ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்....

மஹாபாரதத்தில் தான் முதல் முதலில் அட்சய பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சின்ன வயதில் ஒரு ஞாயிறு காலையில் தூர்தர்ஷனில் பார்த்துவிட்டு அப்பாவிடம் அந்தப் பாத்திரத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒற்றைப் பருக்கையையும் பற்றி விசாரித்த நினைவு இன்னும் இருக்கிறது. அப்போது ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால் மற்ற நாட்களில் நான் பள்ளிக்குப் போக வேண்டியிருக்கும். யோசித்துப் பார்த்தால், மற்ற நாட்களில் செய்வதற்கு ஏதும் இருப்பவனுக்குத் தானே ஞாயிற்றுக்கிழமை சுகம் என்பதே..... அழகாய்த் தலை வாரி, ஷூ மாட்டிவிட்டு, ரெண்டு தோசைகளை நெய் விட்டுச் சுட்டுக் கொடுத்துக் காலையின் அவசரத்தில் பின்னாலேயே ஓடி வந்து ஊட்டி விட எனக்கு ஆள் இருந்தது. எனக்கு அட்சய பாத்திரம் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் மட்டுமே அறிமுகத்தில் இருக்கலாம்...... இந்த அட்சய பாத்திரம் பல குழந்தைகளுக்குத் தினமும் உணவையும், உலகத்தையும், ஒரு உன்னத உணர்வையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது!

தூர்தர்ஷன் எனக்குக் கர்ணனையும் அறிமுகப்படுத்தியது. எவர் எது கேட்டாலும் தயங்காது தானம் செய்யும் கர்ணன்! அப்பா அவனைப் பற்றியும் அற்புதமாகச் சொன்னார். ஆனால் புராணங்களின் மிகைப்படுத்துதல்களில் திளைத்துத் திளைத்தே தலைமுறைகளைக் கடந்து வந்ததாலேயோ என்னவோ ஏதோ ஒரு இடைப்பட்ட காலத்தில் கர்ணன் போல தானம் செய்பவன் முட்டாளாகவோ முழுக் கடவுளாகவோ தான் இருக்கமுடியும் என்றாகிவிட்டது. சராசரி மனிதன் இரண்டு நிலைகளிலும் இருக்க விரும்பாததால், மேலும் மேலும் மிகையிலேயே வாழ்ந்து பழகிவிட்டான். கர்ணன் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கை கதகதப்பாக இருந்திருக்க வேண்டும். நிஜத்தில் கர்ணத்தனம் செய்தவனும் கூட கர்ணனிடமிருந்து இடக்கை தருவது வலக்கைக்குத் தெரியாது வைத்திருக்கும் பாடம் படித்திருக்க வேண்டும். அதிகம் கர்ணன்மார் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஊரில் கள்ளத்தனம் செய்பவனெல்லாம் இன்று கவலை இல்லாமல் சுற்றலாம். அவனை நாள் பூராவும் நம் வரவேற்பரையில் பார்த்துக்கொண்டிருக்க முடியும். கர்ணத்தனம் செய்பவன் இன்றும் கொஞ்சம் கூச்சப்பட்டுத்தான் வெளியே சொல்கிறான். இல்லை ஞாயிறு காலையில் மட்டும் தூர்தர்ஷனில்!

இந்தக் கர்ணத்தனத்தை நான் கத்திக் கத்தி வெளியே சொல்ல வாய்ப்பெடுத்துக்கொள்கிறேன்! சின்ன வயது வகுப்புகளில் வாத்தியார் கேள்விக்குப் பதில் தெரிந்தும் அமைதியாக இருக்கும் அறிவாளி நண்பனின் கையிப் பிடித்துத் தூக்கி விடுவது போல!

பசித்த வயிற்றில் பாடம் ஏறாது என்பார்கள். ஒரு வகையில் எழுதப் படிக்கக் கற்றுத்தருவதைத் தாண்டி நம் கல்வித்திட்டம் மேலாக ஒன்றும் பெரிதாகக் கிழிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பு எனக்கு இருந்தாலும் எழுதப்படிக்கக் கூட ஏலாத பலரிருக்க, அந்தக் கூச்சலை நான் இன்று கூவவில்லை. எங்கெங்கோ ஊர்களில் ஏதேதோ பெயர்களில் ஒரே காரணத்துக்காகப் பள்ளி தீண்டாத பல குழந்தைகளை ஒரு நற்கரம் தீண்டினால், அந்தக் குழந்தைகளுக்குப் பசியாற்றியபின் பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு நற்கரம் விழைந்தால், அந்தக் கூட்டத்திலிருந்து வரும் விரல்கள் பேனா கொடுத்தால் காகிதம் கேட்கும்படிச் செய்ய ஒரு நற்கரம் முயன்றால்...... அந்தக் கரத்தைத் தூக்கிப் பிடித்து உலகிற்குக் காட்ட இந்த வாய்ப்பை நான் சந்தோஷமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அட்சய பாத்திரம் என்ற இந்த அமைப்பு - நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இவர்கள் அவ்வளவாகக் கூச்சப்பட்டுக் கர்ணத்தனம் செய்யவில்லை - நாடு முழுக்க லட்சக்கணக்கான வயிறுகளுக்குப் பசியாற்றி , வாழ்க்கைகளை அழகாக்க முயன்று வருகிறது. இந்தத் தொடர் வலைப்பதிவு முயற்சியும் தான் செய்யும் கர்ணத்தனத்தை உலகறியச் செய்யும் ஒரு முயற்சிதான். நாம் கைகொடுப்போம். கை தூக்கிப் பிடிப்போம்.

இவர்களின் பணியறிய அவர்களின் வலைதளத்தைப் பார்க்கலாம். இவர்களின் கனவறிய இந்தக் காட்சிச்சித்திரத்தைப் பார்க்கலாம். நீங்களும் ஒரு வலைப் பதிவு வைத்திருந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம். நாம் எழுதும் ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் இன்னும் ஒரு 50 குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். களத்தில் இறங்கிக் கரண்டி பிடிக்க முடியாவிட்டாலும் கூட நாமும் கொஞ்சம் பசியாற்றலாம். இவர்களுக்கு நன்கொடைகள் வழங்க இங்கே சொடுக்குங்கள்.

பாண்டவரின் மாயப்பாத்திரமோ .... அந்தக் கர்ணனின் கதாபாத்திரமோ .... இந்த அட்சய பாத்திரம் பசியாற்றி, படிப்பூட்டி, தலை வாரி, ஷூ மாட்டி விடுவேன் என்று விடாமல் அடம் பிடித்துக் கர்ணத்தனம் செய்து வருகிறது. உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு தரம் இவர்களுக்காகக் கை தட்டுங்கள் !!!

- மதி

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..