டே
எங்களுக்கான பிரபஞ்சத்தில்
கைகோத்துச் செல்வோம்.

இந்தக் காதல் இருக்கிறதே....- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

கருத்துகள்

 1. அழகான கவி வரிகள் ....

  நான் ரொம்ப ரசித்து ரசித்து படித்தேன் ...

  மென்மையான உணர்வு...

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாஜனவரி 04, 2011

  Romba anubavapoorvamaavum,unarvupoorvamaavum irku.

  பதிலளிநீக்கு
 3. போய் உம் தலைவியிடம்
  அடுத்த தடவை
  ஒரு கடைக்கண் பார்வையை
  அனுப்பச் சொல்லுங்கள்
  //

  நல்ல வளமான கற்பனை..
  படிக்கும் போதே சிலிர்க்கிறது ..

  பதிலளிநீக்கு
 4. நன்றி சிவா ! உங்கள் காதல் கவிதைகளின் ரசிகன் நான் ... உங்களிடமிருந்து கருத்து வருவது நிறைவாக உள்ளது ..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..